
காம்பியாவில் 66 குழந்தைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இயங்கிவரும் மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு பாதிப்புகளை விளைவித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் 66 பிஞ்சுக் குழந்தைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதன் காரணமாக மரணமடைந்துள்ளனர். டை எத்திலீன், எத்திலீன் கிளைக்கால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் அம்மருந்துகளில் அதிகளவில் கலந்துள்ளது தான் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு, உயிரிழப்புக்குக் காரணமாக ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் உள்ளிட்ட மருந்துகளைக் கைக்காட்டுகிறது. இம்மருந்துகளை உட்கொண்ட குழந்தைகளே உபாதைகளுக்கு ஆளாகி உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.
இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் இம்மருந்துகளை வாங்கவேண்டாம் என்று உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து தீவிரமான ஆய்வுகளில் இறங்கியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இச்செய்தி இந்தியத் தயாரிப்பு மருந்துகளின் தரத்தை உலக நாடுகள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது.