ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா, அதிமுக, OPS, EPS, Sasikala, ADMK

ஓ.பி.எஸ்-சுடன் இணைந்து சசிகலா புதிய திட்டம் ஒன்றை அரங்கேற்ற இருக்கிறார். இதனால் அ.தி.மு.க.வில் கடுமையான சூறாவளி வீச போவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்ததும் தமிழ்நாடு அரசியலில் பெரிய புயலை கிளம்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் சசிகலா. ஆனால் ஏனோ சில காரணகளுக்காக தேர்தல் நடக்கும் நேரம் பார்த்து அரசியலில் இருந்து ஒதுங்கி இருப்பதாக அறிவித்தார். அ.தி.மு.க.வின் வாக்குகளை சிதறடிக்க கூடாது என்பது எண்ணத்தில் இவர் இந்த முடிவை எடுத்ததாக அப்போது கூறப்பட்டது.

தேர்தலுக்கு பின்னர் மீண்டும் அரசியலுக்குள் காலடி எடுத்து வைத்த சசிகலா, அ.தி.மு.க.வை மீட்க வேண்டும் என்று போன் கால் மூலம் நிர்வாகிகள் பலரிடம் பேசி வந்தார். அ.தி.மு.க, அமமுக நிர்வாகிகள் பலரிடமும் இவர் பேசிய ஆடியோக்களும் மீடியாக்களில் வெளிவந்தது.

அ.தி.மு.க.வை மீட்க வேண்டும், கட்சியை காக்க வேண்டும் என்று சசிகலா ஒவ்வொரு போன் காலிலும் சொன்னார். தொடக்கத்தில் வெளியான சில ஆடியோக்களை தவிர வேறு எதுவும் பெரிதாக அ.தி.மு.க. தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தவில்லை. அவரின் போன் கால் ஆடியோ எதுவும் பெரிதாக அதன்பின் கவனிக்கப்படவில்லை.

இந்தநிலையில் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்கள் குறித்து அ.தி.மு.க.வில் சீனியர்கள் யாரும் பெரிதுபடுத்தவில்லை. எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் போன்றவர்கள் எதிர்ப்பு காரணமாக அ.தி.மு.க.விலும் சசிகலாவுக்கு இணைய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓ.பி.எஸ் மட்டும் கொஞ்சம் சசிகலா ஆதரவு போல இருக்கிறார் என்று தகவல்கள் வந்தாலும் அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.

ஆடியோ வெளியீட்டுக்கு பின்னர் அமைதியாக இருந்த சசிகலா தற்போது மீண்டும் இரண்டாவது திட்டத்தை தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணத்தின் போது ஓ.பி.எஸ்ஸை மருத்துவமனைக்கே நேரில் சென்று சசிகலா சந்தித்து ஆறுதல் கூறினார்.

இந்த சந்திப்பு ஓ பன்னீர்செல்வம்- சசிகலா இடையே கொஞ்சம் கசப்பை மறந்து, பிணைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அ.தி.மு.க.வின் சில முக்கிய நிர்வாகிகள் சிலரும். சசிகலாவை மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முணுமுணுத்ததாக கூறப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் மட்டுமின்றி கட்சி மீது அதிருப்தியாக இருக்கும் வேறு சில நிர்வாகிகள் மத்தியிலும் சசிகலாவின் மதிப்பு உயர்ந்து உள்ளதாக பேச்சு அடிபடுகிறது.

ஆளும் தி.மு.க. அரசோ பலரது மீது வழக்குகள் போட்டு வருகிறது. ஆனால் ஈபிஎஸ், ஓபிஎஸ் எதுவுமே செய்யவில்லை. இதுவே சசிகலா இருந்தாலாவது பெரிய அளவில் போராட்டமோ அல்லது ஆர்ப்பாட்டமோ செய்து இருப்பார் என்ற மனநிலைக்கு சில அ.தி.மு.க. தலைகள் சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரை கோடநாடு வழக்கு விவகாரத்தில் மன உளச்சலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவர் எங்கே நம்மை காப்பாற்ற போகிறார் என்று அ.தி.மு.க. மாஜி அமைச்சர்கள் சிலர் புலம்பி வருகிறார்களாம். இந்த சந்தர்ப்பத்தை எப்படியாவது பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்பதில் சசிகலா உறுதியாக இருக்கிறாராம். அதற்காக ஒரு புதிய திட்டத்தை தீட்டி உள்ளாராம்.

அதேநேரத்தில் நமது எதிரி தி.மு.க.தான். நமக்குள்ளேயே சண்டை போட கூடாது என்று சசிகலா அ.தி.மு.க. தலைவர்களுக்கு தகவல் அனுப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி, இம்மாதம் 16-ம் தேதி ஜெயலலிதா நினைவிடம் செல்லும் சசிகலா 17-ம் தேதி காலை தி.நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்கும், ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். இல்லத்திற்கும் சசிகலா செல்கிறார்.

அதன் தொடர்ச்சியா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் முடிவு செய்து இருக்கிறாராம். இதன் மூலம் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்தை தன் பக்கம் திருப்பலாம் என்ற நினைப்பில் சசிகலா இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் மூலம் அ.தி.மு.க.விற்கு நுழைய மறைமுக திட்டங்கள் சிலவற்றையும் சசிகலா தீட்டி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகின்றன.

ஓ.பன்னீர்செல்வத்தை பொறுத்தவரை சசிகலா கட்சிக்கு வருவதில் சிக்கல் இல்லை. ஆனால் அவர் மீண்டும் கட்சிக்குள் மொத்தமாக ஆதிக்கம் செலுத்த கூடாது. அவரும் ஒரு தலைவராக இருக்கலாம். அதிகார பகிர்வு இருக்கும். ஆனால் அவர் மட்டுமே அதிகாரம் பொருந்திய நபராக இருக்க முடியாது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால் சசிகலா திட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஒத்து கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

சசிகலாவை தொடக்கத்தில் கடுமையாக எதிர்த்த எடப்பாடி பழனிசாமியும் இப்போது கொஞ்சம் அமைதியாகிவிட்டார். சசிகலா விஷயம் என்று இல்லை பொதுவாகவே கடந்த சில நாட்களாக எடப்பாடி ஏனோ அமைதியாக இருக்கிறார். அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு போது இவர் முக்கிய விஷயங்களை பேசுவாரா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்