
ஊழல் புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. கடந்த 15ம் தங்கமணி மற்றும் அவர்களது உறவினர்கள் சொந்தமான 69 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, ரூ.2.16 கோடி பணம் , 1.13 கிலோ தங்கம், சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் ஐந்தாண்டுகளில் வருமானத்துக்கு அதிகமாக ரூபாய் 4.85 கோடி சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தங்கமணி மட்டுமல்லாது அவரது மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகியோர் மீதும் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சூழலில் விசாரணையின் தொடர்ச்சியாக மீண்டும் இன்று காலை 6.30 மணியளவில் 14 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் 10 இடங்கள், ஈரோட்டில் 3 இடங்கள், சேலத்தில் ஓரிடத்தில் என சோதனை நடைபெற்று வருகிறது. நாமக்கல்லில் பிஎஸ்கே கட்டுமான நிறுவனம், அதன் உரிமையாளர் அசோக் வீடு, எருமப்பட்டியில் உள்ள சரண்யா ஸ்பின்னிங் மில், அழகு நகரில் உள்ள கோழிப்பண்ணை அதிபர் மோகன் வீடு, ஈரோட்டில் சாந்தான்காடு பகுதியில் தங்கமணியின் நண்பரான குமார் என்பவர் வீடு, ஒண்டிக்காரன்பாளையத்தில் செந்தில் நாதன், செங்கோடம்பள்ளம் அடுக்குமாடி குடியிருப்பு, பள்ளிபாளையத்தில் உள்ள தங்கமணியின் ஆடிட்டர் செந்தில் குமார் ஆகிய வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.