அமெரிக்காவிலுள்ள பள்ளியில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில், ஆயுதங்களை வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை இந்தியா மறுஆய்வு செய்யவேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,
"அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயிலும் 19 குழந்தைகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை கண்டிக்க வார்த்தைகள் இல்லை. ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்க மக்கள் மற்றும் குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருடன் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வெறுப்பு கொலைகள் அதிகரிப்பால், இந்த பைத்தியக்காரத்தனம் முழு உலகத்தையும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும்.
கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் ஆயுதத்தை யார் வாங்கலாம் அல்லது சொந்தமாக வாங்கலாம் என்பதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவது இதற்கான வழிகளில் ஒரு வழியாக இருக்கும். இந்த விஷயத்தில் அமெரிக்க சட்டங்கள் மிகவும் தளர்வானவை மற்றும் மென்மையானவை. இந்தியாவும் ஆயுதங்களை கையகப்படுத்துதல் மற்றும் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்து கடுமையாக்க வேண்டும்"
இவ்வாறு தெரிவித்துள்ளார்.