“நடிகர் அஜித்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் மீது வழக்குப் போடப் போவதில்லை. அஜித் தானாக உணர்ந்து தனது பணத்தை கொடுக்க முன்வந்தால் மட்டுமே அது திருப்பி கிடைக்கும்” என்று தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரைப்பட உலகில் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வருபவர் மாணிக்கம் நாராயணன். அஜித் திரையுலகில் நுழைந்த காலத்தில் அவருக்கு நண்பராகவும் இருந்துள்ளார். அஜித் தன்னுடைய அப்பா, அம்மா பயணம் செல்வதற்காக ரூ.6 லட்சம் தேவை என்று 1996-ம் ஆண்டு கேட்டு பெற்றதாகவும் பின்னர் அந்த பணத்தை நான் வாங்கவில்லை என்று ஏமாற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டும் மாணிக்கம் நாராயணன், பணத்தை கொடுத்தற்கான வங்கி ஆதாரங்களையும் வைத்துள்ளார்.
பின்னர் மற்றொரு படத்திற்காக ரூ. 12 லட்சம் கொடுத்து அந்தப் படம் கைவிடப்பட்டு விட்டதாகவும் பின்னர் வேறு ஒரு தருணத்தில் படம் நடித்து தருகிறேன் என்று சொல்லி அத்தொகையை திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார்.
இந்த ரூ.18 லட்சத்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக நான் கேட்கவே இல்லை என்றும் தனக்கு பணத்தை தேவை ஏற்பட்ட போது தான் கேட்டதாகவும், ஆனால் அஜித்தை பலமுறை சந்திக்க முயன்றும் முடியாமல் மேலாளர் மூலமாகவும் அவருடைய வீட்டிற்கு கடிதங்கள் அனுப்பியும் முயற்சி செய்தும் பலனில்லை என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர்கள் தரப்பிலும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார்.
இது குறித்து மாணிக்கம் நாராயணன் கூறுகையில்,“இந்த விவகாரம் தொடர்பாக அஜித் என்னிடம் பேசி இருக்கலாம். ஆனால் தொடர்ந்து புறக்கணித்து வருவது தான் வேதனையாக இருக்கிறது. அஜித் இன்று முன்னணி நடிகராக இருக்கலாம். ஆனால் காலம் முழுவதும் அப்படி இருக்கப் போவதில்லை. அஜித்தை அவமதிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. அவர் மீது வழக்குப் போடப் போவதில்லை. அஜித் தானாக உணர்ந்து தனது பணத்தை கொடுக்க முன்வந்தால் மட்டுமே அது திருப்பி கிடைக்கும். அஜித் சமையல் செய்வது எல்லாம் நல்லவர் என்பதற்கான அடையாளம் அல்ல. மனிதர்களை மதித்தால் மட்டுமே நல்லவராக போற்றப்படுவார்கள்” என்று ஆவேசமாக கூறினார்.