`வெற்றியை நோக்கி இந்தியா; 6 விக்கெட்டுகளை இழந்து ஆஸி. தவிப்பு!’- விறுவிறுப்பில் 2வது டெஸ்ட்

0
124
tamil news, tamil nadu news, tamil news paper, google news tamil, google tamil news, tamil cinema news, tamil news online
india test

மெல்போர்னில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்ஸில் 133 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையே ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் ஆட்டம் இழந்தது.

பின்னர், முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ரன்கள் எடுத்திருந்தது. மழை பெய்ததால் முன்கூட்டியே 2-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. ரஹானே 104 ரன்களுடனும், ஜடேஜா 40 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 3 ஆம் நாள் ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் ரஹானே 112 ரன்னில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, வந்த வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ஜடேஜா 57 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் இந்திய அணி அனைத்து விக்கெட்டையும் இழந்து 326 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் ஆஸ்திரேலியா அணியைவிட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் சார்பில் அதிகபட்சமாக நாதன் லைன், ஸ்டார்க் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் 2 விக்கெட்டும், ஹேசில் வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் ஜோ பர்ன்ஸ் 4 ரன்களில் உமேஷ் யாதவ் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். பின்னர் வந்த மார்னுஸ் 28 ரன் எடுத்திருந்தபோது அஸ்வின் பந்தில் வீழ்ந்தார். ஸ்மித் 8 ரன்னில் பும்ரா பந்திலும், ட்ராவிஸ் 17 ரன்னில் சிராஜ் பந்திலும், டேம் 1 ரன்னில் ஜடேஜா பந்திலும் ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக மேத்யூ 40 ரன்கள் எடுத்தார். 3வது நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது இந்திய அணியை விட 2 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது ஆஸ்திரேலியா. நாளை 4வது நாள் ஆட்டம் தொடர்கிறது. முதல் டெஸ்ட்டில் தோல்வி அடைந்த இந்திய அணி இந்த டெஸ்ட்டில் வெற்றி பெற அதிக முனைப்பு காட்டி வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.