nithyanandha,kailasa

சர்ச்சை சாமியார் நித்தியானந்தா இறந்துவிட்டதாக வலைதளங்களில் தகவல் பரவிவந்த நிலையில், தான் சமாதியில் இருப்பதாகவும், ஆனாலும் இறக்கவில்லை என்றும் நித்தியானந்தா தனது சமூக ஊடகப் பதிவு மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் மிகவும் பிரபலமான சாமியார்களில் ஒருவர் சாமியார் நித்தியானந்தா. பிரபலம் என்பதை விட ‘ப்ராப்ளம்’ என்று சொல்வது இவர் விஷயத்தில் சாலச் சிறந்ததாக இருக்கும். அந்த அளவிற்கு பல்வேறு பாலியல் குற்றங்களில் சிக்கியுள்ளார் நித்தியானந்தா.

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா நெருக்கமாக இருக்கும்படியான காணொலிகள் வெளியாகி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியதையடுத்து, தொடர்ந்து பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் அவரது சீடர்களாலேயே அவர்மீது சுமத்தப்பட்டன.

இந்நிலையில் தான் காவல்துறையிடமிருந்து தப்பிக்க அவர் இந்தியாவை விட்டு வெளியேறி தலைமறைவானார். பின் தீவு ஒன்றை வாங்கி ‘கைலாசம்’ என்ற பெயரில் அதை தனி நாடாக அறிவித்து அதற்கு ரூபாய் நோட்டெல்லாம் வெளியிட்டார்.

உலகில் எங்கு, எவ்வளவு பிரச்சினை நிகழ்ந்தாலும் தானும், தன் கைலாச சீடர்களுமாக குதூகலமான காணொலிகளை தினசரி வெளியிட்டு வந்தார் நித்தியானந்தா. இந்நிலையில், அவர் எலும்பும் தோலுமாக இருப்பது போன்ற புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி அவர் மரணமடைந்துவிட்டதாக தகவல் பரவியது.

இதனிடையே தான், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தான் சமாதியில் இருப்பதாகவும், ஆயினும் இறக்கவில்லை என்றும் தினுசான ஒரு பதிவை இட்டுள்ளார் குதூகல சாமியார் நித்தியானந்தா.

இதுகுறித்து அவர் வலைதளத்தில் இட்டுள்ள பதிவில்,  

“நான் இறந்து விட்டதாக பரப்பும் வதந்திகளை நம்ப வேண்டாம். நான் சமாதியில் இருக்கிறேன். ஆனால் இறக்கவில்லை என்று என் சீடர்களுக்கு சொல்ல விரும்புகிறேன். என்னால் பேசவோ அல்லது சத்சங்கங்களை வழங்குவதற்கோ சக்தி வருவதற்கு இன்னும் நேரம் எடுக்கும்.

27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளிக்கிறார்கள். மருத்துவ சிகிச்சையில் இருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. மருத்துவர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவர்கள் என்பதைவிட என் பக்தர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை போன்றவர்கள்.

பிரபஞ்சத்தின் சக்தியை என் உடல் எப்படி உள்வாங்கி செயல்படுகிறது என்பதை எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். தினந்தோறும் நடைபெறும் நித்ய பூஜை மட்டும் இன்னும் நிற்கவில்லை. மற்றபடி, வேறு எந்த வேலையையும் நான் செய்வதில்லை. உணவு உண்ண முடியவில்லை. தூங்க முடியவில்லை.

எனக்கு அறிமுகமானவர்களை கூட அடையாளம் கண்டுகொள்வதில் சிரமப்படுகிறேன். நான் சாகவில்லை. சமாதி மனநிலையை அடைந்து இருக்கிறேன். விரைவிலேயே பரிபூரண நலம் பெற்று திரும்புவேன்.

மருத்துவர்களால் எந்த நோயையும், கோளாறுகளையும் என் உடலில் இருந்து கண்டறிய முடியவில்லை. எனது இதயம் 18 வயது வாலிபரின் இதயம் போன்று துடிப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். நித்ய பூஜைக்காக நான் சமாதியில் இருந்து வரும்போது மட்டும் சில சமயங்களில் உங்கள் கருத்துக்களை பார்த்து என் பதிலை தருகிறேன். அனைத்து அன்புக்கும் நன்றி! நலம் பெற வாழ்த்திய அனைவருக்கும் நன்றி! ஆனால் உண்மையில் எனக்கு நோயெல்லாம் ஒன்றும் இல்லை”

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Comments

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்