கொரோனா, திருமணம், தமிழ்நாடு, பொதுமக்கள், Corona, Marriage, Tamil Nadu, Public

கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைகளுக்கு அதிகாரிகள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார்களா? என்பதுதான் தற்போதைய பெரிய கேள்வியாக உள்ளது.

கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து திருமண மண்டபங்களில் 50 சதவீதம் அளவுக்கு ஆட்களை அழைத்து திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்றும் நாளையும் (வியாழன், வெள்ளி) முகூர்த்த நாட்கள் என்பதால் சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களிலும் கூட்டம் அலைமோதியது. ஆட்டோக்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் அதிக அளவில் மக்கள் பயணித்ததை காண முடிந்தது. இதன் காரணமாக சென்னையில் திருமண மண்டபங்கள் இருக்கும் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

கொரோனா அச்சமின்றி திருமண நிகழ்ச்சிகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பலர் ஒரே இடத்தில் திரண்டு நிற்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசம் அணியாமல் இருந்தனர். சென்னையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வெளியூர்களில் இருந்து பலர் வந்துள்ளனர். இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான தங்கும் விடுதிகள் மற்றும் லாட்ஜூகளில் அனைத்து அறைகளும் நிரம்பி உள்ளன.

சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் மாநகராட்சி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளிலும், அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்களுக்கு தனித்தனி வாகனங்களும் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் சென்று அதிகாரிகள் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டதுடன் முககவசம் அணியாதவர்களுக்கு அபராதமும் விதித்து வருகிறார்கள்.

ஆனால் இந்த நடைமுறை தற்போது முறையாக பின்பற்றப்படுகின்றனவா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. அதிகாரிகள் முறையாக கண்காணித்து, மாஸ்க் அணியாதவர்களுக்கு உரிய அபராதம் விதித்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். அதேபோன்று திருமண கூடங்களை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். அப்படி கண்காணித்தால் இப்படி கூட்டம் கூடாது. திருமண உரிமையாளர்களுக்கு உரிய எச்சரிக்கை செய்ய வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்து இருக்கிறது.

அதிகாரிகள் சரியாக பணியாற்றினால் மட்டுமே கொரோனா நோயை ஒழிக்க முடியும். அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லை என்றால் அண்டை மாநிலமான கேரளா போன்றே தமிழகத்திலும் கொரோனா நோய் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர்.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்