சுவாதி, ராம்குமார், ஸ்வேதா, ராமச்சந்திரன், நுங்கம்பாக்கம், தாம்பரம் ரயில் நிலையம், கொலை, Swathi, Ramkumar, Swetha, Ramachandran, Nungambakkam, Tambaram railway station, murder

சில வருடங்களுக்கு முன்பு நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் பிளாட்பாரத்தில் பொறியியல் மாணவி சுவாதி என்கிற இளம் பெண்ணை ராம்குமார் என்கிற இளைஞன் பட்டப்பகலில் துடிதுடிக்க வெட்டி படுகொலை செய்த நிகழ்வின் ரணம் இன்னும் நம் மனதின் அடியாழத்தில் பதிந்திருக்கும் நிலையில் அதே போன்ற மற்றொரு நிகழ்வு தாம்பரம் ரயில் நிலையம் அருகில் 19வயதான சுவேதா எனும் மைக்ரோ பயாலஜி மாணவியை ராமச்சந்திரன் என்கிற பொறியியல் பட்டதாரி இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பொது இடங்களிலும், கல்வி நிலையங்களிலும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சர்வ சாதாரணமாக அரங்கேறி கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி நிற்கிறது.

குறிப்பாக ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் இப்படி தடம் மாறிச் செல்ல காரணம் தான் பட்ட கஷ்டங்களை, வேதனைகளை பிள்ளைகள் படக்கூடாது என்று அதீத செல்லம் கொடுத்து வளர்ப்பதும், அவர்களை முறையாக கண்காணிக்க தவறியதும் பெற்றோர்களின் தவறாகும்.

ஒருபுறம் என்றால் நல்ல கல்வி கொடுத்து, நல்லெண்ணங்களை இளைய சமுதாயத்தினர் மத்தியில் விதைக்க வேண்டிய அரசுகளோ இளைஞர்கள் திசை மாறிச் செல்ல அவர்களுக்கு போதையூட்டும் சாராயக்கடைகளை நடத்தி அதன் மூலம் இலக்கு வைத்து வருவாய் ஈட்டிட துடிப்பதும், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகளை சர்வ சாதாரணமாக புழங்கினாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஒருபுறம்,

குடும்பத்தை சீரழித்து பிற மனையாளின் கணவனை கவர்வது, அடுத்தவர் மனைவியை அபகரிப்பது, நயவஞ்சகமாக குடும்பத்தை பிரிப்பது, நல்லவர்களாக இருக்கும் ஆண்கள், பெண்களை குடிக்க வைத்து கும்மாளம் போட வைப்பது, இளம் சிறார் தொடங்கி பருவ வயது இளம் தலைமுறை வரை காதல் என்கிற பெயரில் திசைமாறி செல்ல வழிகாட்டுவது போன்ற நிகழ்வுகள் சமுதாயத்தில் பரவி வருவதும் இதற்கெல்லாம் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறது. எதுவும் நம் வீட்டில் நடைபெறாதவரை அந்த தவறுகளை எல்லாம் வெறும் செய்திகளாக மட்டுமே பார்ப்பதும், இன்று செய்தியாகும் தவறுகளை நாமும் எளிதாக கடந்து போவதும், நீர்த்துப் போய் காலாவதியான சட்டங்களை வைத்து கொண்டு குற்றவாளிகள் எளிதில் தப்பிப்பதை கண்டும் காணாமல் ஆட்சியாளர்கள் இருப்பதும் மாற வேண்டும்.

"அண்ணே அடிக்காதீங்கண்ணே வலிக்குதுண்ணே" என கதறிய அழுததைக் கூட ரசித்து பெல்டால் அடித்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அதிகார பலத்தால் தப்பிக்கும் நிகழ்வுகள் இச்சமுதாயத்தை பிடித்துள்ள புற்றுநோயை விட கொடுமையான விஷங்களாகும். ஜனநாயகம், ஜனநாயகம் என பேசிப் பேசி இங்கே பணநாயகமும், அதிகார திமிரும் தான் வளர்ந்துள்ளதே தவிர ஜனநாயகம் காக்கப்பட சட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கான தண்டனையும் கடுமையாக இல்லை என்பதே இங்கே தவறு செய்பவர்களையும், தவறு செய்ய நினைப்பவர்களையும் மேலும், மேலும் தவறு செய்ய தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

அரபுநாடுகளைப் போல இந்தியாவிலும் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். அதிகார பலமும், ஆள்பலமும் சட்டங்களை வளைக்காத வகையிலும், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வளைந்து கொடுக்காத நிலையிலும் உள்ள பலமான சட்டங்கள் இயற்றப்பட்டால் மட்டுமே சுவாதி, ஸ்வேதாக்களும், ஹாசினி போன்ற பிஞ்சுகளும் இனி தமிழகத்தில் காப்பாற்றப்படுவார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளும் தவிர்க்கப்படும்.

அதுமட்டுமின்றி இளம் தலைமுறையினர் பெருமளவில் சீரழிந்து போக காரணமாக இருக்கும் வகையிலான வன்முறைக் காட்சிகள், திசைமாறி போகும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறாவண்ணம் தணிக்கைத்துறையின் விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். இந்த தலைமுறையும், அடுத்த தலைமுறையும் சீரழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் தீய சக்திகளை அழிக்க அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும் என்று சமூக ஆர்வர்களின் கருத்தாக உள்ளது.

 


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்