admk,o panneerselvam,edappadi palanisami

அதிமுகவின் இரட்டைத் தலைமையால் தான் மிகுந்த சிரமத்திற்கு ஆளானதாகவும், ஒ.பன்னீர்செல்வம் விட்டுக்கொடுத்தேன் என்று சொல்வதும் பொய் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி ஒ.பன்னீர்செல்வத்தை குற்றம்சாட்டியுள்ளார். 

அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் இன்று வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெற்றது. இதில், பெரும்பான்மை தொண்டர்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்க வலியுறுத்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன்.

இந்நிலையில், அனைத்தையும் விட்டுக்கொடுத்தேன் என்று கூறும் ஒ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிற்கு எதிராக எதிரணியினருடன் இணைந்து செயல்பட்டதாக ஒபிஎஸ்-ஐ விமர்சித்துப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

இதுகுறித்து தனது பொதுச்செயலாளர் உரையின்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, "அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்கள் விரும்பிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சில எட்டப்பர்கள் கழகத்தில் இருந்து களங்கம் கற்பித்துக்கொண்டிருக்கும் நிலையில், எதிரிகளுடன் உறவு வைத்துக்கொண்டிருக்கும் நிலையில், அதையெல்லாம் முறியடிக்க வேண்டும் என்று ஒற்றைத்தலைமை வேண்டும் என்று முடிவெடுத்துள்ளீர்கள். அதன்படி என்னை அதிமுக பொதுச்செயலளாராக நியமித்து இருக்கிறார்கள்.

1974 -இல், என்னுடைய குக்கிராமத்தில் கிளைக்கழக செயலாளராக எனது பணியை தொடங்கினேன். அப்போது அது காங்கிரஸின் கோட்டை. காங்கிரஸின் கோட்டையாக இருந்த அந்தப்பகுதியில், பின்னாளில் அதிமுக கொடியை பறக்க விட்டோம்.

அதன் பிறகு கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பதவி வகித்த நான், 1989 சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வென்றேன். 2011 -இல் எனக்கு அமைச்சராகும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. எனது பணியை பார்த்து, புரட்சித்தலைவி ஜெயலலிதா நெடுஞ்சாலைத்துறையுடன், பொதுப்பணித்துறையையும் எனக்கு கொடுத்தார்.

ஒற்றைத்தலைமை பிரச்சினை துவங்கிய போதே தலைவர்கள் அண்ணன் ஒபிஎஸ்-யிடம் பேசினார்கள். ஆனால், அதற்கு அவர் கடைசி வரை இசைவு கொடுக்கவில்லை. இரட்டைத்தலைமையால் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான் தெரியும். ஒற்றைத்தலைமை என்ற குரல் ஓங்கி ஒலித்த நிலையில், அது இன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

எதெற்கெடுத்தாலும் அவர் சொல்வது விட்டுக்கொடுத்தோம் விட்டுக்கொடுத்தோம் என்பது. உண்மையில் நாங்கள் தான் விட்டுக்கொடுத்தோம். அம்மாவுக்கு விசுவாசமாக இருக்கிறேன் என்கிறார். போடிநாயக்கனூரில் ஜெயலலிதா போட்டியிட்ட போது அவர் எதிரணியான வெண்ணிறாடை நிர்மலாவுக்கு சீஃப் ஏஜண்டாக இருந்தார். நீங்களா அம்மாவுக்கு விசுவாசமாக இருந்தேன் என்கிறீர்கள்?

இன்று அதிமுக கொண்டுவந்த திட்டங்களுக்கு திமுக திறப்பு விழா நடத்துகிறது. இந்தியாவில் ஜனநாயக முறைப்படி இயங்கும் கட்சி அதிமுக. திமுக ஆட்சியில் தமிழ்நாடு போதைப்பொருள் மாநிலமாக திகழ்கிறது. திமுக அரசு மக்களைப் பற்றி கவலைப்படவில்லை. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கில் சிறந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதல் இடத்தில் இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.

மு.க.ஸ்டாலினின் ஆட்சி குடும்ப ஆட்சி. ஸ்டாலின் விபத்தில் தமிழக முதல்வராக ஆகிவிட்டார். அடுத்த தேர்தலில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும். அதிமுகவின் பொதுச்செயலாளராக கழகத்தின் வெற்றிக்காக கடுமையாக போராடுவேன்" இவ்வாறு அவர் பேசினார்.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்