உலகம்
சவுதியில் கழிவறையில் தயாரிக்கப்பட்டு விற்பனையான உணவுகள்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

சவுதி அரேபியா நாட்டில் கழிவறையில் தயாரிக்கப்பட்டுவந்த உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பிரபல உணவகம் ஒன்று 30 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், உணவகம் திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த உணவகத்தில் பல ஆண்டுகளாக சமோசா போன்ற உணவுப்பொருட்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சுகாதாரமற்ற முறையில் எலிகளும், பூச்சிகளும் மிகைத்துக்கிடக்கும் இடங்களில் உணவுவகைகள் தயாரிக்கப்பட்டுவந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பல நாட்களான, கெட்டுப்போன மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி அதிகாரிகள் தடாலடியாக அவ்வுணவகத்தை மூடியுள்ளனர். மேலும் கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில், இச்சம்பவத்திற்குப்பின் இதுவரை 26 உணவகங்கள் முறைகேடுகள் அறிந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: April 27, 2022
ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு!

மாரடைப்பால் காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சில் ஜாம்பவான் எனப் போற்றப்படுபவர் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே. பேட்ஸ்மேனின் கவனத்தை நொடிப்பொழுதில் பதம்பார்த்து விக்கெட்டை வீழ்த்தும் இவரது அபார பந்துவீச்சால் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றவர். தனது சுழற்பந்து திறனால் பல்வேறு வெற்றிகளை ஆஸ்திரேலியாவுக்குப் பெற்றுத் தந்த வார்னே, உலகம் முழுக்க பல்வேறு ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான், விடுமுறைக்காக தாய்லாந்து சென்றிருந்த வார்னே, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 52. தூக்கத்தில் பேச்சு மூச்சற்றுக்கிடந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்ததாக உறுதித் தகவல் அளித்துள்ளனர். இச்செய்தி, உலகெங்கிலுமுள்ள அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கலங்கடித்துள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுன் நல்லடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே மரணிப்பதற்கு சிலமணிநேரங்கள் முன்பு காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ராட் மார்ஷ்-க்கு இரங்கல் தெரிவித்த அவரது ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி காண்போரை கலங்கடித்துவருகிறது.

அப்பதிவில் அவர், “ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஓர் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாது, பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் இருந்தவர். ராட் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவர். எனது அன்புகளை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உரித்தாக்குகிறேன். ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டிருந்தார்.

தனது மரணத்திற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு முன் இப்பதிவை இடும்போது இருந்த அவர், 12 மணிநேரத்திற்குப்பின் உயிரோடு இல்லாதிருப்பதை எண்ணி அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்துவருகின்றனர்.

பதிவு: March 05, 2022
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இந்தியா-மத்திய ஆசியா உச்சி மாநாடு...

பிரதமர் நநேந்திர மோடி தலைமையில் இந்தியா-மத்திய ஆசியா இடையிலான முதலாவது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது. 

இந்தியா-மத்திய ஆசியா இடையிலான முதலாவது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது. பிரதமர் மோடி இம்மாநாட்டை நடத்துகிறார். மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

மாநாட்டில் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையிலான உறவை புதிய உச்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டு மேற்கண்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தார். அதன்பிறகு அந்நாடுகளுடன் இந்தியா பல்வேறு மட்டங்களில் தொடர்பு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு: January 27, 2022
தினுசு தினுசாக யோசித்து ‘லட்சங்களில்’ சம்பாதிக்கும் மனிதர்கள்! இப்படி கூடவா சம்பாதிக்கலாம்..?

லட்சக்கணக்கில் செலவு செய்து படித்துவிட்டு, படிப்பிற்கு உரிய வேலை கிடைக்கவில்லை எனப் புலம்பித்திரியும் மனிதர்களுக்கு மத்தியில், வெகு இயல்பாய் நாம் செய்யும் பணிகளை பிறருக்கான தேவைகளாய் உருவாக்கி அதில் பலன் பெரும் மனிதர்கள் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த எலா மக்மஹோன் என்ற ஒரு மாணவர், நம் வீடுகளில் நாம் அன்றாடம் செய்யும் ஒரு செயலை தனது பணியாக அமைத்துக் கொண்டு, அதன் மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

எவர் வீட்டின் அலமாரிகளில் துணிகள் அடுக்காமல் கலைந்து கிடந்தாலும் சற்றும் யோசிக்காமல் இவரை தாராளமாக நாம் தொடர்பு கொள்ளலாம். ஆம்! அலமாரிகளில் மடிக்காமல் கலைந்து கிடக்கும் துணிகளை மடிப்பதையே தனது தொழிலாகக் கொண்டு அதை திறம்படச் செய்து வருகிறார் இவர். இதன் மூலமே மாதம் ரூ.50,000 வரை இவர் சம்பாதிக்கிறாராம்.

அதே போல், லண்டனைச் சேர்ந்த ஃப்ரெட்டி பெக்கிட் என்ற மற்றொரு இளைஞர் செய்யும் தொழில் நம்மை இன்னும் மலைப்பில் ஆழ்த்துகிறது. இவர் வெறும் வரிசையில் நின்று மட்டுமே மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

வரிசையில் நின்று பயணச்சீட்டையோ அல்லது பிற தேவைகளையோ பூர்த்தி செய்துகொள்ள பொறுமை இல்லாத, பணம் படைத்தவர்களை பயன்படுத்திக் கொள்ளும் இவர், அவர்களுக்கு பதில் வரிசையில் நின்று அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.

ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க 20 பவுண்டுகள் வசூலிக்கும் இவர் நாள் ஒன்றுக்கு சுமாராக ரூ.16,000 வரைச் சம்பாதித்து தலை சுற்ற வைக்கிறார்.

இவ்வாறாக, தூங்குவதன் மூலம், உண்பதன் மூலம் என உலகெங்கும் பலர் பணம் சம்பாதிக்கும் முறைகள் நம்மை அசரடிக்கின்றன. ‘வாழ நினைத்தால் வாழலாம்….வழியா இல்லை பூமியில்’ என்னும் பாடல் வரிகள் தான் எத்தனை உண்மை!

பதிவு: January 22, 2022
ஒமைக்ரானை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்- உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை...

ஒமைக்ரானை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக தொற்று தன்மை கொண்ட ஒமைக்ரான் உலகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் மிதமான பாதிப்பை எற்படுத்துகிறது என்பதை ஏற்க முடியாது. அதனை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் ஐரோப்பா தற்போது கரோனா பரவலின் மையமாக உள்ளது. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் 50 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1 லட்சம் பேர் வரை கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளை கடந்த பிறகு கரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலகளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பதிவு: January 19, 2022
`ஒமிக்ரானை எதிர்கொள்ள ஒரே வழி தடுப்பூசிதான்!'- WHO விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்

"ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே ஒரே வழி" என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் பேசிய அவர், தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரானை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் டி செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்கிறது.

மருத்துவமனைகளில் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை என எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி. தடுப்பூசி போட்டுக் கொள்வது கடுமையான நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும். உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களையும் ஒமிக்ரான் பாதித்தாலும் ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்பட்டு மரணத்தில் இருந்து நம்மை காக்கிறது. யாரேனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இருந்தாலும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

பதிவு: December 30, 2021
`இந்தியா தனது ஹீரோவை இழந்துவிட்டது!'- பிபின் ராவத் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல்!

"இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள “ஹீரோவை” இழந்துவிட்டது" என்று முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதி நேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட 13 பேரும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ராணுவம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத்தை நவீனமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின் வலுவான நண்பராகவும், இருநாட்டு ராணுவ கூட்டுறவை விரிவுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர்" என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் ட்விட்டரில் இரங்கல் குறிப்பில், "பிபின் ராவத்தின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தீரமிக்க வீரராகவும், ராணுவ விவகாரங்களில் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலவ் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில், “ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிற அதிகாரிகளின் சோகமான மறைவு அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள “ஹீரோவை” இழந்துவிட்டது. ரஷ்யா ஒரு மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது. அவர் நமது இருதரப்பு சிறப்பு பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறோம். குட்பை, நண்பரே! பிரியாவிடை, தளபதி!" எனத் தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இரங்கல் செய்தியில், “ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பல பாதுகாப்பு அதிகாரிகளின் சோகமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், "தங்கள் நாட்டின் முப்படைகள் சார்பில் பிபின் ராவ்த் மற்றும் 13 பேரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப்போல இலங்கை பிரதமர் ராஜபக்சே, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ, ராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரகம், பிரெஞ்சு தூதர், சிங்கப்பூர் தூதரகம், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சொலி, முன்னாள் அதிபர், தைவான் வெளியுறவு அமைச்சகம், பூடான் பிரதமர் என பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

பதிவு: December 09, 2021
`குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்தால் உறவு பாதிக்கும்!'- அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸை அமெரிக்கா தூதரக ரீதியில் புறக்கணித்தால் அமெரிக்கா, சீனா, இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இவ்விளையாட்டு போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப் போவதாக அமெரிக்காவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர், குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர் என்றும் ஆனால் இப்போட்டிக்கான கொண்டாட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகாரிகள் யாரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவில் சீனா அதிருப்தி அடைந்துள்ளது. விளையாட்டில் அரசியல் செய்வதை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவோ லிஜியன், அமெரிக்காவின் இந்த முடிவு ஒலிம்பிக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கண்டித்தார்.

மேலும் அவர், 'ஒற்றுமை என்பது தான் தாரக மந்திரம். ஆனால் விளையாட்டில் அரசியலைக் கலந்து ஒலிம்பிக் விதிகளை அமெரிக்கா மீறி செயல்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாது. இதற்கான பதில் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்' என்றார்.

பதிவு: December 08, 2021
15 பேர் தொற்றால் பாதிப்பு!- கனடாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான்

கனடாவில் 15 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கனடா தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்று 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி தொடரை முடித்து பிறகு பூஸ்டர் ஷாட் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் மக்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 நாடுகளை உள்ளடக்கும் வகையில் பயணிகளுக்கான தடையை விரிவுபடுத்தியது.

டொராண்டோவில் நேற்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று மூன்று பேருக்கு உறுதியானது. அவர்களில் இருவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து திரும்பினர், மற்றொருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர். தற்போது கடுமையான கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென்றாலும் வரும் வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துளள்னர்.

கோவிட்-19 சிகிச்சைக்காக பைசர் நிறுவனத்தின் ஒரு மில்லியன் டோஸ் வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தை வாங்க கனடா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் மெர்க் நிறுவனத்துடன் 500,000 டோஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

பதிவு: December 04, 2021
`பள்ளிலேயே 3 மாணவர்கள் சுட்டுக்கொலை!'- அமெரிக்காவை பதறவைத்த 15 வயது மாணவன்

அமெரிக்காவில் பள்ளியிலேயே 3 மாணவர்களை மாணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டி 15 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஐந்து நிமிட இடைவெளியில் 20 முறை அவர் சுட்டத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் 16 வயது ஆண், 14 வயது பெண் மற்றும் 17 வயது பெண் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பள்ளியின் ஆசிரியர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆக்ஸ்போர்ட் உயர்நிலை பள்ளியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். காவல்துறையினர் பிடித்தபோது அந்த மாணவன் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனமும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

பதிவு: December 01, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்