
கர்நாடகா மருத்துவமனையில் உயிரிழந்த தாய் மற்றும் இரட்டைக் குழந்தைகளின் இறப்புக்குக் காரணமானவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில, தும்மாகூரு பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த தமிழகத்தைச் சேர்ந்த கஸ்தூரி என்ற கர்ப்பிணிப் பெண்ணிடம் ஆதார் அட்டை, மாநில அரசின் தாய் அட்டை இல்லை என்ற காரணத்தால் மருத்துவமனை ஊழியர்களால் சிகிச்சை அளிக்கமுடியாது என்று கூறி திருப்பி அனுப்பபட்டார்.
இதனால் வீடு திரும்பிய அவருக்கு திடீரென வீட்டில் பிரசவ வலி ஏற்படவே துர்வாய்ப்பாக அவரும், அவருக்குப் பிறந்த இரட்டை ஆண்குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அதற்குக் காரணமான ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில், "தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது
இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது. தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்" இவ்வாறு பதிவிட்டுள்ளார்.