
"என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை" என்று உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த கூடலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி பாரதி நகரை சேர்ந்த ஜெயா (18), கூடலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்தார். இந்த நிலையில் டாக்டராக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்த அவர் ‘நீட்’ தேர்வும் எழுதினார்.
கடந்த மாதம் தேர்வு முடிவு வெளியாகியது. இதில் மாணவி ஜெயா 69 மதிப்பெண் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனால் மன வருத்தத்துடன் அவர் இருந்தார். இதையறிந்த பெற்றோர் அவரை திருப்பூரில் உள்ள அக்கா வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சில வாரங்கள் இருந்த ஜெயா, தனது பெற்றோரை பார்த்துவிட்டு வருவதாக கூறிவிட்டு பாரதி நகருக்கு வந்தார். இந்த நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் விஷம் குடித்தார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினா் அவரை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை மாவட்டம் காரமடையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் அவர் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன் மாணவி ஜெயா எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியது. அதை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்த கடிதத்தில், ‘நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் என்னால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என முடிவெடுத்தேன். அம்மா... என்னை மீண்டும் மன்னித்துவிடு’ என்று கூறியுள்ளார்.