
கர்நாடகாவில், நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்டிருந்த வார இறுதிநாள் ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டபடி நடைமுறையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகெங்கும் கொரோனா நோய்த்தொற்று பரவல் வேகமெடுத்து வருகிறது. தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலும், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலும் அண்மையில் கொரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிக்கத் துவங்கியதை அடுத்து, பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகின்றது.
இந்நிலையில், கர்நாடகாவில் அதிகரித்துவரும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றுப் பரவல் காரணமாக வாரயிறுதி நாட்களில் முழு ஊரடங்கு அம்மாநில அரசால் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. மேலும் இரவு நேரத்திலும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதையடுத்து, அம்மாநிலத்தில் நடைமுறையில் இருந்த வார இறுதிநாள் ஊரடங்கான ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குகளை ரத்து செய்வதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது. மேலும் இரவு நேர ஊரடங்கு மட்டும் அறிவித்தபடி ஜனவரி 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.