
கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்திவந்த நிலையில், 1989-ல் இருந்த தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகப் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர்.
இருந்தபோதும், வன்னியர்களுக்கு எனத் தனியாக 20 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதுமட்டுல்லாது, அ.தி.மு.கவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்றால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிடிவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தது.
வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசு, 2021-ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது.
இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற சாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது." என்று கூறினார்.
மேலும் இது தற்காலிகமான ஏற்பாடுதான் என்பதையும், சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தென் மாவட்டத்தில் இந்த சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால் தேர்தல் பிரச்சாரங்களின்போது இது தற்காலிக ஏற்பாடு என்பதை சில அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.
அதேநேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு செய்துள்ள ஒரு நாடகம், இது செல்லாது, இது முறையாக அறிவிக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். அதேநேரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த இடஒதுக்கீடு சட்டப்படி செய்து தரப்படும் என்று வாக்குறுதியாகவே அளித்தார்.
அதேபோன்று, தேர்தல் முடிந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, இந்த உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்த நிலையில்தான், இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு ஜூலை 26-ம் தேதி வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எப்படி அளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் அறிவித்தது.
இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றிருக்கிறது. பா.ம.க நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர தொடங்கியது.
இந்தநிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ரத்து’ செய்யப்படுதாக தீர்ப்பு அளித்துள்ளனர்.
இந்த தீர்ப்பு வன்னியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த கட்டமாக இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், தமிழக அரசு இந்த தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.