இந்தியா
இஸ்லாமியர்களுடன் தொழுகையில் ஈடுபட்ட இராணுவ கமாண்டர் பாண்டே! மதவெறுப்பு சக்திகளுக்கு எதிரான ஓர் நெகிழ்ச்சி சம்பவம்!

ஸ்ரீநகரில், ரமலான் நோன்பு தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமிய இராணுவ அதிகாரிகளுடன் இராணுவ கமாண்டர் தொழுகையில் ஈடுபட்ட காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

நாடெங்கும் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்களுக்கு எதிரான போக்கு மதவாத சக்திகளால் நிலவிவருகிறது. அச்சமூக மக்களுடன் விரோதத்தை வளர்த்து தாக்குதல்களைக் கையிலெடுப்பது, அவர்களின் உரிமைகள் மீது கைவைத்து நெருக்கடி ஏற்படுத்துவது, அவர்களின் வாழ்விடங்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்ப்பது உள்ளிட்ட பல்வேறு அசம்பாவிதங்கள் மதவெறி அமைப்புகளின் தூண்டுதலின் பேரில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் தான் இந்தியா எப்பொழுதும் ஒற்றுமையை நேசிக்கக் கூடிய நாடு என்பதை நிரூபிக்கும் விதமான நிகழ்வு காஷ்மீர் ஸ்ரீநகரில் நடைபெற்றுள்ளது.

பொதுவாக ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை உண்ணாது பருகாது நோன்பு கடைபிடிப்பர். பின் சூரிய அஸ்தனத்திற்குப்பின் உணவு உட்கொள்வர்.

அவ்வாறு, நோன்பில் ஈடுபட்டிருந்த ஜம்மு காஷ்மீர் லைட் காலாட்படை ரெஜிமென்ட் மையத்தின் வீரர்களுடன், லெப்டினன்ட் ஜெனரல் டிபி பாண்டே, கார்ப்ஸ் கமாண்டர் 15 கார்ப்ஸ் காஷ்மீரின் ஸ்ரீநகர் பகுதியில் நடைபெற்ற இப்தார் விருந்தில் கலந்துகொண்டு அவர்களுடன் தொழுகையில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

“உலகிற்கு, குறிப்பாக மதத்தின் பெயரால் பிளவை உருவாக்க முயற்சிக்கும் கூறுகளுக்கு மத நல்லிணக்கத்தின் செய்தி. இது நமது இந்தியா & நாங்கள் இதில் பெருமை கொள்கிறோம்” என்பது போன்ற மேற்கோள்களுடன் பலரும் இப்புகைப்படங்களை மகிழ்வுடன் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பதிவு: April 28, 2022
ஜார்கண்டில் கேபிள் ரோப் கார்கள் ஒன்றோடொன்று மோதி விபத்து! 3 பேர் பலி - அந்தரத்திலுள்ள 48 பேரை மீட்கும் பணி தீவிரம்!

ஜார்கண்ட் மாநிலத்தில் கேபிள் ரோப் கார்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து சிக்கியுள்ளோரை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 

ஜார்க்கண்டின் தியோகர் மாவட்டத்தில் உள்ள பாபா பைத்யநாத் கோயிலுக்கு அருகிலுள்ள திரிகுட் மலைகளில் ரோப்வேயில் நேற்றைய தினம்(10.04.2022) சில கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூன்று பேர் வரை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேபிள் கார்களுக்குள் சிக்கிக்கொண்டவர்களில் இதுவரை 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர், மேலும் 48 பேர் இன்னும் 12 ரோப்வே கேபிள் கார்களின் வரிசையில் அந்தரத்தில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு அதிகாரியின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட மோதலில் 10 சுற்றுலாப் பயணிகள் பலத்த காயம் அடைந்ததாகவும், அவர்களில் இருவர் சிகிச்சையின் போது உயிரிழந்த்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இரண்டு எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக இந்திய விமானப்படை (ஐஏஎஃப்) தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை (என்.டி.ஆர்.எஃப்) மற்றும் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்துறை (ஐ.டி.பி.பி) ஆகியவற்றின் குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவி வருகின்றன என்று தியோகர் துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி கூறியுள்ளார்.

மீட்பு நடவடிக்கையில் உள்ளூர் கிராம மக்களும் NDRF-க்கு உதவுகிறார்கள் என்று பஜந்த்ரி கூறினார். முதல் பார்வையில், கேபிள் கார்கள் மோதியதில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாகத் தெரிகிறது, இருப்பினும், சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரிகள் கூறினார்.

டிசி மற்றும் போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் சந்திர ஜாட் இருவரும் சம்பவ இடத்தில் இருந்து மீட்பு பணியை கண்காணித்து வருகின்றனர். 44 டிகிரி லென்ஸ் கோணம் கொண்ட இந்தியாவின் மிக உயரமான செங்குத்து ரோப்வே திரிகுட் ரோப்வே என்று ஜார்கண்ட் சுற்றுலாத்துறை கூறுகிறது.

பாபா பைத்யநாத் கோயிலில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த ரோப்வே 766 மீட்டர் நீளமும், 392 மீட்டர் உயரமும் கொண்டது. ரோப்வேயில் 25 அறைகள் உள்ளன, ஒவ்வொரு அறையிலும் நான்கு பேர் உட்காரலாம்.

Source: ZEENEWS

பதிவு: April 11, 2022
‘ஆங்கிலத்துக்கு மாற்றுதான் இந்தி; பிற மாநில மொழிகளுக்கு அல்ல’ –அமித்ஷா பேச்சு!

இந்தியை தேசிய ஒருமைப்பாட்டு மொழியாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும், இந்தியை ஆங்கிலத்திற்கு மாற்றுமொழியாக அனைவரும் ஏற்றுகொள்ளவேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில், நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழுவின் 37-வது கூட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை வகித்தார். அப்பொழுது பேசிய அவர்,

“அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும்.

வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது, அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும். பிற உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை இந்தியில் சேர்த்தால் அதற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படாது. இந்தி மொழியை ஆங்கிலத்திற்கு மாற்றாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்; மாநில மொழிகளுக்கு மாற்றாக அல்ல.

அமைச்சரவையின் 70 சதவீத செயல் திட்டங்கள் இந்தி மொழியில்தான் தயாரிக்கப்படுகிறது. 9-ஆம் வகுப்பு வரையில் இந்தி தொடர்பான அடிப்படை அறிவை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும். இதேபோன்று இந்தி மொழிப் பயிற்சி, தேர்வுகளுக்கும் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.

வடகிழக்கு மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க 22 ஆயிரம் இந்தி ஆசிரியர்கள் பணிக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். இது தவிர்த்து 8 வடகிழக்கு மாநிலங்களில், 10-ஆம் வகுப்பு வரையிலும் இந்தி மொழியை கட்டாயமாக்க மாநில அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளது.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதிவு: April 08, 2022
‘கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்பட வேண்டாம்!’ – ஆளுநரின் ‘ஒன்றியம்’ குறித்த கூற்றுக்கு முரசொலி பத்திரிகை பதில்!

மாநிலத்தில் சுயாட்சி என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல என்றும், கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை என்றும் முரசொலி தலையங்கத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.  

அண்மையில் தென்மண்டல பல்கலைக்கழக் துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அமெரிக்காவைப்போல் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா உருவாகவில்லை என்றும், ‘இந்தியா என்பது உடலின் உறுப்புகள் போன்றது; அவற்றைப் பிரித்துப்பார்க்க முடியாது’ என்றும் ஒன்றியம் குறித்த விளக்கத்தை அளித்திருந்தார்.

இந்நிலையில், ஆளுநரின் இந்த கூற்றை மேற்கோள் காட்டி, திமுகவின் முரசொலி பத்திரிக்கையின் தலையங்கம் பகுதியில் செய்தி ஒன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முரசொலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  

“இந்திய யூனியன் பற்றிப் பேசுபவர்கள் இந்தியா 1947-இல் பிறக்கவில்லை என்பதையும் அமெரிக்காவைப் போல ஒப்பந்தக் கூட்டமைப்பு அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். பல மன்னர்கள், ராஜ்யங்களைப் பொருட்படுத்தாமல் பாரதத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை வாழ்ந்த மக்களின் பலதரப்பட்ட கலாச்சார, ஆன்மிகங்களால் சில ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்திய ஒன்றியம் இயல்பாக உருவாக்கப்பட்டு நீடிக்கிறது. பாரதம் காலம் காலமாக ஒரேயொரு உயிரினமாக இருந்து வருகிறது” என்று சொல்லி இருக்கிறார் தமிழக ஆளுநர்.

கலாச்சாரம், ஆன்மிகம், பாரதம் என்ற பெரிய வார்த்தைகளைக் கொண்டால் சொல்வது எல்லாம் உண்மையாக ஆகிவிடாது. பிரிட்டிஷார் ஆட்சிக்கு முன், இந்தியாவின் முழு நிலப்பரப்பும் ஒரே ஒருவர் ஆளுகையில் இருந்ததா? இல்லை! அப்படி இருந்ததற்கான ஆதாரம் உண்டா? இல்லை! பிரிட்டிஷார் ஆட்சியில் கூட, அவர்களது தலைமையை ஏற்றுக் கொள்ளாத மன்னர்களும், சமஸ்தானங்களும் இருக்கத்தான் செய்தன. அதனையும் ஒன்று சேர்த்தவர் சர்தார் படேல்.

படேலுக்கு இவர்கள் சூட்டும் மகுடம் என்ன? இந்தியாவுக்குள் இணையச் சம்மதிக்காத சமஸ்தானங்களை ஒன்றாக இணைத்துச் சேர்த்துக் கொடுத்தவர் அவர்தான் என்பதால்தான் அவருக்கு 3,000 கோடியில் சிலை வைத்தார்கள். அவர் பெருமையை, அவர் சாதனையைச் சிதைக்கும் வகையில் தமிழக ஆளுநர் ரவி கருத்துச் சொல்லலாமா? எல்லாருமே ஒன்றாகத்தான் இருந்தோம் என்றால் சர்தார் படேல் சாதித்தது என்ன?

அசோகர் காலத்தில் கூட, தமிழகம் நீங்கலாக இந்தியாவின் மற்ற நாட்டுப் பகுதிகள் அரசியல் ஒருங்கிணைப்பைப் பெற்றன. மௌரிய, கனிஷ்க, குப்த ஆட்சிகளில் கூட வட இந்தியாவில் தனித்த ஆட்சிப்பகுதிகள் அதிகம் இருந்தன. அனைத்தையும் பிடித்தாக வேண்டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் போர்கள் நடத்திய காலத்தில் கூட, தனித்த ஆட்சிப் பகுதிகள் அதிகம் இருந்தன. 1500 ஆண்டு காலத் தென்னக வரலாற்றில், வடபுலத்து பேரரசர்கள் எவரும் இங்கு வந்து தன்னகப்படுத்தவில்லை.

சுல்தான்களின் ஆட்சியில் மாகாணங்களுக்கு முன்னால் இருந்த பிரிவினை என்பதை ‘சுபா’க்கள் என்பார்கள். இத்தகைய ‘சுபா’க்கள் தென்னகத்தில் அமைக்கப்படவில்லை. வடபுலத்தை 15 சுபாக்களாக வைத்திருந்தார்களே தவிர, அதில் ஒன்று கூட இங்கு கிடையாது. முகலாயர்களைத் தொடர்ந்து வந்த பிரிட்டிஷார், வடக்கைப் போன்ற ஒரு ஒருங்கிணைப்பை தக்காணத்திலும், தென்னகத்திலும் அமைத்தார்கள். போர் மூலமாக மட்டுமல்ல; பொருளாதாரத்தின் மூலமாகவும் இந்த வெற்றி சாத்தியம் ஆனது.

ஒளரங்கசீப் மறைவுக்குப் பின்னால் இணைக்கப்பட்ட நாடுகள் அனைத்தும் பிரிட்டிஷார் நடத்திய போரால் கிடைத்தவையே. இராபர்ட் கிளைவ் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தால் அதனை உணரலாம். 12 ஆண்டுகள் நடந்த கர்நாடகப் போர் காரணமாகத்தான் பிரிட்டிஷார் ஆளுகைக்குள் தென்னகம் வந்தது.

பிளாசிப் போர், மராட்டியர்களையும் சீக்கியர்களையும் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தது. ஆப்கானிஸ்தானமும், காந்தாரமும், நேபாளமும், பூட்டானும், பர்மாவும், இலங்கையும் அப்படித்தான் இணைக்கப்பட்டன.

‘அசோகராலும், அக்பராலும் அடைய முடியாததும் - மராத்தியர்களால் ஏற்றுக் கொள்ளப்படாததுமான இந்தியாவின் ஒற்றுமையை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். 18-ஆம் நூற்றாண்டில் இந்தியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அகில இந்திய தேசியக் கோட்பாடானது ஆங்கிலேயரின் துப்பாக்கி முனையில் உருவானதே’ என்று வரலாற்றாசிரியர் கே.எம்.பணிக்கர் எழுதுகிறார்.

இன்றைக்கு இருக்கும் ‘மத்திய அரசு’ என்பது 1773-ஆம் ஆண்டு ஒழுங்கு முறைச் சட்டத்தால் உருவானது ஆகும். அதனுள்ளும் சேராத குறுநில மன்னர்கள் இருந்தார்கள். 1947-ஆம் ஆண்டு இந்திய சுதந்திரத்துக்குப் பிறகும் தாங்கள் தனிநாடு என்று சொன்ன மன்னர்களும் உண்டு. மாட்சிமை தாங்கிய சர்.சி.பி. ராமசாமி அய்யர், திருவிதாங்கூர் -கொச்சியைத் தனிநாடு என்றுதான் அறிவித்தார். படேல் - கிருஷ்ணமேனன் ஆகியோரின் வாக்குறுதி காரணமாகவும், ஹைதராபாத் மீது படையெடுப்பு நடத்தியும், காஷ்மீரத்துக்கு தனிச் சலுகை தந்தும் இன்றைய நிலப்பரப்பு முழுமை பெற்றது.

அதனால்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டமானது, “india that is bharath, shall be a union of states” என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.

பல்வேறு தேசிய இனங்களின் சேர்க்கை தான் இந்தியா. இந்த நாட்டில் 1652 மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். 826 பெருமொழிகளாக இவை வகைப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இனங்கள் இருக்கிறது. பல்வேறு மாநிலங்களாக இருக்கிறோம். இவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து இந்தியாவைக் காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமையாக இருப்போம். அந்த ஒற்றுமையை எதனால் உருவாக்க முடியும்?

‘மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ என்ற தத்துவத்தின் மூலமாகத் தான் உருவாக்க முடியும். ‘மாநிலத்தில் சுயாட்சி’ என்பது பிரிவினை வாதச் சொல் அல்ல. ‘மத்தியில் கூட்டாட்சியை ஒப்புக் கொண்டு தான்’ மாநிலத்தில் சுயாட்சி என்பதே கேட்கப்படுகிறது. எனவே, கூட்டாட்சி என்ற சொல்லைப் பார்த்து ஆளுநர் பயப்படத் தேவையில்லை.”

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதிவு: March 15, 2022
‘பாஜகவின் வெற்றி அவர்களின் நல்லாட்சிக்கான அங்கீகாரம்’! – தமிழ்மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை!

உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிவரும் நிலையில், 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சியமைக்கவிருப்பதற்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன்.

உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அண்மையில் நடந்துமுடிந்ததையடுத்து, அம்மாநிலங்களுக்கான தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில் பஞ்சாப் மாநிலத்தில் தனக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் மற்றும் பாஜகவை பின்னுக்குத் தள்ளி ஆம்ஆத்மி கட்சி பெரும்பான்மை இடங்களை வென்று ஆட்சியமைக்க உள்ளது.

அதேபோல் மற்ற 4 மாநிலங்களிலும் தனக்கு எதிராக போட்டியிட்ட அனைத்து கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி பாஜக முன்னிலை வகித்து வருகிறது. உத்தரப்பிரதேசத்தில் தனிப்பெரும்பான்மை பெற்றும், கோவாவில் சுயேட்சை ஆதரவுடனும் பாஜக ஆட்சி அமைப்பது பெரும்பாலும் முடிவாகிவிட்ட நிலையில், உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூரில் வெற்றி வாய்ப்பில் முன்னிலை வகித்து வருகின்றது.

இந்நிலையில், 5-ல் 4 மாநிலங்களில் பாஜக வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகியிருக்கும் நிலையில், அக்கட்சிக்கு பாராட்டு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழ்மாநில காங்கிரஸ்கட்சித் தலைவர் ஜி.கே.வாசன்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக-வின் வெற்றி பெரிதும் பாராட்டுக்குரியது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மத்திய பாஜக அரசின் மீது 4 மாநிலங்களின் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது.

எனவே பிரதமர் நரேந்திர மோடி-க்கும், பாஜக-வின் தேசியத் தலைவர்களுக்கும் தமாகா சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். மத்திய, மாநில அரசுகளின் ஒத்த கருத்து, அதன் அடிப்படையில் மக்களுக்கு கொடுத்த வளர்ச்சித் திட்டங்கள், கொரோனாவைக் கட்டுப்படுத்தி மக்களை இயல்பு நிலைக்கு கொண்டு வந்த நல்ல செயல்பாடு, நாட்டின் பொருளாதாரத்தை படிப்படியாக உயர்த்த உறுதியான நிலையில் செயல்படுவது ஆகியவற்றின் மூலம் வெற்றிவாகை சூடியிருக்கிறது பாஜக.

மேலும் பாஜக-வின் மீது மக்களுக்கு அகில இந்திய அளவில் நம்பிக்கை உயர்ந்திருக்கிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் 4 ல் பாஜக-வின் வெற்றியானது மத்திய, மாநில அரசுகளின் நல்லாட்சிக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மீண்டும் மகத்தான வெற்றிக்காகப் பாடுபட்ட பிரதமர், பாஜக-வின் அகில இந்திய தலைவர்கள், வெற்றிபெற்ற மாநிலங்களின் முதல்வர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கு தமாகா சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்."

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பதிவு: March 10, 2022
பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளர் பப்பி லஹரி காலமானார்! தலைவர்கள் இரங்கல்!

பிரபல பாலிவுட் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமான பப்பி லஹரி உடல்நலக் குறைவால் மும்பை மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 69.

இந்தி திரையுலகில் முக்கிய இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர் பிரபல இசையமைப்பாளர் பப்பி லஹரி. 1973-ஆம் ஆண்டு வெளியான ‘நன்ஹா சிகாரி’ என்ற இந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான பப்பி லஹரி, தமிழில் 1985-ஆம் ஆண்டு வெளியான ‘பாடும் வானம்பாடி’ திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார்.

இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்திருக்கும் பப்பி லஹரி இசையில், டிஸ்கோ டான்சர், ஷராபி, ஹிம்மத்வாலா, அட்வென்ச்சர்ஸ் ஆஃப் டார்ஜான், டான்ஸ் டான்ஸ், சத்யமேவ ஜெயதே, கமாண்டோ, ஆஜ் கே ஷஹேன்ஷா, தானேதார், நம்பி ஆத்மி, ஷோலா அவுர் ஷப்னம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பிரபலமானவை.

ரசிகர்களால் பாப்பி டா என்று செல்லமாக அழைக்கப்படும் பப்பி லஹரி, தங்க நகைகள் மீது கொண்ட மோகத்தால் எப்போதும் அதிக நகைகளை அணிந்தவாறே வலம் வருவார். கூடவே கருப்புக் கண்ணாடியும் அவரது அடையாளங்களுள் ஒன்று.

கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பப்பி லஹரி, சிகிச்சைக்குப்பின் அதிலிருந்து மீண்டார்.

இந்நிலையில், வேறுபல உடல்நலக்குறைபாடுகள் காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த அவர், மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மும்பை ஜூஹூவில் உள்ள க்ரிட்டிகேர் மருத்துவமனையில் இன்று அதிகாலை காலமானார். இந்நிலையில், அவரது மரணத்துக்கு இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.

பதிவு: February 16, 2022
‘காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் அகங்காரம் குறையவே இல்லை’ – ராகுல் காந்தியின் பேச்சு குறித்து மக்களவையில் பிரதமர் மோடி சாடல்!

பாஜக தமிழகத்தை ஒருபோதும் ஆளவே முடியாது என்ற ராகுல் காந்தியின் கூற்றுக்கு பதிலுரைக்கும் விதமாக, நேற்றைய தினம் மக்களவையில் பேசிய பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக சாடியுள்ளார்.

நேற்றைய தினம் மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைமீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ராகுல் காந்தி பாஜக-வை சாடியிருந்ததை மேற்கோள் காட்டி அதற்கு பதிலுரைக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்து பேசியிருந்தார்.

இதுகுறித்து மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, “கொரோனாவுக்கு பிறகு உலகில் பல்வேறு மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன. கொரோனாவுக்கு பிந்தைய சூழலில் உலகின் தலைமை நாடுகளில் ஒன்றாக இந்தியா மாறவேண்டும். அரசுத் திட்டங்களின் மூலம் ஏழைகள் வீடு கட்டி லட்சாதிபதிகளாக மாறி வருகின்றனர். ஏழைத்தாய்கள் சமையல் எரிவாயு திட்டம் மூலம் பயனடையும்போது மகிழ்ச்சி ஏற்படுகிறது. ஏழைகளின் வங்கிக்கணக்கில் பணம் நேரடியாகச் சென்று சேர்கிறது.

தமிழ்நாட்டில் 1962-ஆம் ஆண்டுக்குப் பிறகு காங்கிரஸால் ஆட்சியமைக்கவே முடியவில்லை. பல மாநிலங்களில் காங்கிரஸை ஆட்சியில் அனுமதிக்க மக்கள் விரும்பவே இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆட்சி பல இடங்களில் கைவிட்டுப் போன பிறகும் அகங்காரம் இன்னும் குறையவில்லை. அரசியல் கட்சிகள் குறித்து மக்களவையில் பேசியதால் அதற்குப் பதிலளிக்க வேண்டியுள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் மக்களவைப் பேச்சு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், “அவரது பேச்சு முழுவதும் காங்கிரஸ் கட்சியைத் தாக்கும் விதமாக இருந்தது. அவர் பேசியது காங்கிரஸைத் தாக்கும் பெரும்பகுதியைக் கொண்ட ஒரு அரசியல் பேச்சு. அவர் எங்களை இப்படிப் பார்க்கிறார் என்பதை எண்ணி நாங்கள் பெருமைப்பட வேண்டும் என்று நினைக்கிறேன்”என்று தனது கருத்தைக் கூறியுள்ளார்.

பதிவு: February 08, 2022
‘லதா மங்கேஷ்கர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும்’ – மத்தியப்பிரதேச முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவிப்பு!

பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவை ஒட்டி, அவரது பெயரில் ஆண்டுதோறும் இனி ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்படும் என, அவர் பிறந்த மாநிலமான மத்தியப்பிரதேசத்தின் முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவித்துள்ளார்.

பிரபல பின்னணிப்பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளானதைத் தொடர்ந்து, கடந்த மாதம் 8-ஆம் தேதி மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சுமார் 29 நாட்களாக சிகிச்சையில் இருந்த அவர், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 92.

அவர் காலமான செய்தி பலரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவரது மறைவுக்கு இந்தியப்பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து நேற்று மாலை 7 மணியளவில் முப்படைகள் மற்றும் மாநில அரசு மரியாதையுடன் அவரது உடல் தாதர் சிவாஜி பார்க் மைதானத்தில் தகனம் செய்யப்பட்டது.

தன்னுடைய 4 வயதில் பாடல்களைப் பாடத்துவங்கிய லதா மங்கேஷ்கர், இந்தி, உருது, தெலுங்கு, கன்னடம், சிங்களம் உள்பட பல்வேறு மொழிகளிலும் 30,000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.

தமிழில், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் இணைந்து இவர் பாடி இசைஞானி இசையில் ‘சத்யா’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வளையோசை கலகலவென’ பாடல், இன்றும் பலரது விருப்பப்பாடல்களில் ஒன்று.

இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா, தாதாசாஹேப் பால்கே, பத்ம பூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ள இவர், இந்தியாவின் இசைக்குயில் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

இந்நிலையில் தான் அவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக ஆண்டுதோறும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அவரது பெயரில் ‘லதா மங்கேஷ்கர் விருது’ வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் எஸ்.எஸ்.சவுகான் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், "லதா ஜி இந்தூரில் பிறந்தார். எனவே இந்தூரில் ஒரு மியூசிக் அகாடமி, மியூசிக் யுனிவர்சிட்டி, மியூசியம் மற்றும் அவரது திருவுருவ சிலை நிறுவப்படும். லதா மங்கேஷ்கர் விருது அவரது பிறந்தநாளில் ஆண்டுதோறும் வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்” என்று அறிவித்துள்ளார்.

பதிவு: February 07, 2022
அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணைய சோனியா காந்தி உள்ளிட்ட 37 அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பில் இணையுமாறு சோனியா காந்தி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் 37 பேருக்கு முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதம் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்கள் பெயர் குறித்த விபரம்:

                                                    முதலமைச்சரின் கடிதம்

வணக்கம்,

 நலம் திகழ இந்தக் கடிதத்தைப் பெற்றிருப்பீர்கள் என நம்புகிறேன்.

கடந்த 26.01.2022 அன்று நமது நாட்டின் 73-ஆவது குடியரசு நாளை நாம் கொண்டாடிய வேளையில், கூட்டாட்சி மற்றும் சமூகநீதிக் கோட்பாடுகளை வென்றெடுக்க அரசியல் கட்சித் தலைவர்கள், குடிமைச் சமூகத்தின் உறுப்பினர்கள், ஒத்த சிந்தனையுள்ள தனிநபர்கள் ஆகிய அனைவரையும் ஒரு பொதுவான குடையின் கீழ் ஒன்றிணைத்து, அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு ஒன்றைத் தொடங்கவுள்ளதாக அறிவித்தேன்.

 எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும்.

தமிழ்நாட்டில், வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் சமூகநீதிக்கான விதைகளை மக்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் விதைத்து, தந்தை பெரியார் எனும் பகுத்தறிவுச் சுடர் ஏற்படுத்திய சமூகநீதிப் புரட்சியை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் விவரிக்கும். அசைக்க முடியாத இந்தத் தத்துவம்தான் கடந்த எண்பது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக விளங்கி அதன் அரசியலை பண்படுத்தி வந்துள்ளது. சமத்துவமின்மையை ஒழித்து அனைத்துத் துறைகளிலும் இம்மாநிலத்தை முன்னேற்ற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் சமூகநீதித் தத்துவத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பிடம்தான்.

 இக்கடிதத்தை நான் எழுதும் இவ்வேளையில், தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

 சமூகநீதித் தத்துவத்தின் மீதான தனது உறுதிப்பாட்டைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஒவ்வொரு முறையும் வலிமையாகப் போராடி வந்துள்ளது என்பது, அண்மையில், நாடு முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளிக்கும் இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் வழியாக 27% இடஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்ததில் மீண்டும் ஒருமுறை நிலைநாட்டப்பட்டுள்ளது. எனினும் சமூகநீதியை உறுதிசெய்ய இடஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல. சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டுமானால் அத்தகையோருக்கு ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும். சாதிப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கவும்; மாற்றுத்திறனாளிகள் பொதுநீரோட்டத்தில் இணைந்து போட்டியிடக் கூடிய வகையிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.

 மேற்குறிப்பிட்ட குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது என நான் முழுமனதாக நம்புகிறேன். மண்டல் ஆணையத்தை அமைக்க ஒற்றுமையுடன் நாம் காட்டிய அதே உறுதிப்பாட்டையும் நோக்கத்தையும் இப்போதும் வெளிப்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன. இந்தியாவில் சமூகநீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வார்த்தெடுப்பதற்கும்; இன்னும் சிறப்பாகச் செயல்படக் கூடிய பகுதிகளைக் கண்டறிவதற்கும்; அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்சச் செயல்திட்டத்தை உருவாக்குவதற்குமான தளமாக இக்கூட்டமைப்பு விளங்கும்.

 ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்/நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள்பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். சமூகநீதியில் பல பத்தாண்டுகளாக நாம் அடைந்த முன்னேற்றத்துக்குப் பிற்போக்குச் சக்திகள் சவால் விடும் இந்த இடர்மிகு காலத்தில், ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்.

நன்றி.

 37 தலைவர்கள்

 1. திருமதி. சோனியா காந்தி (இந்திய தேசிய காங்கிரஸ்)
  2. திரு. லாலு பிரசாத் யாதவ் (ராஷ்டிரிய ஜனதா தளம்)
  3. திரு. ஃபரூக் அப்துல்லா (ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு)
  4. திரு. சரத் பவார் (தேசியவாத காங்கிரஸ்)
  5. திரு. டி. ராஜா (இந்திய கம்யூனிஸ் கட்சி)
  6. திரு. சீதாராம் யெச்சூரி (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட்)
  7. திரு. எச்.டி. தேவேகவுடா (மதச்சார்பற்ற ஜனதா தளம்)
  8. திரு. என். சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம்)
  9. திரு. நவீன் பட்நாயக் (பிஜூ ஜனதா தளம்)
  10. செல்வி. மமதா பானர்ஜி (திரிணாமூல் காங்கிரஸ்)
  11. திருமதி. மெஹ்பூபா முப்தி (ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி)
  12. திரு. உத்தவ் தாக்கரே (சிவ சேனா)
  13. திரு. அரவிந்த் கேஜ்ரிவால் (ஆம் ஆத்மி)
  14. திரு. கே. சந்திரசேகர ராவ் (தெலங்கானா ராஷ்டிர சமிதி)
  15. திரு. ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி (ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்)
  16. திரு. ஹேமந்த் சோரன் (ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா)
  17. திரு. என். ரங்கசாமி (என். ஆர். காங்கிரஸ்)
  18. திரு. லலன் சிங் (ஐக்கிய ஜனதா தளம்)
  19. திரு. அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி)
  20. செல்வி. மாயாவதி (பகுஜன் சமாஜ்)
  21. திரு. பவன் கல்யாண் (ஜன சேனா)
  22. திரு. வேலப்பன் நாயர் (அகில இந்திய பார்வார்டு பிளாக்)
  23. திரு. அசாதுதீன் ஓவைசி (ஏ.ஐ.எம்.ஐ.எம்)
  24. திரு. கே.எம். காதர் மொய்தீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)
  25. திருமதி. ரேனு ஜோகி (ஜனதா காங்கிரஸ்)
  26. திரு. அமரீந்தர் சிங் (பஞ்சாப் லோக் காங்கிரஸ்)
  27. திரு. சுக்பீர் சிங் பாதல் (சிரோமணி அகாலி தளம்)
  28. திரு. சிராக் பாஸ்வான் (லோக் ஜனசக்தி - ராம் விலாஸ்)
  29. திரு. ராஜ் தாக்கரே (மகாராஷ்டிர நவநிர்மான் சேனா)
  30. திரு. ஓம் பிரகாஷ் சவுதாலா (இந்திய தேசிய லோக் தளம்)
  31. திரு. கே.எம். மணி (கேரளா காங்கிரஸ் -எம்)
  32. திரு. ஓ. பன்னீர்செல்வம் (அ.இ.அ.தி.மு.க)
  33. திரு. வைகோ (ம.தி.மு.க)
  34. மருத்துவர். ராமதாஸ் (பா.ம.க)
  35. திரு. தொல். திருமாவளவன் (வி.சி.க)
  36. பேராசிரியர் ஜவாஹிருல்லா (ம.ம.க)
  37. திரு. ஈ.ஆர். ஈஸ்வரன் (கொ.ம.தே.க)

 

பதிவு: February 02, 2022
தீவிர சிகிச்சைப் பிரிவில் பிரபல பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ்! உடல்நிலை கவலைக்கிடம் எனத் தகவல்!

கேரளாவைச் சேர்ந்த பிரபல பாம்புபிடி வீரர் வாவா சுரேஷ் அண்மையில் பாம்புகடிக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரபல பாம்புபிடி வீரரான வாவா சுரேஷ். இதுவரை ஆயிரக்கணக்கான பாம்புகளைப் பிடித்து காடுகளில் விட்டுள்ளார் சுரேஷ். கேரளாவில் யார் வீட்டில் பாம்புகள் நுழைந்தாலும் வாவா சுரேஷுக்கு தகவல் வரும். அவரும் அவ்விடத்திற்கு துரிதமாக விரைந்து பாம்பை லாவகமாகப் பிடித்து காடுகளில் விட்டுவிடுவார்.

பாம்புகள் பொதுவாக இயற்கையின் பல்லுயிர் சமன்பாட்டுக்கு பெரிதும் உதவுபவை. அதனாலேயே அவை மனித வாழ்விடங்களில் தட்டுப்பட்டால் அவற்றைக் கொல்லாமல் பாம்பு பிடிக்கும் சூழலியல் தன்ன்னார்வலர்களை அழைக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துவர். இதுகுறித்த விழிப்புணர்வு தற்சமயம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்தும் வருகிறது.

இதில் பெரிதும் ஆர்வமுடைய வாவா சுரேஷ் பாம்பு பண்ணையில் அரசு வேலை கிடைத்தும், இந்த வேலையே தனக்கு மன நிம்மதி அளிப்பதாகக்கூறி அவ்வேலையைத் துறந்து இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் தான், அண்மையில் ஒரு பாம்பைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சுரேஷ், அதனை பைக்குள் அடைக்க முற்பட்ட நேரத்தில் எதிர்பாராத விதமாக பாம்பு அவரது தொடையில் கடித்துவிட்டது.

இதனை சற்றும் எதிர்பார்த்திராத சுரேஷ், வலி பொறுக்காமல் பாம்பை கீழே விட்டுவிடுகிறார். இதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்து ஓடுகின்றனர். இக்காட்சிகள் அடங்கிய காணொலி இணையத்தில் வைரலானது.

இதைத் தொடர்ந்துதான் வாவா சுரேஷ் கோட்டயம் பகுதியிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளார். இந்நிலையில் தான், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் அவர் குணமடைய வேண்டி பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து, வாவா சுரேஷ் உடல்நலம் குறித்து விசாரித்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், அவருக்கு இலவசமாக உயர்தர சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவர் பூரண குணமடைந்து மீண்டும் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது.

பதிவு: February 02, 2022

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்