OPS, EPS, ADMK, TNLocalBodyElection

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவை அடுத்து அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு அதிரடி நிகழ்வுகள் நடந்தன. சசிகலா தலைமை என்ற நிலை மாறி, அவர் சிறைக்கு சென்றதும், பன்னீர்செல்வமா..? எடப்பாடியா…? என்ற மோதல் வெடித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சமாதானம் செய்து கொண்டு கட்சியை சேர்ந்தே வழி நடத்தலாம் என்ற உடன்படிக்கைப்படி தற்போது செயல்பட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில்தான் சசிகாலா சிறையில் இருந்து வெளியில் வந்த பிறகு அ.தி.மு.க.வில் அதிரடி மாற்றங்கள் நிகழும் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தன. ஆனால் எதிர்பார்த்தப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனால் சசிகலா அதிமுகவின் தலைமையை பிடிக்க பல முயற்சிகளை மேற்கொண்டுதான் வருகிறார். அவரது முயற்சியை கட்சியில் உள்ள ஒரு சில சீனியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே தவிர மற்ற நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் எல்லோரும் ஆதரவு தெரிவிப்பதாகவே கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே மோதல் என்பது இருந்து வருகிறது. அது தேர்தல் நேரத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது. கட்சி அலுவலகத்துக்கு இருவரும் வரும் போது அவர்களுடைய ஆதரவாளர்கள் தனித் தனியாக கோஷம் போட்டு அதை வெளிப்படுத்தினார்கள். அதற்கு இருவரும் எந்தவித பதிலும் கூறவில்லை.

அ.தி.மு.க.வில் இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியிருப்பது கட்சியிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களை சந்தித்த அவர், "ஊரக உள்ளாட்சி தேர்தல் என்றால் உள்ளூர் பிரச்னையை மையமாக வைத்துதான் நடக்கிறது. கட்சிகள் என்னதான் அரசியல் ரீதியாக கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும், அதையும் தாண்டி கீழ் மட்டத்தில் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில வேட்பாளர்கள் போட்டியிடுவது இயற்கை. எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனையின்படி போட்டி வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை அழைத்து பேசி கிட்டத்தட்ட 100 சதவீதம் சரி செய்யப்பட்டுவிட்டது.

தி.மு.க ஆளும் கட்சியாக வந்த 4 மாதங்களில் தேர்தலின்போது வழங்கிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது என பெருமையாக கூறுகிறது. ஆனால் அவர்கள் முக்கியமாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நீட் தேர்வு இன்று கானல் நீராகிவிட்டது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. 3 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். அதே போல், குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடியில் சில சட்டதிட்டங்களை புகுத்தி 40 சதவீதம் பேர்தான் பயனடையும் நிலை உள்ளது. தி.மு.க ஆட்சி ஏமாற்றம் விதமாக தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, அம்மா இருசக்கர வாகன திட்டம் தேவைப்படாது என கூறுகின்றனர். ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால் இந்த திட்டத்தை கைவிட்டனர். இப்படி 4 மாதங்களிலேயே மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படும் நிலை இன்றைக்கு இருக்கிறது. தி.மு.க ஆட்சி ஏமாற்றத்தை தந்துள்ளது. இது நிச்சயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும்.

உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க வெற்றி பெறும். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க 90 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்துதான் அறிக்கைகள் விடுகின்றனர். சட்டமன்றத்திலும் இணைந்துதான் பணியாற்றினர். ஒருங்கிணைப்பாளர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியால், அவர் சட்டமன்றத்தில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் முதற்கட்டமாக 9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அங்கிருந்தே எங்களுக்கு ஆலோசனைகள் கூறுகிறார். இரண்டு பேரும் ஒருமித்த கருத்துடன் தான் உள்ளனர். இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமையில்தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை சந்தித்துவிட்டோம். இதில் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எந்தவித கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனவே அதில் எந்த பிரச்னையும் எழ வாய்ப்பில்லை’ என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்கள் அனைவரின் கருத்துத்தும் இதுவாகவே இருக்க வாய்ப்பில்லை. ஒரு சிலர் எடப்பாடியின் ஆதரவாளராகவும், ஒரு சிலர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருக்கின்றனர். தொண்டர்களோ கட்சிக்கு ஒற்றை தலைமைதான் வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள் என்பதுதான் அ.தி.மு.க.வில் நிகழும் நிதர்சனமான உண்மை.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்