shane warne,australia,cricketer

மாரடைப்பால் காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சில் ஜாம்பவான் எனப் போற்றப்படுபவர் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே. பேட்ஸ்மேனின் கவனத்தை நொடிப்பொழுதில் பதம்பார்த்து விக்கெட்டை வீழ்த்தும் இவரது அபார பந்துவீச்சால் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றவர். தனது சுழற்பந்து திறனால் பல்வேறு வெற்றிகளை ஆஸ்திரேலியாவுக்குப் பெற்றுத் தந்த வார்னே, உலகம் முழுக்க பல்வேறு ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான், விடுமுறைக்காக தாய்லாந்து சென்றிருந்த வார்னே, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 52. தூக்கத்தில் பேச்சு மூச்சற்றுக்கிடந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்ததாக உறுதித் தகவல் அளித்துள்ளனர். இச்செய்தி, உலகெங்கிலுமுள்ள அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கலங்கடித்துள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுன் நல்லடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே மரணிப்பதற்கு சிலமணிநேரங்கள் முன்பு காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ராட் மார்ஷ்-க்கு இரங்கல் தெரிவித்த அவரது ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி காண்போரை கலங்கடித்துவருகிறது.

அப்பதிவில் அவர், “ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஓர் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாது, பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் இருந்தவர். ராட் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவர். எனது அன்புகளை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உரித்தாக்குகிறேன். ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டிருந்தார்.

தனது மரணத்திற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு முன் இப்பதிவை இடும்போது இருந்த அவர், 12 மணிநேரத்திற்குப்பின் உயிரோடு இல்லாதிருப்பதை எண்ணி அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்துவருகின்றனர்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்