பெண் எஸ்.பி, ஐஜி முருகன் வழக்கு, உச்சநீதிமன்றம், தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றம், Female SP, IG Murugan case, Supreme Court, TamilNadu Government, Chennai High Court

பெண் எஸ்.பி.க்கு முத்தம் கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஐ.ஜி.முருகன் மீதான வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை பெண் எஸ்பி.யை அந்த துறையின் உயர் அதிகாரியான ஐ.ஜி. முருகன் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக கூறப்பட்ட விவகாரம், தமிழக காவல் துறையில் கடந்த 2019ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி விசாரிக்க, கடந்த அதிமுக ஆட்சியில் ஏடிஜிபி சீமா அகர்வால் தலைமையில் 5 பேர் கொண்ட விசாகா குழு அமைக்கப்பட்டது. மேலும், இந்த குற்றச்சாட்டு பற்றிய விசாரணையை தெலங்கானா போலீசாருக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து, ஐஜி முருகனும், அப்போதைய அதிமுக அரசும் உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். அதே நேரம், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி தாக்கல் செய்த இடைக்கால மனுவில், ‘இந்த விசாரணையை வெளிமாநில போலீஸ் அதிகாரிகள்தான் நடத்த வேண்டும். அப்போதுதான், உண்மை வெளியாகும்,’ என்று கூறினார். அனைத்து மனுக்களையும் விசாரித்த உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கடந்த 2019, செப்டம்பர் 24ம் தேதி இடைக்கால தடை விதித்தது.

இதையடுத்து, நீதிபதிகள் சுபாஷ் ரெட்டி, எச்.ராய் அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிஸ்டாட்டில், ‘தமிழகத்தில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதனால், தமிழகத்திலேயே வழக்கை விசாரிக்கலாம். அதில், கண்டிப்பாக உரிய நியாயம் கிடைக்கும்' என்றார். இதே கோரிக்கை அடங்கிய பிரமாணப் பத்திரத்தை பாதிக்கப்பட்ட பெண் அதிகாரியும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, பெண் எஸ்.பி.யின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழ்நாட்டிலேயே விசாரிக்க அனுமதி அளித்துள்ளனர். ஐ.ஜி.முருகன் மீதான பாலியல் வழக்கை தெலங்கானாவிற்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்