இனி ட்விட்டரில் 'ப்ளூடிக்' சேவை வேண்டுமெனில் பணம் செலுத்தவேண்டும்! அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்த எலான் மஸ்க்!

ட்விட்டரில் அதிகாரப்பூர்வ கணக்குகளுக்கான ப்ளூ டிக் சேவைக்கு இனி பயனாளர்கள் மாதந்தோறும் பணம் செலுத்தவேண்டும் என்று ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

ட்விட்டரைக் கைப்பற்றியுள்ள எலான் மஸ்க், அதை வாங்கிய நாளிலிருந்து அதிரடியான பல சம்பவங்களை நிகழ்த்தி வருகிறார். முதல் நாளிலேயே ட்விட்டரின் தலைமை அதிகாரி உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளிலிருந்த அதிகாரிகளை நீக்கிய நிலையில், ட்விட்டர் கணக்கு குறித்த அதிரடி செக்-குகளையும் பயனாளர்களுக்கு வைத்துவருகிறார்.

அந்த வகையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதைக் காட்டும் நீலநிற டிக் வசதிகளைப் பெற்றுள்ள பயனாளர்கள், அச்சேவையைத் தொடர்ந்து பெறவேண்டுமெனில் மாதக்கட்டணம் செலுத்தவேண்டும் என்று எலான் மஸ்க் அறிவிக்கவிருப்பதாகவும், மாதம் ரூ.1600 என்று கட்டணத்தை நிர்ணயித்திருப்பதாகவும் தகவல்கள் உலாவந்துகொண்டிருந்தன.

இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் வகையில், இனி பயனாளர்கள் ப்ளூ டிக் சேவையைத் தொடர்ந்து பெற மாதம் ரூ.650(8 டாலர்கள்) செலுத்தவேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

பொதுவாக அரசியல், சினிமா, உயர்பதவிகளில் உள்ள பிரபலமான நபர்கள் தங்கள் வலைதளக் கணக்குகளில், அது தங்களது அதிகாரப்பூர்வக் கணக்குதான் என்பதை பிறருக்குத் தெரியப்படுத்தும் விதமாக இவ்வாறான ப்ளூ டிக்குகளைப் பெற்றுக்கொள்வதுண்டு. இதற்கு, அவர்கள் இத்தனை ஃபாலோயர்களைப் பெற்றிருக்கவேண்டும் போன்ற சில தகுதிகளின் அடிப்படையில் இவ்வசதி அவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மேலும் தேவையான சில தரவுகளைச் சமர்ப்பிப்பதன் மூலமும் யாவரும் ப்ளூடிக் வசதியைப் பெற்றுக்கொள்ளும் முறை இருந்தது.

இந்நிலையில், பயனாளர்களை அதிரவைக்கும்படி இப்படியான ஒரு அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார். இத்தொகையானது அந்தந்த நாட்டுக்கான ரூபாயைப் பொறுத்து மாறுபடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. 

பதிவு: November 02, 2022
'ட்விட்டர் வலதுசாரிக்கும் இடதுசாரிக்கும் களமாகட்டும்; ஆனால் பொய்ச்செய்திகள் வேண்டாம்' - எலான் மஸ்கை 'வசமாக' வாழ்த்திய வைரமுத்து!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியுள்ளதையடுத்து பொய்ச்செய்திக்கும் மலிந்த மொழிக்கும் ட்விட்டரில் இடம் தரவேண்டாம் என்று மஸ்கிற்கு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். 

சமூகவலைதளமான ட்விட்டரை உலகப் பணக்காரர்களில் முக்கியமானவரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வாங்க முன்வந்தார். ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கு முன்னதாக ட்விட்டரில் போலிக்கணக்குகள் அதிகம் இருப்பதாகவும், அவற்றை அகற்றினால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகவும் கூறினார்.

பிரச்சினை நீதிமன்றம் செல்லவே அவர் இம்மாதம் 28-ம் தேதிக்குள் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கவேண்டும் என்று நீதிமன்றம் கூறியது. அதையடுத்து அவர் ட்விட்டரை வேறுவழியின்றி தனதாக்கிக்கொண்டார். இதைத்தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வால் உள்ளிட்ட முக்கியப் பதவிகளில் இருந்தவர்களை பணிநீக்கம் செய்தார். மேலும் பல அதிரடிகளை நிகழ்த்தவும் காத்துக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்கை வித்தியாசமான முறையில் வாழ்த்தி கவிஞர் வைரமுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர், "ட்விட்டர் நிறுவனத்தின் புதிய அதிபர் எலான் மஸ்க் அவர்களே! இந்தியாவின் தமிழகத்திலிருந்து வாழ்த்துகிறேன். வலதுசாரி இடதுசாரி இரண்டுக்கும் ட்விட்டர் ஒரு களமாகட்டும். ஆனால், பொய்ச் செய்திக்கும் மலிந்த மொழிக்கும் இழிந்த ரசனைக்கும் இடம்தர வேண்டாம். உலக நாகரிகத்தை ஒழுங்கு படுத்துங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார். 

பதிவு: October 29, 2022
66 பிஞ்சுக் குழந்தைகளின் உயிரைப் பறித்த இந்திய இருமல் டானிக்குகள்? உலகெங்கும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ள புதிய சர்ச்சை! WHO சொல்வது என்ன?

காம்பியாவில் 66 குழந்தைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் மரணமடைந்ததாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் இயங்கிவரும் மெய்டன் ஃபார்மாசுட்டிகல்ஸ் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களில் தயாரிக்கப்படும் மருந்துகள் உயிருக்கு உலை வைக்கும் அளவுக்கு பாதிப்புகளை விளைவித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தி கடும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காம்பியாவில் 66 பிஞ்சுக் குழந்தைகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதன் காரணமாக மரணமடைந்துள்ளனர். டை எத்திலீன், எத்திலீன் கிளைக்கால் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் அம்மருந்துகளில் அதிகளவில் கலந்துள்ளது தான் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. 

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள உலக சுகாதார அமைப்பு, உயிரிழப்புக்குக் காரணமாக ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் உள்ளிட்ட மருந்துகளைக் கைக்காட்டுகிறது. இம்மருந்துகளை உட்கொண்ட குழந்தைகளே உபாதைகளுக்கு ஆளாகி உயிரிழப்பைச் சந்தித்துள்ளன.

இந்நிலையில், இந்தியாவில் தயாரிக்கப்படும் இம்மருந்துகளை வாங்கவேண்டாம் என்று உலக நாடுகளுக்கு WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதுகுறித்து தீவிரமான ஆய்வுகளில் இறங்கியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இச்செய்தி இந்தியத் தயாரிப்பு மருந்துகளின் தரத்தை உலக நாடுகள் மத்தியில் கேள்விக்குறியாக்கியுள்ளது. 

பதிவு: October 06, 2022
'இந்தியா, ஆயுதங்களை வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்து கடுமையாக்க வேண்டும்' - ப.சிதம்பரம் எம்.பி.!

அமெரிக்காவிலுள்ள பள்ளியில் மர்ம நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக கொல்லப்பட்ட நிலையில், ஆயுதங்களை வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை இந்தியா மறுஆய்வு செய்யவேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர்,

"அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் 4 ஆம் வகுப்பு பயிலும் 19 குழந்தைகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டதை கண்டிக்க வார்த்தைகள் இல்லை. ஒட்டுமொத்த உலகமும் அமெரிக்க மக்கள் மற்றும் குழந்தைகளை இழந்து வாடும் குடும்பத்தினருடன் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

வெறுக்கத்தக்க பேச்சு மற்றும் வெறுப்பு கொலைகள் அதிகரிப்பால், இந்த பைத்தியக்காரத்தனம் முழு உலகத்தையும் ஆக்கிரமிப்பதைத் தடுக்க அனைத்து வழிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும்.

கடுமையான துப்பாக்கி கட்டுப்பாடுகளை விதிப்பது மற்றும் ஆயுதத்தை யார் வாங்கலாம் அல்லது சொந்தமாக வாங்கலாம் என்பதைக் கடுமையாகக் கட்டுப்படுத்துவது இதற்கான வழிகளில் ஒரு வழியாக இருக்கும். இந்த விஷயத்தில் அமெரிக்க சட்டங்கள் மிகவும் தளர்வானவை மற்றும் மென்மையானவை. இந்தியாவும் ஆயுதங்களை கையகப்படுத்துதல் மற்றும் வைத்திருப்பது தொடர்பான சட்டங்களை மறுஆய்வு செய்து கடுமையாக்க வேண்டும்"

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பதிவு: May 26, 2022
சவுதியில் கழிவறையில் தயாரிக்கப்பட்டு விற்பனையான உணவுகள்! அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

சவுதி அரேபியா நாட்டில் கழிவறையில் தயாரிக்கப்பட்டுவந்த உணவுகள் வாடிக்கையாளர்களுக்கு இத்தனை ஆண்டுகளாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் பிரபல உணவகம் ஒன்று 30 ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்நிலையில், இந்த உணவகத்தில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், உணவகம் திடீர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதையடுத்து, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. அதன்படி இந்த உணவகத்தில் பல ஆண்டுகளாக சமோசா போன்ற உணவுப்பொருட்கள் கழிவறையில் வைத்து தயாரிக்கப்பட்டு வந்துள்ளதாக பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

சுகாதாரமற்ற முறையில் எலிகளும், பூச்சிகளும் மிகைத்துக்கிடக்கும் இடங்களில் உணவுவகைகள் தயாரிக்கப்பட்டுவந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் பல நாட்களான, கெட்டுப்போன மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உணவுகள் தயாரிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அப்பகுதி அதிகாரிகள் தடாலடியாக அவ்வுணவகத்தை மூடியுள்ளனர். மேலும் கெட்டுப்போன உணவுப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெட்டா பகுதியில், இச்சம்பவத்திற்குப்பின் இதுவரை 26 உணவகங்கள் முறைகேடுகள் அறிந்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவு: April 27, 2022
ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் – ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவிப்பு!

மாரடைப்பால் காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய நாட்டுப் பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிவித்துள்ளார்.

சுழற்பந்துவீச்சில் ஜாம்பவான் எனப் போற்றப்படுபவர் பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ஷேன் வார்னே. பேட்ஸ்மேனின் கவனத்தை நொடிப்பொழுதில் பதம்பார்த்து விக்கெட்டை வீழ்த்தும் இவரது அபார பந்துவீச்சால் உலக அளவில் மிகவும் புகழ்பெற்றவர். தனது சுழற்பந்து திறனால் பல்வேறு வெற்றிகளை ஆஸ்திரேலியாவுக்குப் பெற்றுத் தந்த வார்னே, உலகம் முழுக்க பல்வேறு ரசிகர்களைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தான், விடுமுறைக்காக தாய்லாந்து சென்றிருந்த வார்னே, திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 52. தூக்கத்தில் பேச்சு மூச்சற்றுக்கிடந்த அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணமடைந்ததாக உறுதித் தகவல் அளித்துள்ளனர். இச்செய்தி, உலகெங்கிலுமுள்ள அவரது கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கலங்கடித்துள்ளது. அவரது மறைவுக்கு கிரிக்கெட் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, ஷேன் வார்னேவின் உடல் அரசு மரியாதையுன் நல்லடக்கம் செய்யப்படும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

ஷேன் வார்னே மரணிப்பதற்கு சிலமணிநேரங்கள் முன்பு காலமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான ராட் மார்ஷ்-க்கு இரங்கல் தெரிவித்த அவரது ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி காண்போரை கலங்கடித்துவருகிறது.

அப்பதிவில் அவர், “ராட் மார்ஷ் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஓர் சிறந்த விளையாட்டு வீரராக மட்டுமல்லாது, பல இளைஞர்களுக்கு உத்வேகமாகவும் இருந்தவர். ராட் கிரிக்கெட்டை மிகவும் விரும்புபவர். எனது அன்புகளை அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் உரித்தாக்குகிறேன். ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டிருந்தார்.

தனது மரணத்திற்கு சுமார் 12 மணிநேரத்திற்கு முன் இப்பதிவை இடும்போது இருந்த அவர், 12 மணிநேரத்திற்குப்பின் உயிரோடு இல்லாதிருப்பதை எண்ணி அவரது ரசிகர்கள் கண்ணீர் வடித்துவருகின்றனர்.

பதிவு: March 05, 2022
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று இந்தியா-மத்திய ஆசியா உச்சி மாநாடு...

பிரதமர் நநேந்திர மோடி தலைமையில் இந்தியா-மத்திய ஆசியா இடையிலான முதலாவது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது. 

இந்தியா-மத்திய ஆசியா இடையிலான முதலாவது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் இன்று நடக்கிறது. பிரதமர் மோடி இம்மாநாட்டை நடத்துகிறார். மத்திய ஆசிய நாடுகளான கஜகஸ்தான், கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிபர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

மாநாட்டில் பிராந்திய, சர்வதேச பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் கருத்து பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள். இந்தியா-மத்திய ஆசிய நாடுகள் இடையிலான உறவை புதிய உச்சிக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

கடந்த 2015-ம் ஆண்டு மேற்கண்ட நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் செய்தார். அதன்பிறகு அந்நாடுகளுடன் இந்தியா பல்வேறு மட்டங்களில் தொடர்பு கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு: January 27, 2022
தினுசு தினுசாக யோசித்து ‘லட்சங்களில்’ சம்பாதிக்கும் மனிதர்கள்! இப்படி கூடவா சம்பாதிக்கலாம்..?

லட்சக்கணக்கில் செலவு செய்து படித்துவிட்டு, படிப்பிற்கு உரிய வேலை கிடைக்கவில்லை எனப் புலம்பித்திரியும் மனிதர்களுக்கு மத்தியில், வெகு இயல்பாய் நாம் செய்யும் பணிகளை பிறருக்கான தேவைகளாய் உருவாக்கி அதில் பலன் பெரும் மனிதர்கள் நம்மை பெரும் வியப்பில் ஆழ்த்துகின்றனர்.

இங்கிலாந்தைச் சேர்ந்த எலா மக்மஹோன் என்ற ஒரு மாணவர், நம் வீடுகளில் நாம் அன்றாடம் செய்யும் ஒரு செயலை தனது பணியாக அமைத்துக் கொண்டு, அதன் மூலம் மாதம் ஆயிரக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

எவர் வீட்டின் அலமாரிகளில் துணிகள் அடுக்காமல் கலைந்து கிடந்தாலும் சற்றும் யோசிக்காமல் இவரை தாராளமாக நாம் தொடர்பு கொள்ளலாம். ஆம்! அலமாரிகளில் மடிக்காமல் கலைந்து கிடக்கும் துணிகளை மடிப்பதையே தனது தொழிலாகக் கொண்டு அதை திறம்படச் செய்து வருகிறார் இவர். இதன் மூலமே மாதம் ரூ.50,000 வரை இவர் சம்பாதிக்கிறாராம்.

அதே போல், லண்டனைச் சேர்ந்த ஃப்ரெட்டி பெக்கிட் என்ற மற்றொரு இளைஞர் செய்யும் தொழில் நம்மை இன்னும் மலைப்பில் ஆழ்த்துகிறது. இவர் வெறும் வரிசையில் நின்று மட்டுமே மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.

வரிசையில் நின்று பயணச்சீட்டையோ அல்லது பிற தேவைகளையோ பூர்த்தி செய்துகொள்ள பொறுமை இல்லாத, பணம் படைத்தவர்களை பயன்படுத்திக் கொள்ளும் இவர், அவர்களுக்கு பதில் வரிசையில் நின்று அவர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதைத் தொழிலாகக் கொண்டுள்ளார்.

ஒரு மணி நேரம் வரிசையில் நிற்க 20 பவுண்டுகள் வசூலிக்கும் இவர் நாள் ஒன்றுக்கு சுமாராக ரூ.16,000 வரைச் சம்பாதித்து தலை சுற்ற வைக்கிறார்.

இவ்வாறாக, தூங்குவதன் மூலம், உண்பதன் மூலம் என உலகெங்கும் பலர் பணம் சம்பாதிக்கும் முறைகள் நம்மை அசரடிக்கின்றன. ‘வாழ நினைத்தால் வாழலாம்….வழியா இல்லை பூமியில்’ என்னும் பாடல் வரிகள் தான் எத்தனை உண்மை!

பதிவு: January 22, 2022
ஒமைக்ரானை மிதமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்- உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை...

ஒமைக்ரானை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இன்று வெளியிட்ட அறிவிப்பில், “ அதிக தொற்று தன்மை கொண்ட ஒமைக்ரான் உலகளவில் பரவி வருகிறது. ஒமைக்ரான் மிதமான பாதிப்பை எற்படுத்துகிறது என்பதை ஏற்க முடியாது. அதனை மிதமாக எடுத்து கொள்ள வேண்டாம் ஐரோப்பா தற்போது கரோனா பரவலின் மையமாக உள்ளது. கடந்த வாரம் மட்டும் ஐரோப்பாவில் 50 லட்சம் பேர் கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் கரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1 லட்சம் பேர் வரை கரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் வூஹானின் நகரில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கரோனா , 2020 தொடங்கியவுடனேயே உலகம் முழுவதும் பரவ ஆரம்பித்தது. இரண்டு ஆண்டுகளை கடந்த பிறகு கரோனா இன்னமும் முடிவுக்கு வரவில்லை.

தடுப்பூசியால் கரோனாவின் தீவிரத் தன்மை உலகளவில் குறைந்தாலும், முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என கரோனா தொடர்ந்த வண்ணமே உள்ளது. எனினும் 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் கரோனா முடிவுக்கு வரும் என்று மருத்துவ வல்லுனர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பதிவு: January 19, 2022
`ஒமிக்ரானை எதிர்கொள்ள ஒரே வழி தடுப்பூசிதான்!'- WHO விஞ்ஞானி சௌமியா சாமிநாதன்

"ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே ஒரே வழி" என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த விஞ்ஞானி சௌமியா சாமிநாதன் கூறியுள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற காணொளி காட்சி கூட்டத்தில் பேசிய அவர், தடுப்பூசிகளுக்கு ஒமிக்ரானை எதிர்கொள்ளும் ஆற்றல் உள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் டி செல்களில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது. இந்த நோய் எதிர்ப்பு சக்தி ஒமிக்ரானுக்கு எதிராக சிறப்பாக வேலை செய்கிறது.

மருத்துவமனைகளில் நெரிசல், ஆக்சிஜன் பற்றாக்குறை பிரச்னை என எதுவும் இல்லாமல் இருப்பது ஒரு நல்ல அறிகுறி. தடுப்பூசி போட்டுக் கொள்வது கடுமையான நோய் பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்கும். உலகம் முழுவதும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்களையும் ஒமிக்ரான் பாதித்தாலும் ஒமிக்ரானுக்கு எதிராக தடுப்பூசிகள் செயல்பட்டு மரணத்தில் இருந்து நம்மை காக்கிறது. யாரேனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் இருந்தாலும் உடனே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

பதிவு: December 30, 2021
`இந்தியா தனது ஹீரோவை இழந்துவிட்டது!'- பிபின் ராவத் மறைவுக்கு உலக நாடுகள் இரங்கல்!

"இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள “ஹீரோவை” இழந்துவிட்டது" என்று முப்படை தளபதி பிபின் ராவத் மறைவுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பாகிஸ்தான் உள்பட உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே மலைப்பகுதியில் மரத்தில் மோதி நேற்று ராணுவ ஹெலிகாப்டர் வெடித்து சிதறியது. இதில், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவருடன் பயணித்த அவரது மனைவி உட்பட 13 பேரும் உயிரிழந்தனர். இந்த கோர விபத்து இந்தியாவையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மறைவிற்கு உலக நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளன.

அமெரிக்க ராணுவம் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், 'இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவத்தை நவீனமாக மாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டவர். அமெரிக்காவின் வலுவான நண்பராகவும், இருநாட்டு ராணுவ கூட்டுறவை விரிவுப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றியவர்" என்று புகழாரம் சூட்டப்பட்டுள்ளது.

பிரிட்டன் சார்பில் அந்நாட்டின் தூதர் அலெக்ஸ் எல்லீஸ் ட்விட்டரில் இரங்கல் குறிப்பில், "பிபின் ராவத்தின் மறைவு செய்தியை அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும், தீரமிக்க வீரராகவும், ராணுவ விவகாரங்களில் மிகுந்த சாமர்த்தியம் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான ரஷ்ய தூதர் நிக்கோலவ் தெரிவித்திருக்கும் இரங்கல் செய்தியில், “ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிற அதிகாரிகளின் சோகமான மறைவு அறிந்து ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன். இந்தியா தனது சிறந்த தேசபக்தர் மற்றும் அர்ப்பணிப்புள்ள “ஹீரோவை” இழந்துவிட்டது. ரஷ்யா ஒரு மிக நெருங்கிய நண்பரை இழந்துவிட்டது. அவர் நமது இருதரப்பு சிறப்பு பெற்ற மூலோபாய கூட்டாண்மையை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறோம். குட்பை, நண்பரே! பிரியாவிடை, தளபதி!" எனத் தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா இரங்கல் செய்தியில், “ஹெலிகாப்டர் விபத்தில் ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் பல பாதுகாப்பு அதிகாரிகளின் சோகமான மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ராணுவ செய்தித்தொடர்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், "தங்கள் நாட்டின் முப்படைகள் சார்பில் பிபின் ராவ்த் மற்றும் 13 பேரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைப்போல இலங்கை பிரதமர் ராஜபக்சே, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகூ, ராணுவ அமைச்சர் பென்னி காண்ட்ஸ், ஆஸ்திரேலிய தூதரகம், பிரெஞ்சு தூதர், சிங்கப்பூர் தூதரகம், மாலத்தீவு அதிபர் இப்ராகிம் சொலி, முன்னாள் அதிபர், தைவான் வெளியுறவு அமைச்சகம், பூடான் பிரதமர் என பல நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

பதிவு: December 09, 2021
`குளிர்கால ஒலிம்பிக்கை புறக்கணித்தால் உறவு பாதிக்கும்!'- அமெரிக்காவை எச்சரிக்கும் சீனா

பெய்ஜிங் குளிர்கால ஒலிம்பிக்ஸை அமெரிக்கா தூதரக ரீதியில் புறக்கணித்தால் அமெரிக்கா, சீனா, இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்படும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீனாவில் இன்னும் 2 மாதங்களில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இவ்விளையாட்டு போட்டிகளை அதிகாரிகள் அளவில் புறக்கணிக்கப் போவதாக அமெரிக்காவின் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர், குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்க வீரர், வீராங்கனைகள் பங்கேற்பர் என்றும் ஆனால் இப்போட்டிக்கான கொண்டாட்டங்கள், விழாக்கள் உள்ளிட்ட நிகழ்வுகளில் அதிகாரிகள் யாரும் கலந்துக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை கண்டிக்கும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த முடிவில் சீனா அதிருப்தி அடைந்துள்ளது. விளையாட்டில் அரசியல் செய்வதை அமெரிக்கா நிறுத்தி கொள்ள வேண்டும் என்று தெரிவித்த சீன வெளியுறவுத் துறை அமைச்சர் ஜாவோ லிஜியன், அமெரிக்காவின் இந்த முடிவு ஒலிம்பிக் கொள்கைகளுக்கு எதிரானது என்றும் கண்டித்தார்.

மேலும் அவர், 'ஒற்றுமை என்பது தான் தாரக மந்திரம். ஆனால் விளையாட்டில் அரசியலைக் கலந்து ஒலிம்பிக் விதிகளை அமெரிக்கா மீறி செயல்பட்டு வருகிறது. உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த வீரர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்களின் நிலைப்பாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாது. இதற்கான பதில் நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்' என்றார்.

பதிவு: December 08, 2021
15 பேர் தொற்றால் பாதிப்பு!- கனடாவை அச்சுறுத்தும் ஒமிக்ரான்

கனடாவில் 15 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்றான ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக கனடா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கனடா தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்று 50 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஆறு மாதங்களுக்குள் தடுப்பூசி தொடரை முடித்து பிறகு பூஸ்டர் ஷாட் போடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் அமெரிக்காவைத் தவிர அனைத்து நாடுகளிலிருந்தும் விமானம் மூலம் வரும் மக்கள் கொரோனா பரிசோதனை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 நாடுகளை உள்ளடக்கும் வகையில் பயணிகளுக்கான தடையை விரிவுபடுத்தியது.

டொராண்டோவில் நேற்று ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று மூன்று பேருக்கு உறுதியானது. அவர்களில் இருவர் சமீபத்தில் நைஜீரியாவிலிருந்து திரும்பினர், மற்றொருவர் சுவிட்சர்லாந்தில் இருந்து திரும்பியவர். தற்போது கடுமையான கொரோனா தொற்று பாதிப்பு இல்லையென்றாலும் வரும் வாரங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துளள்னர்.

கோவிட்-19 சிகிச்சைக்காக பைசர் நிறுவனத்தின் ஒரு மில்லியன் டோஸ் வாய்வழி வைரஸ் தடுப்பு மருந்தை வாங்க கனடா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் மெர்க் நிறுவனத்துடன் 500,000 டோஸ் ஒப்பந்தம் செய்துள்ளது.

பதிவு: December 04, 2021
`பள்ளிலேயே 3 மாணவர்கள் சுட்டுக்கொலை!'- அமெரிக்காவை பதறவைத்த 15 வயது மாணவன்

அமெரிக்காவில் பள்ளியிலேயே 3 மாணவர்களை மாணவனே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் சுட்டி 15 வயது மாணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள டெட்ராய்ட் நகர் அருகே உயர்நிலை பள்ளி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த சம்பவத்தில் ஐந்து நிமிட இடைவெளியில் 20 முறை அவர் சுட்டத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் 16 வயது ஆண், 14 வயது பெண் மற்றும் 17 வயது பெண் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் பள்ளியின் ஆசிரியர் உள்பட 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய ஆக்ஸ்போர்ட் உயர்நிலை பள்ளியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். காவல்துறையினர் பிடித்தபோது அந்த மாணவன் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. அவரிடம் இருந்து துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மாணவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கண்டனமும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்துள்ளார்.

பதிவு: December 01, 2021
1.25 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் பதவியை வகித்த கமலா ஹாரிஸ்!

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்தார்.

மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வாஷிங்டனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக, மயக்கவியல் முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சையில் இருந்து குணமாகும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிஸுக்கு தற்காலிகமாக வழங்கி உத்தரவிட்டார்.


இதனையடுத்து அதிபர் பைடனுக்கு மயக்க மருந்து தந்து மருத்துவ சோதனை நடந்ததால் கமலாவுக்கு தற்காலிக அதிகாரம் தரப்பட்டது. 1.25 மணி நேரம் அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில் அமெரிக்க அதிபர் இருக்கையில் கமலாஹாரிஸ் அமரவில்லை எனவும் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வழக்கமான மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு ஜோ பைடன் மீண்டும் அமெரிக்க அதிபர் பணியை தொடங்கினார். அமெரிக்காவில் பெண் அதிபராக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெற்றார்.

பதிவு: November 20, 2021
உலகின் நம்பர் ஒன் பணக்கார நாடு சீனா!- அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது

உலகின் பணக்கார நாடாக இருந்த அமெரிக்காவை பின்னுக்கு தள்ளி சீனா முதலிடத்தை பிடித்துள்ளது.

ஸ்விட்சர்லாந்தில் உள்ள மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, உலகின் முன்னணி பணக்கார நாடுகளான சீனா முதல் இடத்திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளது. பணக்கார நாடுகள் பட்டியலில், ஜெர்மனி 3வது இடத்திலும், பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், மெக்சிகோ, ஸ்வீடன் நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. மேலும் உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் 10 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது.

சீனா உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக ஆவதற்கு முந்தைய 2000-ம் ஆண்டில் அதன் சொத்து மதிப்பு 7 லட்சம் கோடி டாலராக இருந்தது. 2020-ல் சீனாவின் சொத்து மதிப்பு 120 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் பெரும்பணக்கார நாடாக மாறியுள்ளது.

இதே காலத்தில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 லட்சம் கோடி டாலராக உள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் உலகின் மொத்த சொத்து மதிப்பு மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 2000-ம் ஆண்டில் 156 லட்சம் கோடி டாலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு 2020-ல் 514 லட்சம் கோடி டாலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனாவே காரணம்.

பதிவு: November 17, 2021
முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் அறிவிப்பு!

முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது தாய் நிறுவனத்தின் பெயரை மெட்டா என கடந்த வாரம் மாற்றியது. இந்நிலையில் பேஸ்புக் நிறுவனம் வழங்கி வந்த முக அடையாளம் காணும் சேவையை கைவிடுவதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பான வழிகாட்டுதல்களை பல நாடுகள் வெளியிடாத நிலையில் அதை கைவிடுவதாகவும் 100 கோடி பேரின் முக அடையாளங்களை நீக்குவதாகவும் தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கின் கீழ் பல நிறுவனங்கள் ஏற்கெனவே இருக்கின்றன. இன்னும் பல நிறுவனங்கள் அதன் கீழ் வரவிருக்கின்றன. அப்படி இருக்கும்போது அது பேஸ்புக்காக, சமூக வலைதள நிறுவனமாக மட்டுமே அறியப்படுவது சரியல்ல என்று இந்தப் புதிய பெயரை வைத்துள்ளார் மார்க். சமூக வலைதள விஷயங்களில் ஏற்படும் சர்ச்சைகள் மொத்த நிறுவனத்தையும் பாதிக்கக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்கிறார் மார்க்.

இந்த 'மெட்டா' என்னும் பெயர் அவரது கனவுத்திட்டமான மெட்டாவெர்ஸிலிருந்து (Metaverse) வந்தது. கடந்த சில வருடங்களாகவே 'மெட்டாவெர்ஸ்' உருவாகும் முயற்சியில் பேஸ்புக் அதீத ஈடுபாடு காட்டி வருகிறது.

பதிவு: November 03, 2021
`ஒரு சிலிண்டர் விலை ரூ.2,657; ஒரு லிட்டர் பால் ரூ.250!' - எங்கே தெரியுமா?

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 90 சதவிகிதம் வரை அதிகரித்து, 2,657 ரூபாய்க்கு விற்கப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கடந்த 8ம் தேதி வரை வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், விலை அதிகரித்து 2,657 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் விற்பனையாகிறது. அதேபோல ஒரு லிட்டர் பால் 250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கோதுமை மாவு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. எனினும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால் சமூக வலைதளங்களில் பலர் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். உடனடியாக விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் கொரோனா தொற்று வேகமாக பரவிய நிலையில், அந்நிய செலாவணியை குறைக்க, இறக்குமதி கட்டுப்பாட்டுகளை விதித்தது. இதனால் இலங்கையில் பால் பவுடர் முதல் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

பதிவு: October 12, 2021
`கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வர எந்த தடையும் இல்லை!'- இங்கிலாந்து திடீர் அறிவிப்பு

"கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டுக்கு வர எந்த தடையும் இல்ல" என இங்கிலாந்து அரசு திடீரென அறிவித்துள்ளது.

உலகில் பல்வேறு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படும் போதும் சில தடுப்பூசிகள் மட்டுமே சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த வகையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை இங்கிலாந்து அங்கீகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிக்க மறுத்து வந்தது.

இந்தியாவில் இருந்து வருவோர் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 தவணைகள் செலுத்திய போதும் தங்கள் நாட்டுக்குள் வரும் போது 10 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என அறிவித்தது. இது இந்திய பயணிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் கோவிஷீல்டு உள்பட தங்கள் நாட்டால் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளில் ஏதேனும் ஒன்றை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்தியர்கள் வரும் 11ம் தேதி முதல் பிரிட்டனில் கட்டுப்பாடுகள் இன்றி அனுமதிக்கப்படுவார்கள் என இந்தியாவிற்கான இங்கிலாந்து தூதர் அலெக்ஸ் எல்லீஸ் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அரசின் இந்த அறிவிப்பு இந்திய பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே உற்பத்தி அதிகரித்துள்ளதால் தடுப்பூசி ஏற்றுமதியை மீண்டும் தொடங்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து நேபாளம், மியான்மர், வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு 10 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்ய சீரம் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல் ஈரானுக்கு 10 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பவும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பதிவு: October 08, 2021
இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு!- 3 விஞ்ஞானிகள் யார் தெரியுமா?

இயற்பியல் துறைக்கான இந்தாண்டின் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான நோபல் பரிசு ஆண்டுதோறும், மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய ஆறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வழங்கப்படும் நிலையில், ஏனைய விருதுகள் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகின்றன. அதன்படி, 2021ம் ஆண்டுக்கான மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசை 3 விஞ்ஞானிகளுக்கு தேர்வுக் குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவின் ஸ்கியூரோ மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹாசில்மேன், இத்தாலியின் ஜியார்ஜியோ பாரிசி ஆகியோருக்கு நோபல் பரிசு கூட்டாக வழங்கப்படுகிறது.

புவிவெப்பமயமாதலை நம்பகத்தன்மை உள்ள வகையில் கண்டறியும் முறைக்காக மனாபே, ஹாசில்மேன் அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. சிக்கலான இயற்பியல் கட்டமைப்புகள் குறித்த விளக்கத்திற்காக ஜியார்ஜியோ பாரிசிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு நோபல் விருதுடன் ரூ.8 கோடி பரிசாக வழங்கப்படுகிறது.

பதிவு: October 05, 2021
இரவு முடங்கியது காலையில் சீரானது!- பேஸ்புக், வாட்ஸ்ஆப், இன்ஸ்டா சேவை தடைக்கு என்ன காரணம்?

நேற்றிரவு திடீரென பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமின் சேவைகள் முடங்கியது. இதன் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் சேவை சீரானது.

மார்க் சகர்பெர்க்கின் சமூக வலைதள நிறுவனங்களான பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராம் தொழில்நுட்ப கோளாறால் நேற்றிரவு முதல் சேவை முடங்கியது. இதனால் ஆதங்கமடைந்த நெட்டிசன்கள், ட்விட்டரில் பல்வேறு வகையான மீம்ஸ்களை பதிவிட்டு முடங்கிய செயலிகளை கலாய்த்தனர். பயனாளர்களின் பதிவுகள் மற்றும் மீம்ஸ்களுக்கு வலு சேர்க்கும் விதமாக ட்விட்டர் நிறுவனமும் அனைவருக்கும் வணக்கம் என்று பேஸ்புக், வாட்ஸ்ஆப் மற்றும் இன்ஸ்டாகிராமை கலாய்த்தது.

ட்விட்டரின் பதிவுக்கு வாட்ஸ்ஆப் 'ஹலோ' மற்றும் இன்ஸ்டா 'ஹாப்பி மண்டே' என்றும் ரிப்ளை செய்தனர். இவை மட்டுமின்றி மெக் டொனால்ஸ், ட்ரு காலர் என பல்வேறு நிறுவனங்களும் ட்விட்டரின் பதிவில் கமன்ட் செய்து உரையாடினர். வழக்கமாக ட்விட்டரில் ட்ரெண்ட் ஆவதை கண்ட பயனாளிகள், ஓர் இரவில் ட்விட்டரே ட்ரெண்டிங் ஆனதை கண்டனர். ஆனால் அதிக பயனாளர்கள் ஒரே நேரத்தில் ட்விட்டர் பக்கம் திரும்பியதால் அதன் சேவையும் ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டது. இதனால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் பக்கங்கள் முடங்கியதை கேலி செய்த ட்விட்டர் தளமும் முடங்கியது.

இந்த நிலையில் 6 மணி நேரத்திற்கு பிறகு காலை சுமார் 4 மணி அளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைத்தளங்கள் அடுத்தடுத்து செயல்பாட்டுக்கு வரத்தொடங்கின. இது குறித்த ட்விட்டர் பதிவில், உலகெங்கும் உள்ள பயனாளர்களிடம் மன்னிப்பு கோருவதாக ஃபேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. சேவைகளை முழு அளவில் மீண்டும் வழங்க கடுமையாக பணியாற்றி வருவதாகவும், தொடர்ந்து முழு அளவில் சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் செயலிகளும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் வாடிக்கையாளர்களிடம் வருத்தம் தெரிவித்திருக்கின்றன. அதேநேரத்தில், எதன் காரணமாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் முடங்கியது என்பது குறித்து அந்நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.

பதிவு: October 05, 2021
`பலரது தலை துண்டிப்பு; 116 கைதிகள் உயிரிழப்பு!'- ஈகுவடார் சிறைச்சாலையில் நடந்தது என்ன?

ஈகுவடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

தென் அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குயாகுவில் சிறைச்சாலையில் இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. ‘லாஸ் வெகோஸ்' மற்றும் ‘லாஸ் கேனரஸ்' என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

மேலும் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தினர். கலவரம் சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி சென்றதால் கலவர தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 5 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கலவரம் முழுவதும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், இந்த கலவரத்தில் முதற்கட்டமாக 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில், ஈகுவடார் சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 கைதிகள் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். மேலும் 52-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

பதிவு: September 30, 2021
அன்று கன்னத்தில் பளார்... இன்று முட்டை வீச்சு..!- பிரான்ஸ் அதிபர் இமானுவேலை தொடரும் சோகம்

பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது பொது நிகழ்ச்சி ஒன்றில், முட்டை வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தெற்கு பிரான்சில் உள்ள லியோனில் சர்வதேச உணவு வர்த்தக நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் மீது கூட்டத்தில் இருந்து ஒருவர் முட்டையை வீசினார். உடனடியாக அவரின் பாதுகாவலர்கள் அதிபரை சூழ்ந்து கொண்டனர். மேக்ரான் தோளில் விழுந்த முட்டை பின்னர் கீழே விழுந்தது. எந்த திசையில் இருந்து முட்டை பறந்து வந்தது என்பதை கண்டறிந்து முட்டை வீசிய நபரை பாதுகாவலர்கள் மடக்கி பிடித்தனர்.

அதிபருடன் பேச வேண்டும் என்பதற்காக தான் முட்டை வீசினேன் என்று கூறி இருக்கிறார் அந்த நபர். ஆனாலும் அவரை கைது செய்து பாதுகாவலர்கள் அழைத்து சென்றனர். இதே போன்று கடந்த ஜூன் மாதம் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அதிபர் மேக்ரானை கன்னத்தில் ஒருவர் அறைந்தார். தற்போது அதிபர் மீது மீண்டும் முட்டை வீசப்பட்டு இருப்பது அந்நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரான்ஸ் நாட்டில் 6 மாதத்தில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேக்ரான் மீதான அதிருப்தி பல இடங்களில் வெளிப்படுவது குறிப்பிடத்தக்கது.

பதிவு: September 28, 2021
`தீவிரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானால் உலகமே அல்லல்படுகிறது!'- ஐநாவில் இந்தியா பதிலடி

கொல்லைப்புறம் வழியாக பயங்கரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானால் ஒட்டுமொத்த உலகமே அல்லல்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் சிறப்பு தகுதியை நீக்கியது தொடர்பாக ஐ.நா. பொது அவையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் குற்றம் சாட்டினார். இதற்கு பதில் கொடுக்கும் உரிமை முறையில், பதில் அளித்த ஐ.நாவுக்கான இந்திய செயலாளர் ஸ்னேகா துபே , பயங்கரவாதிகளை ஆதரிக்கும் நாடு என்ற பெயரை பாகிஸ்தான் உலகளவில் வெளிப்படையாக சம்பாதித்து இருப்பதாக குற்றம் சாட்டினார்.

ஜம்மு- காஷ்மீர் மற்றும் லடாக் இந்தியாவுடன் தான் இருந்தது என்று கூறிய அவர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக பிரிக்கப்பட முடியாத பகுதியாக ஜம்மு - காஷ்மீர் இருக்கும் என்றும் பதில் அளித்துள்ளார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நாடு என்ற கேவலமான சாதனையை படைத்துள்ள பாகிஸ்தான் தீக்குளித்து கொண்டு தீயணைப்பு வீரரைபோல் நடிக்கிறது என்று காட்டமாக விமர்சித்தார்.

ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் அளித்த பாகிஸ்தான், அவரை இன்றும் ஒரு தியாகியாக மகத்துவப்படுத்துகிறது என்று சாடிய ஸ்னேகா, கொல்லைப்புறம் வழியாக தீவிரவாதிகளை வளர்க்கும் பாகிஸ்தானால் ஒட்டுமொத்த உலகமே அல்லல்படுகிறது என்றும் காஷ்மீரில் சமூக குடியிருப்புகளை உடனே காலி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

பதிவு: September 25, 2021
`உலகத்துக்கு நீங்கள் உந்து சக்தி!'- கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு அழைத்த பிரதமர் மோடி

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்த பிரதமர் மோடி இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் கமலா ஹாரிஸை இந்தியா வரும்படி பிரதமர் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டின் துணை அதிபர் கமலா ஹாரிஸை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சர்வதேச விவகாரங்கள், பிராந்திய வளர்ச்சிகள், சுகாதாரம், சிக்கலான தொழில்நுட்பங்கள், கல்வி ஆகியவை குறித்து இருவரும் விவாதித்ததாக வெளியுறவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர், இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வானது வரலாற்று சிறப்பு வாய்ந்தது. உலகம் முழுவதும் பலருக்கு கமலா ஹாரிஸ் உந்து சக்தியாக திகழ்கிறார். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் தலைமையில் இந்திய, அமெரிக்க உறவு நிச்சயம் புதிய உயரத்தை அடையும் என தாம் நம்புகிறேன். விரைவில் இந்தியாவுக்கு வர வேண்டும்" என அழைப்பு விடுத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய கமலா ஹாரிஸ், உலகம் முழுவதும் கொரோனா பரவத் தொடங்கியபோது, பிற நாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கான மூல ஆதாரமாக இந்தியா விளங்கியது. கொரோனா தடுப்பூசியை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடிவு செய்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்த அவர், அமெரிக்காவிற்கு இந்தியா முக்கியமான நட்பு நாடு எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

பருவநிலை மாற்றம் குறித்து இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கையை சுட்டிக்காட்டிய அவர், இதில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றினால் உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திடும் எனவும் கமலா ஹாரிஸ் தெரிவித்தார்.

பதிவு: September 24, 2021
ஜஸ்டின் ட்ரூடோ ஹாட்ரிக் வெற்றி!- 3வது முறையாக கனடா பிரதமர் ஆகிறார்

கனடாவில் நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 3வது முறையாக வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்தில் லிபரல் கட்சி பெரும்பான்மை இடங்களில் வெல்லவில்லை. 3வது முறையாக பிரதமராகிறார் ஜஸ்டின்.

கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி கனடாவில் ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் கனடா நாடாளுமன்றம் பதவிக்காலம் முடிவடைய இன்னும் 2 ஆண்டுகள் உள்ள போதும், பெரும்பான்மையை அடைவதற்காக இடைத்தேர்தலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அழைப்பு விடுத்தார்.

அதன்படி கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அந்நாட்டின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. அங்கு செப்டம்பர் 20ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் லிபரல் கட்சி சார்பில் ஜஸ்டின் ட்ரூடோ, கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் எரின் ஓ டூல் களமிறங்கினர். கனடா பொதுதேர்தல் நேற்று முடிந்த நிலையில், உடனே முடிவுகள் வெளியாகின. தனிபெருபான்மைக்கு மொத்தம் 170 இடங்கள் தேவைப்பட்ட நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 156 இடங்களில் வென்று 3வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் இந்த முறையும் அந்த கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கன்சர்வேடிவ் கட்சி 121 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால் சிறுபான்மை அரசின் பிரதமராகவே அடுத்த 4 ஆண்டுகள் ஜஸ்டின் ட்ரூடோ தொடரப்போகிறார்.

பதிவு: September 21, 2021
`சர்ச்சை பதிவுகளுக்கு பேஸ்புக்கே பொறுப்பு!'- ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அதிரடி

‘பொதுமக்கள் பதிவிடும் சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு பேஸ்புக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்’ என்று ஆஸ்திரேலிய உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் சிறார் சிறையில் தண்டனை அனுபவித்த டைலான் வோலர் குறித்து, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு ஊடக அமைப்பு செய்தி வெளியிட்டது. இந்த செய்திக்கு முகநூல் பயன்படுத்துபவர்கள் மோசமான கருத்துகளை பதிவு செய்தனர். இதையடுத்து வோலர், 2017ம் ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தின் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இதை விசாரித்த கீழ் நீதிமன்றம், ‘மக்கள் வெளியிடும் அவதூறு கருத்துகளுக்கு பேஸ்புக் நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும்,’ என்று தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. அது தனது தீர்ப்பில், ‘ஊடக நிறுவனங்கள், 3ம் நபர்கள் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடும் சர்ச்சைக்குரிய செய்திகளுக்கு, அதை வெளியிடும் பதிப்பாளர் என்ற வகையில் பேஸ்புக் நிறுவனமே அதற்கு முழு பொறுப்பாக முடியும். மக்களின் சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அவர்களே பொறுப்பு என கூறி, பேஸ்புக் நிறுவனம் தப்பித்துக் கொள்ள முடியாது’ என்று அதிரடியாக கூறியுள்ளது.

பதிவு: September 09, 2021
இலங்கையில் கடும் உணவு பஞ்சம்; எகிறியது பொருள்களின் விலை!- கோத்தபய ராஜபக்சே அவசரநிலை பிரகடனம்

இலங்கையில் அந்நிய செலாவணி பற்றாக்குறையினால் உணவு பஞ்சம் ஏற்பட்டதை அடுத்து அந்நாட்டில் பொருளாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கால சுற்றுலாத் தறை முடங்கியதை அடுத்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி பற்றாக்குறையால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டில் சர்க்கரை, அரிசி உள்ளிட்ட பல்வேறு உணவு பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு அவற்றின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் பொருளாதார அவசர நிலையை அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே அமல்படுத்தியுள்ளார். அரிசி, சர்க்கரை மற்றும் இதர உணவு பொருட்களை பதுக்குவோருக்கு கடுமையாக தண்டனை அளிக்கவும் அவற்றின் விலைகளை கட்டுப்படுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. உணவு பொருட்களின் விநியோகத்தை ஒழுங்குப்படுத்த அத்தியாவசிய பண்டங்களுக்கான ஒழுங்குமுறை ஆணையராக ராணுவ அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். உணவு பற்றாக்குறையால் கடைகளின் முன்பு நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர். அந்நிய செலாவணி பற்றாக்குறையை சமாளிக்க வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இறக்குமதியை இலங்கை அரசு தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பதிவு: September 02, 2021
`தங்கள் நாட்டு மக்கள் உடனே வெளியேறவும்!'- ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா ட்ரோன் தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். கோராசான் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை தொடங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்த பிறகு நாட்டைவிட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் மக்கள் குவிகின்றனர். அவர்களை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் ராணுவ விமானங்கள் அழைத்து செல்கின்றன. இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே கடந்த 26-ம் தேதி, 2 இடங்களில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், ஆப்கானிஸ்தான் மக்கள் 60 பேர், வெளிநாட்டினர், 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 180 பேர் பலியாகி உள்ளதாக தகவல் வெளியானது. நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதால், இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

இந்தநிலையில், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் பைடன் அளித்த பேட்டியில், "காபூல் குண்டுவெடிப்பை மறக்க மாட்டோம், மன்னிக்கவும் மாட்டோம். இதற்கான விலையை அவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அவர்களை தேடி சென்று வேட்டையாடுவோம். இந்த மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். கோராசான் தீவிரவாதிகளே காரணம்.

அவர்களின் ஆயுதங்கள், கிடங்குகள், முகாம்கள், தலைவர்களை அழிக்க திட்டமிடும்படி உத்தரவிட்டு உள்ளேன். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்கள், நட்பு நாடுகளை சேர்ந்தவர்களை மீட்கும் பணி தொடரும். ஆப்கான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் இறந்ததற்கு பொறுப்பேற்கிறேன்" என வருத்தம் தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து இன்று, ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். கோராசான் தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதலை நடத்தியுள்ளது. வெடிகுண்டு தாக்குதலுக்கு பழிவாங்க தீவிரவாதிகள் மீது ட்ரோன் மூலம் அமெரிக்கா படையினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக முழு விபரம் வெளியாகவில்லை. மேலும் காபூல் விமானநிலைய நுழைவு பகுதியில் உள்ள தங்கள் நாட்டுமக்கள் உடனே வெளியேறவும் அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.

பதிவு: August 28, 2021
காபூலில் தற்கொலை தாக்குதலில் 100 பேர் பலி!- `வேட்டையாடுவோம்' என அமெரிக்க அதிபர் எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உள்பட 100க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என எச்சரித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அங்கிருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அனைத்து நாடுகளும் ஈடுபட்டுள்ளன. அமெரிக்கா படைகள் பத்திரமாக மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக அமெரிக்க படைகள் வெளியேற இந்த மாத இறுதுக்குள் ஆப்கனை விட்டு வெளியேற வேண்டும் என தலிபான் அமைப்பு கெடு வைத்தது. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்க படைகள் மக்களை அவரவர் நாடுகளுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். படைகள் மீது தலிபான்கள் தாக்குதல் மேற்கொண்டால் அவர்கள் அதற்கான விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரித்தார்.

இந்நிலையில், நேற்று இரவு காபூல் விமான நிலையம் அருகே நேற்று அடுத்தடுத்து 2 தற்கொலை படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 13 பேர் உட்பட 100 பொதுமக்கள் உயிரிழந்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், காபூல் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் என எச்சரித்தார். இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பதிவு: August 27, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்