
நெல்லையில் தனியார் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். படுகாயம் அடைந்த 4 மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நெல்லை சந்திப்பில் உள்ள சாப்ட்டர் தனியார் பள்ளியில் காலை 11 மணியளவில் இடைவேளை விடப்பட்டுள்ளது. அப்போது கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 5க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ள 3 மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டு காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். காவல்துறை, வருவாய் துறையினர் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்கள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. பள்ளி மாணவர்கள் சம்பவ இடத்தில் இடிந்து விழுந்தவுடன் ஆங்காங்கே அனைவரும் சிதறி ஓடியுள்ளனர். அனைத்து மாணவர்களையும் வகுப்பறைக்கு வர சொல்லி யார் இல்லை என்பது குறித்து கணக்கெடுக்க கூடிய பணியை பள்ளி நிர்வாகத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில் தீயணைப்பு துறையினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த மாணவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
8 மற்றும் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இடைவேளை விடப்பட்டதாக சொல்லப்படுகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்துள்ளனர். சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர். தற்போது 8 மற்றும் 9ஆம் வகுப்பு தவிர அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டிற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இருந்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, உயிரிழந்த மாணவர்களின் விவரம் தெரியவந்துள்ளது. 6ம் வகுப்பு சி பிரிவில் படித்த சுதீஷ், 8ம் வகுப்பு ஏ பிரிவில் படித்த விஸ்வரஞ்சன், 9ம் வகுப்பு பி பிரிவில் படித்த அன்பழகன் ஆகிய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயமடைந்த மாணவர்கள் சஞ்சய், இசக்கி பிரகாஷ், சேக் அபுபக்கர், அப்துல்லாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பள்ளியில் நடந்த விபத்து குறித்து அறிக்கை அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை தர பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.