
சாலை விபத்தில் உயிரிழந்த தமிழக டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளனுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
83-வது சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளும் பொருட்டு அஸ்ஸாம் சென்றிருந்த தமிழக டென்னிஸ் வீரரான விஸ்வா தீனதயாளன், போட்டி நடைபெறவிருந்த ஷில்லாங் பகுதிக்கு காரில் சென்றுகொண்டிருக்கையில் வேகமாக வந்த சரக்குலாரி மோதி பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 18. அவருடன் பயணித்த 3 பேர் காயங்களுடன் உயிர்தப்பினர்.
இச்செய்தி நாடெங்கிலும் பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியது. அவரது இறப்புக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், நாதக சீமான், ஒ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியை தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்த டென்னிஸ் வீரர் விஸ்வாவுக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில்,
"டேபிள் டென்னிஸ் சாம்பியன் விஸ்வா தீனதயாளனின் மறைவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவர் மற்ற வீரர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர். பல போட்டிகளில் தன் தனித்திறமையை நிரூபித்தவர். இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவருடைய குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் இருக்கும். ஓம் சாந்தி”
என்று பதிவிட்டு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.