ops,admk,lottery sale,dmk

மக்களின் உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் லாட்டரி சீட்டு விற்பனை, ஆன்லைன் சூதாட்டத்திற்கு அதிமுக ஆட்சியில் தடை விதிக்கப்பட்டதாகவும், ஆனால் திமுக ஆட்சியில் சூதாட்டங்கள் அதிகரித்து வருவதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ஆன்லைன் சூதாட்டம் காரணமாக பல கொலைகளும், தற்கொலைகளும் நிகழ்கின்றன. இதனை தடுத்து நிறுத்தும் வகையில், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சட்டம் இயற்றப்பட்டாலும், அதற்கு எதிராக தனியரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, அதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சட்டத்தினை ரத்து செய்து உத்தரவிட்டது. அதே சமயத்தில், தன்மைக்கேற்ப பந்தயம் மற்றும் சூதாட்டம் குறித்து உரிய சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு எந்தத் தடையும் இல்லை என்றும், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இப்போது-இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக அறிகிறேன்.

இந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு வாயிலாக மோசடி நடப்பதாகவும், முதலில் ஆசையைத் தூண்டும் வகையில் பணம் கொடுக்கப்படும் என்றும், பின் கட்டிய பணம் எல்லாம் சூறையாடப்படும் என்றும், இது ஆன்லைன் விளையாட்டு அல்ல என்றும், இது ஆன்லைன் மோசடி என்றும், இதன் காரணமாக பல குடும்பங்களில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

பணத்தை இழந்து அவமானங்களை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது என்றும், தங்களுக்கு பிடித்த நடிகர்-நடிகையர் விளம்பரம் செய்கின்றனர் என்பதற்காக ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழக்க வேண்டாம் என்றும் காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களே வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக அண்மையில் பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

காவல் துறை தலைமை இயக்குநரே இதுபோன்று தெரிவிக்கையில், உச்ச நீதிமன்றத்தை அணுகி இதனை உடனடியாகத் தடை செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசு முனைப்புடன் செயல்படாதது வருத்தமளிக்கும் செயலாகும்.

லாட்டரி சீட்டு விற்பனையை பொறுத்தவரை நீதிமன்றத் தடை ஏதுமில்லாத சூழ்நிலையில், இதனைத் தடுத்து நிறுத்த அரசுக்கு என்ன தயக்கம் என்று தெரியவில்லை. அரசின் மெத்தனப் போக்கினைப் பார்க்கும்போது, ஆட்சியாளர்களின் மறைமுக ஆதரவு இருக்கிறதோ என்ற சந்தேகம் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.
ஏற்கெனவே, கொலை, தற்கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் கொடுமைகள் ஆகியவை அதிகரித்துள்ள நிலையில், ஆன்லைன் விளையாட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை போன்ற சூதாட்டங்கள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் உள்ளது.

முதல்-அமைச்சர் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று சொன்னாலும், கள நிலவரம் வேறு மாதிரியாகவுள்ளது. சூதாட்டம், போதை பொருட்கள், கள்ளச் சாராயம் கடத்தல், பதுக்கல் ஆகியவற்றின் புகலிடமாக தமிழ்நாடு விளங்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இவற்றைத் தடுத்து நிறுத்தி, சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

முதல்-அமைச்சர் இதில் உடனடியாகத் தலையிட்டு, உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைவுபடுத்தி, ஆன்லைன் விளையாட்டிற்கு தடை பெறவும்; மறைமுக லாட்டரி விற்பனையை உடனடியாகத் தடுத்து நிறுத்தவும்; தமிழகம் போதைப் பொருட்களின் கூடாரமாக மாறுவதைத் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கை சீர்செய்ய வேண்டும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்