j jeyalalitha,ops,admk,eps

அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வருமான செல்வி ஜெ.ஜெயலலிதாவின் 74-வது பிறந்ததினம் இன்று. அவர் இல்லாத, ஒபிஎஸ் – இபிஎஸ் தலைமையிலான அதிமுக இன்று எவ்வாறு உள்ளது?

அதிமுக கட்சியின் வலிமையான ஒரு தலைமையாக ஜெயலலிதா இருந்தார் என்பதை யாரும் கிஞ்சிற்றும் மறுப்பதற்கில்லை. 2011-க்கு முன்புவரை ‘ஆட்சியில் மீண்டும் அதிமுக வர வாய்ப்புள்ளதா?’ என்று பலராலும் எள்ளிநகையாடப்பட்ட கட்சி, 2011 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று விஸ்வரூபமடைந்தது.

அதன்பிறகான அதிமுகவின் வளர்ச்சியும் எழுச்சியும் மற்ற கட்சிகளை வாயடைக்க வைத்தது வரலாறு. இடையில் சொத்துக்குவிப்பு உள்ளிட்ட சில வழக்குகளில் சிக்கினாலும், அவற்றைத் தவிடுபொடியாக்கி மீண்டும் 2016 சட்டமன்றத் தேர்தலில் அரியணை ஏறினார். இவ்வாறாகச் சென்ற கட்சியின் நடப்பு தான், 2016 டிசம்பர் 5-ல் அவர் மறைந்த பிறகு பலவாறாக ஆட்டம் காணத் துவங்கியது.

முதல் சறுக்கலே கட்சியின் அடுத்த முதல்வர் பொறுப்பாளர் யார் என்பது தான். இதில் அக்கட்சியின் மூத்த தலைமைகளான இபிஎஸ் – ஒபிஎஸ் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவி, பூசல்கள் ஏற்பட்டு ஒருவழியாக எடப்பாடி.கே.பழனிசாமி தமிழக முதல்வராக சசிகலாவால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார்.

இதன்பிறகும் கூட சற்றேனும் மக்கள் விரும்பும் சில நற்திட்டங்களோடு சென்றுகொண்டிருந்த அதிமுகவின் நடப்பு, பாஜகவுடன் கூட்டுசேரும் நடவடிக்கையால் தான் மக்களிடையே வெறுப்பைச் சம்பாதிக்கத் துவங்கியது.

இதன் விளைவினால் தானோ என்னவோ 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தது அதிமுக. பத்தாண்டுகளாக ஆட்சிக் கட்டிலில் அமரத்துடித்த மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரியணையில் அமர்ந்தது. அதிமுக, ஆளும் கட்சியிலிருந்து எதிர்க்கட்சியானது

இத்தோல்விக்கு நிச்சயம் அதிமுக தலைமைகளாக மக்களிடையே அறியப்பட்ட இபிஎஸ் – ஒபிஎஸ் தான் பொறுப்பேற்றாக வேண்டும். ஜெயலலிதா இருந்திருந்தால் நிச்சயம் இந்நிலை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. நிச்சயம் வாய்ப்பில்லை.

அதிமுக-விற்கு மக்கள் மத்தியில் அபிமானம் குறைய சரியான திட்டமிடல் இல்லை, கட்சி நிர்வாகிகளுக்குள் இருந்த பூசல்கள், தெளிவில்லாமல் உளரும் அமைச்சர்கள் என்று பலதரப்பட்ட காரணங்கள் கூறப்பட்டாலும் பாஜகவுடனான கூட்டணி ஓர் முக்கிய அங்கம் வகிக்கும்

ஜெயலலிதா இருந்த வரை பாஜகவுடன் கூட்டணி இனி இல்லை என்று கூறிவந்தநிலையில், அவர் காலம் சென்ற பின் அதையெல்லாம் மறந்து அதிமுக அமைச்சர்கள் பிரதமர் மோடியை பூஜித்ததும், பாஜகவின் கட்டுப்பாட்டில் இருந்ததும் தான் பிரச்சினைக்கு முழு காரணம்.

இது அண்மையில் நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் எதிரொலித்ததுதான் சோகத்தில் சோகம். நாடாளுமன்றத்தில் இந்தியாவின் பெரிய மூன்றாவது கட்சியாக உருவெடுத்திருந்த அதிமுக, தமிழகத்தில் பல இடங்களிலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சிறிய கட்சிகளுக்குப் பின்னான இடங்களைப் பிடித்தது.

இந்நிலையில்தான் வாக்கு சதவீதத்தில் அதலபாதாளத்திற்கு அதிமுக சென்றதை எண்ணி துவண்டுபோன அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளரான ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ், ‘அம்மா வழியில் கட்சியை அரியணை ஏற்றியே தீருவோம்’ என சூளுரைத்து நேற்றைய தினம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர். இப்பொழுதுதான் அரியணை குறித்த எண்ணமே இவர்களுக்கு வருகிறதா என எண்ணத் தோன்றுகிறது.

தமிழக மக்களின் எண்ணம் ஒன்றுதான். மக்களுக்கும், அவர்களின் வாழ்விற்கும் நன்மை பயக்கும் திட்டங்களை எந்த அரசு கொண்டுவந்தாலும் அவர்களை வாரியணைத்து உச்சிமுகர தமிழ் மக்கள் தயாராகத்தான் உள்ளனர். மாறாக, மதவாத சக்திகளுடன் இணைந்துகொண்டு நன்மை பயக்கிறேன் பேர்வழி பிரிவினை சூழ்ச்சிகளையும், சாமான்யர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் திட்டங்களையும் திணித்தால் யாவரையும் துடைத்தெறிய அவர்கள் தயங்கமாட்டார்கள் என்பது தான் உண்மை.

அதிமுகவின் தற்போதைய நிலையை ஒருவேளை ஜெ.வின் ஆன்மா பார்த்தால், ‘நான் இரத்தம் சிந்தி உருவாக்கி வைத்திருந்த கழகமா இது? என்று இரத்தக்கண்ணீர் தான் வடிக்கும்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்