இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் வீட்டிலேயே தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்தியாவில் தற்போது பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஒரே நாளில் இன்று 62,258 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குணமடைந்தவர்களைவிட புதிய தொற்று பாதிப்பு இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30, 386 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதுவரை 5.81 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஒரே நாளில் 291 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த எண்ணிக்கை 1.61 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போது வரை 4,52,647 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிறிய அறிகுறிகளுடன் கொரோனா இருப்பதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றும் எனது குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில் யாருக்கும் கொரோனா இல்லை என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருப்பதாகவும் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரத்தில் ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். இந்த தொடரில் இந்தியா, இங்கிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா, மேற்கிந்திய தீவு உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்றார். தற்போது சச்சினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.