'தமிழகத்தில் புழங்கும் பரிசுச்சீட்டு விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும்' - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் பரிசுச்சீட்டு விற்பனையை தமிழக அரசு முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், 

சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவது காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது

சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச்சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த சமூகத் தீமையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது

ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: June 28, 2022
தமிழக அரசின் உயர்கல்விக்கான ரூ.1000 உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், முடியாது! விபரங்கள் இதோ!

அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்காக அரசுத்தரப்பிலிருந்து மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள் என்ற விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.

2. தனியார்ப் பள்ளியில் Right to Education (RTE)யின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

3. அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

4. மாணவிகள் 8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். [சான்றிதழ் (Certificate course), பட்டயம் (Diploma / ITI, D.TEd., courses), இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில்சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.(Agri). B.V.Sc., B.Fsc., B.L, etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing. Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.. CUITO D000.). தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

5. 2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்,தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

6. 2021-2022 ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை (under graduation) நிறைவு செய்துவிடுவார்கள்.

7. இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும், முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்கு தேவையான தெளிவுரைகள்/கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

8. இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை/தொழிற்கல்வி/மருத்துவக் கல்வியில் 2-ஆம் ஆண்டு முதல் 5-ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

பதிவு: June 27, 2022
'அஸ்ஸாம் மக்களின் துயரைக் கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏ.,க்களை கடத்திவந்து கும்மாளம் போடுகிறீர்களா?; இதுதான் பாஜகவின் உண்மை முகம்' - கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மக்களின் துயரத்தை நினைத்து கவலைப்படாமல், பாஜக மாநில அரசு, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைய சகுனி ஆட்டம் ஆடிவருவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"அசாமில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தது 200 உயிர்கள் இதுவரை பலியாகியிருக்கின்றன. உண்மை பலி விபரம் இன்னும் அதிகமாக இருக்கும்.

வீடுகளை, இருப்பிடத்தை இழந்து சாலைகளில் கண்ணீரோடு தவிக்கும் மக்களின் துயரை வார்த்தைகளால் அடக்க முடியாது. இந்த நிலைமை பற்றியெல்லாம் ஒன்றிய அரசுக்கு கொஞ்சமும் கவலை கிடையாது. அசாம் பாஜக முதல்வருக்கும் எந்த பதட்டமும் இல்லை. மாறாக அவர் ரேடிசன் புளூ விடுதியை கண்காணித்துக்கொண்டுள்ளார்.

அங்கேதான், மராட்டிய எம்.எல்.ஏக்கள் கடத்தி வரப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில் கும்மாளத்துடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூட்டணி அரசை கவிழ்த்து, மராட்டியத்தில் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக இந்த சகுனி ஆட்டத்தை நடத்தி வருகிறது.
 
மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டு, அதிகார மமதையில் ஆட்டம் போடுகிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மை முகம்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
 
பதிவு: June 25, 2022
'முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களை உடனடியாக அரசு விடுவிக்க வேண்டும்; தவறினால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்' - சீமான்!

திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தவறினால் மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்,

"திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களில் 30 பேர் மாத்திரை உட்கொண்டும், ஒருவர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றதுமான செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. ‘விதியே! விதியே! என் செய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை?’ எனும் பெரும்பாவலன் பாரதியின் கூற்றுக்கிணங்க, தாய்த்தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகள் கண்டு மனம்வெதும்புகிறேன்.

தங்களை ஏதிலிகளென இந்தியச்சட்டத்தின்படி பதிவுசெய்துள்ள ஈழச்சொந்தங்களையும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களெனக் கூறி, சிறப்பு முகாம் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அந்நிய நாட்டவர்களோடு அடைத்து வைத்துள்ள அநீதிக்கெதிராக, தங்களை விடுவிக்கக்கோரி 35 நாட்களுக்கும் மேலாகப் பட்டினிப்போராட்டம் செய்து அரசு மனமிறங்காத நிலையிலேயே, ஆற்றாமையும், விரக்தியும் தாளாது இத்தகையக் கொடிய முடிவை ஈழச்சொந்தங்கள் எடுத்துள்ளனர் என்பது ஏற்கவே முடியாதப் பெருந்துயரமாகும்.

இந்நாட்டுக்குத் துளியும் தொடர்பற்ற திபெத்தியர்கள் ஏதிலிகளாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும், பொருளாதார வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பெற்று, பெரும் மதிப்போடு நடத்தப்படும் வேளையில், இந்நாட்டில் வாழும் எட்டுக்கோடி தமிழ்ச்சொந்தங்களின் தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்கள் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதும், அடிப்படை மானுட உரிமைகளும், அத்தியாவசிய இருப்பு நடவடிக்கைகளும்கூட அளிக்கப்படாது மறுக்கப்படுவதும் தமிழினத்திற்கு இந்நாட்டு அரசுகள் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்கள் நாதியற்றவர்கள் போல நாளும் நடத்தப்படுவதும், அவர்களது உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படாது அவமதிக்கப்படுவதும் வெட்கித்தலைகுனிய வேண்டிய பெரும் அவமானமாகும்.

தேர்தலுக்கு முன்பு, ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்த மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது ஏதிலிகளாகக்கூட அவர்களை வாழவிடாது வஞ்சிப்பது எந்தவகையில் நியாயம்? இதுதான் சமூக நீதியா? ‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ என மேடையில் முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இப்போது இரத்தம் வற்றிப்போகிற அளவுக்கு அவர்கள் பட்டினிக்கிடந்து, உடல்மெலிந்து கோரிக்கை வைத்தும் செவிமடுக்காதது ஏன்? அவர்களுக்கு வாக்கில்லை என்பதால், அவர்களது வறண்ட நாக்குகள் இடுகிற முழக்கங்கள் உங்கள் செவிப்பறைக்கு எட்டவில்லையா முதல்வரே? உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? இதுதான் நீங்கள் விடியல் தரும் இலட்சணமா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, இந்தியச்சட்டநெறிமுறைகளின்படி, தங்களை ஏதிலிகளாகப் பதிவுசெய்தும் சட்டவிரோதக் குடியேறியவர்களெனக்கூறி, திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போமெனப் பேரறிவிப்பு செய்கிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: June 25, 2022
'மெட்ரிக் பள்ளிகளில் இடஒதுக்கீடு அளிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்திலுள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் 69% இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், அப்பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது!

தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை!

ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதிவு: June 24, 2022
ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு; வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டு அட்டூழியம்! கூட்டத்தில் பெரிதும் அவமதிக்கப்பட்ட ஒபிஎஸ்... அடுத்த நகர்வு என்ன?

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தொண்டர்களால் அவமதிக்கப்பட்டு, அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்ப்ட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றாலும், கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இரு தலைவர்களின் மேற்பார்வையிலேயே நடைபெற்றுவந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தபின் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பூசல் எழுந்து, பின் எடப்பாடியார் அப்பொறுப்பை ஏற்றார். மேலும் பன்னீர்செல்வம் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடித்தார்.

இந்நிலையில், அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாகத் திகழ ஒற்றைத் தலைமைதான் சரியான முடிவு என்ற பேச்சு அதிமுக நிர்வாகிகளிடையே ஆரம்பமான நிலையில், கடந்த 9 நாட்களாக தொடர் அமளிகளில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர். ஒபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், இபிஎஸ் தான் பொதுச்செயலாளராக பதவியேற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் குரலெழுப்பிவரும் நிலையில், ஒபிஎஸ் கூறிய சில தீர்மானங்களின் பேரில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒபிஎஸ் முதலிலேயே வந்துவிட்டார். ஆயினும் கூட்டத்திற்குள் நுழைந்த அவரை இபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியேறச்சொல்லியும், 'துரோகி' என்று முழக்கமிட்டும் முன்னேறவிடாமல் தடுத்தனர். பின் இபிஎஸ் மண்டபத்திற்குள் நுழையும்போது பலத்த கரகோஷத்துடன் தொண்டர்களால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின் மேடையில் இருவரும் அமர்ந்தபின் ஒவ்வொருவராக கட்சி நிர்வாகிகளின் நிலைப்பாடு குறித்தும், ஒற்றைத்தலைமை அதிமுகவிற்கு அவசியம் என்றும் பேசினர். அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மேடையில் பேசிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் பெயரைக் குறிப்பிட்டு அவரை வரவேற்றனர். ஆனால் யாரும் ஒபிஎஸ்-ஐ வரவேற்கவும் இல்லை, அவரிடம் முகம்கொடுத்து பேசவும் இல்லை.

தொடர்ந்து சி.வி.குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்துவிட்டதாகவும், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் பேசினர். இதனால் கூட்டத்தில் சச்சரவும், கூச்சல் குழப்பமும் நிலவியது. ஒரு கட்டத்திற்கு மேல் ஒபிஎஸ் மேடையில் அமராமல் பாதியிலேயே மேடையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ஒபிஎஸ் மேடையிலிருந்து வெளியேறும்போது அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் அதிருப்தி நிர்வாகிகளால் எரியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் வந்த வாகனத்தின் சக்கரங்களிலிருந்து காற்று பிடுங்கப்பட்டதும் அதிர்ச்சியைக் கிளப்பியது. பின் மாற்றுவாகன உதவியுடன் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், 'கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்கின்றனர். சதிகாரர்கள்' என்று ஆவேசமாகப் பேசினார்.

பொதுக்குழுக்கூட்டம் பாதியிலேயே முடிந்து எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், அடுத்த பொதுக்குழுக்கூட்டம் ஜூலை 11 அன்று மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஒபிஎஸ்-ன் கையெழுத்து இல்லாமல் நடைபெறாது என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

ஜூலை 11-ல் நடைபெறும் பொதுக்குழுக்கூட்டத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆயினும் கூட்டம் நடைபெறுமா?, அதில் ஒபிஎஸ் கலந்துகொள்வாரா?, என்னென்ன முடிவுகள் அக்கூட்டத்தில் ஏடுக்கப்படும்? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆயினும் ஒபிஎஸ், இபிஎஸ் தரப்பு நிர்வாகிகளால் பெரிதளவில் அவமதிக்கப்பட்டது தற்சமயம் பேசுபொருளாகி சர்ச்சையைக் கிளப்பிவருகிறது. 

பதிவு: June 23, 2022
'பாஜகவின் பேச்சுக்கு ஆடும் இபிஎஸ் வேண்டாம், ஒபிஎஸ்-ம் வேண்டாம்; அதிமுகவிற்கு இவர் தான் தலைமையேற்க வேண்டும்' - கூறுகிறார் நாஞ்சில் சம்பத்!

அதிமுகவை கைப்பற்றத்துடிக்கும் இபிஎஸ்-க்கு பின்னால் பாஜகவின் தந்திரம் இருப்பதாகவும், அதிமுகவிற்கு மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் தான் தலைமையேற்க வேண்டும் என்றும் முன்னாள் அதிமுக துணை பிரச்சார செயலர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்ந்து சர்ச்சையைக் கிளப்பிவரும் நிலையில், அதிமுகவை யார் தலைமையேற்று நடத்துவது என்ற விவாதம் கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்திவருகிறது. தொடர்ந்து இபிஎஸ் - ஒபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் ஒருவரையொருவர் முன்னிலைப்படுத்தி பேசிவருகின்றனர்.

தற்சமயம் இபிஎஸ்-க்கு நிர்வாகிகளிடையேயும், மாவட்ட செயலர்களிடையேயும் ஆதரவு அதிகரித்துவருவதாக கூறப்படுகிறது. ஒபிஎஸ் ஆதரவு நிர்வாகிகளும் இபிஎஸ் பக்கம் தாவி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், இபிஎஸ் - ஒபிஸ் இருவருமே அதிமுகவின் கட்சித்தலைமையை ஏற்கக்கூடாது என்று நாஞ்சில் சம்பத் காட்டமாகப் பேசியுள்ளார். 

தற்சமயம் திமுகவின் பேச்சாளராக தொடர்ந்துவரும் நாஞ்சில் சம்பத், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாவட்ட செயலாளர்களை தன் வசப்படுத்திக் கொண்டு, அஜெண்டா இல்லாமல் தனது அடியாட்களை மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேச வைத்து, ஒற்றைத் தலைமை என்று எடப்பாடி பழனிசாமி அத்துமீறுகிறார். எம்.ஜி.ஆருக்கே அறிமுகம் இல்லாத ஒரு இடைசெருகல் அந்த கட்சியை கைப்பற்ற துடிக்கிறது. அந்த கட்சிக்குள் பூகம்பம் வெடித்து இருக்கிறது.

கட்சியின் அதிகாரப்பூர்வமான ஒருங்கிணைப்பாளரை கட்சியை விட்டு நீக்கி, அதிமுகவை கைப்பற்றும் நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகிறார் என்றால் இந்த செயலுக்கு பின்னால் பாஜக தான் உள்ளது. வலிமை வாய்ந்த கட்சியை உருக்குலைத்து, அந்த இடத்தில் உட்கார்ந்துகொள்ள நினைக்கும் பாஜகவின் நரித்தனத்திற்கு இன்று பழனிசாமி பலிகடாவாகி இருக்கிறார்.

கடந்த 10 நாட்களுக்கு முன் ஒற்றை தலைமையா? அதெல்லாம் கிடையாது என்று வித்தாரம் பேசினார் எடப்பாடி பழனிசாமி. ஒற்றைத் தலைமை என்ற பேச்சையே புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுகவை கைப்பற்றத் துடிக்கிறார். இந்தச் செயலுக்கு பின்னால் பாஜகதான் உள்ளது.

மூத்த நிர்வாகிகள் பலர் அதிமுகவில் இருக்கும் நிலையில், அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு அதிமுகவை கைப்பற்றத் துடிக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு சாபவிமோசனமே கிடையாது. கட்சி உடையாமல் இருக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். கட்சியின் சீனியர் செங்கோட்டையன் தான். அவர்தான் தலைவர் ஆக வரவேண்டும்." இவ்வாறு பேசினார்.

பதிவு: June 21, 2022
'ஹிட்லரைப் போன்றே மோதிக்கும் மரணம் நிகழும் என்ற பிரதமருக்கு எதிரான சுபோத்காந்தின் கருத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை' - காங்கிரஸ் விளக்கம்!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில், காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத்காந்த் சஹாய், பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்டு பேசிய கருத்தை தாங்கள் ஏற்கவில்லை என்று காங்கிரஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள 'அக்னிபாத்' திட்டத்திற்கு நாடெங்கிலும் எதிர்ப்பு வலுத்துவருகிறது. தற்காலிகமாக இந்திய இராணுவத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் இத்திட்டம் மாணவர்களின் கல்விவாய்ப்பை அழித்து வேலைவாய்ப்பை பறிப்பதாக உள்ளதாக பரவலாக போராட்டங்கள் வெடித்துவருகின்றன.

இந்நிலையில், இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 'அக்னிபாத்' திட்டத்தை எதிர்த்து டெல்லியில் காந்தி வழியில் சத்யாகிரக போராட்டம், காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் முன்னிலையில் இன்று மேற்கொள்ளப்பட்டது. இதில், காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத்காந்த் சஹாய், பிரதமர் மோதியை ஹிட்லருடன் ஒப்பிட்டுப் பேசிய கருத்து சர்ச்சையைக் கிளப்பியது. 

போராட்டத்தில் பிரதமர் குறித்து விமர்சித்துப் பேசிய அவர், "இது கொள்ளையடிப்பவர்களின் அரசு. மோதி ரிங்மாஸ்டர் போல் செயல்படுகிறார். மேலும் அவர், சர்வாதிகாரி வேடத்திற்குப் பொருந்தியுள்ளார். ஹிட்லரையும் பிரதமர் மோதி மிஞ்சிவிட்டதாக உணர்கிறேன். ராணுவத்திற்குள் இருந்து ‘காக்கி’ என்ற அமைப்பை ஹிட்லர் உருவாக்கினார். அதே போல் 'அக்னிபாத்' என்ற திட்டத்தை மோதி உருவாக்கியுள்ளார். இதே போல் ஹிட்லரின் வழியை மோதி தொடர்ந்து பின்பற்றினால் ஹிட்லருக்கு மரணம் நிகழ்ந்தது போன்றே அவருக்கும் மரணம் நிகழ்ந்து செத்து மடிவார். இதை நினைவில் கொள்ளுங்கள்" என்று பேசினார்.

இக்கருத்து சர்ச்சையான நிலையில், பிரதமர் மோதிக்கு எதிராக போராடினாலும், பிரதமருக்கு எதிரான அநாகரீகமான கருத்துகளை காங்கிரஸ் அனுமதிக்காது என்று காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அக்னிபாத்திற்கு எதிராக எழுந்துள்ள தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து மத்திய அரசு அத்திட்டத்தில் சலுகைகளை அறிவித்துவருகிறது. ஆயினும் இத்திட்டம் திரும்பப் பெறப்படவேண்டும் என்பதே இராணுவத்தில் சேர்ந்து சாதிக்கவிரும்பும் பல்வேறு இளைஞர்களின் எண்ணமாக உள்ளது.

பதிவு: June 20, 2022
'இராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்களே இதை எதிர்க்கிறார்கள் என்றால் அக்னிபாத் திட்டத்தில் ஏதோ கோளாறு உள்ளது; ஆக மத்திய அரசு இதனை திரும்பபெற வேண்டும்' - கமல்ஹாசன்!

அக்னி பாதை திட்டத்தால் தேசம் அக்னிப் பிழம்பாய் மாறுவதாகவும், எல்லோரையும் ஏமாற்றும் இத்திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து கமல்ஹாசன் சார்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் A.G. மவுரியா வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், 

"அண்மையில் மத்திய அரசு அறிவித்த அக்னி பாதை திட்டம் நாடு முழுவதும் கலவரத்தை உண்டாக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்பு வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்தால், புதிதாக சேருபவர்கள் மட்டுமல்ல, ஏற்கெனவே ராணுவத்தில் பணிபுரிபவர்களும் மனச் சோர்வடைவர்.

முப்படைகளிலும் 4 ஆண்டுகள் மட்டுமே வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் ‘அக்னி பாதை' திட்டம், பெயருக்கேற்ப நாடு முழுவதும் ரயில்கள் எரிப்பு, வாகனங்களுக்கு தீவைப்பு என இளைஞர்களை கொந்தளிக்கச் செய்துள்ளது.

ராணுவம், கடற்படை, விமானப்படையில் அதிக அளவில் இளைஞர்களை சேர்ப்போம் எனக் கூறி தொடங்கப்படும் இத்திட்டத்தால், தங்களது ராணுவப் பணி கனவு சுலைந்துபோய் விட்டதாக புகார் தெரிவிக்கின்றனர் இளைஞர்கள்.

பிஹார். உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, தெலங்கானா. ராஜஸ்தான், டெல்லி என பல மாநிலங்களில் பரவிய போராட்டங்கள், தமிழ்நாட்டிலும் தொடங்கிவிட்டன. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தங்களின் கதி என்ன? ஓய்வூதியமும் கிடையாது, அதற்குப் பிறகான வேலைவாய்ப்புக்கும் உத்தரவாதமும் கிடையாது என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்க முடியுமா?

சிறு வயது முதலே ராணுவத்தில் சேர விரும்பி. அதற்காக உடல் தகுதி, தேர்வுக்கான தயாரிப்புகளில் ஈடுபடும் இளைஞர்களுக்கு, குறுகியகால, தற்காலிகப் பணி மகிழ்ச்சியைத் தருமா? வயது வரம்பு அதிகரிப்பு, துணை ராணுவம், மத்திய பாதுகாப்புப் படை வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை என்றெல்லாம் நம்பமுடியாத சலுகைகளை அறிவித்தாலும், இளைஞர்கள் அவற்றை நம்பத் தயாராக இல்லை.

தேசத்தின் எல்லையைப் பாதுகாக்க, உயிரையே தியாகமாகத் தரும் வேலையை, எவ்வித பணிப் பாதுகாப்பும் இல்லாத ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைப்பது சரிவருமா? பெரு முதலாளிகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் சலுகைகளை அள்ளித் தரும் மத்திய அரசு, பணத்தால் மதிப்பிட முடியாத ராணுவப் பணியில் சிக்கனம் பார்ப்பது சரியல்ல.

எல்லையைக் காக்க அர்ப்பணிப்பு, தியாக மனப்பான்மையோடு சேரும் இளைஞர்களை மட்டுமல்ல, ஏற்கெனவே பணிபுரியும் ராணுவ வீரர்களையும் இந்த திட்டம் ஏமாற்றமடையச் செய்யும். ராணுவத்தில் உயர் பொறுப்பில் இருந்தவர்களே இதை எதிர்க்கிறார்கள் என்றால், ஏதோ கோளாறு உள்ளது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

நாடு முழுக்க கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு பணிவாய்ப்பு ஏற்படுத்தித் தருவது மத்திய அரசின் கடமை. அதேசமயம், தொலைநோக்கற்ற. குறுகிய மனப்பான்மையுடன் கூடிய திட்டங்களை வகுத்து, இளைஞர்களை ஏமாற்றக் கூடாது, 'அக்னி பாதை' திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: June 20, 2022
'இளைஞர்களை தவறான பாதைக்கு இட்டுச்சென்று நாட்டின் பாதுகாப்புக்கு எதிரானவர்களாக மாற்றும் 'அக்னிபாத்' திட்டத்தை திரும்பப்பெறுங்கள்' - நாதக சீமான் வலியுறுத்தல்!

நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே இராணுவப்பணியெனும் ஒப்பந்த அடிப்படையில் கொண்டுவரப்படும் ‘அக்னிபாத்’ திட்டம் நாட்டின் பாதுகாப்பில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், 

"நான்கு ஆண்டுகளுக்கு மட்டுமே பணியெனும் அடிப்படையில், இந்திய இராணுவத்தின் முப்படைகளுக்கு ஆள்சேர்க்கக் கொண்டுவரப்பட்டுள்ள ‘அக்னிபாத்’ எனும் புதிய நடைமுறையானது நாடெங்கிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிற நிலையில், அதன் விளைவுகளை எண்ணிப்பார்க்கையில் பெரும் அச்சத்தைத் தருகின்றது. எட்டு ஆண்டுகால பாஜகவின் அரசாட்சியில் கொண்டுவரப்பட்ட பேரழிவுத் திட்டங்களுக்கெதிராக மக்கள் போராடும்போதெல்லாம், எல்லையில் நிற்கும் இராணுவ வீரர்களை நோக்கிக் கைகாட்டி, மக்களின் வாயடைக்க முயன்ற பாஜகவின் ஆட்சியாளர் பெருமக்கள், தற்போது இராணுவ வீரர்களின் மதிப்பையே குலைக்கும் வகையில் திட்டம் தீட்டியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

இந்திய இராணுவத்தில் சேர உரிய கல்வித்தகுதியும், உடற்தகுதியும் இருந்தால், 17.5 வயது முதல் 21 வயது வரையிலான இருபாலரும் முப்படைகளில் சேரலாம்; ஆனால், அவர்களது பணிக்காலம் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகளென நிர்ணயம் செய்யப்பட்டு, பணிக்காலம் முடிந்ததும் 11 – 12 இலட்ச ரூபாய் நிதியுதவியோடு 75 விழுக்காட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என ஒன்றிய அரசு அறிவித்திருப்பது மோசமான நிர்வாக முன்முடிவாகும். நாட்டின் எல்லையைக் காக்க வேண்டுமெனும் அர்ப்பணிப்புணர்வோடும், தியாக மனப்பான்மையோடும் படைகளில் சேரும் இளைஞர்களைப் பணத்தைக் கொடுத்து நிறைவுறச்செய்து, நான்கே ஆண்டுகளில் வெளியேற்ற முனைவது மிகத்தவறான நடைமுறையாகும். முப்படைகளில் சேருவதை நாட்டுக்கு ஆற்றும் பெருந்தொண்டெனக் கருதி, இலட்சக்கணக்கான இளைஞர்கள் இராணுவத்தில் பணிபுரிய பயிற்சியும், முயற்சியும் எடுத்துக்கொண்டிருக்கையில், அவர்களது கனவினைப் பொசுக்கும் வகையில் ஒன்றிய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பு இராணுவப்பாதுகாப்பு நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கிற மிகப்பெரும் சறுக்கலாகும்.

ஏற்கனவே, நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும் சூழலில், இராணுவத்தில் சேரும் இளைஞர்களையும் தனியார் நிறுவனம் போல ஒப்பந்த அடிப்படையில் பணிக்குச் சேர்த்து, நான்கு ஆண்டுகளில் 25 வயதிற்குள்ளேயே வெளியேற்றுவது ஒன்றிய அரசின் தொலைநோக்கற்ற குறுகிய மனப்பான்மையையே காட்டுகிறது. இராணுவப்பணியிலிருந்து விடுவிக்கப்படும் இளைஞர்கள் வேலையற்றவர்களாக மாறுவதோடு, வயதுமூப்பினால் கல்வியைத் தொடர முடியாமல் போவதால் அவர்களது உயர் கல்வி முழுமையாகப் பாதிக்கப்படும் சிக்கலுண்டு. இராணுவப் பயிற்சிபெற்று, அத்துறையில் பெரும் நாட்டம் கொண்டு நிற்கும் இளைஞர்களை இளம் வயதிலேயே அப்பணியிலிருந்து வெளியேற்றும்போது, அவர்களிடையே இது விரக்தி மனநிலையை ஏற்படுத்துவதோடு, அவர்களைத் தவறானப்பாதைக்கு இட்டுச்செல்லும் பேராபத்தும் உண்டு. அவ்வாறு செல்கிறபட்சத்தில், அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கே எதிரானவர்களாக மாறி, விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடவும் கூடும்.

இத்திட்டத்தைக் கண்டித்து, பீகார், அரியானா, ஜார்கண்ட், இராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கொதித்தெழுந்து போராடி வருவதன் விளைவாக, வன்முறை வெடித்து, பல்வேறு மாநிலங்களில் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்படும் நிலையிலும் பாஜகவின் ஆட்சியாளர் பெருமக்கள் கள்ளமௌனம் சாதித்து, நாட்டில் நிலவும் கலவரச்சூழலையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்து நிற்பது வெட்கக்கேடானது. ஒன்றிய இணை அமைச்சரின் மகன் விவசாயிகள் மீது வாகனத்தை ஏற்றிக்கொன்றாலும், நாடெங்கிலும் மக்கள் உரிமைகளுக்காகப் பெருந்திரளாகப் போராடினாலும், நாடு அசாதாரணச்சூழலை எதிர்கொண்டு, இந்தியாவின் ஓர்மை குறித்தானப் பெருமைகள் தகர்ந்துபோய், பன்னாட்டரங்கில் சந்தி சிரித்தாலும் எவ்விதக் கவலையுமற்று நிற்கும் இந்நாட்டின் ஆட்சியாளர்களான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரது செயல்பாடுகள் இந்நாட்டின் சாபக்கேடாகும்.

இராணுவத்தின் ஓய்வுதியச்செலவுகளைக் குறைத்து, நாட்டின் நிதியாதாரத்தை மிச்சப்படுத்துவதுதான், ‘அக்னிபாத்’ திட்டத்தின் முதன்மை நோக்கமென்று ஆட்சியாளர் பெருமக்களால் கற்பிக்கப்படும் காரணங்கள் அபத்தமானவையாகும். எட்டு ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழித்து, தனிப்பெரும் முதலாளிகளுக்கு சலுகைகளையும், வரிவிலக்குகளையும் வாரிவழங்கி, பணவீக்கத்தை அதிகப்படுத்தி, விலைவாசி உயர்வைக் கட்டற்ற உயர்நிலைக்குக் கொண்டு சென்று, எளிய மக்களை நாளும் பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கி வரும் ஒன்றியத்தை ஆளும் பாஜகவின் ஆட்சியாளர்கள், இராணுவச்செலவினங்களைக் குறைப்பதாகக் கூறுவது கேலிக்கூத்தாகும். நாட்டின் இறையாண்மை, எல்லைப்பாதுகாப்பு எனும் மதிப்பிட முடியாத அதிமுதன்மைத்துவம் வாய்ந்தவைகள் குறித்து மிக முக்கிய முடிவெடுக்கும்போது பொருளாதாரச் செலவினக்குறைப்பை அளவுகோலாக வைப்பதென்பது நாடு குறித்து துளியும் அக்கறையற்ற மடமைத்தனமாகும். ‘நாடு, ‘நாடு’ என்றுகூறி, நாளும் அரசியல் செய்திடும் ஒன்றிய அரசாட்சியின் பெருமக்கள், நாட்டைக் காக்கிற இலட்சணத்தை இத்திட்டமொன்றே மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தும் என்பது உறுதி.

ஆகவே, நாட்டில் நிலவும் அசாதாரணச்சூழலை முடிவுக்குக் கொண்டு வர, இந்திய இராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் பணிக்குக் கொண்டு வந்திருக்கும், ‘அக்னிபாத்’ எனும் புதிய முறையை உடனடியாகக் கைவிட வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு: June 18, 2022
இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் மக்கள் விரோத ’அக்னிபாத்’ திட்டத்தை மோடி அரசு திரும்பப்பெற வேண்டும்' - திருமாவளவன்!

மத்திய அரசின் 'அக்னிபாத்' திட்டம் இளைஞர்களின் வாழ்க்கையை நாசமாக்குவதாக அமைந்துள்ளதாகவும், அதனை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெறவேண்டும் என்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

“வேலைவாய்ப்பின்றி அல்லாடும் கோடிக் கணக்கான இளைஞர்களின் வாழ்வைப் பொசுக்கி அவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கும் ’அக்னிபாத்’ என்னும் திட்டத்தை மோடி அரசு அறிவித்திருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

குறிப்பாக, நான்காண்டுகளுக்காக மட்டுமே என படைக்கு ஆளெடுத்து அவர்களை அக்னி வீரர்களெனப் பயிற்சியளித்துப் பிறகு வீட்டுக்கு அனுப்புவது என்கிற இத்திட்டம், மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வாழும் பல கோடி இளைஞர்களின் கனவைச் சிதைப்பதாகவுள்ளது. எனவே இந்தத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வலியுறுத்துகிறோம்.

வேலை வாய்ப்பின்மையால் விரக்தியடைந்த இளைஞர்கள் வெடித்தெழும் தீயாய் வெகுண்டெழுந்து போராடி வரும் இன்றைய சூழலில், ஏற்கனவே தேர்தலில் அளித்த வாக்குறுதியின்படி, ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கும் வகையில் ஒரு புதிய திட்டத்தை உடனே அறிவித்திட மோடி அரசு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம்.

‘ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன்’ என்று 2019- நாடாளுமன்றத் தேர்தலின்போது திரு. நரேந்திர மோடி அவர்கள் வாக்குறுதி அளித்தார். ஆனால் அவரது எட்டாண்டுக் கால ஆட்சியில் பல கோடி பேர் இருந்த வேலையையும் பறிகொடுத்துவிட்டு வேலையற்றவர்களாக மாறி அல்லலுறும் அவலத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் வேலையில்லாத் திண்டாட்டம் 23.5% ஆக இருந்தது. இப்போது பிரேசில், வங்கதேசம் முதலான நாடுகளை விடவும் மோசமான நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய இரயில்வே துறை, தபால் துறை, வரி வருவாய்த் துறை மற்றும் இராணுவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சுமார் 8.72 இலட்சம் காலிப் பணியிடங்கள் இருப்பதாக 2020 இல் நாடாளுமன்றத்தில் மோடி அரசு அறிவித்தது. அவற்றை நிரப்புவதற்கு எந்தவொரு நடவடிக்கையையும் மோடி எடுக்கவில்லை. அந்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை இப்போது 10 இலட்சமாக உயர்ந்து விட்டது.

பொதுத் தேர்தல் நெருங்கிவரும் இந்நேரத்தில், வேலை இல்லாத் திண்டாட்டத்தால் இளைஞர்களிடையே ஏற்பட்டிருக்கும் கொந்தளிப்பை புரிந்துகொண்டே, இந்திய ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள் சேர்க்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார் எனத் தெரிகிறது. 17 வயதைத் தாண்டியவர்கள் இராணுவத்தில் சேரலாம்; ஆனால், அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் மட்டுமே வேலை தரப்படும்; பின்னர் 21 வயதில் அவர்கள் இராணுவ சேவையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பதுதான் மோடி அரசு அறிவித்திருக்கிற திட்டம்.

இதனால் இளைஞர்கள் பட்டப்படிப்பு படிக்கும் வாய்ப்பை இழப்பார்கள். எந்தத் திறனும் இல்லாதவர்கள் ஆக்கப்படுவதால் அதன் பிறகு அவர்களுக்கு எந்த வேலையும் கிடைக்காது. ஆயுள் முழுவதும் வேலைவாய்ப்புக்குத் தகுதியற்றவர்களாக, கல்வித் தகுதி இல்லாதவர்களாக அவர்கள் ஆக்கப்படுவார்கள். இந்த சதியை உணர்ந்து தான் பாஜக ஆளும் மாநிலங்களான உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் ராஜஸ்தான் முதலான வட மாநிலங்களில் இளைஞர்கள் வெகுண்டெழுந்து தமது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களின் ஆவேசத்தில் ஏராளமான இரயில்கள் தீக்கிரையாகி வருகின்றன. சட்டம் ஒழுங்கைக் கட்டுக்குள் கொண்டு வருகிறோம் என்னும் பெயரில் பாஜக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். இப்போது தென் மாநிலங்களுக்கும் இந்த ஆவேச அறப்போர் நீதி கேட்கும் நெருப்பாகப் பற்றிப் பரவுகிறது.

’இந்துக்களுக்கு நாங்கள் மட்டுமே ஆயுள்கால குத்தகைப் பாதுகாவலர்கள்’ என்று பறைசாற்றிக் கொள்ளும் சங்பரிவார்கள், அதே இந்துக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்து கொண்டு, தற்போது தமக்கு வேண்டிய ஒரு சில கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஒட்டுமொத்த இந்தியாவையும் தாரை வார்க்கும் தரகு வேலையை மோடி அரசு செய்து வருகிறது.

இந்நிலையில், இந்துக்களின் பாதுகாவலரான மோடி அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்துப் போராடுபவர்கள் யார்? அவர்கள் சொல்லும் அதே ‘சாட்சாத் இந்துச் சமூகத்தை’ சார்ந்த இளைஞர்கள் தான் என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. ஓட்டு வாங்குவதற்கு மட்டும் இந்துக்களின் பாதுகாவலர்கள் என்று சொல்லிக் கொண்டு இந்து இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியம் ஆக்கிக்கொண்டிருக்கிற ‘கார்ப்பரேட் தரகு அரசின்’ சதித் திட்டத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு புரிந்துகொண்டதால் தான் இன்று அவ்விளைஞர்கள் தெருவில் இறங்கி உள்ளனர். இந்து- முஸ்லீம் என்ற பிரிவினையை மூட்டி அதில் குளிர் காயலாம் என்கிற பாசிச பாஜகவின் கனவு இனி பலிக்காது என்பதை இந்தப் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

எனவே, ’அக்னிபாத்’ என்ற மோசடி திட்டத்தை உடனடியாக மோடி அரசு திரும்பப் பெற வேண்டும். காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அத்துடன், தேர்தலில் வாக்குறுதி அளித்தது போல எஞ்சியுள்ள இந்த இரண்டு ஆண்டுகளிலாவது ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அக்னிபாத் என்னும் இந்து விரோத- வெகுமக்கள் விரோத ஆளெடுப்புத் திட்டத்தை உடனடியாகத் திரும்பப் பெறாவிட்டால், பிற மாநிலங்களிலும் இந்தக் கிளர்ச்சி மாபெரும் புரட்சியாக வெடிப்பதை எவராலும் தடுக்க முடியாது. மேலும், இதுவே மோடியின் கார்ப்பரேட் தரகு ஆட்சியை 2024 இல் தூக்கி எறிவதற்கு வழிவகுப்பதாகவும் அமையும் என்பதையும் சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும்புகிறோம்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: June 18, 2022
'அதிகரிக்கும் ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசு தனிச்சட்டமியற்ற வேண்டும்' - சீமான் வலியுறுத்தல்!

அதிகரித்து வரும் சாதிய ஆணவப்படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், 

"தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தைச் சேர்ந்த சரண்யாவும், மோகனும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களைப் பெண்ணின் சகோதரனும், மைத்துனனும் விருந்து வைப்பதாகக் கூறி, வீட்டுக்கு அழைத்து வெட்டிப்படுகொலை செய்திருக்கிற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். தங்களது விருப்பத்தின் பெயரில், காதலித்து, சாதியை மறுத்து திருமணம் செய்து கொண்டதாலேயே, குடும்பத்தினரால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதை, ‘சாதிய ஆணவப்படுகொலை’ என்றே பதிவுசெய்ய வேண்டும். அவ்வாறு பதிவுசெய்ய மறுப்பதும், இதனைப் பழிவாங்கும் போக்கோடு நிகழ்த்தப்பட்ட கொலையென்றுகூறி சுருக்குவதும் ஏற்புடையதல்ல.

18 வயதினைப் பூர்த்திசெய்த எவரும் மனமொத்து திருமணம் செய்துகொள்வதற்கு சட்டமும், சனநாயக அமைப்பு முறைகளும் வழியேற்படுத்தி இருக்கிற நிலையில், சாதியின் பெயரால் நடக்கிற கோரமான இத்தகைய ஆணவக்கொலைகள் கடும் கண்டனத்திற்குரியவையாகும். அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ச்சிபெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வருகிற 21 ஆம் நூற்றாண்டிலும் சாதியின் பெயரால் நடக்கிற படுகொலைகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச்செய்கின்றன.

பிறப்பின் வழியே பேதம் கற்பித்து, மானுடச்சமூகத்தைப் பிளந்து பிரிக்கிற சாதி எனும் வருணாசிரமக்கட்டமைப்பை எதன்பொருட்டும் ஏற்க முடியாது. மனித மனங்களில் புரையோடிப் போயிருக்கிற சாதி எனும் சமூகப்புற்றால் நிகழ்ந்தேறும் வன்முறைகளும், தீண்டாமைக்கொடுமைகளும், ஆணவப்படுகொலைகளும் கடும் கண்டனத்திற்குரியதாகும். இவற்றை சட்டத்தின் துணைகொண்டு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது அரசின் தார்மீகக்கடமையும், சமூகப்பொறுப்புமாகும்.

ஆகவே, கும்பகோணம் தம்பதிகளான சரண்யா – மோகன் மரணத்திற்குக் காரணமான கொலைகளைக் கடுஞ்சட்டத்தின் கீழ் பிணைத்து, அவர்களுக்கு உரிய தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும், அதிகரித்து வரும் ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: June 16, 2022
குடியரசுத் தலைவராக கிறித்துவரை தேர்ந்தெடுக்க திருமாவளவன் கூறும் 'முக்கியக்' காரணங்கள்!

இந்தியாவின் குடியரசுத் தலைவராக இதுவரை கிறித்துவர் இருந்ததில்லை என்றும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கிறித்துவர் ஒருவரை பொது வேட்பாளராக குடியரசுத் தேர்தலில் நிறுத்தவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த காரணங்கள் அடங்கிய அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், தனது அறிக்கையில், 

"இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சார்ந்த எவரும் குடியரசுத் தலைவராக இருந்ததில்லை. இந்திய மக்கள் தொகையில் மூன்றாவது பெரிய மக்கள் தொகையைக் கொண்ட கிறித்தவ சமூகத்துக்கு சட்டமன்றங்களிலும் நாடாளுமன்ற அவைகளிலும் போதுமான பிரதி நிதித்துவம் அளிக்கப்படுவதில்லை. தற்போதைய மோடி அமைச்சரவையில் கிறித்தவர் எவரும் இடம்பெறாத நிலை இருந்தது. அதைப் பலரும் சுட்டிக்காட்டிய பிறகு அண்மையில் நடைபெற்ற விரிவாக்கத்தின் போது தான் கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

தற்போதைய மோடி அமைச்சரவையில் கிறித்தவர் எவரும் இடம்பெறாத நிலை இருந்தது. அதைப் பலரும் சுட்டிக்காட்டிய பிறகு அண்மையில் நடைபெற்ற விரிவாக்கத்தின் போது தான் கிறித்துவ சமூகத்தைச் சார்ந்த ஒருவர் துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். சட்டமன்றங்களிலும் போதுமான பிரதிநிதித்துவம் அவர்களுக்குக் கிடைப்பதில்லை. அவர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் அவர்களது மக்கள் தொகை குறிப்பிடத்தக்க அளவுக்கு இருக்கும் கோவா, கேரளா போன்ற மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்களில் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குக் கூட போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை.

தற்போதைய நாடாளுமன்றத்தில் முஸ்லிம்கள் 5.2 சதவீதம், கிறித்தவர் உள்ளிட்ட பிற சிறுபான்மையினர் 4 சதவீதம் மட்டுமே உள்ளனர். இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள், பெண்கள், தலித்துகள் முதலானோர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளனர். ஆனால் இதுவரை கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த எவரும் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

கடந்த எட்டாண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றிக் கிறித்தவர்களும் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். பல்வேறு மாநிலங்களில் மதமாற்றத் தடை சட்டம் கொண்டுவரப்பட்டு எவ்வித ஆதாரமும் இன்றி கிறித்தவர்கள் பழி வாங்கப்படுகின்றனர். மேலும் சங்பரிவார் அமைப்புகளைச் சார்ந்தவர்களால் கிறித்தவர்கள், குறிப்பாக பாதிரியார்கள் திட்டமிட்ட தாக்குதலுக்கு ஆளாக்கப்படுகின்றனர். ஆங்காங்கே தனித்தியங்கும் சிறிய சிறிய வழிபாட்டுத் தலங்கள், ஜெபக்கூடங்கள் காவல் துறையினரின் ஒத்துழைப்போடு தகர்க்கப்படுகின்றன. இந்தியாவின் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம் போன்றவற்றின் வளர்ச்சிக்குக் கிறித்தவ சமூகம் ஆற்றியிருக்கும் பங்களிப்பு மகத்தானது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள கிறித்தவர்களின் எண்ணிக்கை 2.78 கோடி ஆகும். இவ்வளவு பெரிய எண்ணிக்கை கொண்ட ஒரு சமூகம் இப்படி புறக்கணிக்கப்படுவதும் தாக்குதலுக்கு உள்ளாவதும் இந்திய ஜனநாயகத்துக்குப் பெருமை சேர்ப்பதாகாது. இந்திய சுதந்திரத்தின் பவள விழா கொண்டாடப்பட இருக்கும் இந்நேரத்தில் கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவது இந்திய ஜனநாயகத்தின் மாண்பை உலகுக்கு உணர்த்துவதாக அமையும்.

பெரும்பான்மைவாத அடிப்படையில் இந்துக்களை ஒருங்கிணைக்க சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலையே தமது பிழைப்புக்கான கருவியாகப் பயன்படுத்தும் பா.ஜ.க., குடியரசுத் தலைவர் தேர்தலையும் அதே நோக்கத்தில்தான் பயன்படுத்தும். எனவே, எதிர்க்கட்சிகள் தமது பொது வேட்பாளராகக் கிறித்துவ சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இது பாதுகாப்பற்ற நிலையில் எந்நேரமும் அச்சத்தில் உழலும் கிறித்தவ மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாகவும் வெறுப்பு அரசியலுக்கு எதிரான ஒரு மாற்று நடவடிக்கையாகவும் அமையுமென்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது" இவ்வாறு தெரிவித்துள்ளார். 

பதிவு: June 14, 2022
'நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக்கருத்துக்காக பாஜக தலைமை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' - சீமான்!

நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகியின் அவதூறு பேச்சுக்காக இந்தியாவின் அனைத்து இஸ்லாமியர்களிடமும் பாஜக கட்சித் தலைமை பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

"இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த, பாஜகவின் தேசியத்தலைமை வெளிப்படையான மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

பெருமகனார் நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட பாஜக நிர்வாகிகளான நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் ஆகியோரைக் கைதுசெய்யக்கோரி நாடெங்கிலும் போராட்டம் வெடித்திருக்கும் நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடைபெற்ற போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு இருவர் உயிரிழந்த செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 9 மாநிலங்களில் போராட்டம் பற்றியெரிகிறபோது நாட்டை ஆளக்கூடிய பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கள்ளமௌனம் சாதிப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பன்மைத்துவம் எனும் பரந்துபட்டக் கோட்பாட்டுக்குப் பெயர்போன நாட்டில் இசுலாமிய மக்களுக்கெதிராக நடத்தப்படும் அவதூறுப்பரப்புரைகளும், மதவெறிச்செயல்பாடுகள், கோர வன்முறைகளும், அரசின் இனஒதுக்கல் கொள்கைகளும் இந்தியப்பெருநாட்டுக்குப் பெரும் அவமானத்தையும், தலைகுனிவையும் ஏற்படுத்தியிருக்கின்றன. பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்கள் தங்களது இறைத்தூதரெனப் போற்றிக்கொண்டாடி வரும் பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களை இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளைக் கைதுசெய்யக்கோரி, ஒட்டுமொத்த இசுலாமியச்சமூகமும் ஒற்றைப்பெருங்குரலெடுத்துப் போராடி வரும் நிலையில், அவற்றிற்குச் செவிசாய்க்காது அவர்கள் மீது அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்துவிடுவது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும். அரபு நாடுகளும், இசுலாமிய நாடுகளும் தங்களது கண்டனத்தைப் பதிவுசெய்து வரும் நிலையில், அந்நாடுகளில் வாழும் இந்திய நாட்டுக்குடிகளது இருப்பும், வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி வரும் பேராபத்து குறித்து துளியும் சிந்தித்திடாது இசுலாமிய மக்கள் மீது எதேச்சதிகாரப்போக்கை ஏவிவிடும் ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் செயல்பாடுகள் வெட்கக்கேடானது.

இந்தியா என்கிற நாடு பிறப்பதற்கே முன்பிருந்தே, இந்நிலத்தில் நீடித்து நிலைத்து வாழ்ந்து வரும் இம்மண்ணின் பூர்வக்குடி மக்களை, அவர்கள் தழுவி நிற்கிற, ‘இசுலாம்’ எனும் மார்க்கத்தை வைத்தே அந்நியர்கள் போல சித்தரித்து வெறுத்து ஒதுக்குவதும், அவர்களுக்கெதிராக மதவெறியைத் தூண்டி நாடெங்கிலும் கலவரம் செய்வதும்தான் பிரதமர் மோடி உருவாக்க நினைத்த புதிய இந்தியாவா? சொந்த நாட்டுக்குடிகளை மதத்தால் துண்டாடி, வாக்குவேட்டைக்காக நாட்டைக் கூறுபோடுவதுதான் உங்களது தேசப்பக்தியா? இந்தியா என்கிற நாடு வெள்ளையர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தபோது இந்நாட்டின் விடுதலைக்காக எந்தப் பங்களிப்பையும் செய்யாத ஆர்.எஸ்.எஸ். போன்ற சங் பரிவார் அமைப்புகள், அளப்பெரிய பங்களிப்பைச் செய்து நாட்டுக்காக ஈகம்செய்த இசுலாம் சமூகத்தைத் தேசவிரோதிக்கூட்டமென முத்திரைக் குத்துவது மோசடித்தனமில்லையா?

கோடிக்கணக்கான இசுலாமிய மக்களின் பெரும் மத நம்பிக்கைக்கூடமாக இருந்த பாபர் மசூதியை இடித்துத் தகர்த்தபோதும், நீதிமன்றமே அவ்வழக்கில் அநீதி இழைத்தபோதும் நாட்டையே நம்பி நிற்கிற இசுலாமிய மக்களை, பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டை விற்று, இலாபமீட்டத் துடிக்கும் பாஜக பழிசுமத்தி குறைகூறுவது இழிசெயல் இல்லையா? 8 ஆண்டுகால ஆட்சியில் சாதனையென்று சொல்ல எதுவுமின்றி, பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கக்கூடத் துணிவின்றி, இசுலாமிய வெறுப்பை மட்டுமே மக்கள் மத்தியில் விதைத்து, உள்நாட்டுக்கலவரத்தை ஏற்படுத்தி, ஆட்சியதிகாரத்தைச் சுவைக்கத் துடிப்பது பாஜக அரசு செய்திடும் அற்பத்தனமில்லையா?

ஒன்றியத்தை ஆளும் ஆட்சியாளர் பெருமக்களே! உளச்சான்று என ஒன்று உங்களிடமிருக்கிறதா? பாபர் மசூதியை இடித்தீர்கள்! அப்பாவி அப்சல் குருவைத் தூக்கிலிட்டீர்கள்! முத்தலாக்கைக் கொண்டு வந்து மதவுரிமையில் தலையிட்டீர்கள்! நாடெங்கிலுமுள்ள மசூதிகளைக் குறிவைத்தீர்கள்! பாங்கு ஓதுவதையும் காற்று மாசுபாடெனக் கூறி, குற்றம் கூறினீர்கள்! உணவுரிமையில் தலையிட்டு, மாட்டிறைச்சி உண்ணவும் கெடுபிடி செய்தீர்கள்! இசுலாமியப்பெண்கள், ஹிஜாப் அணிவதற்கெதிராகக் கலவரம் செய்தீர்கள்! காஷ்மீரில் மாநிலத்தன்னுரிமையைப் பறித்து, மண்ணின் மக்களை அகதிகளாக்கினீர்கள்! குஜராத்தில் மூவாயிரம் இசுலாமியர்களைப் படுகொலைசெய்தீர்கள்! ஹஜ் மானியத்தை ரத்துசெய்தீர்கள்! தேசிய முகாமைச் சட்டத்தைக் கொண்டு வந்து, இசுலாமியர்களைப் பயங்கரவாதிகளெனக் கட்டமைத்து, கைதுசெய்தீர்கள்! கல்லெறிந்தார்கள் எனக்கூறி கையில்லா இசுலாமியர்களின் வீட்டையும் இடித்துத் தகர்த்தீர்கள்! குடியுரிமைச்சட்டத்தைக் கொண்டு வந்து அவர்களது இருப்பையே கேள்விக்குள்ளாக்கினீர்கள்! இவ்வாறாக, எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு, எங்கள் உடன்பிறந்தார்களான இசுலாமியச்சொந்தங்களை பிரிவினைவாதிகள் என்றும், தீவிரவாதிகள் என்றும் பழிசுமத்துகிறீர்கள்! வெட்கமாக இல்லையா?

இசுலாமிய நாடுகளோடு நட்புறவு வேண்டும்; அந்நாட்டுப்பொருட்களும், பொருளாதாரமும் வேண்டும். இசுலாமிய மக்களின் வரி வேண்டும்; அவர்கள் செலுத்தும் வாக்கும் வேண்டும். ஆனால், அவர்களது உரிமையும், உணர்வும், வாழ்வும் வேண்டாமா? இது நாடா? இல்லை! சுடுகாடா? 70 ஆண்டுகால விடுதலை வரலாற்றில் பன்னாட்டுச்சமூகத்தின் முன்னே உலகரங்கில் இந்தியாவை மதவாதிகளின் கூடாரமாகக் காட்டி, சந்தி சிரிக்க வைத்ததைத் தவிர, நீங்கள் சாதித்தது என்ன நியாயமாரே?

பெருமகனார் நபிகள் நாயகம் அவர்களைக் கொச்சைப்படுத்தி, இழித்துரைத்த பாஜகவின் நிர்வாகிகளை நுபுர் சர்மா, நவீன் குமார் ஜிண்டால் அவர்களை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டுமெனவும், இசுலாமிய மக்களின் உள்ளக்காயத்தை ஆற்றுப்படுத்த பாஜகவின் தேசியத்தலைமையானது வெளிப்படையாக மன்னிப்புகோரி, நாடெங்கிலும் ஏற்பட்டிருக்கிற அசாதாரண சூழலைக் கட்டுக்குள் கொண்டு வர வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்" இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: June 13, 2022
'சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவியை உடனடியாக குடியரசு தலைவர் பதவிநீக்கம் செய்ய வேண்டும்' - கொதிக்கும் வைகோ!

சனாதன தர்மமே இந்தியாவை வளர்த்ததாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்ததற்கு தொடர் கண்டனங்கள் எழுந்துவரும் நிலையில், ஆர்.என்.ரவியை ஆளுநர் பதவியிலிருந்து குடியரசுத் தலைவர் நீக்கவேண்டும் என்று மதிமுக தலைவர் வைகோ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, சனாதன தருமத்தை உயர்த்திப் பிடித்துள்ளார். அவரது உரையில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருக்கிறார். “ரிஷிகளும், முனிவர்களும் வேதங்கள் மூலமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சனாதன தர்மத்தை நிலைநாட்டுகின்றனர். ஒரே பரமேஸ்வரன், ஒரே கடவுள். அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதை தான் நமது மார்க்கம் கூறுகிறது.

இந்திய அரசியலமைப்புதான் நமது ஆன்மா. வேற்றுமையில் ஒற்றுமை என நாம் நம்மை பற்றி கூறுகிறோம். அதைத்தான் சனாதன தர்மமும் வலியுறுத்துகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது இந்திய அரசியலமைப்பு, சனாதன தர்மத்தில் கூறப்பட்டுள்ளது. கிமு 2-ஆம் நூற்றாண்டில் புத்த மதத்தில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் தத்துவங்களும் சனாதன தர்மத்தில் இருந்து வந்தவை. சனாதன தர்மம்தான் பாரதத்தை உருவாக்கியது. நமது நாட்டின் எண்ணம், செயல் போன்றவற்றில் சனாதானம் உள்ளது. ஒரே பரமேஸ்வரா என சனாதன தர்மம் சொல்கிறது. அந்த பரமேஸ்வரன் தான் உலகத்தை படைக்கிறார், நம் வேற்றுமையில் வாழ்கிறார் என கூறப்படுகிறது.

பாரதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே தோன்றியது. அப்போதே நமது அரசியல் அமைப்பும் எழுதப்பட்டுவிட்டது. “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி” என அத்வைத தத்துவங்கள் கூறுகின்றன. மற்ற நாடுகளைப் போல ராணுவ வீரர்கள், அரசர்கள் மூலம் இந்த நாட்டை உருவாகவில்லை. இந்த நாடு ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியாலும் உருவாக்கப்பட்டது. இந்தியாவில் ராணுவம் பொருளாதாரத்தில் வளர்ச்சியை போல ஆன்மீகத்தில் வளர்ச்சி அவசியம். அதற்கு சனாதன தர்மம் வழிமுறையாக இருக்கும். சோமநாதர் கோவில் சொத்துக்களை அழித்து காந்தகார், பெஷாவர் போன்ற நகரை கஜினி முகமது உருவாக்கினார். ஆனால், அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டது. இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் சனாதன தர்மத்தின் வலிமை”.

ஆளுநர் பொறுப்பு வகிக்கும் ஒரு நபர் அரசியலமைப்புச் சட்ட நெறிகளை மீறி, சனாதன தர்மம் இந்தியாவை வழி நடத்துகிறது என்று பேசி இருப்பது கடும் கண்டனத்துக்குரியது. மனித சமத்துவத்தை மறுக்கும் வருணாசிரம தருமத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆர்.என்.ரவி சங்பரிவாரங்களின் கோட்பாட்டை தூக்கிப்பிடித்து பெருமை பொங்க பேசி உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவி தான் யார் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்தியாவை வழிநடத்துவது அண்ணல் அம்பேத்கர் வடித்தெடுத்த அரசியல் அமைப்பு சட்டமே தவிர, நால்வருண பேதத்தை வலியுறுத்தும் சனாதன தர்மம் அல்ல.

ஆளுநர் ரவி  தனது பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற  குறள் நெறியை உலகுக்குத் தந்த தமிழ்நாட்டில் ஆளுநர் பதவியில் இருந்து கொண்டு பிறவி பேதத்தை கற்பிக்கும் சனாதன தர்மத்திற்கு ஆதரவாக பேசும் ஆளுநர் ரவி, அந்தப் பொறுப்பில் நீடிக்கும் தகுதியை இழந்து விட்டார். உடனடியாக குடியரசு தலைவர் தமிழக ஆளுநரை அப்பொறுப்பிலிருந்து விடுவிக்க வேண்டும்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: June 13, 2022
'ஆர்.எஸ்.எஸ்-ன் ஊதுகுழலாக ஒலிக்கும் மதுரை ஆதீனத்திடம் தமிழகம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' - ஜோதிமணி எம்.பி.!

மதுரை ஆதீனம் ஆர்.எஸ்.எஸ்.-ன் ஊதுகுழலாக ஒலிப்பதாகவும், அவர் போன்ற ஆட்களிடம் தமிழகம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம், இந்து அறநிலையத்துறை இடையே அண்மைக்காலமாக தொடர் எதிரும் புதிருமான போக்கு நிலவிவருகிறது. ஆதீனங்களைப் பல்லக்கில் தூக்கிச்செல்ல அரசு தடை விதிக்கவேண்டும் என்று திராவிடர் கழகம் புகாரளித்ததிலிருந்து சூடுபிடித்த பிரச்சினை, தொடர்ந்து வெவ்வேறு வடிவங்களாக வளர்ந்தவாறே உள்ளது.

இந்நிலையில் தான் அண்மையில், சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அறநிலையத்துறை சார்பில் வரவு - செலவு கணக்கை ஆய்வு செய்ய சென்றிருந்த குழுவுக்கு தீட்சிதர்களால் அனுமதி மறுக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அறநிலையத்துறையைக் கலைத்துவிடவேண்டும் என்றும், பக்தர்களின் காணிக்கையைக் கொள்ளையடிக்கும் கூடாரமாக அறநிலையத்துறை மாறிவருவதாகவும் மதுரை ஆதீனம் கடுமையாகப் பேசியிருந்தார். மதுரை ஆதீனத்தின் எதிர்வினைகளுக்கு முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்கவே அறநிலையத்துறை அமைதி காப்பதாக பின் அமைச்சர் சேகர்பாபு இதற்கு பதிலளித்திருந்தார். 

இந்நிலையில் தான் மதுரை ஆதீனத்தின் சமீபத்திய பேச்சு குறித்து காங்கிரஸ் கரூர் எம்.பி. ஜோதிமணி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது:

"தமிழ் மண்ணின் ஆன்மீக மரபில் ஒரு தனிச்சிறப்பான இடம் ஆதீனங்களுக்கு உண்டு. குன்றக்குடி, பேரூர் உள்ளிட்ட ஆதினங்கள் தமிழ் மண்ணோடும், மரபோடும், சமூக வாழ்வோடும் இணைந்து பயணிப்பவை. சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்தவை. ஆதினங்களின் ஆன்மீகம் அடிப்படையில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு எதிரானது.

ஆர்எஸ்எஸ் இன் ஊதுகுழலாக ஒலிக்கும் தற்போதைய மதுரை ஆதினம் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். தமிழகத்தின் தொன்மையான ஆதீன மரபிற்கு களங்கம் விளைவிப்பவர்கள். இவர்களிடம் தமிழகம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

ஆர்எஸ்எஸ் இன் குரலாக , ஆதினப்போர்வையில் ஒளிந்துகொண்டு, அமைதி, நல்லிணக்கத்தின் அடையாளமான தமிழக மண்ணில், பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தமிழக அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்"

பதிவு: June 10, 2022
'நாட்டின் ஒற்றுமைக்குக் குந்தகம் விளைவிக்கும் பாஜக தலைவர்களை சிறையிலடையுங்கள்' - சீறும் மம்தா பானர்ஜி!

நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா பேசியது நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகவும், அவரை கைதுசெய்யவேண்டும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் குறித்து அவதூறாகப் பேசியதாக பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா மீதும், அதை ஆமோதிக்கும் விதமாகப் பதிவிட்ட பாஜக நிர்வாகி நவின்குமார் ஜிண்டால் மீதும் குற்றச்சாட்டுகள் பாய்ந்தன. அவர் பேசிய காணொலி வலைதளங்களில் பரவி பல்வேறு கண்டனங்களைப் பெற்றன.

குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 15 நாடுகள் நுபுர் சர்மாவின் பேச்சிற்கு எதிராக இந்தியாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் இந்திய அரசு பொதுமன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தங்களது கடிதத்தில் தெரிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து நுபுர் சர்மா கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து இடைநீக்கமும், நவின் குமார் ஜிண்டால் நீக்கமும் செய்யப்பட்டனர். ஆயினும் இருவரையும் கைதுசெய்து சிறையிலடைக்கவேண்டும் என்று பரவலாக கோரிக்கைகள் எழுந்துவருகின்றன.

இந்நிலையில், நபிகள் நாயகம் குறித்த பாஜக நிர்வாகிகளின் பேச்சு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கருத்திட்டுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "ஒரு சில பேரழிவுகரமான பாஜக தலைவர்களின் சமீபத்திய கொடூரமான வெறுப்பு பேச்சுகளை நான் கண்டிக்கிறேன். இதன் விளைவாக வன்முறை பரவுவது மட்டுமல்லாமல், அமைதி மற்றும் நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் நாட்டின் கட்டமைப்பு பிளவுபடுகிறது.

நாட்டின் ஒற்றுமைக்கு குந்தகம் ஏற்படாமலும், மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகாமலும் இருக்க, குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று நான் கடுமையாக கேட்டுக்கொள்கிறேன்.

அதே சமயம், சாமானிய மக்களின் நலன் கருதி அமைதியைக் காக்குமாறு அனைத்து சாதி, சமயம், மதம் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த எனது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: June 09, 2022
'ஊழல் அரசுக்குத் தலைமை தாங்கும் மோடி, ஊழலை வேடிக்கை பார்க்கமாட்டேன் எனப் பேசலாமா?' - சீறும் காங்கிரஸ் நாராயணசாமி!

அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்றவை பாஜகவுக்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், ஊழல் அரசுக்கு தலைமை தாங்கும் மோடிக்கு ஊழலைப் பற்றிப் பேச தகுதி இல்லை என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சியின் அங்கமாக செயல்படுகின்ற அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ உள்ளிட்ட அமைப்புகள் பாஜகவுக்கு ஆதரவாகவும், பாஜகவுக்கு வேண்டாதவர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்தும் அரசியல் கட்சி தலைவர்களை மிரட்டியும் வருகின்றனர்.  

சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது பிரதமர் மோடியின் பழிவாங்கும் நடவடிக்கையைக் காட்டுகிறது. எதிர்கட்சிகள் மீது பொய் வழக்குப்போட்டு ஒன்றிய பா.ஜ.க அரசு வெறுப்பு அரசியல் செய்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசின் இத்தகைய நடவடிக்கைகள் விரைவில் அவர்கள் பக்கம் திரும்பும். 

புதுச்சேரி மாநில மின்துறையை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லி சென்று போராட்டம் நடத்த உள்ளோம். புதுச்சேரி மாநிலத்தில் புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து சமஸ்கிருதத்தை திணிக்கும் வேலையில், புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசும், ஒன்றிய அரசும் ஈடுபட்டுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கனவே 6 மதுபான ஆலைகள் உள்ள நிலையில், மேலும் புதிய ஆலைகள் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை பல நூறு கோடி லஞ்சம் பெற்றுக்கொண்டு கலால் துறையில் பலகோடிக்கு ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த ஊழல் புகாரில் அதிகாரிகள் விரைவில் சிறைக்கு செல்ல உள்ளார்கள்.

ஊழலை வேடிக்கை பார்க்க மாட்டேன் என்று கூறும் பிரதமர் மோடி புதுச்சேரியில் ஆளும் அரசின் ஊழலை வேடிக்கை பார்ப்பது ஏன்? ஊழல் அரசுக்கு தலைமை தாங்கும் மோடி இனி ஊழலை பற்றி பேசக்கூடாது" இவ்வாறு தெரிவித்தார்.

பதிவு: June 03, 2022
'மறைமுக லாட்டரி விற்பனையை தமிழக அரசு தடுத்திட வேண்டும்' - ஒ.பன்னீர்செல்வம்!

மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் லாட்டரி சீட்டு விற்பனை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் சூதாட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்கின்றன. இதனை தடுத்து நிறுத்தும் வகையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டாலும், அதற்கு எதிராக தனியரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தினை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில், தன்மைக்கேற்ப பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து உரிய சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இப்போது-இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அறிகிறேன்.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு வாயிலாக மோசடி நடப்பதாகவும், முதலில் ஆசையைத் தூண்டும் வகையில் பணம் கொடுக்கப்படும் என்றும், பின் கட்டிய பணம் எல்லாம் சூறையாடப்படும் என்றும், இது ஆன்லைன் விளையாட்டு அல்ல என்றும், இது ஆன்லைன் மோசடி என்றும், இதன் காரணமாக பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பணத்தை இழந்து அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது என்றும், தங்களுக்கு பிடித்த நடிகர்-நடிகையர் விளம்பரம் செய்கின்றனர் என்பதற்காக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம் என்றும் காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

காவல் துறை தலைமை இயக்குநரே இதுபோன்று தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தை அணுகி இதனை உடனடியாகத் தடை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முனைப்புடன் செயல்படாதது வருத்தமளிக்கும் செயலாகும்.

லாட்டரி சீட்டு விற்பனையை பொறுத்தவரை நீதிமன்றத் தடை ஏதுமில்லாத சூழ்நிலையில், இதனைத் தடுத்து நிறுத்த அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. அரசின் மெத்தனப் போக்கினைப் பார்க்கும்போது, ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஏற்கெனவே, கொலை, தற்கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் கொடுமைகள் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொன்னாலும், கள நிலவரம் வேறு மாதிரியாகவுள்ளது. சூதாட்டம், போதை பொருட்கள், கள்ளச் சாராயம் கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைத் தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை பெறவும்; மறைமுக லாட்டரி விற்பனையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும்; தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய வேண்டும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: June 03, 2022
'ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை ஏன் தேட வேண்டும்? இஸ்லாமியர்கள் மீது பழி போடாதீர்கள்' - சொல்கிறார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தை தேடுவது அநாவசியமானது என்றும் இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சி ஒன்றில் அந்த அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "நாட்டில் அண்மைக்காலத்தில் சில பிரசித்த பெற்ற இந்து கோயில்கள் தொடர்பாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன. வரலாற்றை நாம் மாற்ற முடியாது. கியானவாபி மசூதி விவகாரத்தில் கடந்தகால வரலாறுகளுக்காக தற்சமயம் வாழும் இஸ்லாமியர்கள் யார்மீதும் பழிசுமத்தக்கூடாது. கியானவாபி சர்ச்சை இன்றைக்கு ஏற்பட்டது அல்ல. அதற்கு இப்போதைய இஸ்லாமியர்களோ, இப்போதைய இந்துக்களோ காரணமாக முடியாது. இது எப்போதோ நடந்த சம்பவம்.

இஸ்லாம் இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த மதம். அடக்கி ஆள நினைத்தவர்கள் கொண்டுவந்த மதம். அப்போது விடுதலை வேட்கையில் இருந்து நம் நாட்டு மக்களை உணர்வுப்பூர்வமாகத் தாக்கி தேவஸ்தானங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான கோயில்கள் அழிக்கப்பட்டன.

சில இந்துக் கோயில்களுக்கு சிறப்பு அந்தஸ்து இருக்கிறது. அதாவது கியானவாபி போல் இந்துக் கோயிலில் மசூதி இருக்கிறது. இதைத் தான் தற்போது இந்து சமூகத்தினர் கேள்விக்கு உள்ளாக்குகின்றனரே தவிர இந்துக்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக இல்லை. ஏனெனில் இப்போதைய இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் எல்லோரும் இந்துக்களாக இருந்தவர்களே.

தினம் தினம் புதிய சர்ச்சைகளை ஏற்படுத்த அவசியம் என்னவிருக்கிறது? ஒவ்வொரு மசூதியிலும் ஏன் சிவலிங்கத்தை தேட வேண்டும்? கியான்வாபி சர்ச்சையில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முடிவு எட்டப்பட வேண்டும். ஒருமித்த முடிவை எட்ட முடியவில்லை என்றுதான் மக்கள் நீதிமன்றத்தை அணுகுகின்றனர். நீதிமன்றம் என்ன முடிவு செய்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நமது நீதித்துறையை நாம் புனிதமாகக் கருத வேண்டும். அதன் முடிவுகளை நாம் கேள்விக்கு உள்ளாக்கக் கூடாது" இவ்வாறு அவர் பேசினார்.

பதிவு: June 03, 2022
'தமிழகத்தில் நடப்பது திராவிட மாடல் ஆட்சியா? ஆன்மிக திராவிட மாடல் ஆட்சியா?' - சீமான் கேள்வி!

ஆன்மிக செயல்பாடுகளுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் கொடுப்பதாகவும், தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சியா அல்லது ஆன்மிக திராவிட மாடல் ஆட்சியா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

சென்னையின் பூர்வீகக்குடிகளின் வாழ்விடங்களை இடித்துத்தகர்த்து மண்ணின் மக்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆவடியில் பசு மடம் கட்டுகிறது திராவிட மாடல் அரசு; இல்லை! இல்லை! ஆன்மீக திராவிட மாடல் அரசு!

சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழர் மூதாதை நந்தன் உள்நுழைந்த தெற்கு நுழைவாயில் அடைக்கப்பட்டு, இன்றும் தீண்டாமைச்சுவர் இருக்கிறதெனக் கூறி, அதனைத் தகர்த்துவிட்டு, நந்தன் பெயரில் மணிமண்டபம் கட்டக்கோருகிறோம். இறந்துபோன கோயில் யானைகளுக்குக் கோயில்களில் நினைவு மண்டபங்கள் கட்டுகிறது சமூக நீதி அரசு! இல்லை! இல்லை! மனுநீதி அரசு!

கோவையில் கடந்த ஐந்தாண்டு காலத்தில் மட்டும் 79 யானைகள் இறந்துள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. காடுகளிலுள்ள யானைகளின் இருப்புக்கோ, அவை செல்வதற்கான வழித்தடத்துக்கோ வழிவகை செய்யாத திமுக அரசு, கோயில் யானைகளுக்கு நினைவு மண்டபம் கட்டத் துடிப்பது வெட்கக்கேடானது.

அரசின் பெயரில் கடன் வாங்கும் 90,000 கோடி ரூபாயில்தானே, பசுக்களுக்கு மடமும், யானைகளுக்கு நினைவு மண்டபமும் கட்டுகிறீர்கள்? சிறப்பு! சிறப்போ சிறப்பு! உத்திரப்பிரதேச மாடலையும் மிஞ்சிவிடும் உங்களது ஆன்மீக திராவிட மாடல் ஆட்சி!

பதிவு: June 01, 2022
'மத அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்ற மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது' - கே.எஸ்.அழகிரி தாக்கு!

பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் கருப்புப் பணம் ஒழியவில்லை என்றும், கள்ளநோட்டுப் புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

"சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க.வின் எட்டாண்டு கால ஆட்சியில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி பேசியிருக்கிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வெளிநாட்டில் பதுக்கியிருக்கும் ரூபாய் 85 லட்சம் கோடி கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என வாக்குறுதி அளித்து தேர்தலில் வெற்றி பெற்றனர். ஆனால், கருப்புப் பணத்தை ஒழிக்க எடுக்கப்பட்ட பணமதிப்பு நீக்க நடவடிக்கையினால் கள்ளப் பணத்தின் புழக்கம் இருமடங்காக கூடிவிட்டதாக செய்திகள் வெளிவருகின்றன. மோடியின் ஆட்சியில் கருப்புப் பணமும் ஒழியவில்லை, கள்ளப் பணமும் ஒழியவில்லை, ஊழலும் ஒழியவில்லை.

ஊழலை ஒழித்து விட்டதாக பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு அசாத்திய துணிச்சல் இருக்க வேண்டும். அனைத்து ஊழல்களுக்கும் தாயாக ரபேல் பேர ஊழல் நடைபெற்றதை நாட்டு மக்கள் அறிவார்கள். இதில் நரேந்திர மோடியின் நேரடி தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு விமானம் ரூபாய் 526 கோடி என்ற விலையில், 126 ரபேல் விமானங்களை 19 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியின் ஆட்சியிலோ 36 ரபேல் விமானங்கள் வாங்க ஒரு விமானத்தின் விலையை ரூபாய் 1670 கோடியாக அதிகரித்து மொத்தம் ரூபாய் 60 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு 41 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்புக்கு யார் காரணம் ? இந்த இழப்பு எதனால் ஏற்பட்டது ? ஒரே ஒரு விமானம் தயாரித்த அனுபவமில்லாத மோடியின் நண்பர் அனில் அம்பானிக்காக இத்தகைய வருவாய் இழப்பு மோடி ஆட்சியில் ஏற்பட்டுள்ளது. இது ஊழல் இல்லை என்றால், எது ஊழல் என்பதைப் பிரதமர் மோடி விளக்க வேண்டும்.

பிரதமர் மோடியின் ஆட்சியில் வறுமை குறித்து ஹின்ட்ரைஸ் பவுன்டேஷன் தயாரித்த ஆய்வறிக்கையில் 20 கோடி இந்தியர்களுக்கும் மேலாக நாள்தோறும் பசியோடும், வெறும் வயிற்றுடனும் உறங்கச் செல்கிறார்கள் என்று கூறியதோடு, பட்டினியால் நாள்தோறும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இறப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. 2020 அக்டோபரில் வெளியிடப்பட்ட உலக வறுமை குறியீட்டு அறிவிப்பின்படி, மொத்தமுள்ள 107 நாடுகளில் இந்தியா 94-வது இடத்தில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்களிடையே வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது குறிப்பிட்ட சில தொழிலதிபர்களின் சொத்து மடங்கு பலமடங்கு கூடியிருப்பது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு விளக்கம் கூற வேண்டும்.

கடந்த 8 ஆண்டுகால ஆட்சி குறித்து பா.ஜ.க.வினர் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள். ஆனால், மோடியின் ஆட்சிக் காலத்தில் ஏழை, எளியோரின் வாழ்க்கைத்தரம் படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிற போது, மோடியின் நெருங்கிய நண்பர்களான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. உலக கோடீசுவரர்கள் வரிசையில் 7.8 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பை குறுகிய காலத்தில் அதிகரித்து, உலக கோடீசுவரர்களின் வரிசையில் பத்தாவது இடத்தில் கௌதம் அதானி இருக்கிறார். ஆசியாவின் முதல் கோடீசுவரராக இருந்த முகேஷ் அம்பானியை பின்னுக்குத் தள்ளிவிட்டு கௌதம் அதானி முதலிடத்தைப் பெறுவதற்கு யார் காரணம் ? பிரதமர் மோடியின் ஆதரவினால் தான் கௌதம் அதானியின் அசுர வளர்ச்சி ஏற்பட்டது என்பதைப் பகிரங்கமாக குற்றம் சாட்ட விரும்புகிறோம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஊழல் நடந்ததாக ஒரு தோற்றத்தை உருவாக்குகிற முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டிருக்கிறார். 10 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த டாக்டர் மன்மோகன்சிங் மற்றும் அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் மீது ஒரே ஒரு ஊழல் குற்றச்சாட்டை கூறுகிற துணிவு பிரதமர் மோடிக்கு இருக்கிறதா ? பா.ஜ.க.வுக்கு இருக்கிறதா ? இந்தியாவிலுள்ள எந்த நீதிமன்றத்திலும் இவர்கள் மீது ஊழல் வழக்கு இருப்பதாக பா.ஜ.க.வினரால் கூற முடியுமா ? அன்னை சோனியா காந்தி, தலைவர் ராகுல்காந்தி ஆகியோரை பொறுத்தவரை அன்று பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி பதவி விலகிய 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு, இதுவரை எந்தவிதமான அரசு பொறுப்பையும் ஏற்றதில்லை. பிரதமர் பதவி தம் மீது திணிக்கப்பட்ட போது அரசியல் பேராண்மையோடு மறுத்தவர் அன்னை சோனியா காந்தி. பதவி மறுப்பாளர்களான சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோரை களங்கப்படுத்துகிற முயற்சிகளில் பிரதமர் மோடியோ, பா.ஜ.க.வினரோ வெற்றி பெற முடியாது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையைக் குறைக்கக் கோரி கோட்டையை நோக்கித் திரட்டப்பட்ட கூட்டத்தை வைத்து தமிழக பா.ஜ.க. பேரணி நடத்தியிருக்கிறது. இவற்றின் விலையை பா.ஜ.க. அரசு நிர்ணயம் செய்கிறதா?  தமிழக அரசு நிர்ணயம் செய்கிறதா ? யார் நிர்ணயம் செய்கிறார்கள் என்பதை அண்ணாமலை தெளிவுபடுத்துவாரா ? 2014 மே மாதத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபோது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூபாய் 9.48. அது தற்போது ரூபாய் 27.90. டீசலுக்கு கலால் வரி ரூபாய் 3.56 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 21.80 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2014 இல் ரூபாய் 400 ஆக இருந்தது, தற்போது ரூபாய் 1015 ஆக விற்கப்படுகிறது. இவையெல்லாம் பா.ஜ.க. அரசின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

இந்நிலையில், தி.மு.க. அரசு கொடுத்த வாக்குறுதியின்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3 விலையைக் குறைத்திருக்கிறது. இதனால் தமிழக அரசுக்கு ரூபாய் 1016 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 5 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையோடு ஆட்சியில் அமர்ந்த தி.மு.க. அரசு, இந்த விலை குறைப்பைச் செய்திருக்கிறது. இதைப் பாராட்ட மனமில்லை என்றாலும், குறைந்தபட்சம் விமர்சனம் செய்யாமல் இருக்கலாம். ஆனால், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கக் கோரி தி.மு.க. ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்கு தமிழக பா.ஜ.க.விற்கு என்ன அருகதை இருக்கிறது ?

எனவே, கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மதவாத அரசியல் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, பொருளாதார பேரழிவில் சிக்கியுள்ள மக்களின் கவனத்தை திசை திருப்பி, அரசியல் ஆதாயம் தேடலாம் என்ற பிரதமர் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறாது"

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: June 01, 2022
'ஓநாய்க்கூட்டங்கள் தான் எனக்கு எதிராக போராடின; பாரம்பரிய பத்திரிகையாளர்கள் அல்ல' - பேரணியில் அண்ணாமலை பேச்சு!

திமுகவின் ஆட்சிக்காலம் எண்ணப்பட்டு வருவதாகவும், ஊடகம் என்ற பெயரில் இருக்கும் ஓநாய்க்கூட்டத்தினரிடம் தான் தனக்கு பிரச்சினை என்றும், எல்லா ஊடகத்தினருடனும் இல்லை என்றும் பேரணியில் அண்ணாமலை பேசியுள்ளார்.

திமுக தேர்தல் வாக்குறுதியில் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், அடுத்த 72 மணிநேரத்தில் விலையைக் குறைக்கவில்லை என்றால் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கெடு முடிந்துவிட்டதாகவும், விலையைக் குறைக்காத தமிழக அரசுக்கு எதிராக இன்று பாஜக சார்பில் பேரணி நடத்தவிருப்பதாகவும் நேற்று அறிவித்திருந்தார். அதன்படி, அண்ணாமலை தலைமையில், தமிழக பாஜகவினர் இன்று தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் பேரணியை எழும்பூரில் தொடங்கி தொடர்ந்து நடத்திவருகின்றனர். இந்நிலையில், திமுக எரிபொருட்களின் விலையைக் குறைக்கும்வரை விடப்போவதில்லை என்றும், திமுகவிற்கு அழிவுக்காலம் தொடங்கிவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து பேரணியில் பேசிய அவர், "கோட்டையை நோக்கி நாங்கள் வரப்போகிறோம் என்று தெரிந்ததுமே முதல்வர் எஸ்கேப் ஆகி டெல்டா மாவட்டத்திற்குச் சென்றுள்ளார். பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்காதவரை நாங்கள் விடப்போவதில்லை. எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றவில்லை என்றால், 20 நாள்கள் கழித்து மாவட்டதோறும் உண்ணாவிரத அறப்பேராட்டம் நடைபெறும். அதனைத்தொடர்ந்து, 30 நாள்கள் திருச்சியை நோக்கி மாபெரும் போராட்டம் நடைபெறும். இதில், 10 லட்சத்திற்கு மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொள்வார்கள். திருச்சி போராட்டம் திருப்பு முனையாக இருக்கும்.

திமுக அரசின் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுகவின் அழிவுகாலம் ஆரம்பித்து விட்டது. பாஜகவா? திமுகவா? என்று பார்த்துவிடுவோம். இன்னும் 750 நாட்கள் நாம் பொறுத்துக்கொண்டு தான் ஆகவேண்டும். போராட்டத்திற்கு, கைதிற்கு பாஜகவினர் தயாராக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு செய்ய தயாராக இருங்கள்‌" என்று தெரிவித்தார்.

மேலும், செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர்களை இழிவாகப் பேசியதாக பத்திரிகையாளர் மன்றம் அவருக்கு எதிராக நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "ஊடகம், பத்திரிகைகாரர்களுக்கு எதிராக பேசியதாக என்னை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரியமான, நேர்மையான பத்திரிகையாளர்கள் யாரும் என்னை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. இயேசு நாதர் போன்று ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டும் பழக்கம் எங்களுக்கு கிடையாது.

ஊடகம் மீது பெரும் மரியாதை இருக்கிறது. மோடிக்கு மரியாதை செய்யாமல் மீடியா என்ற போர்வைக்குள் சுற்றும் நபர்கள்தான் எனக்கு எதிராக போராட்டம் செய்தனர். எனக்கும் மீடியாவிற்கும் பிரச்சினை இல்லை. ஊடகம் என்ற பெயரில் இருக்கும் ஒநாய்க் கூட்டத்தினரிடம் தான் எனக்குப் பிரச்சினை" என்று தெரிவித்தார்.

பதிவு: May 31, 2022
'கடந்த 8 ஆண்டுகளில் அம்பானி, அதானி சொத்து மதிப்பு அதிகரித்தது தான் மிச்சம்' - பாஜகவின் 8 ஆண்டு ஆட்சி குறித்து பட்டியலிட்ட கே.எஸ்.அழகிரி!

பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சியில் அம்பானி, அதானி ஆகியோரின் சொத்து மதிப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டியுள்ளார்.

ட்விட்டரில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

"2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பா.ஜ.க.வின் சார்பில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என்று கூறி பொறுப்பேற்ற பிரதமர் மோடி, மே 30-ஆம் நாளன்று 8 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். கருப்புப் பணத்தை ஒழிக்க பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்ததால், 96 சதவிகித ரொக்க பணம் வங்கிகளுக்கே திரும்பவும் வந்துவிட்டது. இதனால் 140 பேர் உயிரிழந்தனர். 35 லட்சம் பேர் வேலையிழந்தனர்

விவசாயிகளின் வருமானத்தை இரு மடங்காக உயர்த்துவேன், டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி, அடக்க விலையோடு 50 சதவிகிதம் கூடுதலாகக் குறைந்தபட்ச ஆதரவு விலை உறுதி செய்யப்படும் என்று பா.ஜ.க. வாக்குறுதி வழங்கியது. ஆனால், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சீரழிக்கிற வகையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசு நிறைவேற்றி, விவசாயிகளின் எதிர்ப்பினால் பின்னர் திரும்பப் பெற்றது.

நாட்டு மக்களிடையே வறுமையும் பஞ்சமும் தலைவிரித்தாடுகிற போது, கடந்த 8 ஆண்டுகளில் முகேஷ் அம்பானியின் சொத்து 400 சதவிகிதமும், கௌதம் அதானியின் சொத்து 1830 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறது. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான கௌதம் அதானியின் சொத்து கடந்த ஏப்ரல் 2022 நிலவரப்படி, 100 பில்லியன் டாலரை - அதாவது 10 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து உலக கோடீசுவரர்கள் வரிசையில் 10-வது இடத்தை பிடித்திருக்கிறார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை வரலாறு காணாத வகையில் பா.ஜ.க. ஆட்சியில் உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், கலால் வரி மூலம் கடந்த 8 ஆண்டுகளில் ரூபாய் 27 லட்சம் கோடியை மத்திய பா.ஜ.க. அரசு வசூல் செய்திருக்கிறது. இது பா.ஜ.க. அரசின் அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும்.

பா.ஜ.க.வின் ஆட்சி என்பது எண்ணிலடங்காத அவலங்களையும், துன்பங்களையும் கொண்டது. மதவாத வெறுப்பு பேச்சுகளின் மூலமாக மக்களைப் பிளவுபடுத்துகிற பணியில் பா.ஜ.க. தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மோடி ஆட்சியில் ஏற்பட்ட பொருளாதார பேரழிவுகளை மூடிமறைக்க, எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்து விளம்பரங்கள் செய்தாலும் அதில் வெற்றி பெற முடியாது. தேர்தல் வரும் போது மக்கள் உரிய பாடத்தைப் புகட்டுவதற்குத் தயாராக இருக்கிறார்கள்"

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதிவு: May 30, 2022
'படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கமுடியாது என்று கூறுவது நம்பிக்கை துரோகம்' - ஒபிஎஸ் அறிக்கை!

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை என வனத்துறை அமைச்சர்  கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"நரிக் குறவர், குருவிக்காரர், வேட்டைக்காரர், லம்பாடி, படுகர் போன்ற சமுதாயத்தினர் 15 லட்சம் பேர் பயனடைய பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தப்படும்" என்று தேர்தல் வாக்குறுதி அளித்து அவர்களின் வாக்குகளை பெற்று ஆட்சிக்கு வந்த திமுக, இன்று "படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை" என்று தன்னிச்சையாக சொல்வது மிகப் பெரிய நம்பிக்கைத் துரோகம். சமயத்திற்குத் தகுந்தாற்போல் மாறி, மாறி பேசும் இரட்டை நாக்கை உடைய கட்சி திமுக என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

நீலகிரி மாவட்டத்தில் வாழும் படுகர் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறார்கள். பழமைவாய்ந்த விசேஷ குணம், தனித் தன்மை வாய்ந்த கலாச்சாரம், பெரும்பாலும் பொதுமக்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ள கூச்சப்படும் மனப்பான்மை, புவியியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலை, சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலை என பழங்குடியின மக்களுக்கான பிரத்யேக குணங்களை தன்னகத்தே கொண்டவர்கள் படுகர் இன மக்கள். 1931 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, படுகர் இன மக்கள் பழங்குடியின மக்களாக வகைப்படுத்தப்பட்டார்கள். 

படுகர் இன மக்கள் அளித்துள்ள ஆதாரங்களை வைத்துப் பார்க்கும்போது, பிற பழங்குடியின மக்களான 'தோடர்' இன மக்களுடன் 'படுகர்' இன மக்கள் பல நூற்றாண்டுகளாக நீலகிரி மலையில் வாழ்ந்து கொண்டிருப்பது தெளிவாகிறது. முற்றிலும் மாறுபட்ட தங்களுக்கே உரிய கலாச்சாரம் மற்றும் மரபுரிமை கொண்ட இன மற்றும் மொழி சிறுபான்மை பழங்குடியினப் பிரிவை சேர்ந்தவர்கள் படுகர் சமுதாய மக்கள். படுகர் இன மக்களின் வாய்மொழி இலக்கியம், கோட்பாடு மற்றும் நம்பிக்கை ஆகியவை நீலகிரி பழங்குடி மக்களுடன் அவர்களுக்குள்ள இணைப்பை வெளிப்படுத்தும். பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கான முக்கிய குணாதிசயங்களில் ஒன்றான புராதன பழங்குடியினர் என்ற காரணி படுகர் இன மக்களுக்கு நிச்சயம் பொருந்தும். இதன்மூலம், பழங்குடியினர் என வகைப்படுத்துவதற்கு உண்டான விரிவான குணாதிசயங்களை படுகர்கள் பூர்த்தி செய்திருப்பதால், பழங்குடியின பட்டியலில் சேர்க்க படுகர் இன மக்கள் முழுத் தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

படுகர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 05-09-2003 அன்றே மத்திய பழங்குடியினர் விவகாரங்கள் துறை அமைச்சருக்கு விரிவாக கடிதம் எழுதியிருக்கிறார். இது மட்டுமல்லாமல், படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் விரைந்து சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8-07-2011 அன்று கடிதம் வாயிலாக பாரதப் பிரதமரை வலியுறுத்தி இருக்கிறார். இந்தக் கோரிக்கை தொடர்ந்து தமிழக அரசால் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சூழ்நிலையில், அண்மையில் நீலகிரி மாவட்டம், குன்னூர் ஜெகதளாவில் நடைபெற்ற பள்ளி விழாவில் பங்கேற்ற தமிழக அரசின் வனத் துறை அமைச்சர் 'படுகர் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று கூறியிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன. படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற படுகர் இன மக்களின் கோரிக்கை பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தமிழக அரசால் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டு நிலுவையில் உள்ள நிலையில், தமிழக வனத் துறை அமைச்சர் "அதற்கு வாய்ப்பில்லை" என்று கூறுவது கடும் கண்டனத்திற்குரியது. ஒருவேளை, அடிப்படையே இல்லாமல் கருத்து கூறுவதுதான் 'திராவிட மாடல்' போலும்.

படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உள்ள நிலையில், இந்தக் கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள நிலையில், அதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், எந்த அடிப்படையில் 'அதற்கு வாய்ப்பில்லை' என்று தமிழக வனத் துறை அமைச்சர் சொல்கிறார் என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் தமிழக அரசுக்கு உண்டு.

எனவே, தமிழ்நாடு முதல் அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, 'படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வாய்ப்பில்லை' என்று வனத் துறை அமைச்சர் தன்னிச்சையாக கூறியதைக் கண்டிக்க வேண்டும் என்றும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், படுகர் இனத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் எடுக்க வேண்டும் என்றும் அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: May 30, 2022
'திமுகவிற்கு ஈழத்தமிழர்கள் மீது உண்மையில் அக்கறையிருந்தால் வதைக்கூடங்களிலிருந்து அவர்களை விடுவிக்கவேண்டும்' - சீமான்!

சிறப்பு முகாம்களில் வதைபடும் ஈழத்தமிழர்களை தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"திருச்சி சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்கள் கடந்த ஒரு வார காலமாகத் தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், அவர்களில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமாகி வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன். தமிழர்களின் பெருத்த தாய்நிலமான தமிழ்நாட்டிலேயே தொப்புள்கொடி உறவுகளான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் மிகுந்த மனவேதனையைத் தருகிறது. ஈழத்தமிழர் எனும் ஒற்றைக் காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தை மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் திமுக அரசின் செயல்பாடுகள் வன்மையான கண்டனத்திற்குரியது.

திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் தங்கள் விடுதலையை வேண்டி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 8 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் ஈழச்சொந்தங்கள் 10 பேரை, தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்டுகொள்ள மறுத்து வருவது பெரும் மனவலியை அளிக்கிறது. ஈழச்சொந்தங்களுக்குத் தமிழ்நாட்டில் நிகழ்ந்தேறும் இத்தகைய கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத அதிகாரமற்ற கையறு நிலையும் ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.

இலங்கையை ஆளும் சிங்களப்பேரினவாத அரசு நிகழ்த்திய கோர இனப்படுகொலைக்கு ஆட்பட்டு, பன்னெடுங்காலமாக அந்நிலத்தில் கடைபிடிக்கப்படும் இனவெறி கொள்கையால் பாதிக்கப்பட்டு, நிர்கதியற்ற நிலையில் மறுவாழ்வுக்காக ஈழ உறவுகள் தாய்த்தமிழகத்திற்கு உயிரை பணையம் வைத்து வருகின்றனர். அவ்வாறு அடைக்கலம் புகும் ஈழச்சொந்தங்களுக்கு கருணை அடிப்படையில் வாழ்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தரும் வகையில் தமிழகத்தில் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்குமானால் அவற்றை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்குறிக்கலாம். அதற்கு மாறாக, அவர்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, ஒவ்வொரு நாளும் துன்புறுத்தும் சிறைக்கூடங்களைச் சிறப்பு முகாம் என்று கூறுவது கேலிக்கூத்தானது. இவ்வதைக்கூடங்கள் அடிப்படையான மனித உரிமைகளையே முற்றாக மறுத்து, ஈழச்சொந்தங்களுக்குப் பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

தற்போது இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் அங்குப் பசி, பட்டினியில் வாடும் தங்களது குடும்பங்களையும், உறவுகளையும் பார்க்க வேண்டும், அவர்களது துன்பத்தில் தோள்கொடுத்துத் துணைநிற்க வேண்டும் என்று போராடிவரும் ஈழச்சொந்தங்களது கோரிக்கை மிகமிக நியாயமானது. தமிழக முகாம்களில் வாடும் ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப் பிடியிலிருந்து அவர்களை விடுவிக்கக்கூட மறுத்துவருவது சிறிதும் மனிதநேயமற்ற, அதன் கொடுங்கோன்மை மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் திமுகவின் கடந்த கால வாக்குறுதிகள் யாவும் தேர்தல் நேரத்து வெற்று நாடகங்கள் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆகவே, திமுக அரசிற்கு உண்மையிலேயே ஈழத்தமிழர்கள் மீது சிறிதளவேணும் அக்கறை இருக்குமாயின், இனியும் இவ்விடயத்தில் இரட்டைவேடமிடுவதை நிறுத்தி, ஈழத்தமிழ்ச் சொந்தங்களைக் கண்காணிக்க திமுக அரசால் கடந்த காலத்தில் உருவாக்கப்பட்ட க்யூ பிராஞ்ச் எனப்படும் கொடும் காவல் பிரிவினை உடனடியாகக் கலைக்க வேண்டுமெனவும், சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஈழச்சொந்தங்களின் மறுவாழ்விற்கான வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், தற்போது பட்டினிப் போராட்டத்தால் உடல் நலிவுற்றிருக்கும் திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களிலுள்ள ஈழச்சொந்தங்களின் உயிரைக்காக்க உயர் மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை தமிழ்நாடு அரசு உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: May 28, 2022
'பிரதமர் மோதியின் பேச்சில் அறிவாலயத்தின் பொய்கள் உடைக்கப்பட்டுள்ளன' - புதிய கணக்கு சொல்லும் வானதி சீனிவாசன்!

மத்திய அரசிற்கு எதிராக திமுக கூறிய பொய்கள் பிரதமரின் பேச்சு மூலமாக உடைக்கப்பட்டுள்ளதாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மக்கள் நடத்திட்டங்களைத் தொடக்கிவைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேற்றைய தினம் சென்னை வந்தார். பெரும் ஆரவாரத்தோடு பாஜகவினரால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசும்போது ஒன்றிய அரசு, திராவிட மாடல் போன்ற மத்திய அரசுக்கு எதிரான சொற்களைப் பயன்படுத்தினார். மேலும் தமிழகத்தின் பல்வேறு தேவைகள் குறித்தும் கோரிக்கை எழுப்பியிருந்தார். இது பாஜகவினரிடையே கொதிப்பலைகளை கிளப்பியது.

இந்நிலையில், பிரதமர் மோதி பேச்சில் திமுக மத்திய அரசுக்கு எதிராக எழுப்பிவந்த கேள்விகளுக்கான விடை அளிக்கப்பட்டுள்ளதாகவும், பொய்கள் உடைக்கப்பட்டுள்ளதாகவும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்று பிரதமர் நரேந்திர மோடி பேச்சில் பாஜக பற்றிய அறிவாலயத்தின் பல்வேறு பொய்கள் உடைக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாவது அனைத்து இந்திய மொழிகளையும் புதிய கல்வி கொள்கை ஊக்குவிக்கும் என்பது. இரண்டாவது இலங்கை மற்றும் தமிழர் விவகாரங்களில் இந்தியா துணை நிற்கும். மூன்றாவதாக செம்மொழி அமைப்பிற்கு உதவி' இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

முன்னதாக இந்திய மொழிகளை மத்திய அரசு ஊக்குவிப்பதில்லை என்றும், இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு அதற்கு உதவ முன்வரவில்லை என்றும் திமுக குற்றம்சாட்டிவந்த நிலையில், பிரதமரின் பேச்சு அவற்றுக்கு மறுப்பு தெரிவிப்பதாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

பதிவு: May 27, 2022
'தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது' - பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

திமுக அரசு கல்விக்கு முக்கியத்துவம் தந்துவருவதாக பள்ளி திறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில் உள்ள டிஏவி பள்ளியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்நிலையில், திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் பேசியதாவது:

"பள்ளி, கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் புத்துணர்ச்சி பெறுகிறேன். நான் பிறந்து வளர்ந்த கோபாலபுரத்தில் டிஏவி பள்ளி முதன் முதலாக தொடங்கப்பட்டது. டிஏவி குழுமம், சென்னையில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவை வழங்கி வருகிறது. டிஏவி குழுமத்தில் 30,000 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தாய்மொழி கல்விக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்.

தாய்மொழிப் பற்றும் தாய்நாடு பற்றும் ஒவ்வொரு மனிதனுக்கும் மிகமிக முக்கியம். போட்டிகள் நிறைந்த உலகத்தில் மாணவர்கள் தங்கள் தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி என்பதே இருளில் இருந்து ஒளிக்கு கொண்டு செல்வது தான். பள்ளிக் கல்விக்கு மட்டுமல்லாமல் கல்லூரி கல்விக்கும் அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மனிதர்களிடம் இருந்து பிரிக்க முடியாத சொத்து என்றால் கல்வி மட்டும் தான். அரசு சார்பில் இல்லம் தேடி கல்வித் திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி கொடுத்துள்ளோம். பள்ளிகளில் கொண்டுவரப்படும் திட்டங்களுக்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும்" 

இவ்வாறு பேசினார். 

பதிவு: May 27, 2022
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காத மத்திய அமைச்சர் நிதின் கட்கரி! தமிழக மக்களை அவமதித்ததாக அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றச்சாட்டு!

நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காததற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

தமிழகத்திற்கான ரூ.31,500 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்களைத் தொடக்கிவைக்க பிரதமர் நரேந்திர மோதி நேற்று சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பங்கேற்று நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிற மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும், மத்திய அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்துகொண்டார்.

இந்நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் அமர்ந்தவண்ணம் இருந்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துள்ளதாக தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்த்தாய்  பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார். தன் ஆணவ, பொறுப்பற்ற செயலுக்கான காரணத்தை, அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும். 2018-ல் ஐஐடியில் அவர் கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும் நேற்று அவர் நடந்துக் கொண்ட விதமும் எதேர்சையாக நடந்ததாக தெரியவில்லை' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு: May 27, 2022
"ஒரு பிரதமரை உட்காரவைத்து இப்படிதான் செய்வதா? இது தான் திராவிட மாடலா? உங்கள் அத்தனை பாயிண்ட்டுக்கும் விரைவில் பாஜக பதில் தரும்" - கொதிக்கும் அண்ணாமலை!

முதல்வர் ஸ்டாலின் பிரதமர் முன்னிலையில் பேசியது அரசியலில் ஒரு கரும்புள்ளி என்றும் முதல்வரின் எல்லா பாயிண்டுகளுக்கும் பாஜக விரைவில் பதில் தரும் என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை காட்டமாகப் பேசியுள்ளார்.

தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான மக்கள் நடத்திட்டங்களைத் தொடக்கிவைக்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி நேற்றைய தினம் சென்னை வந்தார். பெரும் ஆரவாரத்தோடு பாஜகவினரால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்றனர்.

இந்நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோதி முன்னிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். ஜிஎஸ்டி நிலுவை தொகையை வழங்குவது, இந்தி மொழிக்கு நிகராக தமிழ் மொழியை அலுவல் மொழியாக அங்கீகரிப்பது,
கச்சத்தீவை மீட்பது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை 'வற்புறுத்திக் கேட்கிறேன்' என்று கூறியவாறே பிரதமர் முன் முன்வைத்தார் முதல்வர் ஸ்டாலின். 

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமரை அமரவைத்து விளையாட்டு காட்டியதாகவும், அவர் பேசியது அரசியலில் ஒரு கரும்புள்ளி என்றும் சாடியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சென்னை நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசிய அனைத்துமே பொய். அனைத்துமே முன்னுக்குப் பின் முரணானவை. அதனால்தான் திராவிட மாடல் என்று பொய் சொன்னார்.

தமிழகத்துக்கும் தமிழ் மண்ணுக்கும் ரூ.31,000 கோடி கொண்டு வந்த பிரதமர் மோடியை மேடையில் உட்கார வைத்து கொண்டு, ஆளும் கட்சிகாரர் நீங்களே பாஸ் போட்டுகிட்டு, பணம் கொடுத்து ஒரு ஒரு எம்.எல்.ஏ.வுக்கும் டார்கெட் கொடுத்து ஒவ்வொருத்தரும் 200 பேரை கொண்டுவாங்கன்னு நேரு ஸ்டேடியத்துல உட்கார வெச்சு என்ன விளையாட்டு காட்டுறீங்களா? இதுதான் அரசு நடத்தும் விதமா? என்ன வம்பு சண்டைக்கு வர்றீங்களா? இதென்ன போட்டியா? இதென்ன போட்டி அரசியலா? ஒரு பிரதமருக்கு என மரியாதை இருக்கு. அது மிக முக்கியம்.

தமிழ் மண்ணில் இந்த நாள் எந்த கட்சி, எந்த ஆட்சியாக இருந்தாலும் பிரதமரை மதித்திருக்கிறோம். பாஜகவுக்கும் திமுகவுக்கும் 360 டிகிரி கொள்கை வேறுபாடு உண்டு. ஆனால் முதல்வர் என்பவரை நாங்கள் மதிப்போம். முதல்வரை நாங்கள் எங்கேயும் விட்டுக் கொடுக்கமாட்டோம். ஆனால் நீங்கள் இப்படி ஒரு கலாசாரத்தை செய்துவிட்டு திராவிட மாடல் என பொய் சொல்கிறீர்கள்.

முதல்வர் ஸ்டாலின் நடந்து கொண்ட விதம் தமிழக அரசியலில் கரும்புள்ளி. முதல்வர் ஸ்டாலின் பேசிய ஒவ்வொரு பாயிண்ட்டுக்கும் பாஜக பதில் தரும். வெள்ளிக்கிழமை மாலைக்குள் பாஜக பதிலடி தரும். கச்சத்தீவை எப்படி கொண்டுவரனும்? மீட்கனும் என்பது எங்களுக்கு தெரியும்" இவ்வாறு கொதிப்புடன் பேசினார்.

பதிவு: May 27, 2022

முக்கிய செய்திகள்

'தமிழகத்தில் புழங்கும் பரிசுச்சீட்டு விற்பனையை முற்றிலும் தடை செய்யவேண்டும்' - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்தில் புழக்கத்தில் இருக்கும் பரிசுச்சீட்டு விற்பனையை தமிழக அரசு முற்றிலும் தடைசெய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில், 

சேலத்தில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டு விற்பனை நடைபெற்று வருவது காட்சி ஊடகம் மூலம் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது. தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகள் கட்டுப்பாடின்றி தொடர்ச்சியாக விற்பனை செய்யப்பட்டு வருவது அதிர்ச்சியளிக்கிறது

சேலம், சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பான்மையான இடங்களில் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளும், ஒரு நம்பர் பரிசுச்சீட்டுகளும் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த சமூகத் தீமையை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது

ஆன்லைன் சூதாட்டம் என்ற மிகப்பெரிய சமூகத் தீமைக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத்தால் எத்தனைக் குடும்பங்கள் சீரழிகின்றனவோ, அதை விட அதிக எண்ணிக்கையிலான குடும்பங்கள் தடை செய்யப்பட்ட பரிசுச்சீட்டுகளால் சீரழிந்து கொண்டிருக்கின்றன

தமிழகத்தில் 2003-ஆம் ஆண்டே பரிசுச்சீட்டுகள் தடை செய்யப்பட்டு விட்டன. அந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பரிசுச்சீட்டுகளை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் ஏழைக் குடும்பங்கள் வீதிக்கு வருவதை தடுக்க வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: June 28, 2022
AltNews இணை நிறுவனர் முகமது ஜுபைர் கைது! FIR கூட வழங்காமல் கைதுசெய்துவிட்டதாக மற்றொரு இணை நிறுவனர் தகவல்!

AltNews இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ட்விட்டரில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதுகுறித்த தகவல்களை ட்விட்டர்வாசிகளுக்குப் பகிர்பவர் பத்திரிகையாளர் முகமது ஜுபைர். இவர் AltNews செய்தி நிறுவனத்தின் இணை இயக்குநர் ஆவார். அண்மையில், தனியார் தொலைக்காட்சியில் நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய காணொலியை வலைதளங்களில் பகிர்ந்தவர் இவரே. அது உலக அளவில் கவனம் பெற்று பல்வேறு எதிர்ப்பலைகளைக் கிளப்பியது.

இந்நிலையில், 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக நேற்றைய தினம் டெல்லி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதிற்கு முன்னதாக வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திங்கள்கிழமை வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்ததாகவும், ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறியதாகவும் AltNews நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அவரை அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து முன்னதாகவே உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரைக் கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஜுபைர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கில் புகார்தாரர் யார், அதன் விவரம் என்ன என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.

முகமது ஜுபைரின் கைதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். காங்கிரசார் பலரும், உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்பும் பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பும், உண்மையின் குரலாய் அவதூறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்கள் மீது வழக்குகளும் பதிந்துவருவதாக சாடியுள்ளனர்.

இந்நிலையில், ஜுபைர் அகமதின் கைது நடவடிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, "பாஜகவின் வெறுப்பு, மதவெறி மற்றும் பொய்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் பேரை தட்டி எழுப்பும். உண்மை எப்போதும் கொடுங்கோன்மையின் மீது வெற்றி பெறும்" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், "முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் எந்த அறிவிப்பும் இல்லாமல் & சில அறியப்படாத FIR-இல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறை முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை முழக்கங்களைப் பற்றி எதுவும் செய்யவில்லை. ஆனால் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் தவறான தகவல்களை எதிர்க்கும் "குற்றத்திற்கு" எதிராக விரைவாக செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

பதிவு: June 28, 2022
தமிழக அரசின் உயர்கல்விக்கான ரூ.1000 உதவித்தொகை பெறும் திட்டத்திற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்க முடியும், முடியாது! விபரங்கள் இதோ!

அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி பயில்வதற்காக அரசுத்தரப்பிலிருந்து மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு யாரெல்லாம் தகுதி பெற்றவர்கள் என்ற விபரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. 

அதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:

1. மாணவிகள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படித்து தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்பவராக இருத்தல் வேண்டும்.

2. தனியார்ப் பள்ளியில் Right to Education (RTE)யின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயின்ற பின் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவியர் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

3. அரசுப் பள்ளிகள் என்பது பஞ்சாயத்து யூனியன் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீர்மரபினப் பள்ளிகள், பிற்படுத்தப்பட்டோர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை பள்ளிகள், வனத்துறை பள்ளிகள், சமூகப் பாதுகாப்புத் துறை பள்ளிகள் போன்றவற்றில் பயிலும் மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

4. மாணவிகள் 8 (அ) 10 (அ) 12 வகுப்புகளில் படித்து பின்னர் முதன் முறையாக உயர்கல்வி நிறுவனங்களில் (Higher Education Institutions) சேரும் படிப்புக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். [சான்றிதழ் (Certificate course), பட்டயம் (Diploma / ITI, D.TEd., courses), இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree) (B.A., B.Sc., B.Com., BBA., BCA. and all Arts & Science, Fine Arts Courses), தொழில்சார்ந்த படிப்பு (B.E., B.Tech, M.B.B.S., B.D.S., B.Sc.(Agri). B.V.Sc., B.Fsc., B.L, etc.) மற்றும் பாரா மெடிக்கல் படிப்பு (Nursing. Pharmacy, Medical Lab Technology, Physiotherapy etc.. CUITO D000.). தொலைதூரக் கல்வி மற்றும் திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவிகளுக்கு இத்திட்டம் பொருந்தாது.

5. 2022-2023ஆம் கல்வியாண்டில், மாணவியர்கள் புதிதாக மேற்படிப்பில் முதலாம் ஆண்டு சேர்ந்த பின்னர், இணையதளம் வழியாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இதர முதலாம் ஆண்டிலிருந்து இரண்டாம் ஆண்டு செல்லும் மாணவியரும், இரண்டாம் ஆண்டிலிருந்து மூன்றாம் ஆண்டு செல்லும் இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் மாணவியர்களும்,தொழிற்கல்வியைப் பொருத்தமட்டில் மூன்றாம் ஆண்டிலிருந்து நான்காம் ஆண்டிற்கு செல்லும் மாணவிகளுக்கும், மருத்துவக் கல்வியைப் பொருத்தமட்டில் நான்காம் ஆண்டிலிருந்து ஐந்தாம் ஆண்டு செல்லும் மாணவியர்களும் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.

6. 2021-2022 ஆம் ஆண்டில், இறுதியாண்டு பயிலும் மாணவிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய இயலாது. ஏனெனில் ஒரு சில மாதங்களில் இம்மாணவியர்கள் தங்களது இளநிலைப் படிப்பினை (under graduation) நிறைவு செய்துவிடுவார்கள்.

7. இத்திட்டத்தின் கீழ் இளநிலை படிப்பு பயிலும் மாணவிகள் மட்டுமே பயனடைய இயலும், முதுநிலை படிப்பு பயிலும் மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற இயலாது. இத்திட்டத்தில் பயன்பெறுவது குறித்து தங்களுக்கு தேவையான தெளிவுரைகள்/கூடுதல் விவரங்களை கட்டணமில்லா தொலைப்பேசி எண் 14417 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் என தெரிவிக்கப்படுகிறது.

8. இளநிலை கல்வி பெறும் அனைத்து மாணவியரும் (இளநிலை முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களும், இளங்கலை/தொழிற்கல்வி/மருத்துவக் கல்வியில் 2-ஆம் ஆண்டு முதல் 5-ஆம் ஆண்டு வரை பயிலும் மாணவிகளும்) இத்திட்டத்திற்காகப் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளம் https://penkalvi.tn.gov.in வழியாக தங்கள் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

பதிவு: June 27, 2022
'அஸ்ஸாம் மக்களின் துயரைக் கண்டுகொள்ளாமல் எம்.எல்.ஏ.,க்களை கடத்திவந்து கும்மாளம் போடுகிறீர்களா?; இதுதான் பாஜகவின் உண்மை முகம்' - கே.பாலகிருஷ்ணன் ஆவேசம்!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மக்களின் துயரத்தை நினைத்து கவலைப்படாமல், பாஜக மாநில அரசு, மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி அமைய சகுனி ஆட்டம் ஆடிவருவதாக கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

"அசாமில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். குறைந்தது 200 உயிர்கள் இதுவரை பலியாகியிருக்கின்றன. உண்மை பலி விபரம் இன்னும் அதிகமாக இருக்கும்.

வீடுகளை, இருப்பிடத்தை இழந்து சாலைகளில் கண்ணீரோடு தவிக்கும் மக்களின் துயரை வார்த்தைகளால் அடக்க முடியாது. இந்த நிலைமை பற்றியெல்லாம் ஒன்றிய அரசுக்கு கொஞ்சமும் கவலை கிடையாது. அசாம் பாஜக முதல்வருக்கும் எந்த பதட்டமும் இல்லை. மாறாக அவர் ரேடிசன் புளூ விடுதியை கண்காணித்துக்கொண்டுள்ளார்.

அங்கேதான், மராட்டிய எம்.எல்.ஏக்கள் கடத்தி வரப்பட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில் கும்மாளத்துடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கூட்டணி அரசை கவிழ்த்து, மராட்டியத்தில் தான் ஆட்சியமைக்க வேண்டும் என்று பாஜக இந்த சகுனி ஆட்டத்தை நடத்தி வருகிறது.
 
மக்களை கண்ணீரில் தத்தளிக்க விட்டு, அதிகார மமதையில் ஆட்டம் போடுகிறார்கள். இதுதான் பாஜகவின் உண்மை முகம்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
 
பதிவு: June 25, 2022
'முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களை உடனடியாக அரசு விடுவிக்க வேண்டும்; தவறினால் மாநிலம் தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்' - சீமான்!

திருச்சி முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் தவறினால் மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்பதாகவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்,

"திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களில் 30 பேர் மாத்திரை உட்கொண்டும், ஒருவர் தீக்குளித்தும் தற்கொலைக்கு முயன்றதுமான செய்திகள் பேரதிர்ச்சி தருகின்றன. ‘விதியே! விதியே! என் செய நினைத்திட்டாய் என் தமிழ்ச்சாதியை?’ எனும் பெரும்பாவலன் பாரதியின் கூற்றுக்கிணங்க, தாய்த்தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகள் கண்டு மனம்வெதும்புகிறேன்.

தங்களை ஏதிலிகளென இந்தியச்சட்டத்தின்படி பதிவுசெய்துள்ள ஈழச்சொந்தங்களையும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களெனக் கூறி, சிறப்பு முகாம் எனப்படும் சித்திரவதைக்கூடங்களில் அந்நிய நாட்டவர்களோடு அடைத்து வைத்துள்ள அநீதிக்கெதிராக, தங்களை விடுவிக்கக்கோரி 35 நாட்களுக்கும் மேலாகப் பட்டினிப்போராட்டம் செய்து அரசு மனமிறங்காத நிலையிலேயே, ஆற்றாமையும், விரக்தியும் தாளாது இத்தகையக் கொடிய முடிவை ஈழச்சொந்தங்கள் எடுத்துள்ளனர் என்பது ஏற்கவே முடியாதப் பெருந்துயரமாகும்.

இந்நாட்டுக்குத் துளியும் தொடர்பற்ற திபெத்தியர்கள் ஏதிலிகளாக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, அடிப்படை வசதிகளும், பொருளாதார வாய்ப்புகளும் அவர்களுக்கு வழங்கப்பெற்று, பெரும் மதிப்போடு நடத்தப்படும் வேளையில், இந்நாட்டில் வாழும் எட்டுக்கோடி தமிழ்ச்சொந்தங்களின் தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்கள் குற்றவாளிகளாகச் சித்தரிக்கப்படுவதும், அடிப்படை மானுட உரிமைகளும், அத்தியாவசிய இருப்பு நடவடிக்கைகளும்கூட அளிக்கப்படாது மறுக்கப்படுவதும் தமிழினத்திற்கு இந்நாட்டு அரசுகள் செய்யும் பெருந்துரோகமாகும். தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழகத்திலேயே ஈழச்சொந்தங்கள் நாதியற்றவர்கள் போல நாளும் நடத்தப்படுவதும், அவர்களது உணர்வுகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளிக்கப்படாது அவமதிக்கப்படுவதும் வெட்கித்தலைகுனிய வேண்டிய பெரும் அவமானமாகும்.

தேர்தலுக்கு முன்பு, ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமைப் பெற்றுத் தருவோம் என வாக்குறுதி அளித்த மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள், தற்போது ஏதிலிகளாகக்கூட அவர்களை வாழவிடாது வஞ்சிப்பது எந்தவகையில் நியாயம்? இதுதான் சமூக நீதியா? ‘ஈழத்தமிழர் எங்கள் இரத்தம்’ என மேடையில் முழக்கமிட்ட முதல்வர் ஸ்டாலின் அவர்கள், இப்போது இரத்தம் வற்றிப்போகிற அளவுக்கு அவர்கள் பட்டினிக்கிடந்து, உடல்மெலிந்து கோரிக்கை வைத்தும் செவிமடுக்காதது ஏன்? அவர்களுக்கு வாக்கில்லை என்பதால், அவர்களது வறண்ட நாக்குகள் இடுகிற முழக்கங்கள் உங்கள் செவிப்பறைக்கு எட்டவில்லையா முதல்வரே? உயிரை முன்னிறுத்தி, போராட்டம்செய்தும் உங்கள் இதயக்கதவுகள் திறக்காதென்றால், நடப்பது தமிழர்களுக்கான ஆட்சியா? இல்லை! சிங்களர்களுக்கான ஆட்சியா? இதுதான் நீங்கள் விடியல் தரும் இலட்சணமா? வெட்கக்கேடு! பேரவலம்!

ஆகவே, இந்தியச்சட்டநெறிமுறைகளின்படி, தங்களை ஏதிலிகளாகப் பதிவுசெய்தும் சட்டவிரோதக் குடியேறியவர்களெனக்கூறி, திருச்சி, சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன். அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், மாநிலம் தழுவிய மக்கள்திரள் போராட்டத்தை முன்னெடுப்போமெனப் பேரறிவிப்பு செய்கிறேன்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: June 25, 2022
'மெட்ரிக் பள்ளிகளில் இடஒதுக்கீடு அளிக்காத பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்' - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழகத்திலுள்ள பெரும்பாலான மெட்ரிக் பள்ளிகளில் 69% இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதில்லை என்றும், அப்பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள அறிக்கையில்,

"தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீட்டை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. மாணவர் சேக்கையில் சமூகநீதியை நிலைநாட்ட பள்ளிக்கல்வித்துறை காட்டும் அக்கறை பாராட்டத்தக்கது!

தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள் தொடங்கப்பட்ட நாளில் இருந்தே அவை தமிழக அரசின் இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பது கட்டாயம் ஆகும். ஆனால், பெரும்பான்மையான தனியார் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை கடைபிடிப்பதில்லை என்பது தான் வேதனையான உண்மை!

ஊரகப்பகுதிகளில் உள்ள சாதாரண மெட்ரிக் பள்ளிகள் 69% இட ஒதுக்கீட்டை பின்பற்றுகின்றன. அதிகக் கட்டணம் வசூலிக்கும் நகர்ப்புறங்களில் உள்ள புகழ் பெற்ற பள்ளிகள் தான் தமிழக அரசின் இட ஒதுக்கீட்டு விதிகளை மதிப்பதில்லை. அவை மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும் 69% இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை முடிவடைந்த பிறகு பள்ளி வாரியாக இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்த விவரங்கள் அடங்கிய வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

பதிவு: June 24, 2022
ஒபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீச்சு; வாகனத்தின் டயர் பஞ்சர் செய்யப்பட்டு அட்டூழியம்! கூட்டத்தில் பெரிதும் அவமதிக்கப்பட்ட ஒபிஎஸ்... அடுத்த நகர்வு என்ன?

பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ் தொண்டர்களால் அவமதிக்கப்பட்டு, அவர் மீது தண்ணீர் பாட்டில் வீசப்ப்ட்டுள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்றாலும், கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ஒபிஎஸ் - இபிஎஸ் ஆகிய இரு தலைவர்களின் மேற்பார்வையிலேயே நடைபெற்றுவந்தது. 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தபின் யார் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பூசல் எழுந்து, பின் எடப்பாடியார் அப்பொறுப்பை ஏற்றார். மேலும் பன்னீர்செல்வம் கட்சி ஒருங்கிணைப்பாளர் பதவியில் நீடித்தார்.

இந்நிலையில், அதிமுக சிறந்த எதிர்க்கட்சியாகத் திகழ ஒற்றைத் தலைமைதான் சரியான முடிவு என்ற பேச்சு அதிமுக நிர்வாகிகளிடையே ஆரம்பமான நிலையில், கடந்த 9 நாட்களாக தொடர் அமளிகளில் அதிமுக நிர்வாகிகள் ஈடுபட்டுவருகின்றனர். ஒபிஎஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பதவியேற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும், இபிஎஸ் தான் பொதுச்செயலாளராக பதவியேற்கவேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் குரலெழுப்பிவரும் நிலையில், ஒபிஎஸ் கூறிய சில தீர்மானங்களின் பேரில் அதிமுக பொதுக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஒபிஎஸ் முதலிலேயே வந்துவிட்டார். ஆயினும் கூட்டத்திற்குள் நுழைந்த அவரை இபிஎஸ் ஆதரவாளர்கள் வெளியேறச்சொல்லியும், 'துரோகி' என்று முழக்கமிட்டும் முன்னேறவிடாமல் தடுத்தனர். பின் இபிஎஸ் மண்டபத்திற்குள் நுழையும்போது பலத்த கரகோஷத்துடன் தொண்டர்களால் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின் மேடையில் இருவரும் அமர்ந்தபின் ஒவ்வொருவராக கட்சி நிர்வாகிகளின் நிலைப்பாடு குறித்தும், ஒற்றைத்தலைமை அதிமுகவிற்கு அவசியம் என்றும் பேசினர். அதிமுகவின் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மேடையில் பேசிய நிர்வாகிகள் பலரும் இபிஎஸ் பெயரைக் குறிப்பிட்டு அவரை வரவேற்றனர். ஆனால் யாரும் ஒபிஎஸ்-ஐ வரவேற்கவும் இல்லை, அவரிடம் முகம்கொடுத்து பேசவும் இல்லை.

தொடர்ந்து சி.வி.குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள், அனைத்து தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரித்துவிட்டதாகவும், கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும் பேசினர். இதனால் கூட்டத்தில் சச்சரவும், கூச்சல் குழப்பமும் நிலவியது. ஒரு கட்டத்திற்கு மேல் ஒபிஎஸ் மேடையில் அமராமல் பாதியிலேயே மேடையை விட்டு வெளியேறினார்.

இந்நிலையில், ஒபிஎஸ் மேடையிலிருந்து வெளியேறும்போது அவர் மீது தண்ணீர் பாட்டில்கள் அதிருப்தி நிர்வாகிகளால் எரியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் அவர் வந்த வாகனத்தின் சக்கரங்களிலிருந்து காற்று பிடுங்கப்பட்டதும் அதிர்ச்சியைக் கிளப்பியது. பின் மாற்றுவாகன உதவியுடன் அவர் அங்கிருந்து கிளம்பினார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஒபிஎஸ் ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், 'கட்சியை அழிவுப்பாதைக்கு அழைத்துச்செல்கின்றனர். சதிகாரர்கள்' என்று ஆவேசமாகப் பேசினார்.

பொதுக்குழுக்கூட்டம் பாதியிலேயே முடிந்து எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், அடுத்த பொதுக்குழுக்கூட்டம் ஜூலை 11 அன்று மீண்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அது ஒபிஎஸ்-ன் கையெழுத்து இல்லாமல் நடைபெறாது என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.

ஜூலை 11-ல் நடைபெறும் பொதுக்குழுக்கூட்டத்தில் இபிஎஸ் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆயினும் கூட்டம் நடைபெறுமா?, அதில் ஒபிஎஸ் கலந்துகொள்வாரா?, என்னென்ன முடிவுகள் அக்கூட்டத்தில் ஏடுக்கப்படும்? என்பது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். ஆயினும் ஒபிஎஸ், இபிஎஸ் தரப்பு நிர்வாகிகளால் பெரிதளவில் அவமதிக்கப்பட்டது தற்சமயம் பேசுபொருளாகி சர்ச்சையைக் கிளப்பிவருகிறது. 

பதிவு: June 23, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்