ராஜேந்திர பாலாஜி, மோசடி வழக்கு, போலீஸ், சிறை, Rajendra Balaji, fraud case, police, jail

பண மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் நேற்று கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தமிழ்நாடு அழைத்து வந்து, விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர், ராஜேந்திரபாலாஜி விசாரணைக்காக நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால், போலீசார் தரப்பில் ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வரும் 20-ம் தேதி வரை ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்