அரசியல்
'கொள்கை வேறு; கூட்டணி வேறு. ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது' - பேரறிவாளன் விவகாரம் குறித்து கே.எஸ்.அழகிரி சுளீர்!

பேரறிவாளனை உச்சநீதிமன்றம் நிரபராதி என்று சொல்லி விடுவிக்கவில்லை என்றும், ஒரு கட்சியின் கொள்கைகளில் யாரும் தலையிட முடியாது என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சுமார் 31 வருட சிறைதண்டனைக்குப்பின் உச்சநீதிமன்றத்தால் நேற்று(18.05.2022) விடுதலை செய்யப்பட்டார். இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்திருந்தனர், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தவிர்த்து.

இதுபற்றி அவர் பேசுகையில், 'குற்றவாளிகள் கொலைகாரர்கள்; அவர்கள் நிரபராதிகள் அல்ல' என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் பேரறிவாளனின் விடுதலையை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் வெள்ளைத் துணியால் வாயை மூடிக்கொண்டு அறவழிப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை 10 முதல் 11 மணி வரை காங்கிரஸ் பிரமுகர்கள் பலரும் இப்போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர். இதையடுத்து, போராட்டத்திற்குப்பின் பேசிய கே.எஸ்.அழகிரி, ''உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை குற்றவாளி இல்லை என சொல்லி விடுதலை செய்யவில்லை. ஆளுநர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது. நீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை. ஒரு சமூக ஒழுங்கு, கட்டுப்பாடு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ராஜீவ் காந்தியோடு சேர்த்து 9 போலீசார் உள்ளிட்ட 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ் காந்திக்கும் குடும்பம் இருக்கிறது.

பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளின் மனநிலையை நான் நன்கு அறிவேன். அதுபோல அனைவருக்கும் தாய், மனைவி, குழந்தைகள் உள்ளனர், தாய், மனைவி, குழந்தை போன்ற உறவுகள் உள்ளனர். அவர்கள் மனநிலையை நாம் பார்க்க வேண்டும். சமூகம் இதை ஏற்றுக் கொள்ளுமா? கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக் கூறி தனது மகனையே தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த பூமி இது.

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா? இது நியாயமற்ற செயல். ராஜீவ் காந்தி வழக்கில் பேரறிவாளன் மிக முக்கிய குற்றவாளி என ஆதாரங்களை தெரிவித்ததாக அந்த விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தமிழக சிறைகளில் இதுவரை 600 பேர் 700 பேர் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏன் யாரும் கூறவில்லை. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொள்கை வேறு. கூட்டணி வேறு. எங்களது கொள்கைகளைப் பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அவர்கள் கொள்கைகளைப் பற்றி நாங்கள் எதுவும் பேசுவதில்லை. யுத்தம் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என சட்டப்பேரவையில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அது அவர்களது கொள்கை. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது''

இவ்வாறு தெரிவித்தார்.

பதிவு: May 19, 2022
"குற்றவாளிகள் கொலைகாரர்கள்; அவர்கள் நிரபராதிகள் அல்ல" - பேரறிவாளன் விடுதலை குறித்து சீறும் கே.எஸ்.அழகிரி!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்துவந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்றும், அவர்கள் நிரபராதிகள் இல்லை என்றும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி சீறியுள்ளார்.

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பேரறிவாளன், சுமார் 31 ஆண்டுகளுக்குப்பின் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஆளுநர் இதுகுறித்த முடிவை எடுக்கத் தாமதித்ததால் உச்சநீதிமன்றமே இதுகுறித்து நடவடிக்கை எடுத்து இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதையடுத்து, இத்தீர்ப்புக்கு பல்வேறு கட்சித் தலைமைகளும் ஆதரவும் மகிழ்ச்சியும் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின், "பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுவித்திருப்பது நீதி, சட்டம், அரசியல், நிர்வாகவியல் வரலாற்றில் இடம்பெறத்தக்க தீர்ப்பு. பேரறிவாளன் விடுதலை என்பது மனித உரிமை, மனிதாபிமான அடிப்படையிலானது. மாநிலத்தின் உரிமை, உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் மிக கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது" என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கொலைகாரர்கள் என்று காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பக்கத்தில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர், "முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களை கொன்ற கொலையாளிகள் எழுவரை உச்சநீதிமன்றம் தான் கொலையாளிகள் என்று கூறி தண்டனை கொடுத்தது. அதே உச்சநீதிமன்றம் சில சட்ட நுணுக்கங்களைச் சொல்லி பேரறிவாளனை விடுதலை செய்திருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், குற்றவாளிகள் கொலைகாரர்கள் என்பதையும், அவர்கள் நிரபராதிகள் அல்ல என்பதையும் நாங்கள் அழுத்தமாகக் கூற விரும்புகிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: May 18, 2022
'பூணூலுக்கு தடையில்லை; ஹிஜாபிற்கு மட்டும் தடையா?' - கள்ளக்குறிச்சி ஹிஜாப் தடை விவகாரம் குறித்து சீமான் ஆவேசம்!

கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்லத் தடையில்லை எனும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்!

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”கள்ளக்குறிச்சியிலுள்ள களமருதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹிஜாப் அணிந்துகொண்டு தேர்வெழுதச்சென்ற மாணவிகளுக்கு உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட செய்தியானது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. கடந்த மாதம் சென்னை, தாம்பரத்திலுள்ள சங்கர வித்யாலயா பள்ளிக்கு மாணவர் சேர்க்கைக்குச்சென்ற பெண்ணின் ஹிஜாப்பை, அப்பள்ளி நிர்வாகம் அகற்றக்கோரிய நிலையில், தற்போது கள்ளக்குறிச்சியிலும் அதேபோன்றதொரு நிகழ்வு அரங்கேறியிருப்பது தேவையற்ற சலசலப்பை உருவாக்குகிறது.

உடலில் பூணூல் அணிந்து செல்வதற்கும், நெற்றியில் திருநீறு பூசிச்செல்வதற்கும், கையில் கயிறு அணிந்து செல்வதற்கும், ருத்திராட்சை அணிந்து செல்வதற்கும் கல்விக்கூடங்கள் எவ்விதத் தடையுமிடாதபோது, இசுலாமியர்களின் ஹிஜாப் உடைக்கு மட்டும் தடையிடுவது எதனால்? எல்லோரும் அவரவரது மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுவதற்குக் கல்விக்கூடங்கள் அனுமதிக்கும்போது இசுலாமியர்களுக்கு மட்டும் அனுமதி மறுப்பது சமத்துவமற்ற அணுகுமுறை இல்லையா?

ஹிஜாப் அணிந்துகொண்டு தெர்வெழுதச்செல்வதற்கு எதிர்ப்பினை வெளிப்படுத்தும் பெருமக்கள், ஹிஜாப் அணிந்துகொண்டு வாக்குச் செலுத்தும்போது எதிர்ப்புத் தெரிவிக்காததேன்? அப்போது ஹிஜாப் உடை சிக்கலாகப்படவில்லை; இப்போது மட்டும் கண்ணை உறுத்துகிறதா? இசுலாமியர்களின் வாக்கு இனிக்கிறது; அவர்களது உரிமை கசக்கிறதா? அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை முன்வைத்து, பாஜக போன்ற இந்துத்துவ இயக்கங்கள் பெரும் மதப்பூசலை உருவாக்கி, சமூக அமைதியைக் குலைத்து, மதவெறியாட்டமாடியதன் விளைவாக, ஏறக்குறைய 33,000 மாணவிகள் தேர்வெழுத இயலாதுபோன பெரும் அவலமானது நிகழ்காலச்சாட்சியாக இருக்கும் நிலையில், அத்தகைய கோரச்சம்பவங்கள் தமிழகத்தில் நிகழாவண்ணம் தடுத்து, மதவெறிக்கூட்டத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பும், கடமையுமாகும்.

ஆகவே, தமிழகத்தின் கல்விக்கூடங்களில் ஹிஜாப் அணிந்துசெல்வதற்கு எவ்விதத் தடையுமில்லை என்பதை அறிவிப்பாக வெளியிட வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதிவு: May 16, 2022
'பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தினால் அது மக்களை கடுமையாக பாதிக்கும்' - அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கூறிவிட்டு மீண்டும் உயர்த்தப்படும் என்று கூறுவது அரசின் குழப்பமான மனநிலையைப் பிரதிபலிப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ல அறிக்கையில், 

"தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்களை மக்களை பாதிக்காத வகையில் உயர்த்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு எடுப்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது மக்களை அச்சத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தும். இது தேவையற்றது; தவிர்க்கப்பட வேண்டும்.

பேருந்து கட்டணம் மிக, மிக குறைந்த அளவில் உயர்த்தப்பட்டால் கூட அது மக்களை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழலில் மக்களை பாதிக்காத பேருந்து கட்டண உயர்வு என்று அமைச்சர் கே.என். நேரு கூறியிருப்பதன் பொருளை புரிந்து கொள்ள முடியவில்லை.

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என்று கடந்த வாரம் தான் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் சட்டப்பேரவையில் அறிவித்தார். இந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்த வேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் நேரு கூறுகிறார். ஏன் இந்த குழப்பம்?

வரலாறு காணாத பணவீக்கத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன. இந்த நேரத்தில் பேருந்து கட்டணமும் உயர்த்தப்பட்டால் அதை மக்களால் தாங்க முடியாது. கட்டண உயர்வுக்கு பதிலாக சீர்திருத்தங்கள் மூலம் போக்குவரத்து கழகங்களை லாபத்தில் இயக்க வேண்டும்"

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: May 13, 2022
'ராஜபக்ச சகோதரர்களுக்கு இந்தியா அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது' - சீமான் வலியுறுத்தல்!

இனப்படுகொலையாளிகளான ராஜபக்சே சகோதரர்களுக்கு இந்தியா எக்காரணம் கொண்டும் அரசியல் அடைக்கலம் அளிக்கக் கூடாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

”இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் புரட்சி வெடித்துள்ளதை அடுத்து இனப்படுகொலையாவார்களான ராஜபக்சே சகோதரர்கள் உள்ளிட்ட அந்நாட்டின் ஆட்சியாளர்கள் மக்களால் ஓட ஓட விரட்டப்பட்டு அவர்களது வீடுகள் உள்ளிட்ட உடைமைகள் தீவைத்து எரிக்கப்படும் காட்சிகள் நாள்தோறும் வெளியாகி வருகின்றன.

சிங்கள இனவாதமும், பௌத்த மதவாதமும் இணைந்து தமிழ்த் தேசிய இனத்தின் அடிப்படை உரிமைகளை மறுத்து, அதன் விடுதலையைத் தகர்த்து, அதற்காகப் போராடிய மக்களை இனப்படுகொலை செய்து அழித்தொழித்தது. மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் மத, இன வெறியை மக்களுக்கு ஊட்டி, தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்த்து, அதன் மூலம் மாறி மாறி அரசாண்ட சிங்கள கொடுங்கோன்மை ஆட்சியாளர்களே இன்று இலங்கையில் நடக்கும் அத்தனை துயரங்களுக்கும் மூல காரணம். அதற்குத் துணைபோன அப்பாவி சிங்கள மக்கள் ஐம்பதாண்டுகளாகத் தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை, பொருளாதார நெருக்கடிகளை இன்றைக்கு அனுபவித்து வருகின்றனர்.

ஒரு நாட்டில் உண்ண உணவும், குடிக்க நல்ல நீரும் கிடைக்காதபோது அங்குப் புரட்சி ஏற்படுவதை ஒருபோதும் தடுக்க முடியாது என்பதற்கு நிகழ்காலச் சாட்சியாக இலங்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அமைந்துள்ளன. இன்று இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை நாளை இந்தியாவிற்கும் ஏற்படலாம். எனவே இனியேனும் இந்திய பெருநாட்டை ஆளும் மோடி அரசாங்கம் மதத்தின் மூலம் மக்களைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியையும், தேசிய இனங்களின் உரிமைகளைப் பறித்து அவர்களின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு ஆகியவற்றைச் சிதைத்து இந்தியாவை ஒற்றையாட்சியின் கீழ் கொண்டுவரும் கொடுங்கோன்மையை இனியாவது கைவிட வேண்டும்.

இல்லையென்றால் ஒற்றையாட்சியை நடைமுறைப்படுத்திய இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சி நாளை இந்தியாவிலும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை இந்திய ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

மேலும், தற்போது சொந்த நாட்டு மக்களாலேயே விரட்டப்படும் நிலைக்கு ஆளாகியுள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வரப்போவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு இலட்சம் தமிழர்களைத் துள்ள துடிக்கப் படுகொலை செய்த அக்கொடுங்கோலர்களுக்கு ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு எக்காரணம் கொண்டும் இந்தியாவின் எந்த மூலையிலும் அரசியல் அடைக்கலம் அளிக்க முன்வரக்கூடாது. அதுமட்டுமின்றி இந்தியாவின் மூலம் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லவும் அனுமதிக்கக் கூடாது எனவும் ஒன்றிய அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: May 12, 2022
'ராஜபக்ச சகோதரர்களை இந்தியாவிற்குள் நுழைய அரசு ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது' - அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சியின் காரணமாக இலங்கை பிரதமர் ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்து, அங்கிருந்து தப்பிக்க முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், ராஜபக்ச குடும்பத்தினரை இந்தியாவிற்குள் நுழைய மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

"இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது.

திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த இராஜபக்சே இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் இராஜபக்சே சகோதரர்கள் தான். அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.

போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் இராஜபக்சே சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்"

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: May 11, 2022
'அரைகுறை பதில்களையும், பொய்களையும் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் சொல்லலாமா?' - முரசொலி நாளிதழ் கடும் சாடல்!

துக்ளக் இதழின் 52-வது ஆண்டு நிறைவுவிழாவில், பெட்ரோல், டீசல் மீதான வரிவிதிப்பை மாநில அரசு ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டுவந்தால் மத்திய அரசும் கொண்டுவரும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியிருந்ததை திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக சாடியுள்ளது.

இதுகுறித்து முரசொலி நாளிதழில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பில்,

"ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து பல்வேறு பொய்களை கட்டவிழ்த்துச் சென்றுள்ளார்கள்.

ஒன்றிய அரசு தமிழகத்துக்கு போதிய நிதி உதவி வழங்கவில்லை என்று தமிழக அரசு குற்றம்சாட்டி வருகிறது. இது எதுவும் உண்மையல்ல. சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு சொல்லும் தகவல்கள் அனைத்தும் தவறானவை. மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் சுமூக உறவு இல்லை என்றும் பாகுபாடு பார்க்கிறார்கள் என்றும் பொய்ப்பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

ஜி.எஸ்.டி. வரம்புக்குள் பெட்ரோல், டீசலைக் கொண்டு வர தமிழக நிதி அமைச்சர் ஒப்புக் கொண்டால் அதனை ஜி.எஸ்.டி. கவுன்சிலில் கொண்டு வந்து விவாதிக்கத் தயாராக இருக்கிறோம். தங்களை ஓரவஞ்சனை செய்வதாக தமிழக அரசு சொல்வதும், தங்களுக்கு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று கூறுவதும் பிரிவினை வாதம் ஆகும். - என்றெல்லாம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் முதல்நாள் டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சந்தித்தார்கள். கோரிக்கை மனுவைக் கொடுத்தார்கள். அந்த மனுவை மீண்டும் ஒருமுறை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் வாசித்துப் பார்த்தால் உண்மை புலப்படும்.

"2015-2020 காலகட்டத்திற்கு, 14வது நிதிக்குழு, தமிழகத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7,899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது. ஆனால், மொத்தமுள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளில், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறாததால், 548.76 கோடி ரூபாய் அடிப்படை மானியத்தை ஒன்றிய அரசு விடுவிக்க வில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் இருந்ததால், இந்த 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் தேர்தல்கள் அப்போது நடத்த இயலவில்லை. இந்த அரசு பொறுப்பேற்றப் பின்னர், 2900 கிராமப் பஞ்சாயத்துகளில் கடந்த அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு, உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பொறுப்பினை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதைப்போன்று 14வது நிதிக்குழு 2016-17 முதல் 2019-20 வரையிலான காலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான செயல்பாட்டு மானியமாக தமிழகத்திற்கு 2,524.20 கோடி ரூபாய் பரிந்துரை செய்துள்ளது. அந்த மானியத்தொகையில் பரிந்துரைக் காலத்தில் ஒன்றிய அரசு 2016-17 ஆம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியமாக 494.09 கோடி ரூபாயை விடுவித் துள்ளது. இந்நிலையில் அதற்கான பயன்பாட்டுச் சான்றிதழ் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு, 2017-18ம் ஆண்டுக்கான செயல்பாட்டு மானியத்தினை விடுவிக்க கோரிக்கை விடப்பட்டது.

மானியங்களைப் பெறுவதற்கான அனைத்து நிபந்தனைகளை நிறைவேற்றியபோதும், பயன்பாட்டுச் சான்றிதழை அனுப்பிய நிலையிலும், 2017-18ம் ஆண்டுக் கான செயல்பாட்டு மானியம் தமிழகத்திற்கு விடுவிக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து 2018-19 மற்றும் 2019-20 ஆம் ஆண்டுக்கான மானியமும் விடுவிக்கப்படவில்லை. இருப்பினும், 2017-18 ஆம் ஆண்டிற்கான செயல்பாட்டு மானியத்தினை பெரும்பாலான மற்ற மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு விடுவித்துள்ளது. எனவே, அடிப்படை மானிய நிலுவைத் தொகையான 548.76 கோடி ரூபாயையும், செயல்பாட்டு மானியம் 2,029.22 கோடி ரூபாயையும் தமிழகத்திற்கு விரைந்து விடுவிக்க வலியுறுத்தப்படுகிறது"" என்று அந்த அறிக்கையில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

நிதி விவகாரம் தொடர்பாக தனியார் நிகழ்ச்சியில் (கோடிக்கணக்கான மக்களால் விரும்பி வாசிக்கப்படும் ஒரு பத்திரிக்கை நிகழ்ச்சியில்!!!) பேசுகிறோம் என்றால் - அமைச்சர் பதவியில் இருப்பவர் பொத்தாம் பொதுவாகப் பேசக் கூடாது. அதற்கான புள்ளிவிபரங்களைச் சொல்லி இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் - அண்ணாமலை மாதிரி வாய்க்கு வந்ததை அமைச்சராக இருப்பவர் பேசக் கூடாது.

நிதி அமைச்சரைச் சந்தித்த முதலமைச்சர் அவர்கள், "சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 கோடி ரூபாய் உட்பட 20,860.40 கோடி ரூபாய் ஒன்றிய அரசிடம் நிலுவையில் உள்ளது. மாநிலம் தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர, இந்த நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்"" என்று கோரிக்கை வைத் தார்கள். ஜி.எஸ்.டி. குறித்து பேசியிருக்கும் நிதி அமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டுக்கு தரப்பட்ட தொகையைச் சொல்லாமல் இந்தியா முழுமைக்கும் விடுவிக்கப்பட்ட நிதியைச் சொன்னதன் மர்மம் என்ன?

தமிழ்நாடு அரசு தவறான தகவல் சொல்கிறது என்றால், ஒன்றிய அரசு விடுவித்தது என்ன? தமிழ்நாடு அரசு சொல்வது என்ன? என்பதை பொதுவெளியில் சொல்லி இருக்கலாமே?

தமிழகம் புறக்கணிக்கப்படுகிறது என்றால் அது ஏதோ பொத்தாம் பொதுவாகச் சொல்லப்படுவது அல்ல. நிதி முறையாக ஒன்றிய அரசால் தரப்படுவது இல்லை. நிலக்கரி போதுமான அளவுக்கு வழங்காத காரணத்தால் மின் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. ‘நீட்’ விவகாரத்தில் ஒன்றிய அரசு போக்குக் காட்டிக் கொண்டே வருகிறது. இந்தித் திணிப்பு என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆளுநரை அரசியல் நோக்கங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்ற பெயரால் கல்வி உரிமை மறுக்கப்படுகிறது. புதிய ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பதே இல்லாமல் போய்விட்டது. ஒன்றிய அரசுப் பணியிடங்களில் - தமிழக மாநிலப் பணியிடங்களில் திட்டமிட்டு வடமாநிலத்தவர்கள் புகுத்தப்படுகிறார்கள். - இப்படி பலவற்றைச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுக்கெல்லாம் முறையாக, முழுமையாகப் பதில் சொல்ல வேண்டுமே தவிர - அரைகுறை அரசியல் பதில்களை நிதி போன்ற பொறுப்புமிக்க துறைகளை கவனிக்கும் அமைச்சர் சொல்லக் கூடாது" 

இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: May 10, 2022
'எட்டா உயரத்தில் எரிவாயு விலை; எப்படி வைப்பார் ஏழைகள் உலை' - மநீம தலைவர் கமல்ஹாசன் விளாசல்!

தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.1000-ஐத் தாண்டியுள்ளதைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

"வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,000-த்தை தாண்டிவிட்டது. ‘‘எப்படி சமைப்பது எப்படி பிழைப்பது’’ என்று புலம்புகின்றனர் ஏழை எளிய நடுத்தர மக்கள்.

ஏற்கனவே பார வண்டிபோல அன்றாட வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் சுமந்து செல்லும் பொதுமக்களை, இந்த விலை உயர்வு மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிவிட்டது. காஸ் அடுப்பை பற்றவைக்கும் போதெல்லாம் மக்கள் அதன் விலையை நினைத்து வேதனை கொள்கின்றனர். சிலிண்டருக்கான மானியத் தொகை நேரடியாக மக்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று மன்மோகன் சிங் அரசு அறிவித்தபோது, இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்துப் போர்க்கோலம் பூண்டது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக. அன்று சிலிண்டருக்கு மாலை அணிவித்து, பாடை கட்டிப் போராடிய பாஜக-வினர் இப்போது வாய் மூடி மௌனமாக இருக்கின்றனர்.

தங்கள் மீதான பழியைச் சுமக்க விரும்பாத மத்திய பாஜக அரசு, பெட்ரோல், டீசல் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை பெட்ரோலிய நிறுவனங்களிடமே கொடுத்துவிட்டது. ஆனால், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? 2019 ஏப்ரல் மாதம் ஒரு சிலிண்டர் ரூ.722-க்கு விற்கப்பட்டபோது, மானியமாக ரூ.238 வழங்கப்பட்டது. ஆனால், இந்த மானியம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது ரூ.25 கூட கிடைப்பதில்லை. அதுவும்கூட பலரது வங்கிக் கணக்கில் வந்து சேரவில்லை என்று குமுறுகின்றனர் பொதுமக்கள்.

சுற்றுச்சூழல் மாசுபடுகிறது என்று காரணம் கூறி, காய்ந்த சுள்ளிகளை வைத்து அடுப்பு எரித்துக்கொண்டிருந்த லட்சக்கணக்கானோருக்கு இலவசமாக எரிவாயு இணைப்பை கொடுத்தவர்கள், இப்போது சப்தமில்லாமல் விலையை உயர்த்திக் கொண்டே போகிறார்கள். ரூ.965-க்கு விற்ற சிலிண்டர் ரூ.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.1,015-ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரத்தால் விலை உயர்ந்தது என்று காரணம் கூறும் பெட்ரோலிய நிறுவனங்கள், கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது பெட்ரோலியப் பொருட்களின் விலையை ஏன் குறைக்கவில்லை?

தற்போது உணவுகூட இல்லாமல் தவிக்கும் இலங்கை மக்களின் பரிதாப நிலையும், பொருளாதார வீழ்ச்சியும் சிலிண்டர் விலை உயர்வில் இருந்துதான் தொடங்கின. அந்த நிலை இந்தியாவுக்கும் வந்துவிடக் கூடாது. உடனடியாக சிலிண்டர் விலை உயர்வை ரத்து செய்து, விலையைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்காவிட்டால் மக்களின் தன்னெழுச்சிப் போராட்டங்களைத் தவிர்க்க முடியாது" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பதிவு: May 09, 2022
'உருகிய வெல்லத்தை மக்களுக்கு கொடுத்தது தான் திமுகவின் பெரிய சாதனை' - எடப்பாடி பழனிசாமி 'பளார்'!

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவடைவதையடுத்து, திமுக ஓராண்டில் சாதனைகள் புரிந்ததாக வெற்று விளம்பரங்களை மேற்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில் இதுகுறித்த உரையை முதல்வர் ஸ்டாலின் இன்று சட்டப்பேரவையில் ஆற்றினார். மேலும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல், மாநிலமெங்கும் தகைசால் நவீன பள்ளிகள் அமைத்தல் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்நிலையில், திமுக ஓராண்டில் சாதித்துவிட்டதாக வெற்று விளம்பரம் மேற்கொள்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், 

"திமுகவின் ஒராண்டு ஆட்சியில் புதிய திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடிவுற்ற பணியை தான் முதல்வர் திறந்து வைக்கிறார்.ஜெயலலிதா அரசு கொண்டு வந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். ஓராண்டு ஆட்சியில் புதிய திட்டம் அறிமுகம் செய்யவில்லை. செயல்படுத்தவில்லை.

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மக்கள் நன்மை அடைந்தனர். காவிரி நதிநீர் பிரச்னையில் நல்ல தீர்வு கண்டோம். குடிமராமத்து திட்டங்கள் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரினோம். பயிர் காப்பீட்டு திட்டம் மூலம் விவசாயிகளுக்கு அதிகளவு நிதி பெற்று தந்தோம். கடன் தள்ளுபடியால் விவசாயிகள் பயன்பெற்றனர். வறட்சிக்கு நிவாரணம் வழங்கினோம். காவிரி குண்டாறு வைகை இணைக்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கி முதல் கட்ட பணிகள் துவங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினர். பல்வேறு பெரிய திட்டங்களை நிறைவேற்றி சாதனை படைத்தது அதிமுக அரசு

நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலினும், உதய நிதியும் பொய் கூறினர். அவர்களால் முடியவில்லை. காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போது தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. நீட் தேர்வை கொண்டு வந்தவர்களே ரத்து செய்வதாக நாடகம் போடுகிறார்கள். ஏழைகளுக்கு வைத்தியம் செய்வதை பொறுக்க முடியாத அரசு திமுக அரசு. இந்த ஆட்சியில் வேதனை தான் மிச்சம். திமுக ஆட்சியில் சாதனை அல்ல வேதனை தான் பட்டுக்கொண்டுள்ளனர்.

திமுக ஆட்சியில் மக்கள் மறக்க முடியாத அளவிற்கு, தரமில்லா பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. உருகும் வெல்லத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி மக்களை ஏமாற்றியது திமுக ஆட்சி. விஞ்ஞான முறைப்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார்கள். வரலாற்றில் யாரும் மறக்க முடியாதபடி பொங்கல் பரிசு கொடுத்த அரசு திமுக அரசு. இது தான் திமுக சாதனை. ஓராண்டில் சாதனை என வெளியிட்டுள்ளனர். பொய்யான விளம்பரம் தந்துள்ளனர். ஆனால் மக்கள் வேதனைக்கு மேல் வேதனைப்படுகின்றனர்.

கடந்த ஓராண்டில் என்ன மிகப்பெரிய திட்டம் அறிவித்தீர்கள். எந்த திட்டத்தை நிறைவேற்றினீர்கள். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பணிகளை தான் திறந்து வைக்கிறார். அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்கினோம். திமுக ஆட்சியில் மின்வெட்டு நிலவுகிறது. விலைவாசி, கட்டுமான விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.

ஒராண்டு நிறைவு பெறுவதால் சில திட்டங்களை அறிவிக்கின்றனர். யானை பசிக்கு சோளப்பொறி போடுவது போல் உள்ளது. நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும் என்கின்றனர். அதிமுக ஆட்சியில் அம்மா கிளினிக் அமைத்தோம். சுயமாக எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. சொத்து வரி உயர்த்தி உள்ளனர். இது பிள்ளையார் சுழி. மின்கட்டணம், குடிநீர், பஸ் கட்டணம் என ஒவ்வொன்றாக உயர்த்த போகின்றனர். மக்களை மறந்து விடுவார்கள். இது தான் திமுகவினரின் திராவிட மாடல்" 

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதிவு: May 07, 2022
மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்குதல் உள்ளிட்ட 5 முக்கிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! அவை என்னென்ன...?

திமுகவின் ஓராண்டுகால ஆட்சி இன்றுடன் நிறைவடைவதையடுத்து தமிழகத்திற்கான புதிய 5 திட்டங்களை சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவித்தார். 

தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சியமைத்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இந்நிலையில், ஓராண்டுகால ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் ஸ்டாலின் ஆசி பெற்றார். மேலும் கழக சாதனைகளை விளக்கும் 12 புத்தகங்களையும் வெளியிட்டார்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் ஓராண்டு ஆட்சியின் சாதனைகள் குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் தமிழகத்திற்கான புதிய 5 திட்டங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

அவையாவன:

1. 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். முன்னதாக கிராமப்புற மற்றும் குறிப்பிட்ட நகராட்சிகளில் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டு பின்னர் அனைத்து இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும். உள்ளாட்சி அமைப்புகள் மூலம் இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.

2. 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்படும். தமிழக குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாதவர்களாக உருவாக்க இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

3. தமிழகமெங்கும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முதற்கட்டமாக 150 கோடி மதிப்பீட்டில் 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். மேலும் கட்டிடத்தின் தரம் உயர்த்தப்பட்டு, நவீனமயமாக்கப்படும். 

4. கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் உள்ளது போல, நகர்ப்புறங்களில் மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவமனைகள் ஏற்படுத்தப்படும். அரசுப்பொது மருத்துவமனைகளை நோக்கி மக்கள் வரும்போது கூட்டநெரிசலால் அவதிக்குள்ளாகாமல் இருக்கவேண்டி இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

5. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்' கொண்டுவரப்படும். இத்திட்டத்தின் மூலம், 234 தொகுதிகளில் நிறைவேற்றப்படாத முக்கிய தேவைகள் குறித்து அந்தந்த சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பரிசீலனை செய்யப்பட்டு அவற்றிற்கு தீர்வுகாணப்படும். ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அவரவர் தொகுதியின் 10 முக்கிய பிரச்சினைகள் குறித்த பட்டியலை தயார் செய்து அரசின் கவனத்திற்கு கொண்டுவரும் பொருட்டு, அவற்றில் முக்கியமானவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தீர்வுகாணப்படும். 

பதிவு: May 07, 2022

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்