AltNews இணை நிறுவனர் முகமது ஜுபைர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ட்விட்டரில் பகிரப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து அதுகுறித்த தகவல்களை ட்விட்டர்வாசிகளுக்குப் பகிர்பவர் பத்திரிகையாளர் முகமது ஜுபைர். இவர் AltNews செய்தி நிறுவனத்தின் இணை இயக்குநர் ஆவார். அண்மையில், தனியார் தொலைக்காட்சியில் நபிகள் நாயகம் குறித்து பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா பேசிய காணொலியை வலைதளங்களில் பகிர்ந்தவர் இவரே. அது உலக அளவில் கவனம் பெற்று பல்வேறு எதிர்ப்பலைகளைக் கிளப்பியது.

இந்நிலையில், 2018-ல் அவரது ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்ட ஒரு கருத்தின் காரணமாக நேற்றைய தினம் டெல்லி காவலர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். கைதிற்கு முன்னதாக வழக்கு ஒன்றின் விசாரணைக்காக திங்கள்கிழமை வருமாறு அவரை டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அழைத்திருந்ததாகவும், ஆனால் வேறொரு வழக்கில் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் கூறியதாகவும் AltNews நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனர் பிரதீக் சின்ஹா தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "2020-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றின் விசாரணைக்காக வரும்படி டெல்லி காவல்துறையின் தனிப்பிரிவினர் அவரை அழைத்தனர். அந்த வழக்கில் தாம் கைது செய்யப்படாமல் இருக்க நீதிமன்றத்தில் இருந்து முன்னதாகவே உத்தரவைப் பெற்றிருந்தார் முகமது ஜுபைர். ஆனால், விசாரணைக்கு ஆஜரான அவரை மாலை 6.45 மணியளவில் வேறொரு வழக்கில் அதன் முதல் தகவல் அறிக்கை நகலைக் கூட வழங்காமல் போலீஸார் கொண்டு சென்றனர். பல முறை கேட்டும் போலீஸார் முதல் தகவல் அறிக்கையைக் காண்பிக்கவில்லை. அவரைக் கொண்டு சென்ற வேனில் இருந்தவர்கள் தங்களுடைய பெயர் பேட்ஜை சீருடையில் அணிந்திருக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார்.

முகமது ஜுபைர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகைமையை ஊக்குவித்தல்) மற்றும் 295A (எந்தவொரு வகுப்பினரின் மத உணர்வுகளையும் சீற்றம் செய்யும் நோக்கில் வேண்டுமென்றே மற்றும் தீங்கிழைக்கும் செயலில் ஈடுபடுதல் மற்றும் மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அந்த வழக்கில் புகார்தாரர் யார், அதன் விவரம் என்ன என்பதை போலீஸார் தெரிவிக்கவில்லை.

முகமது ஜுபைரின் கைதிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். காங்கிரசார் பலரும், உண்மைக்கு புறம்பான செய்திகளைப் பரப்பும் பாஜக நிர்வாகிகளுக்கு மத்திய அரசு பாதுகாப்பும், உண்மையின் குரலாய் அவதூறுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருபவர்கள் மீது வழக்குகளும் பதிந்துவருவதாக சாடியுள்ளனர்.

இந்நிலையில், ஜுபைர் அகமதின் கைது நடவடிக்கை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, "பாஜகவின் வெறுப்பு, மதவெறி மற்றும் பொய்களை அம்பலப்படுத்தும் ஒவ்வொரு நபருக்கும் அவர்களால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. உண்மையின் ஒரு குரலைக் கைது செய்வது இன்னும் ஆயிரம் பேரை தட்டி எழுப்பும். உண்மை எப்போதும் கொடுங்கோன்மையின் மீது வெற்றி பெறும்" என்று தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மஜ்லிஸ் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி தனது ட்விட்டர் பக்கத்தில், "முகமது ஜுபைர் கைது செய்யப்பட்டிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அவர் எந்த அறிவிப்பும் இல்லாமல் & சில அறியப்படாத FIR-இல் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி காவல்துறை முஸ்லீம்களுக்கு எதிரான இனப்படுகொலை முழக்கங்களைப் பற்றி எதுவும் செய்யவில்லை. ஆனால் வெறுப்பூட்டும் பேச்சு மற்றும் தவறான தகவல்களை எதிர்க்கும் "குற்றத்திற்கு" எதிராக விரைவாக செயல்படுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

திமுக பொய் சொல்லத் துவங்கிவிட்டதாகவும், பாஜக-வை எதிர்த்து தான் திமுக தனது அரசியலை மேற்கொள்வதாகவும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரை சூடுபிடித்துள்ளது. தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் மக்களிடையே தீப்பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவையில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

“ஆங்கிலேயர் எப்போது செல்வார்கள் என்று சிந்தித்ததை போல் திமுக ஆட்சி எப்போது போகும் என மக்கள் காத்திருக்கின்றனர். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கோவையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் திமுகவிற்கு மாற்றான் தோட்டத்து மல்லிகை என்றாலும் அது மணக்காது. கரூரிலிருந்து ஒரு டூரிஸ்ட் அமைச்சர் வந்துள்ளார். அங்கிருந்து ஆதரவாளர்களை அழைத்து வந்து அரசியல் செய்கிறார். இதை கோவை மக்கள் ரசிக்க மாட்டார்கள்.

மக்களின் ஆதரவு எப்போதும் பாஜகவிற்கு இருக்கும். மக்களுக்கும் வாக்குப்பெட்டிக்கும் இணைப்பு பாலமாக பாஜக வேட்பாளர்கள் இருக்க வேண்டும். இந்த நகர்ப்புற தேர்தலில் தனியாக பாஜக போட்டியிடுகிறது. பாஜக பலத்தை தெரிந்து கொள்ளவே தனித்து போட்டியிடுகிறோம்.

இந்த தேர்தல் சமூக வலைதள தேர்தலாக மாறியுள்ளது. ஸ்மார்ட் வொர்க் மூலமாக மொபைலை பயன்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்புரை தொடர்பான காட்சிகள் மற்றும் படக்காட்சிகளை அதிகம் பகிர்ந்து பரப்புரை செய்ய வேண்டும். நேற்றில் இருந்து திமுக பொய் சொல்ல துவங்கிவிட்டது. பா.ஜ.க.,வை எதிர்த்து தான் அரசியல் செய்ய வேண்டும் என முதல்வர் முடிவு செய்து விட்டார்.

நீட் தேர்வை பாஜக திணித்தது என முதலமைச்சர் கூறுகிறார். ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின் காங்கிரஸ் காலத்தில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட மருத்துவ இடங்களை காட்டிலும் கடந்த 7 ஆண்டுகளில் இரட்டிப்பு மடங்கு கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு காரணமாக அதிக கட்டணம் வசூலிக்க முடியாமல் தமிழகத்தில் அதிக மருத்துவ கல்லூரிகளை இயக்கி வரும் திமுகவினர் தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒரு பக்கம் திமுக தனது அதிகாரத்தை காட்டுகிறது. ஒருபக்கம் பாஜக மோடியின் சாதனைகளை சொல்லி வெற்றிபெற உழைக்கிறோம். 2016-ல் நீட் தேர்வு மசோதா குடியரசு தலைவர் வரை சென்று திரும்ப வந்துள்ளது. ஆனால் அதை நினைவில் கொள்ளாமல் திமுக கூட்டணி கட்சிகளை மட்டும் இணைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டு நீட் தேர்விற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து வீடுகளுக்கும் தாமரையை எடுத்து செல்வதே எங்கள் இலக்கு. கர்நாடகாவில் மதப்பிரச்னையை உருவாக்கியதே காங்கிரஸ் தான். இந்து என்பது மதமே கிடையாது, அது ஒரு வாழ்வியல். மதம் என்ற வார்த்தையை பயன்படுத்துபவர்கள் புரிதல் இல்லாதவர்கள்”

இவ்வாறு அவர் பேசினார்.

நீட் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப அவருக்கு அதிகாரம் உண்டு என்றும், அவர் தபால்காரர் அல்ல என்றும், நீட் விவகாரம் குறித்து எம்.பி. வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 13 அன்று, தமிழக அரசு சர்பாக நீட் தேர்வை விலக்கக் கோரி சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கிட்டத்தட்ட 5 மாதங்கள் கழித்து, அம்மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டி தமிழக ஆளுநர் ஆர்.என் தமிழக அரசுக்கு நேற்றைய தினம்(03/02/2022) திருப்பி அனுப்பினார். இந்நிகழ்வு தமிழகம் முழுவதும் கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது. ஆளுநரின் இச்செயல்பாட்டுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாநிலங்கள் அனுப்பும் விஷயங்களை பரிசீலனை செய்யக்கோரி வலியுறுத்த ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்று பாஜக எம்.பி. வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விவரிக்கையில், “நீட் தேர்வுக்கு விலக்கு மசோதா தொடர்பாக கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரிலும், அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து சொல்லிவிட்டோம்.  இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநரே வைத்திருக்கிறார் என்று தமிழக அரசு குற்றம் சாட்டி வந்தது. இதை வைத்து ஆளுநரை மாற்ற வேண்டும் என்றும் திமுகவினர் கோரினார்கள்.

மாநில அரசு அனுப்பும் எல்லா விஷயங்களையும் எந்தப் பரிசீலனையும் செய்யாமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்ற கட்டாயம் ஆளுநருக்கு கிடையாது. அப்படிச் செய்வதற்கு ஆளுநர் ஒன்றும் தபால்காரர் கிடையாது. மசோதாவில் இருக்கும் விஷயங்கள் குறித்து தெளிவு பெற ஆளுநருக்கு முழு உரிமை உள்ளது.

நீட் தேர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அந்தத் தீர்ப்புக்கு இந்த மசோதா எந்த வகையில் மாறுப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது. எந்தக் காரணத்துக்காக மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ளது என்பதையும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, தமிழக அரசை கட்டுப்படுத்தாது என நினைக்கும் வரை இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுமதிக்கக்கூடாது என வனத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   

"தேனி மாவட்டம் மேகமலையில், மலையடிவார மக்கள் தங்கள் கால்நடைகளை மேய்ப்பதால், புல்வெளிகள் மற்றும் வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, வனப்பகுதிகளில் கால்நடைகளை மேய்ப்பதற்குத் தடைவிதித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களை நம்பி தொன்றுதொட்டு ஆடு, மாடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொல்குடித் தமிழர்களின் வாழ்வாதாரத்தை நசித்து, அவர்களை வறுமையில் தள்ளுவதாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது.

நீண்ட நெடிய மலைக்காடுகளும், பரந்து விரிந்திருக்கும் மலைச்சாரல் புல்வெளிகளும் இயற்கையாகவே தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்வதோடு, காடுகளில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவினை வழங்கும் ஆற்றலுடையது. யானை நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 250 கிலோவரை உணவு உட்கொள்ளும் வழக்கத்தை உடையன. அவற்றை ஒப்புநோக்கும்போது மனிதர்கள் வளர்க்கும் கால்நடைகள் மிகமிகக் குறைந்தளவு உணவையே உண்பதால், அவற்றால் மலைவளம் பாதிக்கப்படுவதாகக் கூறுவதும் ஏற்புடையதல்ல. மேலும், இயற்கையிலேயே வலுவான நோய் எதிர்ப்புச்சக்தி கொண்ட வன விலங்குகளுக்கு, கால்நடைகளால் நோய் பரவுகின்றது என்பதும் அடிப்படை ஆதாரமற்றதாகும்.

அதுமட்டுமின்றி, வன உயிரினங்கள் பெருமளவு அழிந்துவிட்ட தற்காலச் சூழலில் இயற்கை சமநிலைப் பேணுவதில், மனிதர்களால் வளர்க்கப்படும் கால்நடைகள் பெருமளவு பங்கு வகிக்கிறது என்பதே எதார்த்த உண்மையாகும். எனவே, ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வனப்பகுதியை ஒட்டியுள்ள மேய்ச்சல் நிலங்களில் தமிழ்நாட்டுத் தொல்குடிகள் கால்நடைகளை மேய்த்து வரும் நிலையில், திடீரெனத் தற்போது கால்நடைகளால் புல்வெளிகள் அழிக்கப்படுவதாகக் கூறுவது ஏற்புடையதல்ல.

இயற்கையோடு இயந்த தமிழர்களின் மரபுவழி வேளாண்மையை அழித்து முடித்துவிட்டு, விதைகளுக்காகவும், செயற்கை உரங்களுக்காகவும் பன்னாட்டு நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கும் அவல நிலையை உருவாக்கியுள்ளதைப்போல, மரபுவழி கால்நடைத்தொழிலை அழித்து, தொல்குடித் தமிழர்களை ஆடு, மாடு வளர்ப்பினை விட்டு வெளியேற்றுவதற்கான பன்னாட்டு நிறுவனங்களின் சதித்திட்டமாக இது இருக்குமோ என்ற சந்தேகத்தையும் மேய்ச்சல் பெருங்குடி மக்கள் எழுப்புகின்றனர்.

அதுமட்டுமின்றி, மலைக்காடுகளையும், வன உயிரினங்களையும் பாதுகாக்க வேண்டுமென்று உண்மையான அக்கறை இருக்குமாயின், ஒவ்வொருநாளும் காடுகளில் முறைகேடாக மரங்கள் வெட்டப்பட்டு டன் கணக்கில் கடத்தப்படுவதையும், சொகுசு விடுதிகள், அடுக்குமாடி கட்டிடங்கள், தண்டவாளங்கள், சாலைகள், தொழிற்சாலைகள், தொலைத்தொடர்பு கருவிகள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவை அமைப்பதற்காக, வன விலங்குகளின் வாழ்விடங்களும், வழித்தடங்களும் சுருக்கப்படுவதையும் தடுத்து நிறுத்த தீவிர நடவடிக்கை எடுப்பதே சரியானதாக இருக்கும்.

ஆகவே, தமிழர்களின் மேய்ச்சல் மரபுரிமையைப் பறிக்கின்ற உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து, ஆடு, மாடு மேய்க்கும் தொல்குடி தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாத்திட வேண்டும்"

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

விசாரணைக்காக அழைத்துச்செல்லப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞர் சிறையிலேயே மரணமடைந்ததையடுத்து, மரணத்துக்குக் காரணமான கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோவதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியா? என்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

“திருவல்லிக்கேணியில் கைதுசெய்யப்பட்ட விக்னேஷ் காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டதால்தான் இறந்துபோனாரென்பது உடற்கூறாய்வு பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டும், திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது வாய்மூடிக்கிடப்பது பெரும் ஏமாற்றத்தையும், அறச்சீற்றத்தையும் தருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் காவல்துறையினர் மூலம் நிகழும் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், அதனை அதிகாரத்தின் துணைகொண்டு ஆளும் வர்க்கம் முழுமையாக மூடி மறைப்பதுமான போக்குகள் கடும் கண்டனத்திற்குரியது.

தம்பி விக்னேஷ் காவல்துறையால் கொடூரமாகத்தாக்கப்பட்டே இறந்துபோயிருக்கிறார் என்பதைக்கூறி, அதற்குக் காரணமான காவலர்களைக் கொலைவழக்கின் கீழ் கைதுசெய்ய வேண்டுமென ஏற்கனவே விடுத்த அறிக்கையில் தெரிவித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியிருக்கிற உடற்கூறாய்வு பரிசோதனை முடிவில் விக்னேசை காவல்துறையினர்தான் அடித்துக் கொன்றிருக்கிறார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி உறுதியாகியிருக்கிறது. காவல்துறையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிற மாண்புமிகு முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இப்போது என்ன செய்யப்போகிறார்? இனியும் கொலையாளிகளைக் காப்பாற்றத் துணைபோகப்போகிறாரா? சமூகநீதிக்காவலரெனப் பீற்றித்திரிந்துவிட்டு, ஒரு ஏழை மகனை காவல்துறையினர் அடித்துக்கொன்றதைக் கண்டும் காணாதது போல கடந்துசெல்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? சமூக நீதியைப் பின்பற்றுகிற இலட்சணமா? வெட்கக்கேடு!

ஒரு மரணம் எதன்பொருட்டு நிகழ்கிறது என்பதைத் துல்லியமாக உடற்கூறாய்வு பரிசோதனையின் மூலம்தான் முடிவு செய்ய முடியும் எனும்போது, அம்முடிவுகள் வருவதற்கு முன்பே, வலிப்பும், வாந்தியும் ஏற்பட்டுதான் விக்னேஷ் இறந்துபோனார் என எந்த அடிப்படையில் சட்டமன்றத்தில் கூறினார் முதல்வர் ஸ்டாலின்? இம்மரணத்தில், காவல்துறையினர் மீதுதான் குற்றச்சாட்டே வைக்கப்படுகிறது எனும்போது, அவர்கள் மீது நேர்மையான நீதிவிசாரணை நடத்தி, பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டிய முதல்வர் ஸ்டாலின் அவர்கள், காவல்துறையினர் எழுதி கொடுத்த திரைக்கதையை அப்படியே சட்டமன்றத்தில் ஒப்பிப்பதா சமூக நீதி?

தூத்துக்குடியில் நடந்தேறிய ஜெயராஜ் – பென்னிக்ஸ் படுகொலையின்போது, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதனைத்தானே செய்தார். “உடற்கூறாய்வு முடிவு வராத நிலையில் பென்னிக்ஸ் மூச்சுத்திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ் உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எதனடிப்படையில் சொன்னார்?” என அன்றைக்குக் கேட்ட ஐயா ஸ்டாலின் அவர்கள், இன்றைக்கு வாந்தி, வலிப்பு வந்துதான் விக்னேஷ் இறந்துபோனார் என எதனை வைத்து முடிவுக்கு வந்தார்? பதிலுண்டா முதல்வரே?

காவல் நிலையத்தை சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டுமெனக் கடந்தாட்சியில் சீறிய ஐயா ஸ்டாலின் அவர்கள், இன்றைக்குக் கொலைக்குக் காரணமானக் காவல்துறையினரைக் காப்பாற்ற வரிந்துகட்டுவது அற்பத்தனமான அரசியல் இல்லையா? சமூக நீதியென நாளும் பேசிவிட்டு, ஒரு எளிய மகனுக்கு இழைக்கப்பட்ட அநீதியை மூடி மறைத்து, கொலையாளிகளைக் காப்பாற்ற நினைப்பது சனநாயகத் துரோகமில்லையா? இதுதான் நீங்கள் தரும் விடியல் ஆட்சியா? பேரவலம்!

தம்பி விக்னேசின் உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், லத்தியால் தாக்கியதற்கானக் காயங்கள் உள்ளதாகவும், தலை, கண், உடலில் இரத்தம் கட்டியதற்கான காயங்கள் உள்ளதாகவும், இடது கை, முதுகின் வலது பக்கத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், வலது முன்னங்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் உடற்கூறாய்வு அறிக்கையின் முடிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதும், விக்னேசைக் கைதுசெய்து கொண்டு செல்கிறபோது காவல்துறையினர் கொடூரமாகத் தாக்குகிற காணொளிச்சான்று வெளியாகியிருப்பதும் இது காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு பச்சைப்படுகொலை என்பதை முழுமையாகத் தெளிவுப்படுத்தியிருக்கிறது.

ஆகவே, தமிழக முதல்வர் ஐயா ஸ்டாலின் அவர்கள் இவ்விவகாரத்தில் சீரியக்கவனமெடுத்து, இனியாவது உளப்பூர்வமாகச் செயல்பட்டு, விக்னேசின் மரணத்திற்குக் காரணமானக் காவல்துறையினரைக் கொலை வழக்கின் கீழ் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமெனவும், தம்பி விக்னேசின் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்புத்தொகை வழங்கி, அவர்களை அத்துயரில் இருந்து மீட்கவேண்டுமெனவும் மீண்டுமொரு முறை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், திமுக இரட்டை வேடம் போடுவதாகவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி கவலைப்பட மறுப்பதாகவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் கடுமையாக சாடியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியறிக்கையில்,

“ஆட்சியை பிடிக்க வேண்டுமென்பதற்காக 2016-ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் மதுவிலக்கை அமல்படுத்த சட்டம் இயற்றப்படும் என்றும், மது விற்பனை மூலம் வரும் வருவாயினை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. இருப்பினும், தி.மு.க.வினால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. 2020-ஆம் ஆண்டு தி.மு.க.வின் தேர்தல்
அறிக்கையில், படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், இவற்றிற்கு முற்றிலும் முரணான வகையில் டாஸ்மாக் மதுபானங்களின் மூலம் வரும் வருவாயை அதிகரிக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்களை அமைக்கவும் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்திருக்கிறது.

மது விற்பனை மூலம் வரும் வருவாயினை ஈடுகட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று 2016-ஆம் ஆண்டு கூறிய தி.மு.க., இப்போது அந்தப் புதிய திட்டங்களை செயல்படுத்தவில்லை. இதற்குக் காரணம் தி.மு.க.விடம் எந்தத் திட்டமும் இல்லை என்பதுதான் யதார்த்தம். மக்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்பட்ட ஒரு வாக்குறுதி. இதைத் தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிவார்கள்.

2020-2021 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 811 கோடி ரூபாயாக இருந்த மது விற்பனை மூலமான வருவாய், 2021-2022 ஆம் ஆண்டில் 35 ஆயிரம் கோடி ரூபாயை தாண்டும் என்ற நிலையில், இந்த வருவாயை மேலும் அதிகரிக்கும் வகையில் மதுபானங்களின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 80 ரூபாய் வரை உயர்த்தி இருக்கிறது. இதன் வாயிலாக 2022-2023 ஆம் ஆண்டில் டாஸ்மாக் மூலம் வரும் வரி வருவாய் 40,000 கோடியை தாண்டக்கூடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஆக, ஐந்தாண்டுகளுக்கு முன் ‘பூரண மதுவிலக்கு’ அமல்படுத்தப்படும் என்று கூறிய தி.மு.க., சென்ற ஆண்டு பொதுத் தேர்தலின்போது படிப்படியாக மதுவிலக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கண்ட இரண்டில் எதையும் செய்யாமல், மதுபானக் கடைகள் மூலம் வரும் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருக்கிறது.

இது தி.மு.க.வின் இரட்டை வேடத்தை தோலுரித்துக் காட்டி இருக்கிறது. இது மட்டுமல்ல. சில மாதங்களுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஒப்பந்தப்புள்ளி அறிவிப்பினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பார்களை நேரடியாகவோ, மறைமுகமாகவோ டாஸ்மாக் நிறுவனம் நடத்த முடியாது என்பதைச் சுட்டிக்காட்டி, டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் அனைத்து பார்களையும் ஆறு மாதங்களுக்குள் மூட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பினை எதிர்த்து தி.மு.க. அரசு தற்போது மேல்முறையீடு செய்துள்ளது.

மது ஒவ்வொரு குடும்பத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது, இந்த மதுக்கடைகளை மூட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வற்புறுத்தியவர் மு.க. ஸ்டாலின் அவர்கள். இதனை முற்றிலும் மறந்து, ‘‘பூரண மதுவிலக்கு’’ என்ற வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு, டாஸ்மாக் மூலம் வருமானத்தைப் பெருக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் நடத்தப்படும் பார்கள் மூடப்பட வேண்டுமென்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளார் முதலமைச்சர். அதே சமயத்தில், மதுவிலக்கை மேற்கொள்ள ஒரு துரும்பைக்கூட இதுவரை கிள்ளிப்போடவில்லை.

மதுவுக்கு அடிமையானவர்கள் மது பழக்கத்திலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துவிட்டு, அதற்கு எதிரான வகையில், சட்டம்-ஒழுங்கு, பொது அமைதி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றைப் பற்றி துளியும் கவலைப்படாமல், மதுவிலிருந்து வருகின்ற வருமானத்தை அதிகரிப்பதிலும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் மதுக்கூடங்கள் அமைப்பதிலும் தி.மு.க. அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

தேர்தல் வாக்குறுதிக்கு ஏற்ப, மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கவும், டாஸ்மாக் கடைகளுக்கு அருகே உள்ள மதுக்கூடங்களை மூடவேண்டும் என்ற நீதிமன்றத் தீர்ப்பினைச் செயல்படுத்தவும், இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை திரும்பப் பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சரை அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டது குறித்து நேர்காணல் ஒன்றில் கேள்வியெழுப்பிய தொகுப்பாளரை, இயக்குநர் கங்கை அமரன் தரக்குறைவாக ஒருமையில் பேசியதை மேற்கோள்காட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.

அண்மையில், ‘மோடி அண்ட் அம்பேத்கர்’ என்ற புத்தகத்தில், ‘மோடி அம்பேத்கர் போன்றவர்’ என்ற கருத்தை இசைஞானி இளையராஜா புத்தக முன்னுரையில் எழுதியிருந்த நிகழ்வு நாடெங்கும் கடும் புகைச்சலைக் கிளப்பியது.

‘ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை, பிரித்தாளும் சூழ்ச்சியை நாடெங்கும் கையாண்டுவரும் பிரதமருடன் ஒப்பிட்டுப் பேசுவதா?’ என இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில், இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நேர்காணல் ஒன்றில் பதிலளித்த இளையராஜாவின் சகோதரரும், இயக்குநருமான கங்கை அமரன், ‘மோடியுடன் அம்பேத்கரை இளையராஜா ஒப்பிட்டது தவறு என்றால், மேடை ஒன்றில் முதல்வர் ஸ்டாலினை திருமாவளவன் அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசியதும், திருமாவளவனை முதல்வர் ஸ்டாலின் அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசியதும் சரியா?’ என்று தொகுப்பாளரிடம் மறுகேள்வியெழுப்பினார். மேலும், தொகுப்பாளரை ‘ஏய்…சொல்லுடா….வாயை மூடு…?’ என்று ஒருமையிலும், மரியாதை குறைவாகவும் பேசி சண்டையில் ஈடுபட்டார். இக்காணொலி வலைதளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இந்நிலையில், இக்காணொலியை மேற்கோள்காட்டி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் அவர்,

“ஒப்பீடு செய்வதில் இருவகை உண்டு. ஒன்று, நேர்மறை ஒப்பீடு. மற்றொன்று, எதிர்மறை ஒப்பீடு. கரும்பு இனிக்கும்; கனிகள் இனிக்கும் - இது நேர்மறை. கரும்பு இனிக்கும்; வேம்பு கசக்கும் - இது எதிர்மறை. அம்பேத்கர்; பெரியார் - இது நேர்மறை. அம்பேத்கர்; மோடி - இது எதிர்மறை.

அம்பேத்கரும் மோடியும் எதிர் எதிர் துருவங்கள். எனவே இருவரையும் நேர்மறையாக ஒப்பிட முடியாது. அம்பேத்கர் இருந்தால் மோடியைப் பாராட்டுவார் என்பது அம்பேத்கரைச் சங்கிமயப்படுத்தும் சனாதன முயற்சி. முழுமையாய் அவரை விழுங்கத் துடிக்கும் சங்கத்துவக் கும்பலின் சதிச்செயல். பாவலரின் சகோ'க்கள் பரிவார்களின் பலிஆடுகளா?”

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை குறித்து உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து, பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடி என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளனின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மத்திய அரசு ஏன் முடிவெடுக்கவில்லை? என்றும், 'அடுத்த செவ்வாய்க்கிழமைக்குள் இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசின் முடிவைத் தெரிவிக்கவில்லை என்றால், நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்யும்' என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இந்நிலையில், இதுகுறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தம்பி பேரறிவாளனது விடுதலை விவகாரத்தில், மத்திய அரசு இனியும் முடிவெடுக்கத்தவறினால் அரசியலமைப்புச்சாசனப்படி நாங்கள் விடுவிப்பதற்கு, உத்தரவிடுவோமென உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது பெரும் நம்பிக்கையைத் தருகிறது.

நியாயமும், நீதியும் பக்கமிருந்தும் அரசியல் தலையீட்டாலும், அதிகார முறைகேட்டாலும் இவ்வளவு ஆண்டுகளாக தாமதப்படுத்தப்பட்டு, தடுக்கப்பட்ட தம்பியின் விடுதலை இன்றைக்கு சாத்தியப்படவிருப்பது அளப்பெரும் மனமகிழ்வைத் தருகிறது.

அரசியலமைப்புச்சாசனத்தைத் துளியளவும் மதியாது, கூட்டாட்சித்தத்துவத்தைக் கேலிப்பொருளாக்கி, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்து வந்த ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசின் கொடுங்கோல் போக்குக்கும், தமிழக ஆளுநரின் எதேச்சதிகார அணுகுமுறைக்கும் கொடுத்த சவுக்கடியாகவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் இக்கூற்றைப் பார்க்கிறேன்.

ஆகவே, இனியும் தாமதிக்காது, 161வது சட்டப்பிரிவின்படி எழுவர் விடுதலைக்காக இயற்றப்பட்ட தமிழகச் சட்டமன்றத்தீர்மானத்திற்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டுமென தமிழக ஆளுநரை வலியுறுத்துகிறேன்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலத் தேர்தல்களில் 4 மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை பாஜகவுக்கு எதிராக அணிதிரள கோரிக்கை விடுத்துள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பஞ்சாப் தவிர்த்து 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைத் தக்கவைத்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிசெய்துவந்த பஞ்சாப்பில் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சியமைக்கவுள்ளது. பெரும் அரசியல் பாரம்பரியம் கொண்ட காங்கிரஸ் கட்சி, பஞ்சாப்பில் ஆட்சியைத் தவறவிட்டதோடு, சொற்ப இடங்களிலேயே 5 மாநில தேர்தல்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 3-லிருந்து 2-ஆகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், பெருவாரியான வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ள பாஜக, வெற்றிக்களிப்பில் மிதந்துவருகிறது. நாடெங்குமுள்ள பாஜக தொண்டர்கள் தங்கள் கட்சியின் வெற்றியைக் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர். வெற்றியைக் கொண்டாடும் விதமாக பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தில் வெற்றிப்பேரணி மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் விருப்பப்பட்டால் 2024 மக்களவைத் தேர்தலில் இணைந்து போட்டியிடலாம் என்றும், பாஜகவை அனைவரும் இணைந்தால் வீழ்த்துவது எளிது என்றும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர், “காங்கிரஸ் விரும்பினால் நாம் அனைவரும் இணைந்து 2024 பொதுத் தேர்தலில் போட்டியிடலாம். இப்போதைக்கு யாரும் சோர்வடைய வேண்டாம், நேர்மறையாக இருங்கள். பாஜகவின் இந்த 4 மாநில சட்டசபை தேர்தல் வெற்றி, 2024 தேர்தலின் தலைவிதியை தீர்மானிக்கும் என்று சொல்லமுடியாது. நமது நோக்கம் பாஜகவை வீழ்த்துவதாக மட்டுமே இருக்கவேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “பாஜகவை எதிர்த்துப் போராட விரும்பும் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை இழந்து வருகிறது, காங்கிரசை நம்பி இருக்க முடியாது. கோவாவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடங்கப்பட்ட மூன்று மாதங்களில் 6% வாக்குகளைப் பெற்றது” என்று தெரிவித்துள்ளார்.

 

விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலினப் பெண்ணின் வழக்கை பொள்ளாச்சி பாலியல் வழக்கு போல் விசாரிக்கமாட்டோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில், விதி எண் 110-ன் கீழ் உரை நிகழ்த்தினார். அதில், தேர்தல் பரப்புரையின்போது திமுக-வால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள் மற்றும் கடந்த ஆட்சியில் அதிமுக-வால் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் குறித்து பேசினார்.

இதுகுறித்து அவர் பேசியதில், “அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 537 வாக்குறுதிகள் நிலுவையில் உள்ளன. திமுக அளித்த வாக்குறுதிகளில் கடந்த 10 மாதங்களில் மட்டுமே 208 நிறைவேற்றப்பட்டுள்ளன; திமுக அறிவித்த 505 வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு’ என்ற அண்ணாவின் சொல்லுக்கு ஏற்றாற்போல் அதிமுக நிறைவேற்றாமல் விட்ட வாக்குறுதிகளில் மக்களுக்கு மிகத் தேவையானவை கண்டறியப்பட்டு அதையும் சேர்த்து நிறைவேற்றுவோம்’ என்று தெரிவித்திருந்தார்.

மேலும், ‘விருதுநகரில் பட்டியலின இளம்பெண் திமுக பிரமுகரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஏற்பட்ட பொள்ளாச்சி, வண்ணாரப்பேட்டை பாலியல் சம்பவங்கள் போல் அல்லாமல், விருதுநகர் சம்பவத்திற்கு விரைந்து தண்டனை பெற்றுத்தரப்படும். இவ்வழக்கில் 60 நாட்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என்பதை ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்கிறேன்’ என்று பேசியிருந்தார்.

முன்னதாக, எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியமைத்தபின் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு, பாலியல் வன்கொடுமைகள் போன்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாகவும், திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவை ஒட்டி, அவரது பெயரில் ஆண்டுதோறும் இனி ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்படும் என, அவர் பிறந்த மாநிலமான மத்தியப்பிரதேசத்தின் முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 8-ஆம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 29 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92.

அவர் காலமான செய்தி பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு இந்தியப்பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் முப்படைகள் மற்றும் மாநில அரசு மரியாதையுடன் அவரது உடல் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தன்னுடைய 4 வயதில் பாடல்களைப் பாடத்துவங்கிய லதா மங்கேஷ்கர், இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சிங்களம் உள்பட பல்வேறு மொழிகளிலும் 30,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து இவர் பாடி இசைஞானி இசையில் ‘சத்யா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை கலகலவென’ பாடல், இன்றும் பலரது விருப்பப்பாடல்களில் ஒன்று.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, தாதாசாஹேப் பால்கே, பத்ம பூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ள இவர், இந்தியாவின் இசைக்குயில் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தான் அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அவரது பெயரில் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "லதா ஜி இந்தூரில் பிறந்தார். எனவே இந்தூரில் ஒரு மியூசிக் அகாடமி, மியூசிக் யுனிவர்சிட்டி, மியூசியம் மற்றும் அவரது திருவுருவ சிலை நிறுவப்படும். லதா மங்கேஷ்கர் விருது அவரது பிறந்தநாளில் ஆண்டுதோறும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்” என்று அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் நடப்பு நிதியாண்டுக்கான (2022-23) நிதிநிலையறிக்கை, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் இன்று அறிவிக்கப்பட்டதையடுத்து, அதில் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும்படியான அம்சங்கள் இடம்பெறவில்லை என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழக அரசின் நடப்பு (2022 - 23) ஆண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப முக்கிய அம்சங்கள் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறை 7,000 கோடியாக குறைந்துள்ளது என்றால், வருவாயை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டாஸ்மாக் கடைகளின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்டுவதை விட மாற்றுத் திட்டங்களின் மூலம் வருவாயை ஈட்டுவதில் அக்கறை காட்ட வேண்டும். தற்போதைய பட்ஜெட்டில் கல்விக்காக, இளைஞர்களுக்காக, மாணவர்களுக்காக, அரசு மருத்துவமனைக்காக, வெள்ளத் தடுப்புக்காக, நீர்நிலப் பாதுகாப்புக்காக, சுற்றுச்சூழலுக்காக என பலவற்றிற்கு நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வழக்கமானது.

மேலும், இலவசப் பாடப்புத்தகங்கள் வழங்குவதற்கும், நகராட்சி நிர்வாகத்திற்கும், கோயில்களை சீரமைக்கவும் ஒதுக்கிய நிதியானது முறையாக, முழுமையாகப் பயன்படுத்தப்பட்டால்தான் சரியானதாக இருக்கும். இருப்பினும் தமிழ் மொழிக்காக, அரசுப் பள்ளிகளின் தரம் உயர்வதற்காக, மருத்துவத் துறைக்காக, துறைமுகம் மதுரவாயல் உயர்மட்ட சாலைத்திட்டத்திற்காக ஒதுக்கிய நிதியானது குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்து பயன் தர வேண்டும். ஒதுக்கிய நிதியால் அந்தந்த துறைகள் வளர்ச்சி அடைய வேண்டும், பொதுமக்கள் பயன்பெற வேண்டும்.

இந்த பட்ஜெட்டானது அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக அமையவில்லை. குறிப்பாக கரோனா கால பாதிப்பில் இருக்கின்ற ஏழை, எளிய, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் பட்ஜெட்டில் அறிவிப்புகள் இடம்பெறவில்லை.

மிக முக்கியமாக திமுக தேர்தலுக்கு முன்பாக அறிவித்த வாக்குறுதிகள் இந்த பட்ஜெட்டில் நிறைவேறுமா? என்ற சந்தேகம் நீடிக்கும் வகையில் அறிவிப்புகள் அமைந்திருக்கிறது. மொத்தத்தில் தமிழக அரசின் நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட் தமிழக மக்களின் வருவாயைப் பெருக்குவதற்கான, மாநில வளர்ச்சிக்கான முக்கிய அம்சங்கள் இல்லாத சாதாரண பட்ஜெட்டாக அமைந்திருப்பதாக த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் கத்தியால் தாக்கப்பட்டதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் ஆளும் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் கோவில் கொடை விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் மார்கெட் தெரசாவை குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் அபராதம் விதித்த முன்பகையை கருத்தில்கொண்டு ஆறுமுகம் என்ற நபர் கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு தப்பித்துள்ளார்.

இந்நிலையில் இரத்தவெள்ளத்தில் துடித்த காவலர் மார்க்கெட் தெரசா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் இக்குற்றச் சம்வபவத்தில் ஈடுபட்ட ஆறுமுகம்  காவலர்களால் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்துவருகின்றனர்.

'திமுக ஆட்சியில் ஆளுநர் தொடங்கி காவலர் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை' என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிய நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் இச்சம்பவத்திற்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி அருகே பழவூரில், கடமையைச் செய்த பெண் காவல்துறை உதவி ஆய்வாளர் மார்க்ரெட் தெரசா அவர்கள் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்ற செய்தியை பார்க்கும்போது, தமிழ்நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளது தெளிவாகிறது.

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டாலும், அவரை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தரவும், இதுபோன்ற சம்பவம் இனி நிகழா வண்ணம் பார்த்துக் கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்நிலையில், தாக்குதலுக்கு உள்ளான காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார்.

திமுக ஆட்சியமைத்ததிலிருந்து மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதாகவும், பெரியார் கண்ட கனவுப்படி தமிழகம் எங்கும் சமத்துவபுரங்கள் அமைக்கப்பட்டு வருவதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில், ரூ.2.88 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 100 சமத்துவபுர வீடுகளைத் திறந்துவைக்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்துகொண்டார்.

இந்நிலையில், விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற 10 மாத காலத்தில் இந்த அரசு மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செய்து வருகிறது. இன்று உங்களை நேரில் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கிறேன்.

இங்கு தாய்மார்களிடம் சில கேள்விகள் கேட்டேன். இப்போது நடைபெற்று கொண்டிருக்கிற இந்த 10 மாத கால தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இந்த ஆட்சி ரொம்ப சிறப்பாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

ஏதாவது குறைகள் இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு, அவர்கள் எந்த குறையும் இல்லை. நிம்மதியாக இருக்கிறோம் என்று கூறினார்கள். இது தொடரும். தொடர வேண்டும். அப்படி தொடர வேண்டும் என்பதற்காக உறுதி எடுத்துக் கொள்ளக் கூடிய, நிறைவேற்றக் கூடிய நிலையில்தான் இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

நான் உள்ளாட்சி துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியபோது கலைஞர் என்னை பாராட்டினார். மக்களோடு மக்களாக நெருக்கமாக இருக்கக் கூடிய துறை உள்ளாட்சி துறை. இந்த துறை அப்போது எப்படி வேகமாக செயல்பட்டதோ அதேபோல் இப்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. இதேபோல் ஒவ்வொரு துறையும் வேகமாக செயல்படுகிறது. அதனால் தான் தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருப்பதாக மக்கள் மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவிக்கின்றனர்.

பெரியார் இல்லை என்றால் தமிழ்நாடு இந்த அளவிற்கு முன்னேறி இருக்காது. அதனால் தான் பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்றவே சமத்துவபுரம் திட்டத்தை கலைஞர் தொடங்கி வைத்தார். அந்த திட்டம் மீண்டும் இப்போது சிறப்பாக தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது.

பழமைவாதங்களையும், பிரிவினைகளையும் பேசித்திரியும் தீய சக்திகளுக்கு மத்தியில், நாடே வியக்கும் வகையில் சாதி, மத பேதமின்றி மக்கள் ஒன்றாக வாழும் சமத்துவபுரங்களை தமிழகத்தில் உருவாக்கியதுதான் திராவிட மாடல்.

தந்தை பெரியார் மட்டும் இல்லையென்றால் நாமெல்லாம் இல்லை. தமிழகத்தின் முன்னேற்றமும் இல்லை. எல்லா பிரிவு மக்களும் ஒன்றாக வாழவேண்டுமென்று பெரியார் நினைத்ததன் விளைவே இந்த சமத்துவபுரங்கள்”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


``கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும்" என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீடு, அலுவலகம் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நேற்று அதிடியாக சோதனையில் ஈடுபட்டனர். சோதனை முடியில் ரொக்கப் பணம், தங்கம், வெள்ளிகள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் செல்போன் மட்டும் எடுத்துச் சென்றனர். இந்த சோதனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜிதான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் செந்தில் பாலாஜி, "ஒரே கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் ஒரு கருத்தை சொல்ல, தங்கமணி தனியாக ஒரு கருத்தை சொல்கிறார். எல்லோரும் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். ஊழல் கறைபடிந்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்ற தேர்தல் வாக்குறுதியையே மு.க.ஸ்டாலின் அரசு நிறைவேற்றி வருகிறது.

கிரிப்டோ கரன்சிகளில் ஊழல் பணத்தை முதலீடு செய்த அரசியல்வாதி என இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதற்கு பதில் அளித்தால் பரவாயில்லை. கண் பார்வையிலிருந்து காணாமல் போன நிலக்கரிக்கும் கண்ணுக்குத் தெரியாத கிரிப்டோ கரன்சிக்கும் தங்கமணி, மன்னிக்கவும், ‘கிரிப்டோ’மணி முதலில் பதில் சொல்ல வேண்டும்.

 

தருமபுர ஆதீனத்தை மனிதர்கள் சுமக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு தடையை நீக்கவில்லையெனில் ஆதீனத்தை தான் சுமப்பேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தருமபுர ஆதீனத்தில் ஒவ்வொரு ஆண்டும் பட்டினப் பிரவேச விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதில் ஆதீனத்தை மக்கள் பல்லக்கில் அமரவைத்து சுமந்துசெல்வர்.

இந்நிலையில், மனிதரை மனிதர்களே சுமப்பதற்கு திராவிடர் கழகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி இதற்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

இதையடுத்து, இதற்கு பல்வேறு தரப்புகளிடையே எதிர்ப்புகள் எழுந்தது. மதுரை ஆதீனம், அரசு இத்தடையைத் திரும்பப் பெறவேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். மேலும், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்த சிறப்பு கவனஈர்ப்பு தீர்மானத்தை இன்று சட்டபேரவையில் கொண்டுவந்தார்.

இந்நிலையில், தமிழக அரசு தடையை நீக்கவில்லையெனில் தானே ஆதீனத்தைச் சுமப்பேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

“தருமபுர ஆதீனத்தின் பல நூற்றாண்டுகள் பழமையான ‘பட்டின பிரவேசம்’ மீதான தடை தமிழக நாகரிகம் மற்றும் கலாச்சாரத்திற்கு எதிரானது. ஆதினத்தைத் தோளில் சுமக்க நான் நேரில் வருவேன் என்பதைத் தமிழக அரசுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!

இந்த சட்டவிரோத உத்தரவை எதிர்த்து நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்குமாறு ஆதினத்திடம் கோரிக்கை வைப்போம் கோபாலபுர குடும்பத்தை அவரது கட்சியினர் தூக்கிச் சுமப்பதை போல் அல்ல இது.

ஊழியம் மற்றும் குருவுக்குச் செய்யும் சேவையின் உள்ள வேறுபாடுகளைக் கூட அறியாதவர் இந்த கோபாலபுர குடும்பத்தார். தமிழக பாஜகவே இந்த நிகழ்ச்சியை நடத்திக் காட்ட தயாராக இருக்கிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தை அடுத்து, இதுகுறித்து முதல்வருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் சுயாட்சி என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல என்றும், கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை என்றும் முரசொலி தலையங்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

அண்மையில் தென்மண்டல பல்கலைக்கழக் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமெரிக்காவைப்போல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா உருவாகவில்லை என்றும், ‘இந்தியா என்பது உடலின் உறுப்புகள் போன்றது; அவற்றைப் பிரித்துப்பார்க்க முடியாது’ என்றும் ஒன்றியம் குறித்த விளக்கத்தை அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநரின் இந்த கூற்றை மேற்கோள் காட்டி, திமுகவின் முரசொலி பத்திரிக்கையின் தலையங்கம் பகுதியில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

“இந்திய யூனியன் பற்றிப் பேசுபவர்கள் இந்தியா 1947-இல் பிறக்கவில்லை என்பதையும் அமெரிக்காவைப் போல ஒப்பந்தக் கூட்டமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பல மன்னர்கள், ராஜ்யங்களைப் பொருட்படுத்தாமல் பாரதத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மிகங்களால் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஒன்றியம் இயல்பாக உருவாக்கப்பட்டு நீடிக்கிறது. பாரதம் காலம் காலமாக ஒரேயொரு உயிரினமாக இருந்து வருகிறது” என்று சொல்லி இருக்கிறார் தமிழக ஆளுநர்.

கலாச்சாரம், ஆன்மிகம், பாரதம் என்ற பெரிய வார்த்தைகளைக் கொண்டால் சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிடாது. பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன், இந்தியாவின் முழு நிலப்பரப்பும் ஒரே ஒருவர் ஆளுகையில் இருந்ததா? இல்லை! அப்படி இருந்ததற்கான ஆதாரம் உண்டா? இல்லை! பிரிட்டிஷார் ஆட்சியில் கூட, அவர்களது தலைமையை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களும், சமஸ்தானங்களும் இருக்கத்தான் செய்தன. அதனையும் ஒன்று சேர்த்தவர் சர்தார் படேல்.

படேலுக்கு இவர்கள் சூட்டும் மகுடம் என்ன? இந்தியாவுக்குள் இணையச் சம்மதிக்காத சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்துச் சேர்த்துக் கொடுத்தவர் அவர்தான் என்பதால்தான் அவருக்கு 3,000 கோடியில் சிலை வைத்தார்கள். அவர் பெருமையை, அவர் சாதனையைச் சிதைக்கும் வகையில் தமிழக ஆளுநர் ரவி கருத்துச் சொல்லலாமா? எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்தோம் என்றால் சர்தார் படேல் சாதித்தது என்ன?

அசோகர் காலத்தில் கூட, தமிழகம் நீங்கலாக இந்தியாவின் மற்ற நாட்டுப் பகுதிகள் அரசியல் ஒருங்கிணைப்பைப் பெற்றன. மௌரிய, கனிஷ்க, குப்த ஆட்சிகளில் கூட வட இந்தியாவில் தனித்த ஆட்சிப்பகுதிகள் அதிகம் இருந்தன. அனைத்தையும் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் போர்கள் நடத்திய காலத்தில் கூட, தனித்த ஆட்சிப் பகுதிகள் அதிகம் இருந்தன. 1500 ஆண்டு காலத் தென்னக வரலாற்றில், வடபுலத்து பேரரசர்கள் எவரும் இங்கு வந்து தன்னகப்படுத்தவில்லை.

சுல்தான்களின் ஆட்சியில் மாகாணங்களுக்கு முன்னால் இருந்த பிரிவினை என்பதை ‘சுபா’க்கள் என்பார்கள். இத்தகைய ‘சுபா’க்கள் தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. வடபுலத்தை 15 சுபாக்களாக வைத்திருந்தார்களே தவிர, அதில் ஒன்று கூட இங்கு கிடையாது. முகலாயர்களைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷார், வடக்கைப் போன்ற ஒரு ஒருங்கிணைப்பை தக்காணத்திலும், தென்னகத்திலும் அமைத்தார்கள். போர் மூலமாக மட்டுமல்ல; பொருளாதாரத்தின் மூலமாகவும் இந்த வெற்றி சாத்தியம் ஆனது.

ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னால் இணைக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் பிரிட்டிஷார் நடத்திய போரால் கிடைத்தவையே. இராபர்ட் கிளைவ் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதனை உணரலாம். 12 ஆண்டுகள் நடந்த கர்நாடகப் போர் காரணமாகத்தான் பிரிட்டிஷார் ஆளுகைக்குள் தென்னகம் வந்தது.

பிளாசிப் போர், மராட்டியர்களையும் சீக்கியர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தானமும், காந்தாரமும், நேபாளமும், பூட்டானும், பர்மாவும், இலங்கையும் அப்படித்தான் இணைக்கப்பட்டன.

‘அசோகராலும், அக்பராலும் அடைய முடியாததும் - மராத்தியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாததுமான இந்தியாவின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். 18-ஆம் நூற்றாண்டில் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகில இந்திய தேசியக் கோட்பாடானது ஆங்கிலேயரின் துப்பாக்கி முனையில் உருவானதே’ என்று வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கர் எழுதுகிறார்.

இன்றைக்கு இருக்கும் ‘மத்திய அரசு’ என்பது 1773-ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தால் உருவானது ஆகும். அதனுள்ளும் சேராத குறுநில மன்னர்கள் இருந்தார்கள். 1947-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் தாங்கள் தனிநாடு என்று சொன்ன மன்னர்களும் உண்டு. மாட்சிமை தாங்கிய சர்.சி.பி. ராமசாமி அய்யர், திருவிதாங்கூர் -கொச்சியைத் தனிநாடு என்றுதான் அறிவித்தார். படேல் - கிருஷ்ணமேனன் ஆகியோரின் வாக்குறுதி காரணமாகவும், ஹைதராபாத் மீது படையெடுப்பு நடத்தியும், காஷ்மீரத்துக்கு தனிச் சலுகை தந்தும் இன்றைய நிலப்பரப்பு முழுமை பெற்றது.

அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, “india that is bharath, shall be a union of states” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் சேர்க்கை தான் இந்தியா. இந்த நாட்டில் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். 826 பெருமொழிகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இனங்கள் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களாக இருக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை எதனால் உருவாக்க முடியும்?

‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தின் மூலமாகத் தான் உருவாக்க முடியும். ‘மாநிலத்தில் சுயாட்சி’ என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல. ‘மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டு தான்’ மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே, கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை.”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து தமிழகம் நோக்கிவரும் ஈழத்தமிழர்களை கைது செய்வது கடும் கண்டனத்திற்குரியது என்றும், அவர்களுக்கு உதவும் பொருட்டு அனைத்து வசதிகளையும் செய்யவேண்டியும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியின் விளைவினால் அத்தியாவசியப்பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து, அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாடச் செலவினங்களைக்கூட எதிர்கொள்ள முடியாது வறுமைக்கும் ஏழ்மைக்கும் உள்ளாகி, தவித்து வருகிற செய்திகள் கவலையளிக்கின்றன. சிங்கள இனவெறிப்பிடித்து, தமிழர்களை அழித்தொழிக்க உலகெங்கும் கடன்களை வாங்கிக்குவித்து, நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிலும், அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியிலும் கவனம்செலுத்தாத கொடுங்கோல் சிங்கள ஆட்சியாளர்களின் இனவெறிச்செயல்பாடுகளே இத்தகைய நிலைக்குக் காரணமென்றாலும், இன்றைக்கு தமிழர்களும் சேர்ந்துப் பாதிப்புக்குள்ளாகி நிற்பது பெரும் மனவேதனையைத் தருகிறது.

 இவ்வளவு ஆண்டுகளாக, சிங்கள ஆட்சியாளர்களின் இன ஒதுக்கல் நடவடிக்கைகளால் அடக்கி ஒடுக்கப்பட்டு, கொடும் துயரத்திற்கு ஆளாகி நின்ற தமிழ்ச்சொந்தங்கள், இப்போது பொருளாதார நெருக்கடியினாலும், வறுமையின் கோரப்பிடியினாலும் வாடி வதங்கி, வாழ்க்கையை நடத்த முடியாத துயர்மிகு சூழலில், நாளும் அல்லல்பட்டு வருவது பெரும் மனவலியைத் தருகிறது. இத்தகைய கையறு நிலையில், தாய்த்தமிழகத்தில் தஞ்சம்கேட்டு, கடல்வழியாக, படகுகளின் மூலம் அடைக்கலம் தேடிவரும் ஈழச்சொந்தங்களை வழக்குகள் போட்டு கைது செய்வது மேலும் துன்பத்திற்குள்ளாக்குவது கொடுமை. அதிலும் பெற்றோர்களையும் குழந்தைகளையும் பிரித்து சிறையிலும் முகாம்களிலும் அடைப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அனைத்தையும் இழந்து வரும் நம்மக்களை ஆரத்தழுவி அரவணைத்து, திபெத்திய ஏதிலிகளுக்கு இந்நாடு வழங்கியிருக்கிற சலுகைகளையும், வசதிகளையும் போல நம் சொந்தங்களுக்கும் செய்து கொடுத்து, அவர்களைக் காக்க முன்வர வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக மத்திய, மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறேன்.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தி மொழியை தேசியமொழியாக, ஆங்கிலத்திற்கு மாற்றாக அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய கருத்துக்கு எதிர்க்கருத்துகள் நாடெங்கும் கொழுந்துவிட்டு எரிகின்றன.

நாட்டின் பன்முகத்தன்மையைச் சீர்குலைப்பதாக அமித்ஷாவின் கருத்து உள்ளதென முதல்வர் ஸ்டாலின், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீண்ட மௌனத்தைக் கலைத்து இந்தி திணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“மத்திய அமைச்சரவைக்கான 70 விழுக்காடு நிகழ்ச்சிநிரல் இந்தி மொழியில் தான் தயாரிக்கப்படுகிறது என்றும் மற்ற மொழிகளை பேசும் மாநில மக்கள் இந்திய மொழியில் பேசவேண்டும் என்றும் ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் நாடாளுமன்ற ஆட்சி மொழி குழுவின் தலைவர் என்ற முறையில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்கள் பேசி இருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.

இந்தி மொழி தேவை என்கிற பட்சத்தில் இந்தி மொழியை தாங்களாகவே முன்வந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள் தாராளமாக கற்றுக் கொள்ளலாம். அதே சமயத்தில் இந்தித் திணிப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் கூறியிருக்கிறார்கள். நீண்ட நாட்களாக தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை தான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இன்று வரை இந்தியாவில் ஆங்கில மொழி இருக்கிறது என்றால் அதற்கு மூல காரணம் பேரறிஞர் அண்ணா அவர்கள்தான். பேரறிஞர் அண்ணா அவர்களின் இரு மொழிக் கொள்கையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது  என்பதையும், தேசிய கல்வி கொள்கை அறிமுகப்படுத்தப்பட்ட போதே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிலைப்பாடு தெளிவு படுத்தப்பட்டுவிட்டது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்”

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவந்த 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில், நரேன் ஆகியோர் நடித்துள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3-ல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இத்திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. விரைவில் 'இந்தியன் 2' படப்பிடிப்பு தொடங்கும்" என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், "ஜூன் 3-ல் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் என்பதால், அன்றைய தினத்தில் விக்ரம் திரைப்படம் வெளியிடப்படுவதாக சிலர் கூறுகின்றனர். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.

முதலில் மே 29-ல் தான் விக்ரம் படத்தை வெளியிடலாம் என்று இருந்தோம். ஆனால், கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால் வெளியீட்டுத்தேதி தள்ளிப்போய் 'ஜூன் 3' படத்தை வெளியிட சரியான தேதியாக இருக்கும் என்று அத்தேதியை முடிவுசெய்தோம். இது தற்செயலாக அமைந்தது. சினிமாவை பொறுத்தவரை கலைஞரைப் பற்றிப் பேசுவதென்றால் ஆயிரம் பக்கங்கள் போதாது" என்று தெரிவித்தார்.

அரசு அதிகாரிகளின் ஊழல் குறித்து விளக்கும் வகையில் வெளியான 'இந்தியன்' படத்தின் முதல் பாகம் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிப்படமாகவும், கமல்ஹாசனின் முக்கியப் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது. இதனிடையே தான் அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகவிருப்பது குறித்த செய்தி அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், எதிர்பாராமல் நிகழ்ந்த சில தடைகள் மூலம் நிறுத்தப்பட்ட 'இந்தியன் 2' பட படப்பிடிப்பு ரசிகர்கள் பலரை கலக்கத்தில் ஆழ்த்தியது. மேலும் 'இந்தியன் 2' படம் கைவிடப்பட்டதாக வெளியான செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், 'இந்தியன் 2' படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்ற செய்தி கமல் ரசிகர்களை மீண்டும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியை தேசிய ஒருமைப்பாட்டு மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றுமொழியாக அனைவரும் ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில், நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்பொழுது பேசிய அவர்,

“அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை இந்தியில் சேர்த்தால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9-ஆம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர்த்து 8 வடகிழக்கு மாநிலங்களில், 10-ஆம் வகுப்பு வரையிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்திற்காக நகைபறிப்புச் செயலில் ஈடுபட்ட மயிலாப்பூரைச் சேர்ந்த நபர் காவலர்களால் கைதுசெய்யப்பட்ட நிலையில், சூதாட்டங்களைத் தடுப்பது குறித்து அரசு ஆவண செய்யவேண்டுமென பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

“சென்னை திருவான்மியூர் தொடர்வண்டி நிலையத்தில் தொடர்ந்து பயணிகளிடம் சங்கிலிப் பறிப்பு உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மயிலாப்பூரைச் சேர்ந்த ஜெயராமன் என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இத்தகைய குற்றங்களைச் செய்ய ஜெயராமனைத் தூண்டியது ஆன்லைன் சூதாட்டம் தான்.

சென்னை மாநகராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வரும் ஜெயராமன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகியுள்ளார். அதற்கு மாநகராட்சிப் பணி மூலம் கிடைக்கும் ஊதியம் போதவில்லை என்பதால், நகைக்கொள்ளை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரியவந்துள்ளது

ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். ஆன்லைன் சூதாடுவதற்காக கொலைகளை செய்து கொள்ளையடித்தனர். இப்போது தொடர் சங்கிலிப் பறிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை, கொள்ளைகளைத் தூண்டும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு முடிவு எப்போது?

ஆன்லைன் சூதாட்டத்திற்கு உடனடியாக முடிவு கட்டப்படவில்லை என்றால், ஏராளமான குடும்பங்கள் தங்களின் தலைவர்களையும், உடமைகளையும் இழந்து நடுத்தெருவுக்கு வந்து விடும். வாழ வேண்டிய இளைஞர்கள் குற்றவாளிகளாகக்கூடும். இது உடனடியாக தடுக்கப்பட வேண்டும்!

ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க கொள்கை அளவில் தமிழக அரசு ஒப்புக் கொண்டிருக்கிறது. அதற்கான தீர்வு புதிய சட்டமே தவிர, உச்சநீதிமன்ற மேல்முறையீடு அல்ல. எனவே, இனியும் தாமதிக்காமல் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி புதிய தடை சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்!”

இவ்வாறு தெரிவித்துள்ளார்!

கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன், கோயில் திருவிழாக்களை நடத்துவதாகக் கூறியுள்ளது அடிப்படை சித்தாந்தத்தையே ஆட்டுவிப்பதாகவும், மார்க்சிய தத்துவத்துக்கு எதிராக உள்ளதாகவும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்தியக் கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்ட்) கட்சியின் மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் அவர்கள் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்ன ஒரு கருத்து ஊடகங்களில் முக்கிய கருத்தாக எதிரும் புதிருமாக உலா வந்து கொண்டுள்ளது.

‘இந்து’, ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ போன்ற ஏடுகளும் இச்செய்தியை முக்கிய இடம் கொடுத்து வெளியிட்டுள்ளன. இது சமூக வலைதளங்களில் சூடு பிடித்துள்ளது.

“கோவில் திருவிழாக்களை கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஏன் கையில் எடுத்துக் கொள்ளக் கூடாது? பண்பாட்டு ரீதியான பிரச்சினையை கம்யூனிஸ்டுகள் – இடதுசாரிகள் ஏன் கையில் எடுக்கக் கூடாது? அவற்றை ஏன் பிஜேபியிடம் விட்டுவிட வேண்டும்?” என்று தோழர் பாலகிருஷ்ணன் பேசியதாக வெளிவந்து கொண்டு இருக்கிறது.

இது தொடர்பான செய்தி ‘இந்து’ ஏட்டில் வெளிவந்தவுடனேயே அதைப்பற்றி எழுதிட வேண்டும் என்று எண்ணினோம். சி.பி.எம்.-இன் அதிகாரப்பூர்வ ஏடான ‘தீக்கதிரில்’ அவ்வாறு பேசியதாக வரவில்லை என்பதால் அமைதி காத்தோம். அது உண்மையாக இருக்கக் கூடாது என்றும் கூட எண்ணினோம்.

ஆனால் ‘வாட்ஸ் அப்’பில் அவர் அவ்வாறு பேசிய பேச்சு ஒளிபரப்புவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். இது மார்க்சிய தத்துவத்துக்கு எதிரானது என்று சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. தேர்தலில் தோற்கலாம் – சித்தாந்தத்தில் தோற்கக் கூடாதே!

இது பொதுவாக இளைஞர்களை, ஏன் சி.பி.எம்.-இல் உள்ள இளைஞர்களைக் கூடத் தவறான பாதைக்கு இழுத்துச் செல்லுவதாகும். புரட்சிக்கர இளைஞர்களாக வார்த்து எடுப்பதற்குப் பதில் புராணச் சகதியில் அவர்களைத் தள்ளிவிடக் கூடாது.

“மதுவை ஒழிக்க மதுவை அருந்துவோம்” என்பது போன்றது இது. மதம் ‘அபின்’ என்றார் மார்க்ஸ். வடக்கே ராம பக்தி அதிகம் – அதற்காக ராமன் கோயில் கட்டுவதை ஆதரிக்கப் போகிறோமா?
மத விழாக்களை நாம் கையில் எடுத்துக் கொள்வது என்றால் தேரின் வடம் பிடிக்க வேண்டுமா? காவடி எடுக்கப் போகிறோமா? சைவக் கோயில்களுக்குச் சென்றால் திருநீறு பூசிக் கொள்ள வேண்டுமே! வைணவக் கோயில் திருவிழா என்றால் நாமம் தரித்துக் கொள்ளப் போகிறோமா?

பண்பாட்டை மீட்பது என்றால் கோயில் திருவிழாக்களை நாம் நம் கையில் எடுத்துக் கொள்ளும் வழி – பகுத்தறிவைச் சார்ந்ததாக இருக்க முடியாது. அந்தப் பண்பாடு எது? ஜாதியைத் தாங்கிப் பிடிப்பதுதானே! அப்படியே கம்யூனிஸ்டுகள் முயன்றாலும் அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதும் இல்லை. வீண் பழிதான் வந்து சேரும்.

‘கம்யூனிஸ்டுகளே எங்கள் வழிக்கு வந்து விட்டார்கள்’ என்று சங்பரிவார் சக்திகள் பிரச்சாரம் செய்யவும், அதன் மூலம் அவர்கள் பலனடையவும்தான் பயன்படும்.

எதிர்க்க வேண்டிய மூடநம்பிக்கைகளை, மதவாத பிற்போக்குச் சக்திகளை கம்பீரமாக, வீரியமாக, பகுத்தறிவோடு, விஞ்ஞான சிந்தனையோடு எதிர்த்து முறியடிக்க வேண்டுமே தவிர, பிற்போக்குச் சக்திகள் ஏதோ ஒரு வகையில் வளர்ந்து விடக் காரணமாகி விடக் கூடாது.

இது சாதாரண அலட்சியப்படுத்தக் கூடிய ஒன்றல்ல. காலா காலத்திற்கும் பதில் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய சித்தாந்த ரீதியான பிரச்சினை. உரிமையோடும், தோழமையோடும் இதனைச் சுட்டிக்காட்ட வேண்டியது நமது கடமையாகும்”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில் கழுவுநீர் கலந்த குடிதண்ணீரும் தேநீரும் நோயாளிகளுக்கு தரப்படுவதாக வெளியான செய்திகளையடுத்து, அதனைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ஊடகப்பிரிவு மாநிலச் செயலாளர் முரளி அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சென்னை மாநகரின் மிக முக்கியமான மருத்துவமனையான ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் பயன்படுத்தும் தண்ணீரும், புறநோயாளிகள் அருந்தும் தேநீரிலும் கழிவுநீர் கலந்து உள்ளது என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

அரசு மருத்துவமனைகளை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் ஏழை மக்கள்தான். ராயப்பேட்டை மருத்துவமனையை தினசரி 3000 புறநோயாளிகளும் 500 உள்நோயாளிகளும் பயன்படுத்துகின்றனர். அப்படிப்பட்ட மருத்துவமனைக்கான தண்ணீரை சென்னை குடிநீர் வாரியம்தான் தினம் முறையாக வழங்க வேண்டும்.

சென்னை குடிநீர் வாரியம் முறையாக வழங்காத போது மருத்துவமனை நிலைய மருத்துவ அதிகாரி அதைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கோ குடிநீர் வாரியம் தண்ணீர் வழங்காத நாட்களில், வளாகத்தில் வெகுநாட்களாக பயன்படாமல் இருக்கும் கிணற்றின் மூலமாக தண்ணீர் எடுக்கப்படுவதாக செய்திகள் சொல்கின்றன. அந்த கிணறு கழிவு நீர் கலந்து கிட்டத்தட்ட ஒரு சாக்கடையாக மாறி பல நாட்கள் ஆகிவிட்டன.

புறாக்கள் அதன் மீது இறந்து கிடக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. நோயாளிகள் பயன்படுத்தும் கழிவறையில் இருந்து கழிவு நீர் அதில் கலக்கிறது. புதிய புதிய நோய்களை பார்த்து வரும் இந்த சமயத்தில் இதுபோன்ற தேவையில்லாத சிக்கல்களை உருவாக்கும் இடமாக மருத்துவமனையே மாறியுள்ளது பெரும் அவலத்திற்குரியது.

இதுமட்டுமின்றி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் கடைகள் இந்த தண்ணீரையே பயன்படுத்துவதாக செய்திகள் சொல்கின்றன. புறநோயாளிகள், நோயாளிகளைப் பார்க்க வரும் உறவினர்கள், அங்கு பணிபுரியும் காவலர்கள் என உடல் ஆரோக்கியத்துடன் இருப்பவர்களையும் நோயாளிகளாக மாற்றும் பணியாகவே இது தெரிகிறது.

அந்த கிணற்றை பராமரிக்கவேண்டிய பொதுப்பணித்துறை அதுகுறித்து நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதும் அதற்கான முயற்சிகளை சுகாதாரத்துறையும் எடுக்கவில்லை என்பதும் தெரிகிறது. இப்படி அரசாங்கத் துறைகளின் ஒருங்கிணைப்பின்மையால் ஏழை மக்கள் இன்னலுக்கு ஆளாவதை மக்கள் நீதி மய்யம் கண்டிக்கின்றது.

உடனடியாக குடிநீர் வழங்கல் வாரியம் மருத்துவமனைக்கு முறையாக தண்ணீர் வழங்குவதையும், அந்த கிணற்றை பராமரிக்க பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்வதையும் சுகாதாரத்துறை உறுதிப்படுத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது.

அதோடு கழிவுநீரை பயன்படுத்தும் அந்த தேநீர் கடைகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களைத் தேடி மருத்துவம் செல்லும்முன் இருக்கும் மருத்துவமனைகளை ஒழுங்காக பராமரிப்பது முதல் தேவை என்ற அடிப்படையை நினைவூட்ட விரும்புகிறோம்”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சொத்துவரி உயர்வு அறிவிக்கப்பட்டதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்புகள் தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், சொத்துவரியை மனமுவந்து அதிகரிக்கவில்லை என்றும் நிதிச்சுமையை சமாளிக்கவே சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது என்றும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உருக்கமாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் பேசுகையில்,

“மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்து வரி பொது சீராய்வு தொடர்பாக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்து, எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள், எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றிருக்கக்கூடிய தலைவர்கள் உள்பட அனைவரும் தங்களுடைய கருத்துக்களையெல்லாம் இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள். அதற்குரிய விளக்கத்தை நேற்றையதினம் நம்முடைய மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு பத்திரிகையாளர்களை அழைத்து, எடுத்துச் சொல்லியிருந்தாலும், சட்டமன்றத்திலும் அதற்குரிய விளக்கத்தை முறையாக வழங்கிட வேண்டுமென்று நான் அவருக்குத் தந்த உத்தரவின் அடிப்படையிலே, அவரும் இங்கே சில விளக்கங்களையெல்லாம் உங்களிடத்திலே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.

எனவே, நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. சுருக்கமாக நான் தெரிவிக்க விரும்புவது, இந்த சொத்து வரி உயர்வை இந்த அரசு மனமுவந்து செய்யவில்லை. நான் அதை மனப்பூர்வமாக இங்கே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். ஆனால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி கிடைக்காது என்று கூறுகிறபோது, அதைச் சமாளிக்க வேண்டிய கட்டாயம் இந்த அரசுக்கு ஏற்பட்டது. ஏனென்றால், முன்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெறவில்லை. மக்களுக்கான வளர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தேக்க நிலையில் இருந்தன.

மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் வருவாய்ப் பற்றாக்குறையால், மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான பணிகளை நிறைவேற்றுவதில் கூட பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டன. அதை சோதனையாக சந்தித்துக் கொண்டிருந்தன. ஆனால், இப்போது அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த உள்ளாட்சி அமைப்புகளிலே பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்கள் அரசிடம் என்ன எதிர்பார்ப்பார்கள்? அங்கே ஆற்றவேண்டிய பணிகளுக்கு, திட்டங்களுக்கு நிதியை எதிர்பார்ப்பார்கள்.

ஆகவே, இந்த நிலையிலேதான் மக்களை பாதிக்காமல், குறிப்பாக அடித்தட்டு மக்களை, ஏழை, நடுத்தர வகுப்பு மக்களை பாதிக்காமல், உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிப் பணிகளை மனதிலே வைத்துக் கொண்டு, சொத்து வரி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், தற்போது நடைமுறைப்படுத்தக் கூடிய சொத்து வரி சீராய்விலே, கட்டடங்களின் பரப்பளவிற்கு ஏற்றவாறு பிரித்து, வரி உயர்வு செய்யக்கூடிய திட்டம் இதிலே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில், நகர்ப்புறத்தில் மொத்தம் உள்ள குடியிருப்புகளைப் பொருளாதார அடிப்படையில் பார்த்தால் 83 விழுக்காடு மக்களை இந்த வரி விதிப்பு பெரியதாக பாதிக்காது என்பதுதான் உண்மை. ஆகவேதான், பத்திரிகைகளும், ஊடகங்களும்கூட இந்த அரசினுடைய முயற்சியைப் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறது. "அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கக்கூடிய கட்டாயம் - அதற்கு நிதி ஆதாரம் அவசியம் தேவை" என்றும், "இப்போதுள்ள நிலையில் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருக்கக்கூடிய நிதி ஆதாரத்தை வைத்துக்கொண்டு எதையும் செய்ய முடியாது என்ற காரணத்தால், இந்த வரி உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகும்" என்றும் நேற்றையதினம் தினத்தந்தி பத்திரிக்கையின் தலையங்கத்திலேயே இதுகுறித்துக் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்கள்.

பேரவையில் அமர்ந்திருக்கக்கூடிய மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரையும், இந்த அரசின் சார்பிலே பணிவோடு கேட்டுக் கொள்ள விரும்புவது, கட்சி வேறுபாடின்றி நான் சொல்ல விரும்புவது, அரசின் இந்த முடிவுக்கும், மக்கள் நலத் திட்டங்களை, வளர்ச்சித் திட்டங்களை உள்ளாட்சி அமைப்புகள் நிறைவேற்றிடவும், நம் மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் துணை நிற்க வேண்டும் என்பதுதான். எதிர்கட்சி மற்றும் எங்கள் தோழமைக் கட்சிகளுக்கும் எனது அன்பான ஒரு வேண்டுகோள்! மாநில வளர்ச்சியில் எவ்வித அரசியலும் செய்திட வேண்டாம்”

இவ்வாறு பேசியுள்ளார்.

மது அருந்தியதால் கோவை மாவட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் உயிரிழந்த நிலையில், மதுக்கடைகளை மூடக்கோரி தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,

“கோவை தெலுங்குபாளையம் பகுதியில் உள்ள டாஸ்மாக் குடிப்பகத்தில், மதுக்கடை திறக்கும் நேரத்திற்கு முன்பே மது அருந்திய திமுக நிர்வாகி சண்முகம் உயிரிழந்திருக்கிறார்; சிவா என்பவர் கண்பார்வை பாதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வருகிறார். இது மிகவும் வேதனையளிக்கிறது

அரசு மதுக்கடை குடிப்பகத்தில் வழங்கப்பட்ட மதுவை குடித்தவர் உயிரிழக்க காரணம் என்ன? மதுவில் கலப்படமா? கள்ள மது விற்பனை செய்யப்பட்டதா? டாஸ்மாக் கொள்முதல் செய்யும் மது வகைகள் தரம் குறைந்தவையா? என்பது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஆணையிட வேண்டும்

அரசு மதுக்கடைகளில் மது விற்பனை நண்பகல் 12 மணிக்குத் தான் தொடங்கப்பட வேண்டும் என்ற நிலையில், குடிப்பகத்தில் காலை 11.30 மணிக்கே மது வழங்கப்பட்டது எப்படி? டாஸ்மாக், காவல்துறை இதை வேடிக்கை பார்க்கின்றனவா? இது தொடர்பாக யார் மீதாவது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதா?

மது மனிதர்களைக் கொல்லும் நஞ்சு. அது சட்டப்பூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ விற்கப்படக் கூடாது. எனவே, தமிழ்நாட்டில் படிப்படியாகவோ, ஒரே கட்டமாகவோ மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

எந்தப் பொறுப்பில் இல்லாமல் போனபோதும் அம்மா துவண்டுவிடாமல் கட்சிக்காக உழைத்ததாகவும், தாங்களும் அம்மாவின் சபதத்தை ஏற்று கட்சியை அறியணையில் ஏற்றுவோம் என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,  

 ‘அம்மாவின் வாழ்வும், சாதனைகளும், நம்மை எல்லா நேரங்களிலும் வழிநடத்தும் ஆற்றல் கொண்ட திசைமானி என்றால் அது மிகையல்ல.எத்தனை சோதனைகள் வாழ்வில் வந்த போதும் அவற்றை எளிதில் முறியடித்து சிந்தனையிலும், செயல் முறைகளிலும் உலகமே வியந்து நோக்கும் வகையில் வெற்றி கண்டவர் அம்மா.

 எந்தப் பணியாக இருந்தாலும், எத்தகைய சூழலில் தள்ளப்பட்டாலும், ஒப்பாரும், மிக்காரும் இல்லாத வகையில் தன் கடமைகளை கர்ம சிரத்தையுடன் செய்து முடித்தவர் அம்மா என்பதை, அவருடைய வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயமும் விளக்கிச் சொல்லும்.

 ‘ஒரு மாணவி’ என்ற வாழ்வின் தொடக்க நிலையில் அவர் நிகரில்லாத மாணவி. பாடம், படிப்பு, வகுப்பு என்பவை மட்டும் அல்ல. பள்ளிக்கூடத்தின் அனைத்து விளையாட்டுப் போட்டிகளிலும் அவர் தான் முதலிடம். எதைப் படித்தாலும் அதை முழுமையாகவும், ஆழமாகவும் படித்து, அதிலிருந்து பெற வேண்டிய பாடத்தை நூற்றுக்கு நூறு கற்றுக்கொண்டவர் என்பதை அவருடன் கலந்துரையாடியவர்கள் நன்கு அறிவார்கள். எந்தப் பொருளைப் பற்றிப் பேசினாலும் அதன் உச்சத்திற்குச் சென்று, முழுமையான அறிவுடனும், தெளிவுடனும் பேசுவார் நம் அம்மா.

 கலைத் துறைக்குள் மிகவும் இளம் வயதில் அடியெடுத்து வைத்த நாள் முதல், அந்தத்துறையில் இருந்து விடைபெறும் நாள் வரை, தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் என்று எல்லோரும் பாராட்டும் வகையில் தனது முழு மூச்சுடனும், முயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும், தான் ஏற்றுக்கொண்ட பொறுப்புக்கு நீதி செய்பவராக விளங்கியவர் நம் அம்மா.

 தமிழ் நாட்டு மக்களுக்கு, தான் ஆற்ற வேண்டிய மாபெரும் நன்றிக்கடனாக, அ.தி.மு.க. ஆரம்பித்த எம்.ஜி.ஆர்., தனக்குப் பின்னால் இந்த இயக்கத்தை வழி நடத்த அறிவும், ஆற்றலும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட ஒருவர் வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்துத் தந்த நல்முத்து அல்லவா நம் அம்மா.

 அரசியல் உலகிற்குள் புகுந்தவுடன் அம்மா கண்ட சூழ்ச்சிகளும், சதிச் செயல்களும், வேதனை தரும் வார்த்தை அம்புகளும், நம்பிக்கை துரோகங்களும் கொஞ்சமா? ஆனால், கர்மயோகியான அம்மா கடமையில் தவறாத, துறவிகளுக்கே உரிய நெஞ்சுறத்தோடு ஒரு துறவியின் மனநிலையோடு எதிர்ப்புகளை முறியடித்தார்கள்; இமாலய சாதனைகள் பல படைத்தார்கள்.

 பகைவர்களை மன்னித்தார்கள். பழிச்சொல் கூறியவர்களையும், பாசத்துடன் ஏற்றுக் கொண்டார்கள். உடன் இருந்தே குழி பறித்தோரையும், கொடுஞ் செயல் செய்தோரையும் கூட, குணம் என்னும் குன்றேறி நின்று ஏற்றுக்கொண்டார்.

 ஆட்சிப் பொறுப்பில், முதல்-அமைச்சராக மட்டும் அல்ல எதிர்க்கட்சித் தலைவராகவும், எந்தப் பொறுப்பிலும் இல்லாமல் போன நிலை வந்த போதும், தன் வாழ்வின் இறுதி நேரத்திலும் ஏற்றுக்கொண்ட பொறுப்பிற்கு எந்தெந்த வகைகளில் உழைக்க முடியுமோ அவை அத்தனையும் முழு மனதோடும், முழு ஆற்றலோடும் செய்து முடித்தார் நம் அம்மா.

 எத்தனை பேருக்கு தன் சொந்த பொறுப்பில் கல்வி கொடுத்தார்!

எத்தனை பேரின் கண்ணீரை தன் அன்புக்கரங்களால் துடைத்தார்!

கழகத்தின் ஒன்றரை கோடித்தொண்டர்களுக்கு மட்டுமல்லாமல்,

தமிழ்நாட்டு மக்களுக்கே தாயாக வாழ்ந்தவர் அம்மா.

அம்மாவின் வாழ்வு அழகானது; அவரைப் போலவே.

 இன்று, அம்மா கட்டிக் காத்த இயக்கம் கழக உடன்பிறப்புகளின் அயரா முயற்சியையும், தளரா நெஞ்சுறுதியையும், தாய்க்கு மகனும், மகளும் ஆற்ற வேண்டிய நன்றிக் கடன்களையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.

 ஏழை, எளிய மக்கள்; அதிகாரத்தின் ஒரு துளியை யேனும் அனுபவித்திராத மக்கள்; ஜனநாயகத்தின் மூலம் மட்டுமே பலம் பெற்று குரல் எழுப்பும் வாய்ப்பு பெற்ற மக்கள்; பிறப்பாலும், வாழ்க்கையின் சூழல்களாலும் எப்பொழுதும் சூறாவளியில் சிக்கிய சருகு போல் அல்லல்படும் பல கோடி மக்கள், இவர்கள் எல்லாம் ஏற்றம் பெற வேண்டும். மக்களாட்சியின் மகத்தான சாதனைகளில் இவர்கள் பங்கு பெற வேண்டும் என்பதற்காகத் தான் என்னுடைய காலத்திற்குப் பிறகும் அ.தி.மு.க. ஆயிரம் ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும். மக்கள் பணியாற்றும் என்று சட்டமன்றத்தில், வேறு எந்தக் கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சரும் சொல்லாத மன உறுதியோடு சபதமேற்று சூளுரைத்தார் நம் அம்மா.

 தேர்தல் வெற்றிகளும், தோல்விகளும் எல்லோரும் பார்த்தவைதான். ஆனால், துவண்டுவிடாத நெஞ்சுறத்தோடு கழகத்தைக் காப்பாற்றவும், தமிழ்நாட்டு மக்களுக்கு தொண்டாற்றவும், நம்மை நம்பி அம்மா விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிக்கவும், நம் அன்புத்தாயின் சபதத்தை நாமும் ஏற்போம்; கழகத்தை அரியணையில் அமரச் செய்வோம்.

 “நீடு துயில் கொள்ளும் எங்கள் அம்மாவே, உங்கள் பிள்ளைகள்,

உங்கள் நம்பிக்கையை வீண்போகச் செய்ய மாட்டோம்.

கழகத்திற்கு வெற்றியை ஈட்டி உங்கள் ஆன்மாவை மகிழ்விப்போம்”

என்பது அம்மா பிறந்த நாளில் நமது சூளுரையாக அமையட்டும்.

 இவ்வாறு அவர்கள் வெளியிட்ட செய்தியறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நீட் விலக்கு மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்ததாக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்றைய தினம் அறிவித்திருந்ததை அடுத்து, குடியரசுத் தலைவரிடம் 3 மாதங்களில் மசோதாவுக்கு ஒப்புதல் பெறவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டு மாணவர்களுக்கு விலக்கு அளித்து தமிழக சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவை 86 நாட்கள் ஆய்வுக்குப் பின் மத்திய அரசுக்கு ஆளுனர் அனுப்பி வைத்துள்ளார். இதை எண்ணி ஆறுதல் பட முடிகிறதே தவிர, மகிழ்ச்சியடைய முடியவில்லை. அதற்கு காரணம் நாம் இன்னும் முழு கிணற்றை தாண்டவில்லை.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்; 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் சட்ட முன்வரைவு தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதை 142 நாட்கள் ஆய்வுக்குப் பிறகு பிப்ரவரி ஒன்றாம் தேதி அரசுக்கு ஆளுநர் திருப்பி அனுப்பினார். தொடர்ந்து மார்ச் 8-ஆம் தேதி சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட சட்ட முன்வரைவைத் தான் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளார். அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும்.

ஆனால், நீட் விலக்கு சட்டமுன்வரைவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பதற்காக நடத்தப்பட்ட போராட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, அது அவ்வளவு எளிதானது அல்ல. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு அதிகபட்சமாக ஒரு வாரத்தில் ஆளுநர் மாளிகை வழியாக குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், முதல் முறை நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு 142 நாட்கள் கழித்து திருப்பி அனுப்பப்பட்டது, அதன்பின் மீண்டும் நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வரைவு 86 நாட்கள் கழித்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கான மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என மொத்தம் 234 நாட்களை இதற்காக செலவழிக்க வேண்டியிருந்தது.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் விடுதலை தொடர்பான மாநில அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும் விஷயத்தில் தமிழக ஆளுநர் மாளிகை நடந்து கொண்ட முறையை உச்சநீதிமன்றம் கடந்த வாரம் கடுமையாக விமர்சித்திருந்தது. நீட் விலக்கு சட்டத்திலும் கூட அதே போன்ற விமர்சனத்தை எதிர்கொள்ளக் கூடாது என்ற எண்ணம் காரணமாகக் கூட நீட் விலக்கு சட்ட முன்வரைவை குடியரசுத் தலைவருக்கு ஆளுனர் அனுப்பி வைத்திருக்கலாம். எப்படியாக இருந்தாலும் இது தகுதிச் சுற்றில் பெற்ற வெற்றியைப் போன்றது தான். 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டம் இதே போன்ற கட்டத்தை மிக எளிதாக கடந்து விட்டிருந்தது.

நீட் விலக்கு சட்டம் ஆளுநர் மாளிகையை கடப்பதற்கே 234 நாட்கள் என்றால், குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற எவ்வளவு காலம் ஆகும்? அதை விரைவுபடுத்துவதற்கு எவ்வளவு வேகமாக செயல்பட வேண்டும்? என்பதையெல்லாம் கருத்தில்கொண்டு அதற்கான உத்திகளை அரசு வகுக்க வேண்டும். அப்போது தான் நீட் விலக்கு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான நோக்கத்தை நம்மால் அடைய முடியும்.

2022-ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ் படிப்புக்கான நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 17-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகி, அதனடிப்படையில் செப்டம்பர் மாத இறுதியில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடங்கும். மாணவர் சேர்க்கை தொடங்குவதற்கு முன்பாக நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்று விட்டால் கூட, நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையை 12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மேற்கொள்ள முடியும். 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு நுழைவுத் தேர்வு ரத்து சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட போது, அதற்கு 83 நாட்களில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறப்பட்டது. இப்போது 3 மாதங்களுக்குள் ஒப்புதல் பெற வேண்டியது கட்டாயமாகும்.

2017-ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என்று கூறி மத்திய அரசு திருப்பி அனுப்பி விட்டது. அதை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இந்த முறை குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கான அனைத்து நியாயங்களையும் மத்திய அரசிடம் முன்வைக்க வேண்டும். சட்ட வல்லுநர்களின் ஆலோசனைகள், அரசியல் கட்சிகளின் ஆதரவு உள்ளிட்ட அனைத்தையும் பெற்று நீட் விலக்கு சட்ட முன்வரைவுக்கு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.''

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு பட்ஜெட் அறிவிப்புகள் பணம் படைத்தவர்களுக்கு சாதகமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்றைய தினம், மத்திய அரசு 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாசித்தார்.

இதில், சூரிய ஒளி மின்சார உற்பத்தி, ஏழைகளுக்கு வீடு கட்டும் திட்டம், மாநிலங்களுக்கான கடன் தொகை ஒதுக்கீடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள், ஏழைகளுக்கானதாக இல்லாமல் பணக்காரர்களுக்கு சாதகமாக இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில், “யாருக்காக பட்ஜெட்?... 10% பணக்கார இந்தியர்கள் நாட்டின் 75% செல்வத்தை வைத்துள்ளனர். கீழே உள்ள 60% பேர் 5% க்கும் குறைவாக வைத்திருக்கிறார்கள். வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை மற்றும் பட்டினி பெருகிவிட்ட நிலையில், தொற்றுநோய்களின் போது அதிக லாபம் ஈட்டியவர்களுக்கு ஏன் அதிக வரி விதிக்கப்படவில்லை?” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் இதுகுறித்து, “கடந்த இரண்டு ஆண்டுகளில் மனிதர்களுக்கு எதிரான துன்பங்கள் அதிவேகமாக வளர்ந்தபோது, உணவு, உரம் மற்றும் பெட்ரோலியத்திற்கான மானியங்கள் குறைக்கப்பட்டன. இது மக்களின் வாழ்வாதாரம் மீது இழைக்கப்படும் கொடூரமான தாக்குதல்.

இந்தியாவில் இன்று 200 மில்லியன் பேருக்கு வேலைகள் இல்லை. நகர்ப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதமும் அறிவிக்கப்படவில்லை. MGNREGA ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.73 கோடியாக உள்ளது. இது கிட்டத்தட்ட ரூ.50 கோடி குறைந்துள்ளது. இது எங்கள் இளைஞர்களின் வாழ்வாதாரத்தின் மீதான குற்றவியல் தாக்குதல் தவிர வேறில்லை” என்றும் பதிவிட்டுள்ளார்.

``இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளாகிய உங்களுக்கும்தான் இருக்கிறது'' என்று அனைத்து மாவட்ட கலெக்டர்களை அலர்ட் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது பேசிய முதல்வர், இந்த அவசரக் கூட்டத்தை நமது அரசு ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதைவிட, இயற்கை ஏற்பாடு செய்திருக்கிறது என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும். இயற்கையோட அழைப்பை ஏற்று இங்கே கூடி இருக்கிறோம். இயற்கையை முறையாகக் கையாண்டால் அது கொடை! முறையாகக் கையாளவில்லை என்று சொன்னால், அதுவே பேரிடராக மாறிவிடும். இயற்கையை முறையாக எதிர்கொள்வதற்கு தவறும்போது, அது, தான் யார் என்பதை நமக்கு சுட்டிக்காட்டிவிட்டுச் சென்று விடுகிறது.

எனவே, இயற்கையை கொடையாக எதிர்கொள்ளப் போகிறோமா அல்லது பேரிடராக மாற்றப் போகிறோமா என்பது நம்முடைய கையில்தான் இருக்கிறது. இயற்கையின் சூழலானது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கிறது. சமீபகாலமாக அதன் மாறுதல் புதிராக இருக்கின்றது. குறிப்பிட்ட காலம் மழைக்காலம், குறிப்பிட்ட காலம் கோடைக்காலம் என்று வரையறுக்க முடியாத அளவுக்கு காலமாற்றம் இப்போது கடுமையாகி வருவதை அதிகாரிகள் அனைவரும் முதலில் உணர்ந்து செயல்பட வேண்டும்.

இயற்கையின் சீற்றம் அதிகமாக இருக்கும் காலத்தில் மக்களைக் காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கும், அரசு அதிகாரிகளாகிய உங்களுக்கும்தான் இருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைவாக எடுப்பது மட்டுமல்ல, எத்தகைய பேரிடரையும் தாங்கும் வல்லமை கொண்டவர்களாக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ளவும் வேண்டும். தமிழ்நாட்டில் இன்று முதல், வடகிழக்குப் பருவமழை துவங்கப் போகிறது என்றும், இந்த வடகிழக்குப் பருவமழைக் காலத்தில், தமிழ்நாட்டிற்கு இயல்பான மழைப்பொழிவு கிடைக்கப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். இந்த அக்டோபர் மாதத்திலேயே கன்னியாகுமரி, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்துள்ளது. மேலும் 17 மாவட்டங்களிலும் அதிக மழை பெய்துள்ளது. எனவே, நாம் கவனத்துடன் பணியாற்ற வேண்டிய காலக்கட்டத்தில் உள்ளோம்.

கடந்த 24-9-2021 அன்று, ‘வடகிழக்குப் பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய ஆயத்தப் பணிகள்’ குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தி, விரிவான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தலைமைச் செயலாளர் தலைமையில் 11-9-2021 அன்று முப்படையினைச் சார்ந்த அலுவலர்கள் உட்பட ஒன்றிய மற்றும் மாநில அரசு அலுவலர்களுடன் கூட்டம் நடத்தப்பட்டு, மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதித்து, பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதில் சொல்லப்பட்ட கருத்துகளை உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை. இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அரசு அமைப்புகளிலிருந்து வரப்பெறும் முன்னெச்சரிக்கை செய்திகள், சமூக ஊடகங்கள், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகவும், பொது மக்களுக்கும், மீனவர்களுக்கும் உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும்.

பேரிடர் காலங்களில் நன்கு சேவையாற்றக்கூடிய தன்னார்வத் தொண்டு அமைப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும். சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையமும், 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்களும், 24 மணி நேரமும் உரிய துறை அலுவலர்களோடு செயல்படவேண்டும். இந்த மையங்களை பொது மக்கள் 1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள் மூலம் தொடர்புகொள்ளலாம். இந்தத் தகவல் அனைத்துப் பொது மக்களுக்கும் தெரிந்திருக்க வேண்டும். 100 என்று சொன்னால், அது காவல் துறை. 108 என்று சொன்னால், அது அவசர ஆம்புலன்ஸ் என்று மக்கள் மனதிலே பதிந்திருக்கிறது. அதைப்போல, இந்த எண்களும் மக்கள் எளிதில் பயன்படுத்தும் சொற்களாக மாற வேண்டும்.

இந்த நேரத்தில் மீனவர்கள் குறித்து சிறப்புக் கவனம் செலுத்தியாக வேண்டும். ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்களுக்கும், கரையில் உள்ள மீனவர்களுக்கும், வானிலை முன்னறிவிப்பு குறித்து, நவீனத் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும், மீனவளத் துறை மூலமாகவும் தொடர்ந்து தகவல் தெரிவிக்க வேண்டும். இந்த மழைக்காலத்தில், அவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருந்துகொண்டேயிருக்க மீன்வளத் துறை தக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

அனைத்து மீனவர்களது உயிரும் நமக்கு முக்கியம் என்பதை கடலோர மாவட்டங்களைச் சார்ந்த ஆட்சியாளர்களும், காவல் துறை கண்காணிப்பாளர்களும் நினைவில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். பருவமழை காலத்தின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அளிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை நீங்கள் தவறாது பின்பற்ற வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் பகுதிக்கென தனித்தனியே பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். குறிப்பாக, ஏழை எளிய மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகள், கடலோர மீனவக் குடியிருப்புகள் ஆகிய இடங்களின் நிலைமையை இந்தக் குழுக்கள் மூலம் தொடர்ந்து கண்காணித்து, உரிய நடவடிக்கைகளை நீங்கள் மேற்கொள்ள வேண்டும்.

தூர்வாரப்பட்டுள்ள மழைநீர் வடிகால்கள், வரத்துக் கால்வாய்கள், நீர்வழிப் பாதைகள் உள்ளிட்டவை சரியாக உள்ளனவா என்பதை நீங்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அவசரகாலப் பணிகளை மாவட்டங்களில் மேற்கொள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள செய்தியை பார்த்திருப்பீர்கள். அனைத்து மாவட்டங்களுக்கும், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களுக்கும், கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கண்காணிப்பு அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள், மாவட்டத்தில் பாதிப்பிற்குள்ளாகும் அனைத்துப் பகுதிகளையும் ஆய்வு செய்து உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 25ம் தேதியன்று சென்னையின் பல்வேறு இடங்களுக்கு சென்று, நேரிடையாகப் பார்வையிட்டது அனைவருக்கும் தெரியும்.

காந்தி மண்டபம் சாலை மற்றும் இதர பகுதிகளில், வடிகால்கள் தூர்வாரக்கூடிய பணியினையும், வண்டல் வடிகட்டும் தொட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியினையும், மழை, வெள்ளநீர் தங்குதடையின்றி செல்லக்கூடிய வகையில் வேளச்சேரி ஏரி மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயில் ஆகாயத் தாமரையினை அகற்றும் பணியினையும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கழிவுகளை அகற்றும் பணியினையும், நாராயணபுரம் ஏரியில் அமைக்கப்பட்டு வரும் பெரும் வடிகால் பணியினையும் நேரிடையாக சென்று பார்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோல் நீங்கள் அனைவரும் பணிகளை முடுக்கி விட வேண்டும். செம்பரம்பாக்கம் மற்றும் புழல் ஏரிகளை கடந்த 20 ஆம் தேதியன்று பார்வையிட்டு, உரிய பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் பரவலாக மழைபெய்து வரும் நிலையில், பெரும்பாலான அணைகள், நீர்த்தேக்கங்கள், ஏரிகள் முழுகொள்ளளவை எட்டியுள்ளன. எனவே, முழுகொள்ளளவை எட்டியுள்ள அணைகள், நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

அணைகளில் உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி, அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். வெள்ள அபாயம் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தடி நீரைச் செறிவூட்டவும், வெள்ள பாதிப்புகளைத் தவிர்க்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அணைப் பாதுகாப்பு, அணைகள், நீர்த்தேக்கங்களிலிருந்து உபரி நீர் வெளியேற்றுவது தொடர்பான விதிமுறைகளைத் தவறாது பின்பற்றி, உபரி நீர்த் திறப்பு குறித்து பொது மக்களுக்கு உரிய முன்னெச்சரிக்கைகளை வழங்கி உபரி நீரைத் திறந்து விட வேண்டும்.

பருவமழை காலத்தில் பொது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை இருப்பில் வைப்பதற்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றவும், தாழ்வாகச் செல்லக்கூடிய மின்கடத்திகளைச் சரிசெய்திடவும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைநீர் தேங்குவதால் பயிர்கள் மூழ்கி சேதமாகும் சூழல் ஏற்பட்டு விடக்கூடாது. எனவே, வடிகால்களைத் தூர்வார வேண்டும். அறுவடை செய்த நெல்மணிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். மழைக் காலங்களில் நோய்கள் அதிகம் உருவாகி, பரவிடக்கூடிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதனைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நீங்கள் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உயிர்காக்கும் மருந்துகள், மருந்து உபகரணங்கள், பாம்புக் கடிக்கான மாற்று மருந்தும், ஆக்சிஜன் உருளைகள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகள் போன்றவற்றைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பாதிப்பிற்குள்ளாகும் மக்களை மீட்கும்போது, மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்களுக்கு முன்னுரிமை அளித்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை மாவட்ட ஆட்சியர்கள் தாமதமின்றி வழங்க வேண்டும். இதற்கு அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அனைத்துத் துறைகளுடைய ஒருங்கிணைப்புதான், அனைத்துப் பகுதிகளிலும் ஏற்படக்கூடிய அனைத்துப் பாதிப்புகளையும் தடுக்கும் என்பதை அனைவரும் நன்றாக உணர்வீர்கள். ‘இயற்கையை இயைந்து வெல்வோம்!’ என்ற அந்த உறுதியை நாம் எடுத்துக் கொள்வோம்" என்று பேசினார்.

வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சுராஜ் இயக்கத்தில் வைகைப்புயல் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. முழு நீள நகைச்சுவைப் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் வடிவேலுவுடன் ரெடின் கிங்ஸ்லி, குக் வித் கோமாளி சிவாங்கி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாடலான 'அப்பத்தா' அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வத் தகவலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானதாக தென்மண்டல வானிலை ஆய்வுமைய தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த அக்டோபர் இறுதியில் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துவருகிறது. டெல்டா மாவட்டங்கள் தொடங்கி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழை தொடர்ந்து குளிர்வித்து வருகிறது. இந்நிலையில், வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுமைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

இது, வரும் நவம்பர் 12-ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம், புதுவை கடற்கரை நோக்கி நகரக்கூடும் என்றும், இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 9-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் காரணமாக நவம்பர் 12-ஆம் தேதி வரை குமரிக்கடல், மன்னார்வளைகுடா, தமிழக கடற்கரை பகுதிகள், தெற்கு ஆந்திர கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும், மீனவர்கள் 12-ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையைப் பொறுத்த வரையில் நவம்பர் 10-ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழையும், 11, 12 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், 13-ஆம் தேதி ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இது புயலாக வலுப்பெற வாய்ப்பு இல்லை என்றும், ஆனாலும் கனமழை தொடர்ந்து இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதங்களில் மாற்றம் குறித்து இரு மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் மும்பையில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், 2021 - 22ம் ஆண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.5 விழுக்காடாக இருக்கும். 2022 - 23ல் 17.2 விழுக்காடாக உயரக்கூடும்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி மற்றும் பல்வேறு மாநிலங்களின் வாட் வரி குறைப்பு நடவடிக்கையால் நுகர்வு அதிகரித்திருக்கிறது. இதனால் தேவை அதிகரித்துள்ளது. வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை. ரெப்போ வட்டி விகிதம் 9வது முறையாக மாற்றமின்றி 4 சதவீதமாக தொடர்வதாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் மாற்றமின்றி 3.35 சதவிகிதமாக தொடர்வதாகவும், 5வது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதங்களில் மாற்றம் செய்யப்படவில்லை என்று கூறினார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டது, சட்டப்படி சரியா? தவறா? என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.

தாங்கள் அப்பா, அம்மா ஆகிவிட்டதாக தமிழ் சினிமாவின் நட்சத்திரத் தம்பதியான 'நயன்தாரா - விக்னேஷ் சிவன்' தம்பதி வெளியிட்டுள்ள அறிவிப்பு தான் சமூக வலைதளங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

தமிழ் சினிமா ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாரா. விக்னேஷ் சிவன் இயக்கிய 'நானும் ரவுடி தான்' படத்தில் நடித்ததன் மூலம் இருவருக்கும் காதல் அரும்பியது. இந்நிலையில் தான் கடந்த ஜூன் 9-ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

இந்நிலையில், திருமணமாகி 4 மாதங்கள் கழிந்த நிலையில், நேற்றைய தினம் தாங்கள் அம்மா, அப்பா ஆகியுள்ளதாகவும், தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இதுகுறித்து அவர் ட்விட்டரில், "நயனும் நானும் அம்மா & அப்பா ஆகிவிட்டோம். எங்களுக்கு
இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. உங்கள் அனைவரின் ஆசியும் எங்களுக்கு வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.

விக்னேஷ் சிவன் பதிவிற்கு வாழ்த்துகள் குவிந்த அதே சமயம், சில சர்ச்சையான கேள்விகளும் இணையத்தை நிறைத்தன. திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில், குழந்தை பிறந்துள்ளதாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பு சர்ச்சைக்குறிய கேள்விகளையும் கருத்துகளையும் இணையத்தில் உலவவிட்டது.

அதைத்தொடர்ந்து நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் பிறகும், திருமணமான நான்கே மாதங்களில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது சட்டப்படி குற்றம் என்றும், அதற்கு அனுமதியில்லை என்றும் சில கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "விதிமுறைகளுக்கு உட்பட்டு 21 வயது முதல் 36 வயது வரையிலான ஒரு பெண் கணவர், பெற்றோர் அனுமதியுடன் கருமுட்டையைத் தரலாம் என்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இது செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Director of Medical service (DMS) மூலமாக நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி விதிமுறைகளுக்குட்பட்டு தான் வாடகைத்தாய் முறையில் குழந்தை பெற்றுள்ளனரா என்பது குறித்து விசாரிக்கப்படும்" இவ்வாறு தெரிவித்தார். 

வண்டலூர் உயிரியல் பூங்காவில் கரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த ஜெயா என்ற 17 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தை அடுத்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணியாற்று ஊழியர்கள் 76 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து உயிரியல் பூங்கா நிர்வாகம், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கு தொற்றுப் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. மேலும் தேதி குறிப்பிடாமல் வண்டலூர் உயிரியல் பூங்காவும் மூடப்பட்டது.

இந்த நிலையில், பூங்காவில் இருந்த 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை கரோனா பரிசோதனைக்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தது. ஆனைமலையிலிருந்து கொண்டு வரப்பட்டு 13 ஆண்டாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த சிறுத்தை ஜெயா.

கடந்த வாரம் இதே பூங்காவில் இருந்த விஷ்ணு என்ற ஆண் சிங்கம் உயிரிழந்த நிலையில், தற்போது சிறுத்தை ஒன்று பலியாகியுள்ளது. மேலும், உயிரியல் பூங்காவில் உள்ள விலங்கினங்களுக்குத் தொற்றுப் பரவாமல் தடுக்கவும், உயிரிழப்புகளைத் தடுக்கவும் பூங்கா நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, ஒவ்வொரு விலங்குகளையும் உரிய இடைவெளிகளில் வைத்து பராமரிப்பது, அவற்றுக்கென தனித்தனியாக பணியாளர்களை நியமித்து கண்காணிப்பது, பணியாளர்களுக்கு கவச உடைகளை வழங்குவது, விலங்குகளுக்கு அளிக்கப்படும் உணவுகளை பரிசோதித்து கொடுப்பது என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை நடப்பு மாதத்தில் 17 நாட்கள் அதிகரித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கொந்தளிப்பில் மக்கள் இருக்கின்றனர்.

சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு மாற்றி அமைத்து வருகிறது. நடப்பாண்டில் ஜனவரி மாதத்தில் இருந்து தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையை அதிகரித்து வருகின்றனர். இதனால், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் பெட்ரோல் ரூ.106க்கு அதிகமாகவும், டீசல் ரூ.100க்கு அதிகமாகவும் விற்பனையாகிறது. நடப்பு மாதத்தில் (அக்டோபர்) கடந்த 1ம் தேதியில் இருந்து இன்று வரையிலான 20 நாட்களில், 3 நாட்களை தவிர மற்ற 17 நாட்களும் விலையேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.103.31க்கு விற்கப்படுகிறது. டீசல் விலை ரூ.98.92ல் இருந்து 34 காசுகள் உயர்ந்து ரூ.99.26க்கு விற்கப்படுகிறது. பெட்ரோல், டீசலின் தொடர் விலையேற்றத்தால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை பொதுமக்களும், காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் வலியுறுத்தியுள்ளனர்.

தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு கண்கொள்ளவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையான வேதனையில் இருக்கின்றனர். வாக்களித்த மக்களை மத்திய அரசு வாட்டி வதைப்பதாக கொந்தளிக்கின்றனர்.

சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் கடைகள் மற்றும் அலுவலகங்களிலும் 4வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை தி.நகரை தலைமையிடமாக கொண்டு கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் சூப்பர் சரவணா ஸ்டோர், சரவணா செல்வரத்தினம் ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் நகைக்கடை, பர்னிச்சர் கடைகள் இயங்கி வருகிறது. பல பகுதிகளில் கிளைகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதை தொடர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் உள்ள சரவணா செல்வரத்தினத்திற்கு சொந்தமான 12 இடங்களில் கடந்த 1ம் தேதி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

முதல்நாள் சோதனையில் கடந்த 2 ஆண்டுகளில் கடைகளில் நடந்த வியாபாரம் தொடர்பான ஆவணங்கள்கைப்பற்றி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் வரி ஏய்ப்புக்கான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து உரிமையாளர்கள், மற்றும் கடைகளின் மேலாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சரவணா செல்வரத்தினம் நகைக்கடைக்கு கொள்முதல் செய்யப்பட்ட நகைகள் விவரங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. 2020ம் ஆண்டு வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டிய ஆவணங்களை வைத்தும் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்தும் அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்து வருவதாக கூறப்படுகிறது.

வருமான வரித்துறையின் 4 நாள் சோதனையால் நேற்றும் பொருட்களை வாங்க கடைகளுக்கு வந்த பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோல் கடைகளில் இருந்து ஊழியர்கள் யாரையும் வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. இந்த சோதனை முடிவில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை கணக்காய்வு செய்த பிறகு தான் எவ்வளவு கோடி மத்திய அரசுக்கு வரிஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்று தெரியவரும் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் வன்னியர்களுக்கு போதுமான இட ஒதுக்கீடு இல்லையெனக் கூறி பாட்டாளி மக்கள் கட்சி நீண்ட காலமாக போராட்டங்களை நடத்திவந்த நிலையில், 1989-ல் இருந்த தி.மு.க. அரசு, பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டிற்குள் "மிகப் பிற்படுத்தப்பட்டோர்" என்ற பிரிவை உருவாக்கியது. அதில் வன்னியர் உட்பட வேறு பல சாதியினரும் இடம்பெற்றனர்.

இருந்தபோதும், வன்னியர்களுக்கு எனத் தனியாக 20 சதவீத உள் ஒதுக்கீடு தர வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அதுமட்டுல்லாது, அ.தி.மு.கவுடன் கூட்டணி நீடிக்க வேண்டும் என்றால் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிடிவாதத்தில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தது.

வேறு வழியின்றி அ.தி.மு.க. அரசு, 2021-ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பாக தமிழக அரசு இது தொடர்பாக ஒரு அவசரச் சட்டத்தை நிறைவேற்றி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அளிப்பதாக அறிவித்தது.

இந்த அவசரச் சட்டத்தை முன்மொழிந்து தமிழக சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் ஆகியோர் பிற சாதியினருடன் போட்டியிட்டு உரிய பலன்களை, சட்டப்படியான பங்கினைப் பெற இயலவில்லை என்பதாலும் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கையில், அரசின் நியமனங்களில் வன்னிய குல சத்ரியர்களுக்கு தனிப்பட்ட ஒதுக்கீடு வழங்கக்கோரி அவர்களிடமிருந்து முறைப்பாடு வந்துள்ளது.

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்குள் பல்வேறு பிரிவினர்களுக்காக உள் ஒதுக்கீடு வழங்குவதற்காக பல்வேறு சமூகத்தினரால் வைக்கப்பட்ட கோரிக்கைகளை ஆய்வுசெய்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினரின் சமமான வளர்ச்சியை உறுதிப்படுத்த, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவனர் (வன்னியர்) 10.5 சதவீதம், சீர் மரபினருக்கு 7 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5 சதவீதம் என மூன்று பிரிவுகளாக உள் ஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்துள்ளனர். ஆணையத்தின் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள அதற்கேற்ப இட ஒதுக்கீட்டுக் கொள்கையை நிறைவேற்ற அரசு முடிவுசெய்துள்ளது." என்று கூறினார்.

மேலும் இது தற்காலிகமான ஏற்பாடுதான் என்பதையும், சாதிவாரிக் கணக்கீடு முடிந்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், தென் மாவட்டத்தில் இந்த சட்டத்துக்கு எழுந்த எதிர்ப்பால் தேர்தல் பிரச்சாரங்களின்போது இது தற்காலிக ஏற்பாடு என்பதை சில அமைச்சர்கள் மீண்டும் வலியுறுத்திக் கூறவேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேநேரத்தில், தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போது எதிர்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு என்பது அ.தி.மு.க. அரசு செய்துள்ள ஒரு நாடகம், இது செல்லாது, இது முறையாக அறிவிக்கப்படவில்லை என்று விமர்சனம் செய்தார். அதேநேரத்தில் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இந்த இடஒதுக்கீடு சட்டப்படி செய்து தரப்படும் என்று வாக்குறுதியாகவே அளித்தார்.

அதேபோன்று, தேர்தல் முடிந்து மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு, இந்த உள் ஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கான கோரிக்கைகள் தொடர்ந்து எழுந்து வந்தன. இந்த நிலையில்தான், இது தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு ஜூலை 26-ம் தேதி வெளியிட்டது. இந்த இட ஒதுக்கீட்டை எப்படி அளிக்க வேண்டும் என்பதற்கான வழிமுறைகளையும் அறிவித்தது.

இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்றிருக்கிறது. பா.ம.க நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். அதன் தொடர்ச்சியாக இடஒதுக்கீடு நடைமுறைக்கு வர தொடங்கியது.

இந்தநிலையில், வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு அரசாணைக்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், ‘வன்னியர்களுக்கு 10.5 விழுக்காடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணை ரத்து’ செய்யப்படுதாக தீர்ப்பு அளித்துள்ளனர்.

இந்த தீர்ப்பு வன்னியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக பாட்டாளி மக்கள் கட்சி அடுத்த கட்டமாக இது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். அதேநேரத்தில், தமிழக அரசு இந்த தீர்ப்பு எதிராக மேல்முறையீடு செய்யும் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்பட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

வன்னியர்களுக்கான 10.5% உள் இட ஒதுக்கீடு அரசாணையை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

வன்னியர்களுக்கு கல்வி மற்றும், வேலை வாய்ப்பில் 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, தமிழக அரசின் அரசாரணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. அரசு தரப்பு வழக்கறிஞர் குமரன் தாக்கல் செய்துள்ள 100 பக்கங்களை கொண்ட இந்த மனுவில், நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டை மீறாமல் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டில்தான் உள் ஒதுக்கீடு தரப்பட்டது. உள் ஒதுக்கீடு என்பது வன்னியர் சமுதாயத்துக்கானது மட்டுமல்ல, 7 பிரிவினருக்கானது. அரசியலமைப்பு சட்டத்தின் படி உள் ஒதுக்கீடு தந்து சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது. ஏற்கெனவே முஸ்லிம் பிரிவினருக்கு தனி இட ஒதுக்கீடும், அருந்ததியினருக்கு உள்ஒதுக்கீடும் வழங்கப்பட்டுள்ளது. கல்வி, வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியருக்கு உள் ஒதுக்கீடு தரப்பட்டது.

ஒட்டுமொத்த நிர்வாகமும் பெரும் இன்னல்களை இந்த தடை உத்தரவின் மூலமாக அரசு சந்தித்து இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தவறாகவும், தற்போதுள்ள சட்ட விதிமுறைகளுக்கு முரணாக இருக்கிறது. உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய உத்தரவுகளை பிறப்பிப்பதற்கான அத்தனை முகாந்திரங்களும் இருக்கிறது. தமிழக அரசுக்கு மட்டுமல்லாமல் மாநில அரசுகளுக்கு இத்தகைய உள்ஒதுக்கீடுகளை கொண்டு வருவதற்கான அதிகாரம் இந்திய அரசியல் சாசனமே வழங்கி இருக்கிறது. அது மாநில உரிமைகளுக்கு கீழ் வரக்கூடியது.

தமிழக அரசு 69% இட ஒதுக்கீடு முறையை பின்பற்றலாம் என்ற விதிமுறை உள்ளது. அதனை மீறாமல் அதிகார வரம்பிற்கு உட்பட்டு நாங்கள் உள் இடஒதுக்கீட்டினை கொண்டு வந்துள்ளோம். வேறு மாநிலங்களில் உள்ள உள் இடஒதுக்கீடு முறைகள் மற்றும் அவற்றின் மீதான நீதிமன்ற தீர்ப்புகள் குறித்தும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை வரும் திங்களன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பண மோசடி வழக்கில் கைதான அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் காவல்துறையினர் விடிய விடிய விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

அரசு துறைகளில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.3 கோடியே 10 லட்சம் மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் கர்நாடகாவில் நேற்று கைது செய்தனர். ராஜேந்திர பாலாஜிக்கு அடைக்கலம் தந்ததாக பாஜக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியை தனிப்படை போலீசார் தமிழ்நாடு அழைத்து வந்து, விருதுநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதன்பின்னர், ராஜேந்திரபாலாஜி விசாரணைக்காக நேற்று இரவு விருதுநகர் மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டார். அங்கு மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், ராஜேந்திர பாலாஜி ஸ்ரீவில்லிபுதூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி பரம்வீர் முன் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என ராஜேந்திர பாலாஜி தரப்பில் வாதிட்டப்பட்டது. ஆனால், போலீசார் தரப்பில் ராஜேந்திர பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ராஜேந்திர பாலாஜிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, வரும் 20-ம் தேதி வரை ராஜேந்திர பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜேந்திர பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டார்.

"சாலை விபத்தினால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்‌ 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும். அப்படியானால் அதற்குப் பிறகு என்ன என்று நீங்கள் கேட்பது என்னுடைய செவிகளில் விழாமல் இல்லை" என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், அதற்கும் விளக்கம் அளித்துள்ளார்.

மேல்மருவத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் “இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்தை” தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "உயிர் காப்பான் தோழன் என்பார்கள். அத்தகைய தோழமை எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டம்தான் இந்த “இன்னுயிர் காப்போம் திட்டம்”. பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி நமது நாட்டிற்கே முன்னணி மாநிலமாக, பெருமை சேர்க்கக்கூடிய வகையில் நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு இந்தியாவில் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலத்தினுடைய முதலமைச்சர்களை எல்லாம் ஒப்பிட்டு, அதேபோல, தமிழகத்தின் முதலமைச்சராக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு உருவாக்கப்பட்டு அந்தப் பொறுப்பை ஏற்றிருக்கக்கூடிய எனக்கு கருத்துக் கணிப்புகளின் மூலமாக அவர்கள் எடைபோட்டார்கள். அப்படி எடைபோட்ட போது, இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலத்தின் முதலமைச்சர்களில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான் முன்னணியில் இருக்கிறார் என்று ஒரு செய்தியை போட்டார்கள். எனக்கு மகிழ்ச்சிதான், எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் மகிழ்ச்சிதான், தமிழ்நாட்டிற்கே மகிழ்ச்சிதான்.

நான் பல இடங்களில், பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்தியாவிலேயே இருக்கக்கூடிய முதலமைச்சர்களில் முதல் இடம் என்று சொல்வதைவிட பெருமை என்னவென்றால், இருக்கின்ற மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழ்நாடு தான் முதலிடத்தில் இருக்கிறது என்று சொல்ல வேண்டும், அதைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். கல்வியில், வேலை வாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், ஏற்றுமதியில், சமூக வளர்ச்சியில், மகளிர் மேம்பாட்டில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்க வேண்டும் என்று நாம் பாடுபட்டுக் கொண்டு இருக்கிறோம். அதே நேரத்தில் வறுமையில், பசியில், குற்றங்கள் நடப்பதில், சாலை விபத்துகள் நடப்பதில் குறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும்.

ஆனால், சாலை விபத்துக்களைப் பொறுத்தவரையில், நமது நாட்டில் அதிக உயிரிழப்புகள் ஏற்படக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து வருகிறது. அது உள்ளபடியே நமக்கு மிகுந்த வருத்தத்தை தந்துகொண்டிருக்கிறது. சாலை விபத்துகளால் ஏற்படக்கூடிய ஒவ்வொரு உயிர் இறப்பிலும், அந்த நபர் மட்டுமன்றி அந்தக் குடும்பத்தின் எதிர்காலமே ஒடுங்கி விடுகிறது, பல்வேறு சோதனைகளுக்கு ஆளாகிறது. சாலை விபத்துகளில் இறப்பவர்கள் பெரும்பாலும் இளம் வயதினர் என்பதையும் எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில், விலைமதிக்க முடியாத இளைஞர்களின் எதிர்காலத்தை சேர்த்தே எடுத்துச்சென்று விடுகின்றது.

சாலை விபத்துகளைக் குறைத்தும் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுத்தும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகின்றது. ஒவ்வொரு தனிமனிதரும் அவரவர் தரக்கூடிய அந்த உயிர் அவரது குடும்பத்துக்கு மட்டுமல்ல; இந்த அரசுக்கும் நாட்டுக்கும் மிகமிக முக்கியம் என்பதை நாம் அனைவரும் உணர்ந்தாக வேண்டும். இந்த வகையில் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைக் குறைக்கும் நோக்கத்தோடு தமிழ்நாடு அரசால் வகுக்கப்பட்டுள்ள திட்டம்தான் இந்த இன்னுயிர் காப்போம் என்கிற திட்டம். விபத்து நடக்கக் கூடாது. விபத்து காரணமாக எந்த உயிரும் பறிபோகக் கூடாது என்கிற அந்த நடவடிக்கைகளில் நாம் அதிகம் கவனத்தைச் செலுத்த வேண்டும். அதில் முழுமையாக ஈடுபட வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எல்லாம் அரசின் சார்பில், முதலமைச்சர் என்கின்ற அந்த முறையோடு நான் தெரிவித்திருக்கிறேன்.

விபத்தில் உயிர் போவதற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது - நேரமும் காலமும்தான். விபத்து நடந்ததும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்து விட்டால் நிச்சயமாக அந்த உயிரைக் காப்பாற்றிட முடியும். காலதாமதம் ஆகும்போது உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதனை மருத்துவர்கள் கோல்டன் ஹவர்ஸ் (Golden Hours) என்று சொல்வது உண்டு. விலைமதிக்க முடியாத அந்தத் தருணத்தில் எடுக்கும் முடிவுகள், துரிதமான செயல்பாடுகள்தான் மனித உயிர்களைக் காப்பாற்றுகிறது. விபத்தை எதிர்கொள்பவர் அடையக்கூடிய மாபெரும் துன்பம் என்பதும் இந்த நேரம்தான். அப்படிச் சேர்க்கப்படும் இடம், அரசு மருத்துவமனையா, தனியார் மருத்துவமனையா என்ற பாகுபாடு இல்லாமல் இருந்திட வேண்டும். அதை முழுமையாக தவிர்க்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதனால்தான் இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான ஒரு அம்சமாக - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தனியார் மருத்துவமனைகளில், முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவச் சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளோம்.

48 மணி நேரத்திற்குள் உரிய சிகிச்சை அளித்து உடனடியாக கவனித்து விட்டால், பெரும்பாலும் உயிர்கள் காக்கப்படும். அப்படியானால் அதற்குப் பிறகு என்ன என்று நீங்கள் கேட்பது என்னுடைய செவிகளில் விழாமல் இல்லை. அதன்பிறகுதான் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. அதில் சிகிச்சை பெறலாம். சாலை விபத்துகளால் பாதிக்கப்படும் பொதுமக்களுக்குத் தேவைப்படும் அறுவைச் சிகிச்சைகளும் தீவிர சிகிச்சைகளும் முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே அந்தக் கவலையும் யாருக்கும் வேண்டாம்.


உயிர் காக்கக் கூடிய அவசர சிகிச்சைகள் பெரும்பாலும் முதல் 48 மணிநேர காலத்திலேயே தேவைப்படக்கூடிய சூழ்நிலையில், இந்த அவசர சிகிச்சைகளை மேற்கொள்வதில் பல தனியார் மருத்துவமனைகள் தயக்கம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது. இதனால், விபத்துகளில் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகள் அருகில் இருந்தாலும், பல நேரங்களில் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு நோயாளிகளை கொண்டு செல்லக்கூடிய, அவர்களுக்கு அவசர சிகிச்சை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடுகிறது. இந்தப் பிரச்னைகள் அனைத்திற்கும் நல்லதொரு தீர்வாகத்தான் இந்தத் திட்டம் இன்றைக்கு தொடங்கப்பட்டுள்ளது.

முதல் 48 மணிநேரத்தில் தேவைப்படக்கூடிய அவசர சிகிச்சை அனைத்தையும் அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளக்கூடிய நோக்கத்தோடுதான் இந்தத் திட்டத்தை இன்றைக்கு நான் தொடங்கி வைத்திருக்கிறேன். சாலை விபத்தினால்‌ பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல்‌ 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவை தமிழ்நாடு அரசே ஏற்றுக் கொள்ளும்.

இத்திட்டத்திற்கென அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக, முதலமைச்சரின்‌ மருத்துவக்‌ காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர்‌, வேறு நாட்டவர்‌ என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் - அதாவது தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர் அனைவருக்கும் முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்படும் மருத்துவமனையிலேயே முதல் 48 மணி நேரம் வரை அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை முறைகளில் (81 treatment packages) சிகிச்சை அளிக்கப்படும்.

48 மணி நேரத்திற்கு மேலும் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நிலையற்றவராக (unstable) இருந்தால் அல்லது மேலும் தொடர் சிகிச்சை நடைமுறைகள் தேவைப்பட்டால், முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அல்லது தகுந்த வழிகாட்டுதல்களின்படி தொடர் சிகிச்சைகள் நிச்சயமாக வழங்கப்படும்.

விபத்துகள் நடந்தால் அரசு எப்படி உதவும் என்பதைத்தான் இதுவரை நான் சொன்னேன். ஆனால் அரசாங்கத்தில் மிகமுக்கியமான நோக்கம் விபத்தே இருக்கக் கூடாது என்பதுதான். விபத்துக்கு மிக முக்கியமான காரணம், அதிகப்படியான வேகம்தான். சாலைகளில் வாகனத்தை ஓட்டும்போது வேகத்தைக் குறையுங்கள். வேகத்தை உங்களது உழைப்பில், செயல்படுத்துங்கள். சாலைகளில், தெருவில் காட்ட வேண்டாம். அதில் உங்கள் வேகத்தை காட்ட வேண்டியதில்லை. இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். சிலர் ஹெல்மெட் வாங்கி பைக் முன்னால் வைத்திருப்பார்கள். போலீசைப் பார்த்ததும் போட்டுக்கொள்வார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, பிரபல நரம்பியல் மருத்துவர் ராமமூர்த்தி அவர்கள் தலைவரைச் சந்தித்தபோது ஒரு செய்தியைச் சொன்னார். “நாட்டில் அதிகப்படியான ஆக்சிடெண்ட் நடக்கிறது, சின்ன சின்ன பசங்க எல்லாம் பைக் எடுத்துட்டுப் போய் தலையை உடைச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு வர்றாங்க, அதனால ஹெல்மெட்டைக் கட்டாயம் ஆக்க வேண்டும்” - என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

ஹெல்மெட் கம்பெனிக்கு நான் லாபம் பார்த்து தர்றேன்னு சொல்லி ஒரு பிரச்சாரத்தை நடத்துவார்கள் என்று தலைவர் அவர்கள் கிண்டலாகப் பதில் சொன்னார். உயிரைப் பற்றி கவலைப்படும் மக்கள் அவர்களாகவே ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள். ''ஹெல்மெட் போட்டா முடி உதிரும் என்று பலரும் போடாம இருக்காங்க, உனக்கு உயிர் முக்கியமா? முடி முக்கியமான்னு நான் கேட்டேன்' என்று அப்போது ராமமூர்த்தி அவர்கள் சொன்னார்கள். எனவே, இளைஞர்கள் அனைவரும் தங்கள் உயிரைக் காக்க கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.

இன்று கார்களின் விலைக்கு சமமாக பைக் விலை வந்துவிட்டது. சில பைக்குகள் கார்களை விட அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இந்த பைக்குகளை எல்லோரும் ஓட்டிவிட முடியாது. அதற்கான முழுமையான பயிற்சியும் திறமையும் இருப்பவர்கள்தான் இயக்க முடியும். பையன் கேட்கிறான் என்பதற்காக இப்படி விலை உயர்ந்த பைக்குகளை வாங்கிக் கொடுத்து பிள்ளைகளை இழந்த பெற்றோர்களையும் பார்க்கிறோம். ஆகவே, பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளுக்கு வாகனங்கள் வாங்கித் தருவதில் கவனமாக இருக்க வேண்டும். கார்களில் பயணம் செய்யும்போது, எப்போதும் சீட் பெல்ட் அணிய வேண்டும்.

மிக அதிகமான வேகத்தில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். இவை அனைத்தையும் விட சாலை விதிகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். சிவப்பு விளக்கு விழுந்தால் நிற்பதைக் கூட, தங்களுக்கு இழைக்கப்படும் அவமானமாக சிலர் நினைக்கிறார்கள். சாலை விதிகளைக் கடைப்பிடிப்பது என்பதைப் போலீஸுக்குப் பணிந்து போவதாக சிலர் நினைக்கிறார்கள். இல்லை, சாலை விதிகளைக் கடைப்பிடிப்பதன் மூலமாக ஒரு தனிமனிதரின் சமூகப் பண்பாடு வெளிப்படுகிறது. தனிமனித ஒழுக்கம் வெளிப்படுகிறது. அத்தகைய சமூகப் பண்பாடு கொண்டவர்களாக மக்கள் அனைவரும் செயல்படுவதன் மூலமாக விபத்து இல்லாத தமிழகத்தை நிச்சயமாக, உறுதியாக அமைப்போம்! அமைப்பதற்கு எங்களைப் போன்றவர்கள் மட்டுமல்ல, உங்களைப் போன்றவர்களும் இணைந்து கைகோர்த்து, இந்தத் திட்டத்திற்கு நாம் துணை நிற்போம் என்ற அந்த உறுதியை நீங்கள் அனைவரும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

 

 

``சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசு வழங்கப்படும்'' என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து போக்குவர்த்து துறை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை பொன்னான நேரத்தில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உதவி புரியும் நபர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பரிசு வழங்கும் திட்டம் ஒன்றினை அறிவித்துள்ளது.

பொன்னான நேரத்தில் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கும் நபர்களுக்கு ரூ.5000 பரிசாக வழங்கப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமானது சாலை விபத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவசரகால உதவியினை பொதுமக்கள் செய்யவேண்டும் என்பது ஆகும். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 5 முறை ஒரு நபருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்.

சாலை விபத்து நடந்த பின் காவல்துறையினர் அவ்விடத்தை பார்வையிட்டு விபத்தின் தன்மை குறித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிப்பர். அனைத்து விபத்துக்களும் மாவட்ட ஆட்சியரது தலைமையின் கீழ் இயங்கும் " மாவட்ட அளவிலான மதிப்பீட்டு குழு " ஆய்வு செய்யும்.
இதில் தெரிவு செய்யப்படும் நேர்வுகள் ரூ.5000 பரிசு தொகை வழங்குவதற்காக போக்குவரத்து துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் மகளுக்கு விடுக்கப்பட்ட பாலியல் அச்சுறுத்தல் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என விளக்கம் கேட்டு டெல்லி மகளிர் ஆணையம் டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இந்த தோல்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சாளர் முகமது ஷமிதான் காரணம் என சமூக வலைதளத்தில் தொடர் அவதூறுகள் பரப்பப்பட்டன.

இந்த அவதூறுகள் ஒரு கட்டத்தில் எல்லை மீறி பாகிஸ்தானுடன் ஷமியை ஒப்பிட்டு பேசும் அளவு சென்றன. இதனையடுத்து சச்சின் டெண்டுல்கர், கோலி உள்ளிட்டோர் ஷமிக்கு ஆதரவான கருத்துகளை தெரிவித்தனர்.

இதனையடுத்து கோலியின் – அனுஷ்கா சர்மாவின் 9 வயது மகளுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து டெல்லி காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்க டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த நோட்டீஸில் “கோலியின் மகள் மீதான அச்சுறுத்தல்கள் குறுத்து நாம் வெட்கப்பட வேண்டும், இந்த அச்சுறுத்தல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும், யாரேனும் கைது செய்யப்பட்டுள்ளார்களா என விளக்கம் அளிக்க வேண்டும்” என டெல்லி மகளிர் ஆணை தலைவர் ஸ்வாதி மாலிவால் டெல்லி காவல்துறைக்கு கோரியுள்ளார்.

முன்னதாக ஷமிக்கு ஆதரவாக பதிவிட்டிருந்த கோலி, “மதத்தின் அடிப்படையில் ஒருவரை விமர்சிப்பது என்பது மோசமான செயல்” என குறிப்பிட்டிருந்தார்.

மதுரையில், கழுவுநீர் தொட்டியின் சுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மூவர் விஷவாயு தாக்கி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சுத்திகரிப்புப் பணிகளுக்கு இயந்திரங்களைப் பயன்படுத்த அரசு ஏன் தயக்கப்படுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

”மதுரையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்கள் சரவணன் சிவக்குமார், லக்ஷ்மணன் ஆகியோர் விஷ வாயு தாக்கி ஒருவர் பின் ஒருவராக தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்தனர் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.

எத்தனை நாட்கள் கழிவுநீர் தொட்டியை மனிதர்களால் சுத்தப்படுத்த போகிறோம். சுத்திகரிப்பு இயந்திரங்களை வாங்க தமிழக அரசு தயங்குவதற்கு காரணம் என்ன? மனித உயிரை விடவா இயந்திரத்தின் விலை அதிகமாகிவிட்டது?

தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தகவல் படி, இந்தியாவில் அதிகப்படியான உயிரிழப்பு தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என்பது வருந்தத்தக்க செய்தி. குடும்பத்திற்கு இழப்பீடும் அரசுப் பணியும் தந்து ஆதரிக்க வேண்டும் என்று மாநில அரசை வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்’

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி 'சீர்மிகு நகரம்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் புது பொலிவு பெறும் வகையில் சுவரோவியங்கள் தீட்டும் பணியை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.


கோயம்புத்தூர் மாநகராட்சி 'சீர்மிகு நகரம்' திட்டத்தின் கீழ் St+art Art of India foundation எனும் அமைப்பின் 'கோவை கலைக்கூடம்' சார்பில் உக்கடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் புது பொலிவு பெறும் வகையில் சுவரோவியங்கள் தீட்டும் பணியை அமைச்சர் செந்தில் இன்று தொடங்கி வைத்தார்.

கோவை கலைக்கூடம் சார்பில் கடந்த அக்டோபர் 31ம் தேதி இதே உக்கடம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடிக்குமாடி குடியிருப்புகளில் வண்ண ஓவியம் தீட்டும் பணியினை அமைச்சர் தொடங்கி வைத்திருந்த நிலையில் முடிவுற்ற பணியை பார்வையிட்டார்.

இதன் பின்னர் வண்ண சுவரோவியங்கள் தீட்டிய ஓவியர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கினார். நவம்பர் 14 குழந்தைகள் தினம் சார்பில் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 60 குழந்தைகள் பங்கேற்ற சுவரோவியம் தீட்டும் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு சான்றிதழை வழங்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி, அப்பகுதி வாழ் மக்களைச் சந்தித்து அவர்கள் வழங்கிய கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் மதிப்பை அடிப்படையாக வைத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் மட்டுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர் விலையையும் தீர்மானிக்கின்றன. அந்த வகையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் மாதத்தில் முதல் மற்றும் பிற்பாதியில் மாற்றியமைக்கப்படும்.

இந்நிலையில் சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு , 900 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வீடுகளில் பயன் படுத்தப்படும், சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.

அதன்படி, ஒரு சிலிண்டர் விலை மேலும் 15 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 915 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 300 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் வடமாவட்டங்களில் கனிசமான இடங்களில் வெற்றி பெறும் கனவில் தனித்து களம் இறங்கியது பாட்டாளி மக்கள் கட்சி. ஆனால் 25 சதவீத வெற்றிக்கூட கிடைக்கவில்லை என்று கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 12ம் தேதி எண்ணப்பட்டது. இதில் ஆளும் தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. அ.தி.மு.க. படுதோல்வியை தழுவியது. அந்த கூட்டணியில் இருந்து விலகி தனித்து போட்டியிட்ட பா.ம.க. 47 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் பதவியை கைப்பற்றியது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வடமாவட்டங்களில்தான் அதிகம் நடைபெற்றது.  இந்த தேர்தலில் பா.ம.க. தனித்து போட்டியிடுவதால் அதிக இடங்களை கைப்பற்றும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்தனர். பா.ம.க. தலைமையும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தது. ஆனால், எதிர்பார்த்த வெற்றி பா.ம.க.வுக்கு கிடைக்கவில்லை. இதனால் கட்சியின் தலைமை கடும் அதிருப்திக்கு ஆளானது.

இந்தநிலையில், பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது. கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்பட லர் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள், இனி பா.ம.க. செயல்பாடுகள், எதிர்கால செயல் திட்டம், கூட்டணி நிலைப்பாடுகள் போன்ற பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன. கூட்டத்தில் நிர்வாகிகள் பலர் பல்வேறு கருத்துகளை முன்வைத்து பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் பேசிய கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கடும் கோபத்துக்கு ஆளாகிவிட்டாராம்.

"கட்சிக்கு யாரும் விசுவாசமாக வேலை செய்யவில்லை. அதனால்தான் வட மாவட்டங்களில் கூட நாம் எதிர்பார்த்த வெற்றியை நம்மால் பெற முடியவில்லை. இந்த தோல்வினால் நமக்கு இருந்த செல்வாக்கு குறைந்துவிட்டதாக தெரிகிறது. நமக்கு செல்வாக்கு உள்ள இடத்தையை நாம் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் என்ன அர்த்தம்" என்று நிர்வாகிகளை கடுமையாக சாடியிருக்கிறார் ராமதாஸ்.

"இனிமேல் கூட்டணி கிடையாது. யாராவது வேறு கட்சிக்கு மாற வேண்டும் என்று நினைத்தால் இப்போதே போய்விடுங்கள். இருப்பவர்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருந்து வேலை செய்ய வேண்டும்.  அடுத்து வரக்கூடிய மாநகராட்சித் தேர்தல்களில் கடுமையாக உழைத்து வெற்றிபெற வேண்டும். இதை மனதில் வைத்து பணியாற்றுங்கள்" என்று மீண்டும் கோபத்தில் பேசினாராம் ராமதாஸ்.

விரைவில் எல்லா நிர்வாகிகளும் கிராம் கிராமமாக சென்று மக்கள் பணியாற்றி கட்சியை உறுதியாக நிலை நிறுத்துங்கள். அதற்கு விசுவாசமாகவும், கடுமையாகவும் உழைக்க வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவையும் ராமதாஸ் பிறப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் சமந்தா.

தமிழ், தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் நடனமாடி அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒ சொல்றியா மாமா’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பரவி ஹிட்டடித்தது.

நாகசைதன்யாவுடனான விவாகரத்துக்குப்பின் சற்றே மனக்கவலையில் இருந்த சமந்தா, தற்சமயம் முழுவீச்சில் படங்களில் நடித்துவருகிறார். இவர் நடிப்பில் தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் தயாராகி வெளியீடுக்காகக் காத்திருக்கிறது. மேலும் தெலுங்கில் தயாராகும் புதிய படம் ஒன்றிலும் அவர் அடுத்ததாக நடிக்கிறார்.

இந்நிலையில், சமந்தா நடிப்பில், இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

காளிதாஸரின் நாடக நூலான சாகுந்தலம் நூலை கதையமைப்பாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நாடகத்தின் முதன்மைக் கதாபாத்திரங்களாக சகுந்தலா மற்றும் துஷ்யந்தன் ஆகியோர் நடித்திருப்பர்.

இக்கதாபாத்திரங்களில் ஒன்றான சகுந்தலா கதாபாத்திரத்தை சாகுந்தலா திரைப்படத்தில் சமந்தா ஏற்றுள்ளார். இவருடன் சேர்ந்து மோகன்பாபு, கௌதமி, அதிதி பாலன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நீலிமா குணா தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிஷர்மா இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் உருவாவதாக போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேடை நாடகக் கதை என்பதால் நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக சாகுந்தலம் இருக்கும் என்று நம்பலாம். இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பொங்கல் பரிசுத் தொகுப்பில் அரசு வழங்கிய பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை என்று புகார்கள் எழுந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் பரிசு பணமாக வழங்கப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு ஆண்டும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். கடந்த அதிமுக ஆட்சியின்போது பொங்கல் பரிசுத் தொகையாக ரூ.2000 பணம் மற்றும் பொங்கலுக்கான சமையல் பொருட்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசுத் தொகையாக அரசு சார்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மாற்றாக 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. சென்ற ஆண்டு போல் அரசு சார்பில் பொங்கல் பரிசாக பணம் அறிவிக்கப்படாதது பெரும்பாலானோருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. 

இதைத்தொடர்ந்து அரசு தரப்பிலிருந்து வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பின. தொகுப்பில் வழங்கப்பட்டிருந்த வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் தரமாக வழங்கப்படவில்லை என்றும், கடமைக்கு அரசு இவ்வாறு தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றுவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு அரசு தரப்பிலிருந்து பொங்கல் பரிசாக, சமையல் பொருட்களுக்கு பதில் ரூ.1000 வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. பணமாக வழங்குவது தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்கும் என்பதால் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் அரசு தரப்பிலிருந்து இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. 

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய் வீடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சினார்.

அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:

“தமிழால் இணைவோம்” என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை இருக்கிறது. மத மாயங்களையும் சாதிச் சழக்குகளையும் வீழ்த்தும் வல்லமை மொழிக்குத்தான் உள்ளது. அதனால்தான் தமிழால் இணைவோம் என்பதை நமது முழக்கமாகக் கொண்டுள்ளோம்.

உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் - பல்லாயிரம் மைல் கடந்தும் இன்று நாம் ஒன்றாகக் கூடி இருக்கிறோம் என்றால் - தமிழன் என்ற உணர்வோடு நாம் கூடி இருக்கிறோம். நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ்மொழிக்கு உண்டு.

'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்' என்பதை தமிழ் மண்ணில் விதைத்து மொழிப்பற்றும் - 'தமிழா! இன உணர்வு கொள்' என்று முழங்கி இனமான உணர்வும் ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்! மொழிக்காக போராடிய - வாதாடிய இயக்கம் மட்டுமல்ல, மொழிகாக்க தனது தேகத்தை தீக்குத் தின்னத் தந்த தீரர்களின் இயக்கம் தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

கழக ஆட்சி அமையும் போதெல்லாம் அது - இங்குள்ள தமிழர்களின் ஆட்சியாக மட்டுமில்லாமல் - உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் அனைத்து மக்களின் அரசாக கழக அரசு செயல்பட்டு வருகிறது.

உங்களில் பலருக்கும் தமிழ்நாட்டில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருக்கலாம் - ஆனால், தமிழ்நாடு அரசும் நமது அரசு என்று சொல்லிக் கொள்ளும் உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு. அதனால்தான் கழக அரசு அமைந்ததும் கடந்த செப்டம்பர் மாதம் அயலகம் வாழ் தமிழர்கள் நலன் காக்கக்கூடிய ஏராளமான அறிவிப்புகளை வெளியிட்டேன்.

நம்முடைய இனம் ஒரு நிலத்தில் - ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல. உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றத்திலேயே விரிவாக நான் பேசி இருக்கிறேன். வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள். வேலைகளைத் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள்.

இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன. எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய் வீடு.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் 2011-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் நாள் கழக அரசால் இயற்றப்பட்டுள்ளது. “வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம்” ஒன்றை உருவாக்கி அவர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்துவோம் என்று அறிவித்தோம்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் காரணமாக நம்மால் அமைக்க முடியவில்லை. அடுத்து வந்த ஆட்சியாளர்களும் இதனை அமைக்கவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்த நமது அரசு 'வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்' அமைக்கப்படும் என்பதை ஐந்தே மாதத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.

அரசு மற்றும் புலம்பெயர்ந்த தமிழர் பிரதிநிதிகள் பதிமூன்று பேரைக் கொண்டு இந்த வாரியம் அமைக்கப்படும். 5 கோடி ரூபாய் வெளிநாடு வாழ் தமிழர் நலநிதி என மாநில அரசின் முன்பணத்தைக் கொண்டு உருவாக்கப்படும்.

மூலதனச் செலவினமாக 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மற்றும் தொடர் செலவினமாக, நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 3 கோடி ரூபாய் ஆண்டுதோறும் ஒதுக்கப்படும் என்று அறிவித்தேன்.

வெளிநாடு வாழ் தமிழர் குறித்த தரவு தளம் (Database) ஏற்படுத்தப்படும்.

தமிழர்கள் பணியின் போது இறக்க நேரிட்டால், அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

தமிழர்கள் புலம்பெயரும்போது, பயண புத்தாக்கப்பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும்.

ஆலோசனை பெற வசதியாக கட்டணமில்லா தொலைபேசி வசதி மற்றும் வலைதளம், கைப்பேசி செயலி (Mobile application) அமைத்துத் தரப்படும். சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.

தமிழ்நாடு திரும்பியவர்களுக்கு குறு தொழில்கள் செய்திட, அதிகபட்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் மானியத்துடன் கூடிய கடன் வசதி செய்து தரப்படும். இதற்கென ஆறு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

வெளிநாடு வாழ் தமிழர்களின் முதலீடுகளை அரசு மற்றும் தொழில் நிறுவனங்களில் பாதுகாப்பான முதலீடு செய்ய ஏதுவான சூழல் உருவாக்கப்படும்.

தமிழர்கள், 'எனது கிராமம்' திட்டத்தின் மூலம் தங்களது சொந்த ஊருக்கு நன்மைகள் செய்து தரலாம். தமிழ்ப் பிள்ளைகள் தமிழ் கற்றுக்கொள்ள வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.

தமிழர்கள் அந்தந்த நாடுகளில் உருவாக்கியுள்ள நலச்சங்கங்கள் ஒருங்கிணைக்கப்படும் - என்று பல்வேறு அறிவிப்புகளைச் செய்தேன். இவை அனைத்துக்கும் சேர்த்து 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வரிசையில்தான், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 12-ம் நாள் உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாகக் கொண்டாடப்படும்.

இலங்கையில் இருந்து தமிழ்நாட்டை நோக்கி வந்த தமிழர்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு சமூக பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

கொரோனா என்ற பெருந்தொற்று காலமாக இல்லாமல் இருந்திருந்தால், இந்த விழாவை மிகப்பெரிய விழாவாக முன்னெடுத்திருப்போம். கொரோனா என்பதால் அது இயலவில்லை.

ஆனால் பரந்த உள்ளம் கொண்ட நாம், காணொலியில் பெரிய அளவில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். பல நாடுகளைச் சேர்ந்த, பல்வேறு பெருமக்கள், பல்வேறு தலைப்புகளில் பேச இருக்கிறீர்கள். உங்கள் அனைவரது உரைகளும் தமிழை - தமிழினத்தை - தமிழர்களை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். நம்மை பிளவுபடுத்தும் எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, நம்மை இணைக்கும் எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவையாக உங்களது உரைகள் அமைய வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் பிளவுகளுக்கு வெளிநாடுகள் சென்ற பிறகும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை என்பதைப் போல தமிழை - தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். அரவணைத்து வாழுங்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்களது பிள்ளைகளுக்கு தமிழ்நாட்டைக் காட்டுங்கள்.

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பண்பாட்டிலும் செழிப்பிலும் மேம்பட்ட இனம் நாம் என்பதை அவர்களை அழைத்து வந்து கீழடியை, ஆதிச்சநல்லூரைக் காட்டுங்கள்.

இங்குள்ள தமிழர்களுக்கு எல்லாமுமாய் இந்த அரசு இருப்பதைப் போலவே அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும். தமிழர் பண்பாட்டை இன்றைய தலைமுறைக்கு அறிமுகம் செய்ய - தமிழ் கற்பிக்க - ஒன்றாக இணைந்து ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க அனைத்தையும் தமிழ்நாடு அரசு நிச்சயம் செய்யும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

பிரதமர் நரேந்திர மோதியால் சில நாட்களுக்கு முன்பு கொடியசைத்து தொடங்கிவைக்கப்பட்ட வந்தே பாரத் அதிவேக இரயிலின் முன்பகுதி, எருமை மாடுகள் மீது மோதியதில் சேதமடைந்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மும்பையில் இருந்து காந்திநகர் நோக்கி வந்தேபாரத் ரயில் இன்று சென்றுகொண்டிருந்த சமயம், அகமதாபாத்திற்கு முன்னால் பட்வா மற்றும் மணிநகர் இடையே காலை 11 மணியளவில் அவ்வழியாக தண்டவாளங்களைக் கடந்த எருமை மாடுகள் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ரயிலின் முன்பகுதி சிறிய அளவில் சேதமடைந்தது. இச்சம்பவத்தை அடுத்து இரயில்வே ஊழியர் ஒருவர் உடைந்த இரயிலின் முன்பக்க பாகங்களை அகற்றும் காணொலி இணையத்தில் வெளியாகியுள்ளது. 

பிரதமர் மோடி கடந்த மாதம் காந்திநகர்-மும்பை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அதிவேக இரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து, காந்திநகரில் இருந்து அகமதாபாத்தில் உள்ள கலுபூர் ரயில் நிலையம் வரை பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. 

Source: NDTV News

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

தமிழகத்தில் 6,999 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியது. அரசு மருத்துவக்கல்லூரிகளில் 4,349 சுயநிதி மருத்துவக்கல்லூரிகளில் 2,650 இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

அரசு, சுயநிதி கல்லூரிகளில் 1,930 பி.டி.எஸ். இடங்களுக்கும் இன்று கலந்தாய்வு தொடங்கியது. சென்னையில் ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கலந்தாய்வு நடைபெறுகிறது.

முதல் நாளில் சிறப்புப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்கள் பங்கேற்க உள்ளனர். 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்லி மாணவர்களுக்கு நாளை, நாளை மறுநால் கலந்தாய்வு நடைபெறுகிறது.

கொரோனா சூழலை கருத்தில் கொண்டு பொதுப்பிரிவினருக்கு 30-ம் தேதி முதல் ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

எனது வீட்டிலிருந்து நகை, பணம் பறிமுதல் செய்யப்படவில்லை என்று முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்எல்ஏ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் கெரகோட அள்ளியில் உள்ள அவரது வீடு, அவரது உறவினர்கள் வீடுகள் மற்றும் தொடர்புடைய இடங்கள் என 58 இடங்களில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனை முடிவில் ரூ.2.88கோடி பணம் மற்றும் 6.637 கிலோதங்கம், 13.85 கிலோ வெள்ளிப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனிடையே, கெரகோடஅள்ளியிலுள்ள கே.பி. அன்பழகன் வீட்டில் நேற்று முன்தினம் இரவு 10 மணி வரை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். அதன் பின்னர், முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியது:

எனது வீட்டில் நடந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸாரின் சோதனையில் பணம், நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதை அவர்கள் எழுத்துப் பூர்வமாக தெரிவித்துச் சென்றுள்ளனர்.

தற்போதைய திமுக ஆட்சியில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இடம்பெற்றிருந்தன. இது தொடர்பாக ரூ.500 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.

இதைப்பற்றி, முன்னாள் முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார். அதைத் தொடர்ந்து, தரமற்ற பொருட்கள் வழங்கியதால் மக்கள் மத்தியில் அரசின் மீது ஏற்பட்ட அதிருப்தியை திசை திருப்பும் நோக்கத்துடன் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் மூலம் சோதனை நடத்தியுள்ளனர் என்றார்.

'நெய்வேலியில் என்எல்சி-க்காக அடிமாட்டு விலைக்கு நிலங்களை கையகப்படுத்தும் முயற்சி இனி பலிக்காது, நிலம் வழங்கும் நபர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் தர வேண்டும்' என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் மூன்றாவது சுரங்கத்தை அமைப்பதற்காக 26 கிராமங்களில் 12,125 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த திட்டமிட்டுள்ள அந்நிறுவனத்தின் நிர்வாகம், அதற்கான புதிய மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்வுத் திட்டத்தை அறிவித்துள்ளது. பாதிக்கப்படும் மக்களின் எதிர்பார்ப்புகளை சிறிதும் நிறைவேற்றாத அத்திட்டம், தொடக்க நிலையிலேயே கடும் எதிர்ப்பை சம்பாதித்திருக்கிறது.

நெய்வேலியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி காணொலி மூலம் புதிய மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுத் திட்டத்தை வெளியிட்டார். அதன்படி, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் விளை நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம், வீட்டு மனைகளுக்கு ஊரகப்பகுதியில் சென்ட்டுக்கு ரூ.40,000, நகரப்பகுதிகளில் ரூ.75,000 வழங்கப்படும். மறுகுடியமர்வுக்காக 2,178 சதுர அடி மனையில் 1,000 சதுர அடியில் வீடு கட்டித் தரப்படும். நிலம் வழங்குவோருக்கு நிரந்தர வேலை வழங்க முடியாது; ஒப்பந்த வேலைவாய்ப்பு அல்லது அதற்கான இழப்பீடாக ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வழங்கப்படும் என்றும் என்எல்சி அறிவித்திருக்கிறது.

ஆனால், இதை ஏற்க மறுத்து விட்ட மக்களும், மக்கள் பிரதிநிதிகளும், பாமக நிர்வாகிகள் தலைமையில் அதற்கான நிகழ்ச்சியின்போதே எதிர்ப்பு முழக்கம் எழுப்பியுள்ளனர்; சாலை மறியல் போராட்டமும் நடத்தினர். ஆனால், அவர்களுக்கு பதிலளிக்க முடியாத என்எல்சி நிர்வாகமும், தமிழக அமைச்சர்களும் நிகழ்ச்சியை பாதியில் முடித்துக் கொண்டு மாற்றுப் பாதையில் வெளியேறி விட்டனர். இது கண்டிக்கத்தக்கதாகும். என்எல்சி மூன்றாவது சுரங்கத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள நிலங்கள் கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி புதைந்து கிடக்கும் பூமியாகும். இந்த நிலங்கள் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு என்எல்சி நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொடுக்கக் கூடியவை. அத்தகைய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாத அடிமாட்டு விலையாகும்.

கையகப்படுத்தப்பட உள்ள நிலங்கள் முப்போகம் விளையக்கூடியவை.நெல், கரும்பு, வாழை ஆகிய பயிர்கள் மட்டுமின்றி முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் கூட விளைகின்றன. ஓர் ஏக்கரில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வருவாய் ஈட்டித் தரக் கூடிய வளமான நிலங்கள் அவை. இழப்பீடாக என்எல்சி வழங்க முன்வரும் தொகையை இரு ஆண்டுகளில் உழவர்கள் ஈட்டி விடுவர். இந்த நிலங்கள் ஏக்கருக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அவற்றுக்கு மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாக ரூ.23 லட்சம் மட்டும் வழங்குவது ஏற்கத்தக்கதல்ல. அதேபோல், வீட்டுமனைகள் சென்ட் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை விற்பனையாகும் நிலையில், அவற்றுக்கு நான்கில் ஒரு பங்கு முதல் எட்டில் ஒரு பங்கு வரை மட்டுமே தருவது மக்களைச் சுரண்டும் செயலாகும். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

மூன்றாவது சுரங்கத்திற்கு கையகப்படுத்தப்படும் நிலங்களால் 26 கிராமங்களில் வாழும் 8,751 குடும்பங்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்விடத்தையும் இழப்பார்கள். அவர்கள் குடியேற ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகள் அடிப்படை வசதிகள் இல்லாதவை. அங்கு வாழ்வாதாரமும் கிடைக்காது. அதனால், நிலத்திற்கு கிடைக்கும் இழப்பீட்டை ஒரு சில ஆண்டுகளில் செலவழித்து விட்டு வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்வார்கள். நிலம் வழங்கும் மக்களின் வாழ்வாதாரம் நிலைத்திருக்க ஒரே வழி அவர்களுக்கு என்எல்சி நிறுவனத்தில் கால முறை ஊதியத்துடன் கூடிய நிரந்தர வேலை வழங்குவது தான். ஆனால், நிலம் வழங்குவோருக்கு வேலை வழங்க முடியாது என என்எல்சி கூறுவது சுயநலம், சுரண்டல் மட்டுமின்று துரோகமும் ஆகும்.1956ம் ஆண்டில் சில லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட என்எல்சி நிறுவனத்தின் இன்றைய மதிப்பு ரூ.53,488 கோடி. ஆண்டு வருமானம் ரூ.11,592 கோடி. இந்தியாவின் நவரத்னா நிறுவனங்களில் ஒன்றான என்எல்சியின் இத்தனை வளர்ச்சிக்கும் காரணம் 44 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வழங்கிய 37,256 ஏக்கர் நிலங்கள் தான்.

என்எல்சியில் இன்றைய நிலையில் 11,511 நிரந்தர பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் ஒருவர் கூட நிலம் கொடுத்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. 1977-89 காலத்தில், நிலம் வழங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 1,827 பேருக்கு மட்டுமே பணி வழங்கப் பட்டது. அவர்கள் அனைவரும் இப்போது ஓய்வு பெற்று விட்டனர். 1989க்குப் பிறகு நிலம் கொடுத்தோரில் 3,500 பேருக்கு குறைந்த ஊதியத்தில் ஒப்பந்த பணி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த ஒப்பந்த பணியாளர்களான 14,899 பேரில், இவர்களின் விகிதம் நான்கில் ஒரு பங்குக்கும் குறைவு. மாறாக, நிலம் தராத பிற மாநில பணியாளர்களின் எண்ணிக்கை இவர்களை விட அதிகம். இது சமூக அநீதி.

இப்போதும் கூட புதிதாக கையகப்படுத்தப்படவுள்ள நிலம் இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் மொத்த பரப்பில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். அந்த நிலங்களில் சுரங்கம், மின் நிலையம் அமைப்பதன் மூலம் பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அவற்றைக்கூட நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க மாட்டோம்; பிற மாநிலத்தவருக்குத் தான் வழங்குவோம் என்ற என்எல்சியின் மனநிலை தமிழர்களுக்கு விரோதமானது. இந்த கொடிய மனநிலைக்கு தமிழக அரசும் துணை போகக் கூடாது.

நெய்வேலியில் மூன்றாவது சுரங்கம் அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்; வீட்டுமனைகளுக்கு சென்ட்டுக்கு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும். நிலம் வழங்கும் குடும்பங்களில் இருந்து குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். இவற்றை செய்யாமல் அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கலாம் என்று என்எல்சி நிர்வாகம் நினைத்தால் அதை பாட்டாளி மக்கள் கட்சியும், மண்ணின் மைந்தர்களும் அனுமதிக்க மாட்டார்கள். மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக மக்களைத் திரட்டி போராடுவதற்கும்
பாமக தயங்காது" என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது சிறுகதை எழுத்தாளர் அம்பைக்கு (சி.எஸ்.லட்சுமி வழங்கியுள்ளது ஒன்றிய அரசு. இதேபோல் கவிஞர் மு.முருகேஷூக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது அறிவித்துள்ளது.

சாகித்ய அகாடமி இந்திய அரசினால் மார்ச் 12, 1957ம் தொடங்கப்பட்ட அமைப்பு. இது இந்திய மொழிகளில் இலக்கியம், இலக்கியம் சார்ந்த நவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் தொடங்கப்பட்டது. இதுவரை 6,000-க்கும் மேற்பட்ட இலக்கிய கூட்டங்களும், பயிற்சி முகாம்களும் மற்ற பிற இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகளும் நடத்தியுள்ளது. இந்திய மொழியில் வெளிவரும் சிறந்த படைப்புகளை பிற மொழிகளிலும் மொழி பெயர்த்து வெளியிடுவது, சிறந்த படைப்புகளை விருது அளித்து ஊக்கப்படுத்துவது போன்ற பல பணிகளை செய்து வருகிறது. மேலும் பரிசு தொகையாக ஒரு லட்சம் ரூபாயும் ஒரு பட்டயமும் வழங்கப்படுகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை நாவல், இலக்கிய விமர்சனம் போன்ற பல்வகை எழுத்தாளர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் 2021ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில் தமிழ் மொழியில் 'சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை' என்ற சிறுகதைக்காக எழுத்தாளர் அம்பைக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின் சிறந்த பெண் படைப்பாளிகளுள் ஒருவரான அம்பை 1960ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார். `வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை', `சக்கர நாற்காலி', `பயணப்படாத பாதைகள்' போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று எழுத்தாளர் அம்பை தெரிவித்துள்ளார். வாசிப்பு எண்ணிக்கை குறைவு என்பதை விட வாசிப்பு முறை மாறியுள்ளது என்று எழுத்தாளர் அம்பை தெரிவித்துள்ளார்.

இதேபோல், 'அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை' சிறுகதை தொகுப்பிற்காக கவிஞர் மு.முருகேஷூக்கு பால புரஸ்கர் சாகித்ய விருது வழங்கப்பட்டுள்ளது. கவிதை, சிறுகதை, ஹைக்கூ, சிறுவர் இலக்கியம் என பல துறை சார்ந்து 30 ஆண்டுகளாக எழுதி வருபவர் மு.முருகேஷ். 2010ஆம் ஆண்டு முருகேஷ் எழுதிய 'குழந்தைகள் சிறுகதைகள்' என்ற நூல் தமிழக அரசின் புத்தகப் பூங்கொத்து திட்டத்தில் தேர்வாகியது குறிப்பிடத்தக்கது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வரும் 7ம் தேதி நடைபெறும் என்று அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதிமுகவின் சட்ட விதி நேற்று மாற்றப்பட்ட நிலையில் இன்று தேர்தல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அ.தி.மு. க.வில் ‘ஒற்றை தலைமை’ என்ற பேச்சுக்கே இடமில்லை. இனி ‘இரட்டை தலைமை’தான் அ.தி.மு.க.வை தொடர்ந்து வழிநடத்தும் என்பதை உறுதி செய்யும் வகையில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில், கட்சியின் சட்ட விதிகளில் திருத்தம் மற்றும் 11 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்நிலையில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் வருகின்ற டிசம்பர் 7ம் தேதியன்று நடைபெறும் என்றும், 8ம் தேதியன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அ.தி.மு.க. தலைமை கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பிரிவு - 2ன்படி "கழக அமைப்புகளின் பொதுத் தேர்தல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்திட வேண்டும்" என்ற விதிமுறைக்கேற்ப, கழக ஒருங்கிணைப்பாளர், கழக இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் கீழ்க்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது.

தேர்தல் ஆணையாளர்களாக கட்சியின் அமைப்புச் செயலாளர் பொன்னையனும், தேர்தல் பிரிவுச் செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனு் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்பு மனுவை 3.12.2021 வெள்ளிக் கிழமை முதல் 4.12.2021 சனிக் கிழமை (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை) வரை செய்து கொள்ளலாம்.

வேட்பு மனு பரிசீலனை 5.12.2021- ஞாயிற்றுக் கிழமை காலை 11.25 மணிக்கும் வேட்பு மனு திரும்பப் பெறுதல்
6.12.2021 திங்கட் கிழமை மாலை 4 மணி வரையிலும் நடைபெறும்.

தேர்தல் 7.12.2021- செவ்வாய்க் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு 8.12.2021 புதன் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 119 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்துள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டம் அபுதாபி மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா விளையாடி வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டி காக்- டிர் டுசென் களமிறங்கினர். இந்த ஜோடி சிறிது நேரம் கூட நீடிக்கக்கவில்லை. 2 ரன்னில் டுசென் ஆட்டம் இழக்க மார்க்ரம் களம் கண்டார். இவர் ஆஸ்திரேலியா பந்துவீச்சை தாக்குபிடித்து விளையாடினார்.

மறுமுனையில் விளையாடி வந்த மற்றொரு தொடக்க வீரர் டி காக் 7 ரன்னில் வீழ்ந்தார். பின்னர், மார்க்ரம்முடன் ஜோடி சேர்ந்த க்ளாசென் 13 ரன்னில் வெளியேறினார். இதையடுத்து டேவிட் மில்லர் ஓரளவு தாக்குபிடித்து 16 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த ப்ரிடோரிஸ் ஒரு ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த மகராஜ் வந்த வேகத்தில் பெளலியன் திரும்பினார். மறுமுனையில் நன்றாக விளையாடி வந்த மார்க்ரம் 40 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதையடுத்து, நோர்க்யா- ரபாடா ஜோடி சேர்ந்தனர். இவர்கள் 18வது ஓவரில் அணியின் ஸ்கோரை 101ஆக உயர்த்தினர். 19.1 ஓவரில் ரபாடா அபார சிக்சர் விளாசினார். 4வது பந்தில் நோர்க்யா 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 9 விக்கெட்டுகளை இழந்த 118 ரன்கள் எடுத்துள்ளது. 19 ரன்னில் கடைசி வரை ரபாடா ஆட்டம் இழக்கவில்லை. முதல் ஆட்டத்திலேயே தென் ஆப்பிரிக்கா அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ஆஸ்திரேலியா தரப்பில் கம்மின்ஸ் 1 விக்கெட்டும், ஸ்டார்க் 2 விக்கெட்டும், மேக்ஸ்வெல் 1 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும், ஆடம் 2 விக்கெட்டும் எடுத்தனர். 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்க உள்ளது.

தமிழ்நாட்டில் தேர்தலில் தொடர்ந்து போட்டியிடாமல் இருந்த கட்சிகளின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாடு, பீகார், டெல்லி, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் அடிப்படையில் 253 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கட்சிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் அல்லது நோட்டீசுக்கு பதில் அளிக்காதது, 2014, 2019 ஆண்டுகளில் சட்டமன்ற, நாடாளுமன்ற பொதுத் தேர்தல்களில் எதிலும் போட்டியிடாதது ஆகிய காரணங்களால் இவை செயல்படாதவை என அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு அரசியல் கட்சி தொடர்ந்து 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அது பதிவு செய்த கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். இதன்படி, ஏற்கனவே 86 கட்சிகளின் பெயர்கள் பதிவேட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில், தமிழ்நாட்டில் கொங்குநாடு ஜனநாயக கட்சி, மக்கள் மறுமலர்ச்சி முன்னேற்றக் கழகம், எம்ஜிஆர் தொண்டர்கள் கட்சி, தேசபக்தி, புதிய நீதிக்கட்சி, தமிழ் மாநில காயிதே மில்லத் கழகம், தமிழர் கழகம் ஆகிய 7 கட்சிகளின் அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட தமிழர் கட்சி, தமிழக மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் மாநில திராவிட முன்னேற்றக் கழகம், தமிழ்த் தேசியக் கட்சி, சமூக சமத்துவ படை, சக்தி பாரத தேசம், தேசிய நலக் கட்சி, நமது திராவிட இயக்கம், மாநில கொங்கு பேரவை, லெனின் கம்யூனிஸ்ட் கட்சி, கொங்கு நாடு முன்னேற்றக் கழகம், காமராஜர் ஆதித்தனார் கழகம், இந்துஸ்தான் தேசிய கட்சி, விஜய டி.ராஜேந்தரின் இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட 22 கட்சிகள் செயலற்ற கட்சிகளாகத்தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பண பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு 6 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இணையதள வணிக நிறுவனங்கள், டெபிட், கிரெடிட் கார்டு வழங்கும் வங்கி மற்றும் நிறுவனங்கள் வாடிக்கையாளரின் பரிவர்த்தனையின் போது கார்ட் விவரங்களை பதிவு செய்து அடுத்தடுத்த பரிவர்த்தனையின் போது தானாக பதிவிடும் முறையை கையாள்கின்றன. இது வாடிக்கையாளரின் பரிவர்த்தனையில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதாக ரிசர்வ் வங்கியின் கவனத்திற்கு வந்தது.

இதையடுத்து வாடிக்கையாளரின் டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பதிவு செய்வதை தடை செய்து ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை வெளியிட்டது. டெபிட், கிரெடிட் கார்டுகளின் விவரங்களை பண பரிமாற்ற நிறுவனங்கள், முகமைகள் பதிவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் உத்தரவு வருகின்ற 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு பண பரிவர்த்தனையின் போதும், வாடிக்கையாளர்கள் விவரங்களை பதிவிடும் முறைக்கு வங்கிகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தயாராக கால அவகாசம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் கடலூர், விழுப்புரம், டெல்டா மாவடங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டார். நேற்றும் 6-வது நாளாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை வழங்கினார். தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளை பார்வையிட்ட முதல்வர், அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதற்காக நேற்று இரவே புதுச்சேரி சென்றார். இரவு அங்கு தங்கி இருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகிறார்.

காலை 7.30 மணி முதல் கடலூர் மாவட்டம் அரங்கமங்கலம், அடூர் அகரம் பகுதியில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை 9.30 மணி முதல் மயிலாடுதுறை மாவட்டம் இருக்கூர், தரங்கம்பாடி பகுதிகளில் பார்வையிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். அதன்பிறகு, காலை 11.30 மணி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கருங்கனி, அருந்தவபுலம் பகுதிகளிலும், திருவாரூர் மாவட்டம் ராயநல்லூர், புழுதிக்குடி பகுதிகளிலும், மாலை 3.30 மணி முதல் தஞ்சாவூர் மாவட்டம் பெரியக்கோட்டை பகுதியிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின்போது பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை நேரில் கேட்டறியும் முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய அதிகாரிகளுக்கும் உத்தவிட உள்ளார். மேலும், டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள மழைபாதிப்பு குறித்து ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவும் இன்று முதல்வரை சந்தித்து பாதிப்புகள் குறித்து விளக்குவார்கள் என்றும் கூறப்படுகிறது.

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசு காரணமாக அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்களை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் 10 நாட்களுக்கு மேலாக நச்சு புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளது. காற்றின் தர குறியீடு எனப்படும் air quality index பல நாட்களாக மிகவும் மோசமான மற்றும் கடுமையான வரம்பில் உள்ளது. மேலும் அடுத்த 3 நாட்களுக்கு இந்த நிலையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், டெல்லி மற்றும் அண்டை பகுதிகளில் காற்று மாசுபாடு நெருக்கடியை சமாளிக்க பல்வேறு கட்டுப்பாடுகளை காற்று தர மேலாண்மை ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிலையங்களும் அரசிடம் இருந்து மறு அறிவிப்பு வரும் வரை செயல்பட தடை விதித்துள்ளது. நவம்பர் 21ம் தேதி வரை அரசு அலுவலக பணியாளர்கள் 50 பேர் வீட்டில் இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் தனியார் நிறுவனங்களிலும் இந்த நடைமுறை பின்பற்ற ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவம்பர் 21ம் தேதி அரை அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச் செல்லும் டிரக்குகளை தவிர தேவையற்ற டிரக், லாரிகள் டெல்லி பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல விமானம், ரயில், பேருந்து மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை தவிர்த்து அனைத்து கட்டுமான மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் இன்று இந்தியா- ரஷிய உச்சி மாநாடு நடக்கிறது. இதில் 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.

இந்திய-ரஷிய உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிற்பகலில் டெல்லி வருகிறார். விமான நிலையத்தில் இருந்து நேராக மாநாடு நடைபெறும் ஐதராபாத் இல்லத்துக்கு செல்கிறார். அங்கு அவரை பிரதமர் மோடி வரவேற்கிறார்.

பின்னர் இரு தலைவர்களும், தங்கள் நாட்டு உயர்மட்ட குழுவினருடன் பரஸ்பரம் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இதில் இரு நாட்டு ராணுவ மற்றும் வெளியுறவு மந்திரிகளும் இடம்பெறுகின்றனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி-புதின் இடையேயான நேருக்கு நேர் சந்திப்பு நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டுக்கு இறுதியில் இரு நாடுகளுக்கு இடையே 10 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படுகின்றன. மேலும் இந்த பேச்சுவார்த்தைகள், விவாதங்கள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த மாநாடு நிறைவடைந்ததும் விளாடிமிர் புதின் நாடு திரும்புகிறார்.

இந்த மாநாட்டுக்கு முன்னதாக இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரும், ரஷிய வெளியுறவு மந்திரி செர்ஜெய் லவ்ரோவும் சந்திக்கிறார்கள். இதைப்போல இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் ரஷிய ராணுவ மந்திரி செர்ஜெய் ஷோய்குவும் சந்தித்து பேசுகின்றனர்.

பின்னர் இந்த 4 மந்திரிகளும் பங்கேற்கும் பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது. இந்த சந்திப்புகளில் பரஸ்பர, பிராந்திய மற்றும் சர்வதேச அரசியல் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து இருநாட்டு மந்திரிகளும் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரியங்கா காந்தியின் உறவினர் மற்றும் பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

டெல்லியில் கொரோனா பரவல் சற்று வேகம் எடுத்துள்ளது. குறிப்பாக ஒமிக்ரான் அதிகம் பதிவாகி உள்ள மாநிலங்களில் பட்டியலில் டெல்லி 2ம் இடத்தில் உள்ளது. டெல்லியில் ஏற்கெனவே கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கல்வி நிறுவனங்கள், பியூட்டி பார்லர்கள், ஜிம்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. திரையரங்குகள், உணவகங்கள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு சிறிய அளவில் அறிகுறிகள் தென்பட்டன. நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் சமீபத்திய நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் உங்களை உடனடியாக தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதே போல் பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எனது குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கும், எனது பணியாளர் ஒருவருக்கும் கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் கொரோனா சோதனை செய்ததில் நெகட்டிவ் என்று வந்தது. இருப்பினும், சில நாட்கள் நீங்கள் தனிமைப்படுத்திகொண்ட பிறகு மீண்டும் பரிசோதனை செய்யுமாறு மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவு பெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25ம் தேதி தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது. டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். மேலும், கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார். இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 2-வது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25 அன்றும் 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்றும் தொடங்குகின்றன.

இந்திய அணி விவரம்: ரஹானே(கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), கே.எல். ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின், ஷ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், மயங்க் அகர்வால், ஷுப்மன் கில், வி.சாஹா (விக்கெட் கீப்பர்) , கே.எஸ்.பரத், ஆர்.ஜடேஜா, அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், பிரசித் கிருஷ்ணா..மேலும், விராட் கோலி 2வது டெஸ்ட் போட்டியில் இணைந்து, அணிக்கு தலைமை ஏற்று செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபியா நாட்டில் கழிவறையில் தயாரிக்கப்பட்டுவந்த உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பிரபல உணவகம் ஒன்று 30 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், உணவகம் திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த உணவகத்தில் பல ஆண்டுகளாக சமோசா போன்ற உணவுப்பொருட்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சுகாதாரமற்ற முறையில் எலிகளும், பூச்சிகளும் மிகைத்துக்கிடக்கும் இடங்களில் உணவுவகைகள் தயாரிக்கப்பட்டுவந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பல நாட்களான, கெட்டுப்போன மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி அதிகாரிகள் தடாலடியாக அவ்வுணவகத்தை மூடியுள்ளனர். மேலும் கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில், இச்சம்பவத்திற்குப்பின் இதுவரை 26 உணவகங்கள் முறைகேடுகள் அறிந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர். 

எதிர்க்கட்சித் துணைத்தலைவராக ஆர்.பி.உதயகுமாரை அறிவிக்கக்கோரி இன்றைய சட்டமன்றக் கூட்டத்தொடரில் இபிஎஸ் ஆதரவாளர்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்கள் மீது சட்டப்பேரவை நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஒரு நாள் தடையும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், தங்களுக்கு எதிரான சட்டமன்ற நிகழ்வுகளைக் கண்டித்து நாளை ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

"தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஜனநாயக படுகொலையைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இடைக்காலப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும், ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம், நாளை (19.10.2022 புதன் கிழமை), சென்னை, வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில், அனைத்து கழக சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கழக அமைப்பு ரீதியான சென்னை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்த ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதற்கு உரிய அனுமதி கேட்டு, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு N. தளவாய்சுந்தரம். MA. கழக அமைப்புச் செயலாளரும். தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக் கழகச் செயலாளரும். முன்னான் வாரியத் தலைவருமான திரு ஆதிராஜாராம் ஆகியோர் நேரில் வழங்கி உள்ளனர். கழக இடைக்காலப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும்" என்று குட்டுவைத்தார். சசிகலாவுக்கு திடீரென ஓபிஎஸ் வக்காலத்து வாங்கியிருப்பது அதிமுகவினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி பொதுச்செயலாளர் என்ற பெயருடன் சென்னை ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்தில் சசிகலா நலத்திட்ட உதவிகளை செய்தார். தியாகராய நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் அதிமுக கொடியை ஏற்றினார். இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது, அவரை சட்டரீதியாக சந்திப்போம் என எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் செய்தியாளர் சந்திப்பின் போது, 'சூரியனை பார்த்து... (சூரியனை பார்த்து நாய் குரைத்தால் நாய்க்கு தான் பாதிப்பு). அத நான் ஓபனா சொல்ல முடியாது,' என்று எடப்பாடி கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வத்திடம், எடப்பாடி பழனிசாமி சசிகலாவை விமர்சித்தது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், கட்சியில் எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும் கண்ணியத்தோடு பேச வேண்டும். அதிமுக தொண்டர்கள் முதல் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் வரை அவை நாகரீகத்தோடு பேச வேண்டும் என்றார்.

சசிகலா மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொள்ளப்படுவாரா என்ற கேள்விக்கு, சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம் அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு என்றும் ஓபிஎஸ் கூறினார்.

இதனிடையே சசிகலா குறித்து ஓபிஎஸ் தெரிவித்து கருத்து குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், ""சசிகலா, அவரை சார்ந்தவர்களுடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என ஓபிஎஸ் கூறினார். சசிகலா, அவரை சார்ந்தவர்களை எதிர்த்துதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்தினார். ஓபிஎஸ் பேசியதை முழுமையாக பார்த்துவிட்டு நான் விளக்கம் அளிக்கிறேன். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என்றார்.

தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலாவை அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள் சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அ.தி.மு.க. வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சிறையில் இருந்து வெளியில் வந்த சசிகலா சிறிது காலமாக அமைத்தி காத்து வந்தார். இந்தநிலையில், அ.தி.மு.க. பொன்விழா ஆண்டு துவக்கத்தில் இருந்து மீண்டு தனது அரசியல் பணியை தொடங்கினார் சசிகலா. அதன் தொடர்ச்சியாக வரும் 30ம் தேதி வரை தென் மாவட்டங்களில் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளை அவரது ஆதரவாளர்கள் செய்து வருகின்றனர்.

இதனிடையே, சசிகலாவின் நடவடிக்கைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் விதமாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகள் அமைந்து இருக்கிறது. மதுரையில் அவர் கொடுத்த பேட்டி, சசிகலாவின் தலைமையை ஏற்க அவரும், அவரது ஆதரவாளர்களும் தயாராகிவிட்டார்கள் என்பதை காட்டுவதாகவே அமைந்திருக்கிறது.

இந்தநிலையில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் சசிகலா கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தஞ்சாவூர் சென்றுள்ளார். தஞ்சையில் தங்கி இருக்கும் அவரை முன்னாள் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், காமராஜ் ஆகியோர் சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அதேபோன்று நெல்லை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அங்குள்ள அ.தி.மு.க. மூத்த நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சசிகலாவை சந்தித்து பேசுவார்கள் என்ற தகவல்களும் வெளியாகி இருக்கின்றன. இந்த தகவல்களுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சசிகலாவுக்கு ஆதரவான கருத்தை தெரிவித்து இருக்கிறார். அதேபோன்று, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.சி.டி. பிரபாகரன், ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்.

இதேபோன்று பல நிர்வாகிகள் சசிகலாவுக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவான கருத்துகளை தெரிவிக்க தொடங்கி உள்ளனர். பல பேர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிகழ்வுகளை எல்லாம் கண்டு எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறாராம். அவரது ஆதரவாளர்களுடன் ரகசிய ஆலோசனைகளையும் மேற்கொண்டு வருகிறாராம். இனி அ.தி.மு.க.வில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

'களவாணி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். விமல் மற்றும் ஓவியா நடிப்பில் வெளியாகியிருந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இவர் இயக்கத்தில் அடுத்ததாக வெளியான 'வாகை சூட வா' திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று அந்த ஆண்டிற்கான சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றது. 

அதைத்தொடர்ந்து இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'நையாண்டி' மற்றும் அதர்வா நடிப்பில் 'சண்டிவீரன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இந்நிலையில், இவரது ஐந்தாவது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதர்வா, ராஜ்கிரண் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படத்திற்கு 'பட்டத்து அரசன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்தகவல்கள் குறித்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

Image

ஊரப்பாக்கம் அருகே அடுக்குமாடிக் குடியிருப்பில் குளிர்சாதனப்பெட்டி வெடித்து 3 பேர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தின் ஆர்.ஆர். பிருந்தாவன் அபார்ட்மென்டில் வசித்துவருபவர்கள் கிரிஜா, அவரது தங்கை ராதா, தம்பி ராஜ்குமார், ராஜ்குமாரின் மனைவி பார்கவி மற்றும் அவரது மகள் ஆராதனா. கிரிஜாவின் கணவருக்கு திதி கொடுக்கவேண்டி இவர்கள் வெளிநாட்டிலிருந்து அண்மையில் இங்கு வந்ததாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்றிரவு இவர்கள் தூங்கிக்கொண்டிருந்த சமயம் மின்கசிவு காரணமாக வீட்டிலிருந்த குளிர்சாதனப்பெட்டி வெடித்துள்ளது. இதனால் அலறியடித்து எழுந்த அனைவரும் கூச்சலிட்டு தங்களைப் காப்பாற்றவேண்டி அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளனர். ஆனால் சத்தம் கேட்டு அவர்கள் வருவதற்குள் வெடிப்பு காரணமாக வெளியான புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கிரிஜா, ராதா, ராஜ்குமார் ஆகிய மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல் கைப்பற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பார்கவி மற்றும் ஆராதனா ஆகியோர் குரோம்பேட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் இங்கிலாந்தில் இருந்து விமானத்தில் திருச்சி, சென்னைக்கு வந்த இரண்டு பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, அந்த நபர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் 136 பயணிகளிடம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிய வகை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவரின் மாதிரிகள் ஒமிக்ரான் வகை கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூரை சேர்ந்த அந்த நபர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து திருச்சி ஆட்சியர் கூறுகையில், இவருக்கு ஒமிக்ரான் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிய மாதிரிகள் ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இங்கிலாந்தில் இருந்து சென்னை வந்த நபருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா உறுதியான நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முழுமையான பரிசோதனை முடிவு வரும் வரை ஒமிக்ரான் உறுதி என எடுத்துக்கொள்ள முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

சித்திரை 1-ந் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.

இதுதொடர்பாக கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சித்திரை 1-ம் தேதி தான் தமிழ்ப் புத்தாண்டு என்று நம் அனைவருக்கும் தெரியும். தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியும் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

எய்ம்ஸ்க்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரு கால வரம்பு இருக்கிறது, அதற்கான கால வரம்பில் அந்தந்த பணிகள் நடைபெற்று வருகிறது. இது பிரதமரே தொடங்கி வைத்த திட்டம் என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். எனவே எய்ம்ஸ் வரும், தமிழக மக்கள் அனைவரும் எய்ம்ஸில் சிறப்பான சிகிச்சை எடுக்கப் போகிறோம்" எனத் தெரிவித்தார்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் 10% குறைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியறிக்கை பின்வருமாறு:

2022-2023 ஆண்டிற்கான திருத்தி அமைக்கப்பட்ட மின்சார கட்டணம் 10.09.2022 முதல் மின்கட்டண ஆணை எண்.7/22. நாள் 09.09.2022-ன் படி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின்சார கட்டணத்தின்படி குறு, சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிகப்படியான கட்டணத்தை செலுத்த வேண்டி உள்ளதால், ஒருநாளின் உச்சப்பட்ச பயன்பாட்டு நேரத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டணத்தை (Peak Hour Charges) குறைக்கும்படி பல்வேறு குறு சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

குறு சிறு (ம) நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு வழங்குவதில் முக்கிய பங்காற்றுவதை கருத்தில் கொண்டு அவர்களின் கோரிக்கையினை ஏற்று குறைந்தழுத்த மின் இணைப்பு (Low Tension B-B) கொண்ட தொழில் நிறுவனங்களுக்கு உச்சபட்ச பயன்பாட்டு நேரத்தில் வசூலிக்கப்படும் மின்கட்டணத்தை 25 சதவிகிதத்திலிருந்து 15 சதவிகிதமாக குறைக்கலாம் என முடிவு செய்து உரிய கொள்கை வழிகாட்டுதல் வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு மின்கட்டணத்தை குறைப்பதால் தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அதிக அளவில் பயனடையும்.

Image