ipl,indian primier league,lucknow,ahmedabad

ஐபிஎல் 2022 கிரிக்கெட் போட்டியில் புதிதாக இணைந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளுக்கான வீரர்கள் பட்டியலை ஐபிஎல் நிர்வாகம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.

இவ்வருடம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் வழக்கமான 8 அணிகளுடன் சேர்த்து புதிதாக லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

ஐபிஎல்லின் பிற 8 அணிகளுக்கான தக்கவைப்பு வீரர்கள் பட்டியல் முன்பே அறிவிக்கப்பட்டுவிட்டதை அடுத்து, வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் ஏனைய விளையாட்டு வீரர்களைத் தேர்வு செய்யும் ஏலம் நடைபெறவிருக்கிறது.

இதையடுத்து, புதிதாக இணைந்துள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகளுக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முதல் மூன்று வீரர்கள் குறித்த தகவலை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

அதன்படி, லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் ரூ.17 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் கே.எல் ராகுல், ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட விளையாட்டு வீரர் என்ற பெயரைப் பெறுகிறார். கடந்த ஆண்டு நடைபெற்ற சீசனில் பஞ்சாப் அணியை கே.எல்.ராகுல் வழிநடத்தனார்.

மேலும், இவருடன் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ரூ.9.2 கோடிக்கும், இந்தியாவின் லெக் ஸ்பின்னர் ரவி பிஷ்னோய் ரூ.4 கோடிக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, அகமதாபாத் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு ஓப்பனிங் செய்த சுப்மன் கில் ரூ.8 கோடிக்கும், ஸ்பின்னர் ரஷீத் கான் ரூ.15 கோடிக்கும் அகமதாபாத் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்