இந்த பொறப்புத்தான் நல்லா ருசிச்சி சாப்பிட கிடைச்சது
ஸ்.. ஆஹா.. ஸ்.. ஆஹா..
அத நெனச்சு தான் மனம் உலகம் முழுவதும் பறக்குது.
இந்த பாடல் வரிகளை நன்கு உணர்ந்தவர்கள் தெற்கே சீமை நெல்லை மக்கள். ‘ருசி’ பார்த்து சாப்பிடுவதில் நெல்லைக்காரர்களுக்கு நிகர் அவர்களே… இருட்டு கடை தொடங்கி, அசன சாம்பார், சொதி குழம்பு வரை அவர்களின் ருசி எப்போதும் வேற லெவல் தான்.
நாடி நரம்புகளில் ஊறிய உணவு என்றால் சொதி குழம்பை சொல்லலாம்.
வழக்கமான வீடுகளில் அடிக்கடி செய்யமாட்டார்கள் என்றாலும், விருந்தினர் வந்தால் கட்டாயமாக இடம்பெற்றுவிடும்.
கல்யாண வீடுகளில் சொதி குழம்பு இடம்பெறவில்லை என்றால், அந்த கல்யானவே நிற்கும் அளவுக்கு சண்டை சச்சரவெல்லாம் சாதாரணம். ”சாம்பார் வேண்டாம் சொதிக் குழம்பை விடு” என்று கேட்டு, ஒரு கட்டு கட்டுவார்கள்.
திருமண நிகழ்விற்கு மறுநாள், மணமகன் வீட்டார் சார்பில் நடத்தப்படும் மறு வீட்டு விருந்திலும் சொதிக் குழம்பு பரிமாறப்படும். இப்படிப்பட்ட சொதிக் குழம்பை நெல்லைக்காரர்கள் மட்டுமல்ல, வெளி மாவட்ட உணவு விரும்பிகளும் தயாரித்து விட முடியும்.ம் சொதிக் குழம்பு வாய்க்கு ருசியானது மட்டுமல்ல, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட..
பரிமாறும் அளவு – 2 நபருக்கு
தேவையான பொருள்கள் –
- பாசிப்பருப்பு – 50 கிராம்
- பீன்ஸ் – 4
- கேரட் – 1
- உருளைக்கிழங்கு – 1
- பச்சை மிளகாய் -2
- இஞ்சி – 1 இன்ச் அளவு
- பூண்டுப்பல் – 2
- லெமன் -சிறிய துண்டு
- உப்பு – தேவையான அளவு
தேங்காய் பால் எடுக்க –
- தேங்காய் – 1/2 மூடி
தாளிக்க –
- எண்ணெய் – 3 மேஜைக்கரண்டி
- கடுகு – 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் – 10
- கறிவேப்பிலை – சிறிது
செய்முறை –
- பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம் எல்லாவற்றையும் நீளவாக்கில் வெட்டி வைக்கவும். இஞ்சியை துருவி சாறு எடுத்துக்கொள்ளவும். லெமனை பிழிந்து சாறு எடுத்துக்கொள்ளவும்.
- தேங்காய் துருவலை சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்து கெட்டியான பால் எடுத்து தனியே வைக்கவும். பிறகு சிறிது தண்ணீர் சேர்த்து இரண்டாவது பால் எடுத்து தனியே வைக்கவும். மூன்றாவது முறையும் இதே போல் எடுத்து இரண்டாவது எடுத்த பாலோடு கலந்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் பாசிப்பருப்பை போட்டு நன்கு வாசம் வரும் வரை வறுத்து அதோடு பச்சை மிளகாய், பூண்டு பல் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு அடிக்கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து 2 நிமிடம் வரை வதக்கி சேர்த்து வைத்துள்ள தேங்காய் பாலுடன் இஞ்சி சாறு, மற்றும் உப்பு சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க விடவும்.
- காய்கள் வெந்ததும் வேக வைத்துள்ள பாசிப்பருப்பை சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும் முதலில் எடுத்த கெட்டியான தேங்காய் பாலுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கி அடுப்பை அணைக்கவும். சுவையான திருநெல்வேலி சொதி ரெடி.
- இந்த சொதிக் குழம்பை சாப்பாடு தவிர ஆப்பம், பிரியாணி, இடியாப்பம், சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுக்கும் சேர்த்துக் கொள்ளலாம்.