சினிமா
’காதலுக்கு மரியாதை’ பட பாணியில் உருவாகவிருக்கும் விஜயின் ’தளபதி 66’ திரைப்படம்! வெளியாகியிருக்கும் ரீசண்ட் அப்டேட்!

தெலுங்கு பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 66’ படத்தின் கதை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தெலுங்கு சினிமா பட இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க இருப்பதாக அண்மையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இத்தகவலைத் தொடர்ந்து கோலிவுட் மற்றும் டோலிவுட் சினிமா விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தயாராகவிருப்பதாகக் கூறப்படும் இப்படத்தை, வம்சியின் சொந்த தயாரிப்பு  நிறுவனமான ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா’ நிறுவனத்தின் கீழ் தில் ராஜு மற்றும் சிரிஷ் இருவரும் இணைந்து தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது.

விஜய் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும், கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தமாகியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது.

இந்நிலையில், ’தளபதி 66’ படத்தின் கதையமைப்பு குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு தகவல் ஒன்றை அளித்துள்ளார். இது குறித்து அவர், ”தளபதி 66 திரைப்படம், பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போல ஒரு நல்ல ஃபீல் குட் கதையாக நடிகர் விஜய்க்கு அமைந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

காதலுக்கு மரியாதை, பூவே உனக்காக ஆகிய திரைப்படங்கள் நடிகர் விஜயின் திரை வாழ்க்கையில் மிக முக்கியமான படங்களாகப் பார்க்கப்படும் நிலையில், இத்தகவல் அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்துள்ளது.

பதிவு: January 24, 2022
வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா! இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு!

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா – நிக் ஜோனஸ் தம்பதியினர், வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமா வட்டாரத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை பிரியங்கா சோப்ரா. 2000-ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டம் வென்றுள்ள இவர், தமிழில் ‘தமிழன்’ திரைப்படத்தில் நடிகர் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார்.

தொடர்ந்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்திவந்த நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ல் அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் மற்றும் நடிகரான நிக் ஜோனஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், தாங்கள் வாடகைத் தாய் மூலம் குழந்தை ஒன்றைப் பெற்றுக் கொண்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

இது குறித்து அவர், தனது இன்ஸ்டாகிரம் வலைப்பக்கத்தில், “நாங்கள் வாடகைத் தாய் மூலம் ஒரு குழந்தையை வரவேற்றுள்ளோம் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறோம். அதே வேளையில் நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம். மிக்க நன்றி” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

 
 
 
View this post on Instagram

A post shared by Priyanka (@priyankachopra)

பதிவு: January 22, 2022
‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் வெளியீட்டுத் தேதியை மீண்டும் அறிவித்த படக்குழு!

பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்பட வெளியீடு கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து, அப்படத்தின் வெளியீடு குறித்த புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகுபலி-1 மற்றும் பாகுபலி-2 ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்குப்பிறகு பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘ஆர் ஆர் ஆர்’.

சுதந்திர போராட்ட வீரர்களான சீதராமராஜு மற்றும் கொமராம்பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி சுமார் 400 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர்களான ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மேலும் இவர்களுடன் ஆலியா பட், சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பாகுபலி திரைப்படத்தில் பணியாற்றிய இசையமைப்பாளர் மரகதமணி இசையமைத்துள்ளார்.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இவ்வாறாக தொடர்ந்து தாமதமாகிவந்த இப்படம், ஒருவழியாக கடந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு அதன் டீசர் மற்றும் ட்ரைலர் ஒன்றன் பின் ஒன்றாக வெளியானது.

இந்நிலையில் திடீரென அதிகரித்த கொரோனா மற்றும் புதிதாக இணைந்துள்ள ஒமிக்ரான் ஆகியவற்றின் பரவல் காரணமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தீவிரப்படுத்தப்பட்டது. மேலும், திரையரங்குகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 100% இருக்கைகள் மீண்டும் 50%-ஆகக் குறைக்கப்பட்டன. இதனால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மீண்டும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

பதிவு: January 22, 2022
தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை இயக்கவிருக்கும் அட்லீ! வெளியாகியிருக்கும் ’ஃப்ரெஷ்’ தகவல்!

நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் அட்லீ விரைவில் இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ’ஸ்டைலிஷ் ஸ்டார்’ அல்லு அர்ஜூன். ராஷ்மிகா மந்தனாவுடன் இவர் நடித்து, அண்மையில், தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இசையமைப்பாளர் தேவிஸ்ரீ ப்ரசாத் இசையில் இப்படத்திற்காக உருவான ’வாயா சாமி’, ’ஒ சொல்றியா மாமா’, ’ஸ்ரீ வள்ளி’ உள்ளிட்ட பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்து வருகின்றன. இதையடுத்து அல்லு அர்ஜுனின் சினிமா மார்க்கெட் உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கும் அடுத்த புதிய படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக ஒப்பந்தமாகியுள்ளதாகவும், மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சில தெலுங்கு இயக்குனர்களின் படங்களில் ஒப்பந்தமாகியுள்ள அல்லு அர்ஜுன், அவற்றை முடித்துவிட்டு இதில் நடிக்கத் துவங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இயக்குநர் அட்லீ தற்சமயம் இந்தியில் நடிகர் ஷாருக்கானை வைத்து படம் ஒன்றை இயக்கிவருவது அனைவரும் அறிந்ததே. அப்படத்தின் வேலைகள் முடிந்தவுடன் இவர்களின் கூட்டணியில் இப்புதிய திரைப்படத்தின் வேலைகள் துவங்கலாம் என சினிமா வட்டாரம் ஆருடம் கூறுகிறது.

ஏற்கனவே, தெறி, மெர்சல், பிகில் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக நடிகர் விஜயுடன் அட்லீ இணையவிருப்பதாகக் கிசுகிசுக்கப்பட்டுவந்த நிலையில், வெளியாகியிருக்கும் இப்புதிய செய்தி ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

பதிவு: January 21, 2022
18 வருட திருமண வாழ்க்கை பிரிவு ஏன்?- ஐஸ்வர்யா – தனுஷ் ஒரேநேரத்தில் விளக்கம்…

நடிகர் தனுஷ் தனது மனைவியை விவாகரத்து செய்வதாக சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் பிரிவதாக தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இருவரும் தமிழ் திரையுலகின் பிரபல குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். பிரபல டைரக்டரும் தயாரிப்பாளருமான கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ். ஐஸ்வர்யா தமிழ் முன்னணி நட்சத்திரம் ரஜினிகாந்தின் மகள்.

இந்த இருவருக்குமே நடந்த திருமணம், பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு நடந்தது. ஆனால், அதற்கு முன்பாக வெறும் ஆறு மாதங்கள் காதலித்த பிறகு அந்த திருமணம் நடந்தது.

தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படம் வெளியான தருணம். அப்போதுதான் இருவரும் முதலில் சந்தித்தனர். திரையரங்க உரிமையாளர் ஒருவர் ஐஸ்வர்யாவை தனுஷிடம் அறிமுகப்படுத்தியபோது, அவரது நடிப்புக்கு வாழ்த்து தெரிவித்தார் ஐஸ்வர்யா.

அடுத்த நாளே, ஐஸ்வர்யாவிடமிருந்து ஒரு வாழ்த்துக் குறிப்புடன் ஒரு பூங்கொத்தை பெற்றார் தனுஷ். ஐஸ்வர்யாவின் இயல்பான குணத்தை நடிகர் தனுஷ் பாராட்டினார்.

பிறகு தனுசும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி ஒருவரையொருவர் பார்த்து பேசிக்கொள்கிறார்கள் என கூறப்பட்டது. சினிமா கிசுகிசுக்களும் வெளிவந்தன. அந்த நேரத்தில், தனுஷ் தனது சகோதரியின் தோழி தான் என்றும், வேறு ஒன்றும் இல்லை என்றும் கூறியதை மறுத்து பேட்டியும் கொடுத்தார்.

ஒரு கட்டத்தில் இந்த ஜோடி சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்று இருவரது குடும்பத்தினர் நினைத்தனர்.

இதைத்தொடர்ந்து இரு வீட்டாரும் கூடி திருமண நிச்சயதார்த்தம் மற்றும் ஏற்பாடுகளைச் செய்தனர். ஒரு சினிமா இதழுக்கு அளித்த நேர்காணலில், ஐஸ்வர்யாவின் உறவைப் பற்றிய சிறந்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் தனுஷ்.

"எங்கள் உறவின் சிறந்த விஷயம் என்னவென்றால், நாங்கள் ஒருவருக்கொருவர் மற்றவருக்கான இடத்தை அதிகமாக கொடுப்பதுதான். நாங்கள் இருவரும் மற்றவருக்காக மாறுவதை நம்புவதில்லை. நாங்கள் ஒன்றாக இருக்க விரும்புகிறோம். நீங்கள் 20-களின் நடுப்பகுதியில் இருக்கும்போது, நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதில் உங்கள் மனம் அமைகிறது, உங்களை மாற்றுவது மிகவும் கடினம்," என்று கூறியிருந்தார்.

இந்த ஜோடியின் திருமணம் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி நடந்தது. தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட், ஹாலிவுட் என நடிகர் தனுஷ் பயணப்பட, தமிழ் சினிமா தயாரிப்பு, திரீ டி பட இயக்கம், திரைக்கதை இயக்கம் என தனி பாதையில் பரிணமித்தார் ஐஸ்வர்யா. இந்த இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.2006-ல் தங்கள் முதல் மகன் யாத்ராவை பெற்றெடுத்தனர். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2010-ல் இரண்டாவது மகன் லிங்கா பிறந்தார்.

இந்த நிலையில் தான் தானும் ஜஸ்வர்யாவும் பிரிவதாக தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யாவும் அவ்வாறே பதிவு செய்துள்ளார்.

"நண்பர்களாக, காதலர்களாக, பெற்றோர்களாக நாங்கள் இருந்த 18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகிறது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்தும், புரிந்துகொண்டும் வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் கடந்து சென்றுள்ளோம். இனி நானும், ஐஸ்வர்யாவும் தனித்தனியே வாழ்க்கையை தொடரவுள்ளோம். எங்களை நாங்களே தனித்தனியாக புரிந்துகொள்ளும் நேரம் இது!

எங்களின் இந்த முடிவிற்கு மதிப்பளித்து அனைவரும் உறுதுணையாக நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தனுஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டிருக்கிறார்.

அதேபோன்றதொரு பதிவை ஐஸ்வர்யாவும் தனது டுவிட்டர் கணக்கில் பதிவு செய்துள்ளார். இருவரின் இந்த முடிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் தனுஷ் குறித்து பெருமையாக பதிவிட்ட மூன்று மாதங்களுக்குள் இந்த பிரிவு செய்தி வந்துள்ளது. அக்டோபரில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினிகாந்த் இருவரும் புதுடெல்லியில் நடந்த தேசிய விருது வழங்கும் விழாவில் ஒன்றாக கலந்துக் கொண்டனர். அந்த விழாவில் ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது பெற்றார், அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷ் சிறந்த நடிகர் பிரிவில் தேசிய திரைப்பட விருதை வென்றார்.

அக்டோபர் 25 அன்று, ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராமில் ரஜினி மற்றும் தனுஷ் இருவரின் படத்தைப் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதற்கிடையில், தனுஷ் இடம்பெற்ற அவரது கடைசி பதிவு ஏப்ரல் 2021-ல் கர்ணன் திரைப்பட ரிலீஸின் போது இருந்தது. மறுபுறம் தனுஷ், தனது சமூகவலைதளங்களில் தான் நடிக்கும் படங்கள் குறித்த பதிவுகளை மட்டுமே வெளியிட்டுள்ளார். அவரது பதிவுகளில் ஐஸ்வர்யாவை காண முடியவில்லை.

பதிவு: January 18, 2022
`கொரோனாவால் பாதிக்கப்பட்ட வடிவேலு நலமுடன் இருக்கிறார்!'- மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள நடிகர் வடிவேலு நலமுடன் இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை தெரிவித்துள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகரான வடிவேலு, தன்னுடைய புதிய படத்திற்காக, இயக்குநர் சுராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் ஆகியோருடன் லண்டனுக்கு இந்த மாத தொடக்கத்தில் சென்றிருந்தார்.

அங்கு 10 நாட்கள் தங்கிய பின்பு, தமிழகம் திரும்பிய அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது, ஒமிக்ரான் தொற்றுக் கூடிய அறிகுறிகள் இருப்பதாக கூறி, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர், சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் நடிகர் வடிவேலுவின் உடல்நிலை சீராக உள்ளது. நன்றாக குணமடைந்து வருகிறார். விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: December 27, 2021
நடிகர் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ வீட்டில் ஐடி ரெய்டு!

`மாஸ்டர்' படத் தயாரிப்பாளரும் நடிகர் விஜய்யின் உறவினருமான சேவியர் பிரிட்டோ வீட்டில் வருமான வரி சோதனையினர் நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய் உறவினரும் மற்றும் சினிமா தயாரிப்பாளருமான சேவியர் பிரிட்டோ சினிமா தயாரிப்பு போக பல்வேறு தொழில்நிறுவனத்தை நடத்தி வருகிறார். அவற்றில் சீன மொபைல் போன் நிறுவனமான ஷாவ்மியின் உதிரிபாகங்களை ஏற்றுமதி இறக்குமதி கையாள்வதிலும் அவரது நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் ஷாவ்மி ( xiaomi) நிறுவனத்திற்கு சொந்தமான 25 இடங்களிலும், பெங்களூருவிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இதைத்தொடர்ந்து அந்த நிறுவனத்துடன் தொடர்பில் உள்ள பிரிட்டோவின் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. ஷாவ்மி நிறுவனத்தில் வரி ஏய்ப்பில் சேவியர் பிரிட்டோவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் நிறுவனம், உதிரிபாக தயாரிப்பு நிறுவனங்களில் தமிழகம் உட்பட நாடு முழுவதும் 2-வது நாளாக சோதனை நடைபெற்று வருகிறது.

மாஸ்டர் பட தயாரிப்பாளரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோ இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பதிவு: December 22, 2021
பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார்!

ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரபல நடன இயக்குநர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார்.

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வந்த சிவசங்கர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து, கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்குதுட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


இவர் கொரோனா தொற்று காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய சிவசங்கர், ‘மகாதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடன இயக்குநர் சிவசங்கர் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

பதிவு: November 29, 2021
`வேளாண் சட்டம் வாபஸ் வெட்கக்கேடானது!'‍- பிரதமர் மோடியை விமர்சிக்கும் நடிகை கங்கனா ரனாவத்

“சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கியுள்ளனர். அப்படியிருக்கும் சூழலில் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான்" என்று பிரதமர் மோடியை நடிகை கங்கனா ரனாவத் விமர்சித்துள்ளார்.


நாடு முழுவதும் மத்திய அரசு கொண்டு வந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டி விவசாயிகள் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லி எல்லையில் தற்காலிகமாக முகாம் அமைத்து போராட்டத்தை தொடர்ந்து அகில இந்திய விவசாயிகள் நடத்தி வந்தனர். இந்த நிலையில், பிரதமர் மோடி, தனது அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக இன்று அறிவித்தார். இதையடுத்து, இந்த சட்டத்தை எதிர்த்த பலரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றது குறித்து நடிகை கங்கனா ரனாவத் தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். தனது இன்ஸ்ராகிராம் பக்கத்தில், “சோகமான, வெட்கக்கேடான, முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு மாற்றாக வீதிகளில் இருப்பவர்கள் சட்டங்களை இயற்ற தொடங்கியுள்ளனர். அப்படியிருக்கும் சூழலில் இதுவும் ஒரு ஜிகாதி தேசம் தான். இதை இப்படி விரும்பிய அனைவருக்கும் எனது வாழ்த்துகள்” என கடுமையாக விமர்சித்துள்ளார்.

பதிவு: November 19, 2021
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ரூ.26 லட்சத்தை இழந்த நடிகை சினேகா!- தனியார் நிறுவனம் மீது புகார்

அதிக வட்டி தருவதாக நம்ப வைத்து 26 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக தனியார் சிமெண்ட் நிறுவன உரிமையாளர்கள் மீது நடிகை சினேகா புகார் அளித்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகையான சினேகா, சென்னை அடுத்த கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், "கவுரி சிமெண்ட் அண்ட் மினரல் என்ற நிறுவனத்தின் உரிமையாளர்கள் சந்தியா, சிவராஜ், கவுரி ஆகியோர் தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாக நம்பிக்கை தரும் விதத்தில் பேசினர். 26 லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறினர்.

இதனை நம்பி 25 லட்சம் ரூபாயை ஆன்லைன் மூலமாகவும், 1 லட்சம் ரூபாயை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் வைத்து வழங்கினேன். முதலீடு செய்த ஒரு மாதத்திற்கு பிறகு வட்டி தொகை கேட்ட போது அதனை தர மறுத்து தன்னை மிரட்டினர்" என்று கூறியுள்ளார். இந்த பணமோசடி புகார் குறித்து கானாத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பதிவு: November 18, 2021

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்