
மழை வெள்ளத்திற்கு எதிராக தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட இடங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்குள்ள மக்களைச் சந்தித்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்கினார். இதைத்தொடர்ந்து சீர்காழியில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "நீங்கள் நினைப்பதுபோல் மக்கள் எதிர்ப்பையோ கண்டனங்களையோ ஏங்களுக்கு எதிராக தெரிவிக்கவில்லை; மாறாக மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
தமிழகத்தில் அதிகமான பாதிப்பு மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் தான் ஏற்பட்டுள்ளது என்பதற்காகவே முக்கியத்துவம் கொடுத்து நானே இங்கு கிளம்பி வந்துள்ளேன். செந்தில் பாலாஜி, மெய்யநாதன், ரகுபதி ஆகிய அமைச்சர்களை அனுப்பி மழை மீட்புப்பணிகளை மேற்கொள்ளச்சொன்னேன். அவர்கள் சிறப்பாகவே செய்திருந்தும், அது போதாது என்று நானே கிளம்பி இரவே பாண்டிச்சேரி வந்து தங்கி காலை 7.30 மணிபோல் கிளம்பி அனைத்து இடங்களையும் பார்வையிட்டேன். மக்கள் நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கின்றனர். சில குறைகள் இருந்தாலும் அதையும் இன்னும் சில நாட்களுக்கும் நிவர்த்தி செய்துவிடுவோம்.
எதிர்க்கட்சிகள் எங்களை கேவலப்படுத்தவேண்டும் என்பதற்காக, விமர்சிக்கவேண்டும் என்பதற்காக இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். அதைப்பற்றியெல்லாம் எங்களுக்கு கவலையில்லை. எங்களுக்கு மக்கள் தேவை தான் முக்கியம்" இவ்வாறு தெரிவித்தார்.