சசிகலா, அதிமுக, எடப்பாடி பழனிசாமி, Sasikala, ADMK, Edapadi Palanisamy

சசிகலா மேற்கொள்ள உள்ள அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் புயலை கிளப்பி உள்ளது. ஏற்கெனவே அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தின் போது, சசிகலா மேற்கொண்ட நிகழ்ச்சிகளே அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது என்றுதான் சொல்ல வேண்டும். அதன் வெளிப்பாடாகதான் சசிகலா மீது எடப்பாடி பழனிசாமியும், ஜெயக்குமாரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர்.

இந்தநிலையில், வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழகத்தில் சில மாவட்டங்களில் அரசியல் ரீதியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் அ.தி.மு.க.வினர் மத்தியில் பெரிய அதிர்வலை ஏற்படுத்தும் என்றே அரசியல் விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர், அதிமுக ஜானகி அணி, ஜெயலலிதா அணி பிரிந்தபோது, எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அரசியலிலிருந்து ஒதுங்கி ஜெயலலிதாவுக்கு வழி விட்டது போல் சசிகலாவும் தற்போதைய அதிமுக தலைமைக்கு வழிவிட்டு பெருந்தன்மையுடன் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடி தரப்பின் விருப்பமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விருப்பத்தை அடிப்படையாகக் கொண்டே அ.தி.மு.க.வில் உள்ள சில சீனியர்களின் கருத்துகளும் அமைந்துள்ளன. அதையொட்டியே செய்திகளும் வெளி வருகின்றன. ஆனால் சசிகலாவோ முடிந்தவரை அ.தி.மு.கவை தன்பக்கம் இருக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார் என்று அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

இதனிடையே, அதிமுகவை கைப்பற்றும் முயற்சியைவிட்டுவிட்டு அமமுகவை பலப்படுத்தும் முயற்சியில் இறங்கலாம் என டி.டி.வி.தினகரன் சசிகலாவிடம் கூறி வருவதாகவும், அதற்கு சசிகலா உறுதியாக எந்தவித உத்தரவாதமும் தரவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தநிலையில், சென்னையில் நடந்த சசிகலாவின் இரு நாள் நிகழ்ச்சிகள் அதிமுக தலைமையை அசைத்துப் பார்த்தாலும் மீடியாக்களில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே செல்லலாம். ஆகையால் தென் மாவட்ட சுற்றுப் பயணத்தில் செல்லும் இடங்களில் எல்லாம் தங்கள் செல்வாக்கை காட்ட வேண்டும் என முடிவு எடுத்துள்ளனர். அது மீடியாக்கள் மூலமாக தமிழக அரசியலை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்றும் சசிகலா திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

சசிகலாவின் சுற்றுப் பயணம் தொடங்க இன்னும் இரு நாள்களே உள்ளன. தஞ்சை பூண்டி ஸ்ரீ புஷ்பம் கல்லூரி வளாகத்தில் தினகரன் மகள் திருமண வரவேற்பு விழா நடைபெற உள்ளது. திருவண்ணாமலையில் நடைபெற்ற திருமணத்துக்கு தொண்டர்கள் திரளாக கலந்துகொள்ள முடியாத நிலையில் தஞ்சையில் பிரமாண்டமாக வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொண்டர்களிடம் குடும்பமாக வரவேண்டும் என அழைத்துள்ள தினகரன் அறுசுவை விருந்தையும் ஏற்பாடு செய்துள்ளார்.

சசிகலா ஆதரவாளர்கள், அமமுக தொண்டர்கள் என புதன் கிழமை தஞ்சையில் பெரிய கூட்டத்தை கூட்டி தங்களது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளனர். 27-ம் தேதி தஞ்சாவூர், 28-ம் தேதி மதுரை, திருநெல்வேலி, 29-ம் தேதி பசும்பொன் விழா என அனைத்து இடங்களிலும் சசிகலா தொண்டர் படை சூழ வலம் வரவுள்ளார்.

சசிகலாவின் இந்த சுற்றுப்பயணம் குறித்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனை நடத்தி வருகிறாராம். குறிப்பாக சசிகலா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள மாவட்ட செயலாளர்களுக்கு சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதாவது சசிகலா வரும் போது அ.தி.மு.க. நிர்வாகிகளோ, தொண்டர்களோ சசிகலாவை சந்திக்கவும் கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்கவும் கூடாது என்று உத்தரவை பிறப்பித்து இருக்காராம். அதே நேரத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓபிஎஸ், சசிகலா விவகாரத்தில் தொடர்ந்து மவுனம் காத்து வருவது நிர்வாகிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை வைத்த பார்க்கும் போது சசிகலாவின் சுற்றுப்பயணம் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய அளவில் பீதியை ஏற்படுத்தி இருக்கிறதாம். அதேபோன்று அவரது ஆதரவாளர்களும் பீதியில்தான் இருக்கிறார்களாம்.

Comments

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்