cellphone,thiruchendhur,temple, madurai highcourt

திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகர்கள் உட்பட யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராகப் பணிபுரியக் கூடிய சீதாராமன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், கோவில்களில் சிலை திருட்டு உள்ளிட்ட அசம்பாவிதங்களைத் தடுக்க செல்போன் பயன்படுத்தத் தடை இருப்பதாகவும், ஆனால் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சிலைகள் முன்பாகவும், அபிஷேகம் போன்ற நேரங்களிலும் செல்போன் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். 

இந்நிலையில், மகாதேவன், சத்திய நாராயணன் பிரசாத் ஆகிய நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு முன் அவர் தொடுத்திருந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதைத்தொடர்ந்து அவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோவில்களில் பூஜை செய்யும் அர்ச்சகர்களே சிலைகளுக்கு முன் புகைப்படம், வீடியோ போன்றவற்றை எடுத்து தங்களது யூடியூப் பக்கங்களில் பதிவிடுவதாகவும் அது ஏற்புடையதல்ல என்றும் வேதனை தெரிவித்தனர்.

மேலும், "தமிழ்நாட்டிலுள்ள கோவில்கள் என்ன சத்திரமா? திருப்பதி கோவிலின் வாசல் முன்பாகக் கூட யாரும் புகைப்படங்கள் எடுக்கமுடியாது. ஆனால், தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்பு நின்று செல்பி எடுத்துக்கொள்கின்றனர். தமிழக கோவில்கள் என்ன சுற்றுலாத் தலமா? கோயிலுக்குள் ஜீன்ஸ், லெக்கின்ஸ், டீசர்ட், ஷார்ட்ஸ் போன்ற உடைகள் அணிந்துகொண்டு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

கோயில்களுக்குள் அர்ச்சகர்கள், பக்தர்கள் ஆகியோர் செல்போன் கொண்டுவருவதையும், பயன்படுத்துவதையும் இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும். கோவில்களில் செல்போன் பயன்படுத்துவதைக் கண்டால் அவற்றைப் பறிமுதல் செய்து திருப்பித் தரக்கூடாது" என்று கூறினர்.

இதையடுத்து, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் உட்பட யாரும் செல்போன் பயன்படுத்த தடை விதித்து சுற்றறிக்கை அனுப்புமாறு இந்து அறநிலையத்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது. 

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்