
சவுதி அரேபியா நாட்டில் கழிவறையில் தயாரிக்கப்பட்டுவந்த உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பிரபல உணவகம் ஒன்று 30 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், உணவகம் திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த உணவகத்தில் பல ஆண்டுகளாக சமோசா போன்ற உணவுப்பொருட்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
சுகாதாரமற்ற முறையில் எலிகளும், பூச்சிகளும் மிகைத்துக்கிடக்கும் இடங்களில் உணவுவகைகள் தயாரிக்கப்பட்டுவந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பல நாட்களான, கெட்டுப்போன மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி அதிகாரிகள் தடாலடியாக அவ்வுணவகத்தை மூடியுள்ளனர். மேலும் கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில், இச்சம்பவத்திற்குப்பின் இதுவரை 26 உணவகங்கள் முறைகேடுகள் அறிந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.