
ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் சேவைக்கு இனி பயனாளர்கள் மாதந்தோறும் பணம் செலுத்தவேண்டும் என்று ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
ட்விட்டரைக் கைப்பற்றியுள்ள எலான் மஸ்க், அதை வாங்கிய நாளிலிருந்து அதிரடியான பல சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார். முதல் நாளிலேயே ட்விட்டரின் தலைமை அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளிலிருந்த அதிகாரிகளை நீக்கிய நிலையில், ட்விட்டர் கணக்கு குறித்த அதிரடி செக்-குகளையும் பயனாளர்களுக்கு வைத்துவருகிறார்.
அந்த வகையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதைக் காட்டும் நீலநிற டிக் வசதிகளைப் பெற்றுள்ள பயனாளர்கள், அச்சேவையைத் தொடர்ந்து பெறவேண்டுமெனில் மாதக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று எலான் மஸ்க் அறிவிக்கவிருப்பதாகவும், மாதம் ரூ.1600 என்று கட்டணத்தை நிர்ணயித்திருப்பதாகவும் தகவல்கள் உலாவந்துகொண்டிருந்தன.
இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், இனி பயனாளர்கள் ப்ளூ டிக் சேவையைத் தொடர்ந்து பெற மாதம் ரூ.650(8 டாலர்கள்) செலுத்தவேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
பொதுவாக அரசியல், சினிமா, உயர்பதவிகளில் உள்ள பிரபலமான நபர்கள் தங்கள் வலைதளக் கணக்குகளில், அது தங்களது அதிகாரப்பூர்வக் கணக்குதான் என்பதை பிறருக்குத் தெரியப்படுத்தும் விதமாக இவ்வாறான ப்ளூ டிக்குகளைப் பெற்றுக்கொள்வதுண்டு. இதற்கு, அவர்கள் இத்தனை ஃபாலோயர்களைப் பெற்றிருக்கவேண்டும் போன்ற சில தகுதிகளின் அடிப்படையில் இவ்வசதி அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் தேவையான சில தரவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலமும் யாவரும் ப்ளூடிக் வசதியைப் பெற்றுக்கொள்ளும் முறை இருந்தது.
இந்நிலையில், பயனாளர்களை அதிரவைக்கும்படி இப்படியான ஒரு அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இத்தொகையானது அந்தந்த நாட்டுக்கான ரூபாயைப் பொறுத்து மாறுபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.