யூடியூப், அரக்கோணம், கணவன், மனைவி பிரசவம், Youtube, Arakkonam, husband, wife childbirth

அரக்கோணம் அருகே யூடியூப்பை பார்த்து மனைவிக்கு கணவர் பிரசவம் பார்த்த நிலையில் அதிக ரத்தப்போக்கு காரணமாக குழந்தை இறந்தது. பிரசவமான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த பணப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள நெடும்புலி கிராமத்தை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அந்த பகுதியில் மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் லோகநாதனின் மனைவியான கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு பிரசவ வலியின் போது அவரது அக்கா உதவியுடன் யூடியூப்பை பார்த்து பிரசவம் பார்த்துள்ளார். இதனால் அதிக அளவில் அவரது மனைவிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மனைவி மற்றும் குழந்தையை உடனடியாக நெமிலி அருகேயுள்ள புண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இரண்டு பேரையும் அழைத்து வந்து அனுமதி செய்துள்ளார்.

இங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக குழந்தை மற்றும் அந்த பெண்ணிற்கு தீவிர சிகிச்சையில் ஈடுபட்டனர். இருந்தாலும் மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருந்த நிலையில் பிறந்த ஆண் குழந்தையானது இறந்துள்ளது. மேலும் கோமதி என்பவர் அதிக அளவு ரத்தப்போக்கின் காரணமாக தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் புண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவர் தற்போது நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்ததின் காரணமாக குழந்தை இறந்ததாக கூறி மருத்துவர் அளித்த புகாரின் பேரில் தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அந்த பெண்ணுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்