
3 கோடி ரூபாய் மோசடி புகாரில் தலைமறைவாக இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூரில் பதுங்கியிருப்பதாக வந்த தகவலையடுத்து போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். முக்கிய அதிமுக நிர்வாகிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகிறது போலீஸ்.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி மற்றும் உதவியாளர்கள் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து கடந்த 17ம் தேதி அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, திருச்சி, கொடைக்கானல், பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் தேடப்பட்டு வருகிறது. வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸூம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் தொடர்புடையதாக பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக நிர்வாகியும், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் நேர்முக உதவியாளராக இருந்தவருமான ஜோலார்பேட்டையை சேர்ந்த ஏழுமலை மற்றும் நாட்றம்பள்ளியை சேர்ந்த விக்னேஸ்வரனை சிவகாசி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இருவரும் ராஜேந்திர பாலாஜி மூலம் அரசு துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் அழைத்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே 10 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி திருப்பத்தூர் மாவட்டத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுவதும் மாவட்ட எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.