தமிழ்நாடு, வடமாநில தொழிலாளர்கள், தமிழக இளைஞர்கள், Tamil Nadu, Northern Workers, Tamil Nadu Youth

கொரோனா நோய் பற்றிய அன்றாடச் செய்திகள் அனைத்தும் பழைய செய்திகளாகிவிட்டது. மக்களுக்கும் பழகிவிட்டது. இந்தியாவில் டிசம்பருக்குள் பெரியளவில் உயிரிழப்புகள் ஏற்படலாம் என்று செய்திகள். முதலில் நம்மை பற்றிய சுயபரிசோதனையில் இருந்து தொடங்குவோம்.

கடந்த 5-10 ஆண்டுகளாக தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நேரத்தில் அனுபவித்திருப்போம். ஒரு பக்கம் வேலை இல்லை என்று திண்டாட்டம். இன்னொரு பக்கம் வேலைக்கு சரியான ஆள் கிடைக்கவில்லை என்று திண்டாட்டம். எந்த படிப்பு படித்தவனுக்கும் நல்ல வேலை கிடைக்கவில்லை என்ற புலம்பல். எந்த தொழில் நடத்தவும் சரியான ஊழியர்கள் கிடைக்கவில்லை என்ற விசும்பல். பல தொழில் நிறுவனங்கள் சிறிய மற்றும் பெரிய முதலீடுகளில் தொடங்கப்பட்ட வேகத்தில் மூடப்படுகின்றன. எங்கு பார்த்தாலும் "எந்த பிசினசும் சரியில்லைங்க" என்ற பேச்சுகள். இதற்கு நடுவில் கொரோனாவால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, வேலையிழந்தோர் பல லட்சம். இதற்கு பின்னணியில் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

மதுப்பழக்கம்

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புவரை இலைமறை காயாக இருந்த மதுப்பழக்கம் இப்போது காபி, டீ போல சாதாரண ஒன்றாகிவிட்டது. தினமும் மாலை ஆகிவிட்டால் பாட்டிலை தொடாமல் இருக்க முடியாது என்ற நிலையில் மிக அதிக எண்ணிக்கையில் ஆண்களும் அவர்களுக்கு போட்டியிட்டு பெண்களும் மது பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதை நம்மால் காணமுடிகிறது.

உலகிலேயே திறன் வாய்ந்த பணியாளர்கள் இருந்த தமிழகத்தில் இன்று குடிகாரர்கள் நிறைந்து, உற்பத்தி திறன் மிகவும் குறைந்துவிட்டது. குடி நோயாளிகளால் எந்த வேலையையும் நேர்த்தியாகவோ, குறிப்பிட்ட பணி நேரத்தில் செய்ய முடிவதில்லை. குறிப்பாக அமைப்புசாரா தொழிலாளர்கள் கட்டுமானம் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடுவோரால் சராசரி 8 மணிநேர பணியை கூட செய்ய முடிவதில்லை. அதிகம் போனால் 4 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அதற்கு ரூ.1000 கூலி கேட்கின்றனர். வீட்டுக்கு ரூ.500, தனக்கு இருவேளையும் மது, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு ரூ.500 என்று பிரித்து கொள்கிறார்கள்.

நூறு நாள் வேலை திட்டம், விவசாயம் உள்ளிட்ட எவ்வித வாழ்வாதாரமுமே இல்லாத மாவட்டங்களுக்கு அவசியம் தேவை. ஆனால் தமிழகத்தில் பெரும்பகுதி மாவட்டங்கள் ஓரளவு வளர்ந்தவை. இங்கு இத்திட்டத்தை முறையான திட்டமிடல் இல்லாமல் செயல்படுத்தியதால் காலை 10 மணிக்கு போய்விட்டு 2 மணிக்கு வந்துவிடலாம், வீட்டுக்கு தேவையான விறகுகளை வெட்டிக்கொள்ளலாம். வேறு எந்த வேலையும் இல்லை. ரூ.150 அக்கவுண்டுக்கு வந்துவிடும் என்ற நிலையால் சிறிய டீக்கடைகள் முதல் பெரிய நிறுவனங்களில் அடிநிலை உதவியாளர் பணிகளுக்கு ஆட்கள் கிடைக்காமல் தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய காரணங்களால் தமிழகம் மிகமிக ஆபத்தான நிலையை நோக்கி பயணிக்கிறது. சமீபத்தில் தொழில் தொடங்கி நஷ்டமடைந்து தொழிலை விட்டவர்களிடம் விசாரித்தால் 10-ல் 8 பேர் சம்பள பிரச்னைகளாலேயே தொழில் நஷ்டமடைந்ததாக சொல்லுவார்கள். தொழில் நடத்தியே ஆகவேண்டிய கட்டாயமுள்ளோர், வேறு வழியின்றி தங்களுக்கு தேவையான வேலையை ஓரளவு குறைவான சம்பளத்தில் (தமிழ்நாட்டவரை ஒப்பிடுகையில்) கிடைக்கும் வட மாநிலத்தவரை அழைத்து வந்து இங்கே வேலைக்கு வைத்துக்கொள்கின்றனர்.

ஓட்டல் முதல் கட்டுமானதுறை வரை இதுதான் நடக்கிறது. தமிழ் சமையல்காரர், கொத்தனார், ஓட்டுநர்கள் ஒருநாளைக்கு பெறும் ரூ.850-1000 சம்பளத்திற்கு செய்யும் வேலையை விட வட மாநிலத்தவர்கள், 2 மணிநேரம் அதிகமாக வேலை செய்தும் ரூ.500-600 சம்பளத்தை வாங்கி கொள்கிறார்கள். அவர்களுக்கு தங்க இடம், சாப்பாடு கொடுத்துவிட்டால் போதுமானது. வருடத்திற்கு ஒருமுறை ஒருமாதம் லீவு கொடுத்தால் போதும். இதே நிலைதான் பெயிண்டர், ஆசாரி, பிளம்பர், எலக்ட்ரீசியன் வேலைகளுக்கும்.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் பெருமளவு மக்கள் மனநிலையில் ஆபத்தான மாற்றம் ஏற்பட்டுள்ளது. வேலையே செய்யக்கூடாது, சும்மாவே எல்லாம் கிடைக்க வேண்டும், சும்மாவே பணம் கிடைக்க வேண்டும், சும்மாவே சுகபோகமான வாழ்வு கிடைக்க வேண்டும், தினசரி குடிக்க வேண்டும் என்றெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

கற்றோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் எல்லோரும் இது குறித்து சிந்தித்து இந்த சமூக மனநிலையை பிடித்துள்ள நோயை மாற்ற வழி தேடினால் மட்டுமே தமிழினம் தப்பிப்பிழைக்கும். ஆளக்கூடிய ஆட்சியாளர்களும் இதற்கு உடனடியாக நல்ல தீர்வு காணவேண்டும் என சமூக ஆர்வளர்களின் கருத்தாகவும் இருக்கிறது.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்