எஸ்.பி.பி. இறக்கவில்லை – பாடல்களில் வாழ்கிறார்!

0
277

இரண்டே பாடல்கள். இரண்டும் சூப்பர் டூப்பர் ஹிட்! ஒன்று எம்.எஸ்.வி. இசையில் ‘இயற்கையென்னும் இளைய கன்னி’ இன்னொன்று கே.வி.மகாதேவன் இசையில் ‘ ஆயிரம் நிலவே வா..’

தமிழ் சினிமா உலகில் அறிமுகமான அந்த கந்தவர்வக் குரல், சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் கிறங்கடித்தது. அப்படிக் இறங்கியவர்கள் நானும் ஒருவன்!

பள்ளி இறுதி நாட்களை முடித்துவிட்டு வாழ்க்கையின் தேடல்களில் இருந்த காலம் அது. அப்போது இசை ரசிகர்களுக்கும், பாட முயற்சித்துக் கொண்டிருப்பவர்களுக்கும், காதலித்துக் கொண்டிருந்தவர்களுக்கும் எஸ்.பி.பி.யின் அந்த இரு பாடல்களும் தேசியகீதமாகிப் போயின! அதன் பின்னர் வந்த வான் நிலா, நிலா அல்ல, கம்பன் ஏமாந்தான், கடவுள் அமைத்து வைத்த மேடை போன்ற பாடல்கள் அனைத்தும், ஒன்றையொன்று போட்டிபோட்டுக் கொண்டு கேட்பவர் மனதில் இடம்பிடிக்க ஆரம்பித்தன.

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரரான எஸ்.பி.பியை நான் சந்தித்தது, ஒரு உதவி இயக்குனராகத்தான். உதய கீதம், உன்னை நான் சந்தித்தேன், நூறாவது நாள், இளமைக் காலங்கள், நினைவே ஒரு சங்கீதம், பாடு நிலாவே, உனக்காகவே வாழ்கிறேன், கீதாஞ்சலி, தசாவதாரம் போன்ற சுமார் 20 படங்களுக்காக அவரோடு ரிக்கார்டிங் தியேட்டர்களில் பயணித்த பொழுதுகள் பசுமையானவை. எப்போது நினைத்தாலும் இனிப்பானவை! பல நாட்கள் நள்ளிரவு நேரங்களில் நடந்த பல பாடல் பதிவுகளின் போது, ட்யூனுக்காக ஏற்கனவே பல கவிஞர்களால் எழுதி வாங்கி வரப்பட்ட பாடல் வரிகளை வாய்ஸ் மிக்ஸ் ரூமில் நான் அவருக்கு வாசித்துக் காட்ட, அதை அவர், வழக்கம்போல அவரது டைரியில் தாய்மொழியான தெலுங்கில் எழுதிக் கொண்டு பாடியது எல்லாமே நான் செய்த பாக்கியம் என்றே சொல்ல வேண்டும்.

திரையுலகினர் அனைவருக்கும் அவர் பாலு சார்! யாரை எப்போது பார்த்தாலும் முதலில் அவர் கேட்கிற முதல் வார்த்தை, ” நல்ல இருக்கீங்களா?”

என் வாழ்வில் நான் சந்தித்த ஒரு முழுமையான மனிதன் யாரென்று கேட்டால் அது எஸ்.பி.பி ஒருவரை மட்டுமேதான் குறிப்பிட்டுச் சொல்வேன். அவரை பாடகர் என்ற ஒற்றை வார்த்தைக்குள் அடைத்துவிட முடியாது. பண்பாளர், அன்பாளர், நன்றிமிக்கவர், கருணைமிக்கவர், கோபமே படாதவர், இனிய கணவர், பாசமிகு தந்தை, அனைவருக்கும் நல்ல நண்பர் -இப்படி அனைத்து வகையான வார்த்தைகளுக்கும் மிகவும் மிகவும் பொருத்தமான ஒரு மனிதர் எஸ்.பி.பி! இதை அவரோடு பழகியவர்கள், அவரது கச்சேரிகளை பார்த்து ரசித்தவர்கள் அனைவருமே உணர்ந்திருப்பீர்கள். இறைவனால் நூறு சதவீதம் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு மனிதர் அவர்!

குரலை வைத்து பல வித்தைகளைப் புரிந்தவர் பாலு சார். அவர் ஒரு சிறந்த டப்பிங் கலைஞரும் கூட. கமல் ரஜினி உட்பட தமிழில் இருந்து தெலுங்கிற்கு டப் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான படங்களுக்கு, அவர்களுக்காக குரல் கொடுத்தவர் பாலு சார்தான். தசாவதாரம் தெலுங்கில் டப் செய்யப்பட்டபோது, அதில் கமல் நடித்த வயதான பாட்டி உட்பட அத்தனை கேரக்டர்களுக்கும் அவர் தெலுங்கில் குரல் கொடுத்த நிகழ்வை, நேரில் பார்த்து வியந்து ரசித்தவன் நான்.

சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்கவாழ் தமிழரான நீலமயில் அவர்கள் தயாரிப்பில், ஒரு ஆல்பத்திற்காக நாதன் அவர்களின் இசையில் நான் எழுதி ஒரு பாடலை, அந்த மகாகலைஞன் பாடியது எனக்கு பெருமைக்குரிய விஷயம்.

வந்தார். பாடலை இசைக் குறிப்புகளோடு எழுதிக் கொண்டார். ஒரு மணி நேரத்தில் முழுப்பாடலையும் பாடி முடித்துவிட்டுக் கிளம்பி விட்டார். போகும்போது ” பாடல் முழுக்க அர்த்தம் நிறைந்த நல்ல தமிழ் வார்த்தைகளை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறீர்கள். எந்த இடத்திலும் மெட்டுக்கு நெருடல் இல்லாமல் எழுதி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் ” என்று என்று மனதார பாராட்டிவிட்டுப் போனார்.

அந்தப் பாடல் பதிவின் போது நான் “ஒரே ஒரு இடத்தில் மட்டும் உங்களின் கிண்டலான அந்தச் சிரிப்பு வேண்டும்” என்று கேட்டுக் கொண்டேன்.

” எந்த இடத்தில்? “என்று அவர் கேட்கவில்லை.

” வெட்கத்தைச் சிலநாள் தத்துக் கொடு தளிரே… என்ற இடத்தில்தானே?” என்று என்னிடம் அவரே கேட்டுவிட்டுச் சிரித்தார். பாடல் வரிகளை அவர் எந்த அளவுக்கு உள்வாங்கி இருக்கிறார் என்று நினைத்துப் பிரமித்துப் போனேன்.

பாலு சார் இறந்துவிட்டார் என்று யார் சொன்னது? நமக்காக மட்டுமே அவர் பாடிச் சென்ற லட்சக்கணக்கான பாடல்களில் அவர் இன்னும் பல நூற்றாண்டு வாழ்ந்து கொண்டேயிருப்பார்… அவர் பாடி, நாம் இன்னும் கேட்காத ஆயிரக்கணக்கான பாடல்களைத் தேடித்தேடி தினமும் கேட்டுக் கொண்டேயிருப்போம்…

-கல்யாண்குமார்

எழுத்தாளர், பாடல் ஆசிரியர்