mk stalin,bus,bus visit,chennai bus,dmk news

திமுகவின் ஓராண்டுகால ஆட்சி இன்றுடன் நிறைவடைவதையடுத்து, சென்னையில் மாநகரப்பேருந்து ஒன்றில் ஏறி முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், ஓராண்டுகால ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்து அவரிடம் வாழ்த்துகளைப் பெற்றார். தொடர்ந்து, மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், அங்கிருந்து சட்டப்பேரவை செல்லும் வழியில், சாலையில் சென்றுகொண்டிருந்த 29சி மாநகர அரசுப் பேருந்தில் ஏறிய முதல்வர், பேருந்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும் பயணிகளிடம் பேருந்தின் குறைகள் குறித்தும், பேருந்துகளின் இயக்கம் குறித்தும் கேட்டறிந்தார்.

தற்சமயம், சாதாரண பேருந்துகளில் மட்டுமே பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளும் வசதி இருப்பதால், சாதாரண கட்டணப் பேருந்துகளை அதிக அளவில் இயக்க வேண்டும் என பெண்கள் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் சாமானிய பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

பின்னதாக, சட்டப்பேரவையில், தனது பள்ளிக்காலங்களில் 29சி பேருந்தில் தினமும் பயணித்து பள்ளி சென்றதன் நினைவாக அந்த எண் கொண்ட பேருந்தில் ஏறி ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்