
2023-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் தேர்வில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத்தி திரைப்படமான செலோ ஷோ தேர்வு செய்யப்பட்டுள்ளது.
95-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அடுத்த ஆண்டு மார்ச் 12-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகர டோலி திரையரங்கில் நடைபெறுகிறது. இந்நிலையில், இந்த விழாவிற்கான திரைப்படங்கள் தேர்வு நடைபெற்றுவந்தது. இதன் பட்டியலில் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர்., விவேக் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் ஃபைல்ஸ், பதாய் ஹோ, மாதவனின் ராக்கெட்ரி, பிரம்மாஸ்த்ரா, இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இரவின் நிழல் உள்ளிட்ட முக்கிய திரைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
இதில் குஜராத்தி மொழி திரைப்படமான செலோ ஷோ திரைப்படமும் இடம்பெற்றிருந்தது. பான் நாலின் என்பவர் இயக்கியுள்ள இப்படம் நாடு முழுவதும் வரும் அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதில் பவேஷ் ஸ்ரீமாலி, பவின் ரபாரி, ரிச்சா மீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை சித்தார்த் ராய் கபூர் ஃபில்ம்ஸ், ஜுகத் மோஷன் பிக்சர்ஸ், மான்சூன் ஃப்லிம்ஸ், மற்றும் மார் டுலே நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
ஒரு சிறுவனுக்கு சினிமா மீது ஏற்படும் ஈர்ப்பும், அதனால் அவன் வாழ்வில் நிகழும் மாற்றங்களுமாக நீளும் இத்திரைப்படம், பரிந்துரைக்கப்பட்ட இந்தியப் படங்களிலிருந்து ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொள்ள இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் நாகபர்ணா தெரிவித்துள்ளார்.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குஜராத்தி படமான செலோ ஷோ இந்தியா சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது சினிமா ரசிகர்களிடையே அப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.