
பிரதமர் மோதி பரப்புரை மேற்கொண்ட இடத்தில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் டிரோன் கேமிராக்கள் பறந்தது பரபரப்பைக் கிளப்பியது.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தில் அனைத்துக் கட்சிகளும் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத் பகுதியில் பிரதமர் மோதி பரப்புரை மேற்கொண்ட சமயம் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சில டிரோன் கேமிராக்கள் வானத்தில் பறந்தன.
உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் இதனைக் கண்டறிந்து அவற்றை இறக்கினர். மேலும் இதற்குக் காரணமான அப்பகுதியைச் சேர்ந்த மூவரைக் கண்டுபிடித்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிரோன்களில் மேற்கொண்ட சோதனையில் அவை ஆபத்து அற்றவை என்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியது.
இதைத் தொடர்ந்து பாஜக, தேர்தல் வந்துவிட்டால் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு அதைப் பேசுபொருளாக்கிவிடுவதாக எதிர்க்கட்சிகள் வலைதளங்களில் விமர்சித்துவருகின்றன.