ஜெயலலிதா, வேதா நிலையம், தீபக், தீபா, சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு, Jayalalithaa, Vedha Nilayam, Deepak, Deepa, Chennai High Court, TamilNadu Government

ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டம் செல்லாது என்றும் வேதா நிலையத்தை ஜெயலலிதாவின் அண்ணன் மகன், மகளிடம் சென்னை கலெக்டர் ஒப்படைக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கி உள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்திருந்தது. அதை செயல்படுத்தும் விதமாக சட்டம் இயற்றப்பட்டு, வேதா நிலையமும் அங்குள்ள அசையும் சொத்துகளும் அரசுடமையாக்கப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து ஜெயலலிதாவின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகிய இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதேபோல, வேதா நிலையத்துக்கு 67 கோடியே 90 லட்சம் ரூபாயை இழப்பீடாக நிர்ணயித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்தும் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் அனைத்தையும் நீதிபதி சேஷசாயி விசாரித்தார். அப்போது, தீபா மற்றும் தீபக் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு தரப்பில், வேதா நிலையத்தை கையகப்படுத்தும் முன்பே அனைத்து தரப்பு கருத்துகளையும் கேட்டறிந்ததாகவும், பெண்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்த ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை அரசு கையகப்படுத்தி நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சேஷசாயி வழக்குகளின் மீதான தீர்ப்புகளை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி சேஷசாயி வழங்கியுள்ள தீர்ப்பில், 'ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது. நிலம் கையகப்படுத்தியது தொடர்பாக அரசு எடுத்த நடவடிக்கைகள் எதுவும் செல்லாது. வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கி தமிழக அரசு பிறப்பித்த சட்டத்தை ரத்து செய்கிறோம். வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். வேதா நிலையம் மற்றும் மெரினாவில் உள்ள பீனிக்ஸ் நினைவிடம் என 2 நினைவிடங்கள் எதற்கு?. கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம்" என்று தெரிவித்தார்.


மற்ற செய்திகள்...
Comments (30)

Be the first to comment

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்