வேளாண் சட்டம், பிரதமர் மோடி, விவசாயிகள், விவசாயிகள் போராட்டம், Agriculture Law, Prime Minister Modi, Farmers, Farmers Struggle

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை இன்று முதல் வாபஸ் பெறப்படும் என்று திடீரென அறிவித்துள்ள பிரதமர் மோடி, வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை விவசாயிகளும் திரும்பப் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி இன்று உரையாற்றினார். அப்போது அவர், ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு சேவை செய்வதே அரசின் முக்கிய இலக்கு ஆகும். சிறு விவசாயிகளின் நலன்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். நாட்டின் விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு விவசாயிகளாகவே உள்ளனர். 2014ம் ஆண்டு முதலே விவசாயிகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் திட்டங்களால் வேளாண் பொருட்களின் உற்பத்தி அதிகரித்துள்ளது. தரமான விதைகள், உரங்கள் விவசாயிகளுக்கு கிடைப்பதை அரசு உறுதி செய்துள்ளது.

விவசாயிகள் நலனுக்காகவே 3 வேளாண் சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. வேளாண் சட்டங்கள், சிறு விவசாயிகளின் நலன்களை மேம்படுத்துவதற்கானவை. குறைந்தபட்ச ஆதார விலையை அரசு உயர்த்தியதோடு, சாதனை அளவாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. எவ்வளவோ முயன்றும், சில விவசாயிகளுக்கு, வேளாண் சட்டங்களின் நன்மைகளை புரியவைக்க முடியவில்லை. 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி எல்லைப் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள் தங்கள் இல்லங்களுக்கு திரும்ப வேண்டுகோள் விடுக்கிறேன். மத்திய அரசு கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்படுகின்றன. வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று கூறினார்.

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்து இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் சங்கம் வரவேற்பு அளித்துள்ளது. அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்