நேற்றைய நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கும்போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காததற்கு கண்டனம் தெரிவித்து அமைச்சர் மனோ தங்கராஜ் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.
தமிழகத்திற்கான ரூ.31,500 கோடி மதிப்பிலான 11 மக்கள் நலத்திட்டங்களைத் தொடக்கிவைக்க பிரதமர் நரேந்திர மோதி நேற்று சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் பங்கேற்று நலத்திட்டங்களைத் தொடக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக பிற மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களும், மத்திய அமைச்சர்கள் சிலரும் கலந்துகொண்டனர். இதில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்துகொண்டார்.
இந்நிலையில், நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ஒலிக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தின் போது அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காமல் அமர்ந்தவண்ணம் இருந்தார். இதையடுத்து மத்திய அமைச்சர் திட்டமிட்டே தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்துள்ளதாக தமிழக தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கும் போது எழுந்து நிற்காமல், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்துள்ளார். தன் ஆணவ, பொறுப்பற்ற செயலுக்கான காரணத்தை, அமைச்சர் மக்களுக்கு விளக்க வேண்டும். 2018-ல் ஐஐடியில் அவர் கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும் நேற்று அவர் நடந்துக் கொண்ட விதமும் எதேர்சையாக நடந்ததாக தெரியவில்லை' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.