
ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளதையடுத்து பொய்ச்செய்திக்கும் மலிந்த மொழிக்கும் ட்விட்டரில் இடம் தரவேண்டாம் என்று மஸ்கிற்கு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளமான ட்விட்டரை உலகப் பணக்காரர்களில் முக்கியமானவரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வாங்க முன்வந்தார். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக ட்விட்டரில் போலிக்கணக்குகள் அதிகம் இருப்பதாகவும், அவற்றை அகற்றினால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் கூறினார்.
பிரச்சினை நீதிமன்றம் செல்லவே அவர் இம்மாதம் 28-ம் தேதிக்குள் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அதையடுத்து அவர் ட்விட்டரை வேறுவழியின்றி தனதாக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் பல அதிரடிகளை நிகழ்த்தவும் காத்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்கை வித்தியாசமான முறையில் வாழ்த்தி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே! இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.