
தமிழ்நாட்டில் நாளை நடைபெறவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நாளை நடைபெறவிருந்த நிலையில், அதனை ரத்துசெய்வதாக ஆர்.எஸ்.எஸ். அறிவித்துள்ளது. ஏற்கனவே அக்.02-ல் நடைபெறவிருந்த பேரணி தமிழக காவல்துறை அனுமதி மறுப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நாளை நடைபெறவிருந்தது.
முதலாக, தமிழகத்தில் 50 இடங்களில் நாளை நடைபெறவிருந்த பேரணியை 3 இடங்களாக தமிழக காவல்துறை குறைத்தது. உளவுத்துறை தகவல்கள் அடிப்படையில் 23 இடங்களில் அனுமதி மறுத்தும், 24 இடங்களில் உள் விளையாட்டு அரங்கங்களில் பேரணியை நடத்திக்கொள்ளவும் தமிழக காவல்துறை அறிவுறுத்தியது.
இந்நிலையில், காவல்துறையின் உளவுத்துறை தகவல்களை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், ஆர்.எஸ்.எஸ். 44 இடங்களில் தங்களது பேரணியை நடத்திக்கொள்ளலாம் என்றும், 6 இடங்களில் அசாதாரண சூழ்நிலை கருதி தற்போதைக்கு பேரணிக்கு அனுமதி கிடையாது என்றும் தெரிவித்தது.
ஆயினும், பேரணிக்கு உயர்நீதிமன்றம் விதித்திருந்த நிபந்தனைகளே ஆர்.எஸ்.எஸ்-க்கு தலைவலியாய் அமைந்தது. அதன்படி, சுற்றுச்சுவர்கள் சூழந்த இடங்களிலேயே ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்தவேண்டும் என்றும், தெருக்கள் வழியாக பேரணி நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மேலும், லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பேரணியின்போது பயன்படுத்தக்கூடாது என்றும், சாதி, மதம் குறித்து தேவைற்ற விதத்தில் பேசக்கூடாது என்றும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் பேரணியை நடத்தவும் நீதிமன்றம் நிபந்தனைகளை விதித்தது. இவற்றை மீறும் பட்சத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"மேற்குவங்கம், காஷ்மீர், கேரளா போன்ற மாநிலங்களில் தெருக்கள் மற்றும் வெளிப்புறங்களிலேயே அணிவகுப்பை நடத்துகிறோம். அப்படி இருக்கையில் தமிழகத்தில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணியை நான்கு சுவர்களுக்குள் நடத்திக்கொள்ளக் கூறுவது ஏற்புடையதல்ல. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம். இதை எதிர்த்து நாங்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம்" என்று இந்த விவகாரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். தென்மண்டல தலைவர் வன்னியராஜன் தெரிவித்துள்ளார்.