கடலூர் கட்டட விபத்தில் உயிரிழந்த 2 சிறுவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி- முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

கடலூர் மாவட்டம் இராமாபுரம் கிராமத்திலுள்ள பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் செல்வன்.வீரசேகர் மற்றும் செல்வன். சதிஷ் உயிரிழந்த சம்பவத்தைக் கேட்டு மிகுந்த துயரமடைந்தேன்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தாருக்கு எனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், இவ்விபத்தில் காயமடைந்த சிறுவன் புவனேஷுக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்திரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சிறுவன் புவனேஷின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐம்பதாயிரமும் முதலமைச்சரின் பொது நிவாரணநிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

பதிவு: January 27, 2022
மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; கல்லூரி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ் கோரிக்கை...

பண்ருட்டியில் மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை செய்த தனியார் செவிலியர் கல்லூரி நிர்வாகிகளை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பண்ருட்டி தனியார் செவிலியர் கல்லூரியில் படித்து வந்த மாணவியை அதன் தாளாளர் டேவிட் அசோக்குமார் உள்ளிட்ட மூவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதைக் காணொலியில் பதிவு செய்து, அதைக் காட்டி மீண்டும் மீண்டும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர்.

அதைத் தாங்கிக்கொள்ள முடியாத விழுப்புரம் மாவட்டம் ஆனைக்கவுண்டன் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி, பண்ருட்டி மேம்பாலத்திலிருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த மாணவி கடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகிறார். மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த மூவர், அதற்குத் துணையாக இருந்த கல்லூரிப் பெண் பொறுப்பாளர் உள்ளிட்ட நால்வர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து எளிதாகத் தப்பிவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

திண்டுக்கல் தனியார் செவிலியர் கல்லூரியில் மாணவிகள் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அதன் தாளாளர் ஜோதிமுருகன் 10 நாட்களில் பிணையில் வெளிவந்து விட்டார். இந்த வழக்கின் குற்றவாளிகளும் அதேபோல் தப்பிவிடக்கூடாது. மாணவி பாலியல் வன்கொடுமை, தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும். கைது செய்யப்பட்ட நால்வரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். வழக்கை விரைந்து நடத்தி குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும்.

பாதிக்கப்பட்ட மாணவிக்குத் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும். அவர் அரசு செவிலியர் கல்லூரியில் படிப்பைத் தொடர வகை செய்வதுடன், அரசு வேலைக்கும் உத்தரவாதம் அளிக்க வேண்டும். மாணவிக்கு நிவாரண உதவியாக அரசு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்’’ என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு: January 19, 2022
`5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும்!'- சென்னை வானிலை ஆய்வு மையம்

நாளை முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனையொட்டிய வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக்க வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ``வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக இன்று நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

நாளை நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, திருவள்ளூர், வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். வருகின்ற 15ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், மதுரை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழையும், கன்னியாகுமரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

17ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 15ம் தேதி ஆந்திரா ஒடிசா கடற்கரை நோக்கி நகரும். இன்று முதல் 16ம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல், குமரி கடல் , மன்னார் வளைகுடா பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல் , கேரளா, லட்சத் தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இந்த தேதிகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம்" என கூறப்பட்டுள்ளது.

பதிவு: October 13, 2021
ஊழியர் கொலை வழக்கில் நீதிமன்றத்தில் திமுக எம்பி ரமேஷ் சரண்!- `நிரூபித்து வெளியே வருவேன்' என அறிக்கை

முந்திரி தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன்" என்று ரமேஷ் கூறியுள்ளார்.

கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள பணிக்கன்குப்பத்தில் முந்திரி தொழிற்சாலை இயங்கி வருகிறது. கடலூர் எம்.பி. ரமேஷுக்கு சொந்தமான இந்த தொழிற்சாலையில், பண்ருட்டி அடுத்த மேல்மாம்பட்டு கிராமத்தை சேர்ந்த கோவிந்தராசு (55) என்பவர் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 19ம் தேதி கோவிந்தராசு, மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், தனது தந்தையை ரமேஷ் எம்.பி. மற்றும் முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்ப்பவர்கள் அடித்துக் கொலை செய்து விட்டதாகவும், இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் பா.ம.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

அதன்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த மாதம் 28ம் தேதி விசாரணையை தொடங்கினர். தீவிர விசாரணை நடந்து வந்த வேளையில், கோவிந்தராசுவின் உடல் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அதில், அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையிலும் கோவிந்தராசு அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோவிந்தராசு சந்தேக மரணம் என பதியப்பட்ட வழக்கை, கொலை வழக்காக மாற்றி கடலூர் எம்.பி. ரமேஷ், அவரது உதவியாளர் நடராஜ் (31), தொழிலாளர்கள் அல்லா பிச்சை (53), சுந்தர் என்கிற சுந்தர்ராஜ் (31), வினோத் (31), கந்தவேல் (49) ஆகியோர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோமதி, இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர் என்கிற சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகியோரை கைது செய்தனர். அப்போது நடந்த விசாரணையின்போது எம்.பி.யின் உதவியாளர் நடராஜ் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அல்லா பிச்சை உள்ளிட்ட 4 பேர் விருத்தாசலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய தி.மு.க. எம்.பி. ரமேஷிடம், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்த, நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே திமுக எம்பி ரமேஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார், அதில், "என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை ஆதாரத்துடன் நிரூபித்து வெளியே வருவேன். நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம் எனக் கருதி சரணடைந்தேன்" என்று கூறியுள்ளார்.

பதிவு: October 11, 2021
கடலூர் திமுக எம்பி ரமேஷ் மீது கொலை வழக்கு!- நடவடிக்கை எடுக்க தயாராகும் ஸ்டாலின்?

கடலூர் திமுக எம்.பி., ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யபட்டுள்ள நிலையில், அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை பாயலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் திமுக நிர்வாகிகளுடன், கட்சித்தலைவர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

கடலூர் மாவட்டம், மேல்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர், பணிக்கன் குப்பம் கிராமத்தில் திமுக கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷுக்கு சொந்தமான டிவிஆர் முந்திரி தொழிற்சாலையில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 19ம் தேதி வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து கோவிந்தராஜின் மகனுக்கு தொலைபேசி மூலமாக, உன் அப்பா கோவிந்தராஜ் உயிரிழந்து விட்டதாகவும் அவரது உடல் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் ரமேஷின் உதவியாளர் தெரிவித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் கோவிந்ததாஜின் உடலை பார்த்துள்ளனர். அப்போது அவர் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததால் காடாம்புலியூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும். அதுவரை உடலை வாங்க மாட்டோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மறுநாள் இது சம்பந்தமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய மனு அளித்ததோடு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீதிமன்ற உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைத்திருந்த உடலை ஜிப்மர் மருத்துவர்களைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் மற்றும் அவரது தொழிற்சாலையில் உள்ள நடராஜ், அல்லா பிச்சை, சுந்தர், வினோத், கந்தவேல் உள்ளிட்ட 6 பேர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதில், நாடாளுமன்ற உறுப்பினரைத் தவிர மற்ற 5 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள ரமேஷை காவல்துறையினர் தேடி வருகின்றனர். விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக எம்.பி ரமேஷ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம் என திமுக நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடத்தினார். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.

பதிவு: October 09, 2021
தம்பதி ஆணவக் கொலையில் சகோதரருக்கு தூக்கு; 12 பேருக்கு ஆயுள் தண்டனை!- கடலூர் நீதிமன்றம் அதிரடி

சாதி மறுப்பு திருமணம் செய்த கண்ணகி – முருகேசன் தம்பதி ஆணவ கொலை வழக்கில் கண்ணகியின் அண்ணனுக்கு தூக்குத் தண்டனையும், தந்தை உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து கடலூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு மகன் முருகேசன் (25). தலித் சமுதாயத்தைச்சேர்ந்த இவர், பி.இ. (கெமிக்கல்) பட்டதாரியாவார். இவர் அதேப் பகுதியில் வசித்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த துரைசாமி மகள் கண்ணகி(22) என்பவரை காதலித்து வந்தார். இதனையடுத்து இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். எனினும் அவரவர் வீட்டில் தனித் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில், முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, காதல் விவரம் தெரியவந்தது. எனவே, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் காவல் துறையினரிடம் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டனராம். இதனையடுத்து சில நாள்களுக்குப் பின்னர் இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் காவல் துறையினர் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.

ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அப்போதைய விருத்தாசலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்லமுத்து, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கில் கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ப.தனபால் இன்று தீர்ப்பு அளித்துள்ளார். அதில் கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று மதியம் 

அறிவித்த நீதிபதி தனபால், தமிழக வரலாற்றை பொறுத்தவரை கண்ணகி எரித்ததாக இருக்கட்டும் என்றும் தங்களது கெளரவத்துக்கு குறைச்சல் என கருதி 2 பேரை கொன்றது காட்டுமிராண்டித்தனமானது என்றும் கருத்து தெரிவித்தார்.

மேலும், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி, 2 காவலர்களுக்கு ஒரு ஆயுள் தண்டனையும், கண்ணகியின் தந்தை துரைசாமி மற்றும் ரங்கசாமி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை ஆகியோக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதே நேரத்தில் முருகேசனின் உறவினர்களாக அய்யாசாமி, குணசேகரன் ஆகிய 2 பேரை நீதிபதி விடுதலை செய்தார்.

பதிவு: September 24, 2021

முக்கிய செய்திகள்

'தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு கெடவில்லை; மாறாக சிலர் அதை கெடுக்க நினைத்து செயல்படுகின்றனர்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க சிலர் நினைத்து செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். 

அரியலூர் மாவட்டத்தில் 27,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,

"ஒரு முதலமைச்சர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த 10 ஆண்டாக இருந்த அதிமுக ஆட்சி. கையில் அதிகாரம் இருந்தும் எதுவும் செய்யாமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டுகள் கால ஆட்சியின் சீரழிவை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கின்றனர். விமர்சனங்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல; அவற்றை வரவேற்கிறோம், ஆனால் விஷமத்தனம் கூடாது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகவில்லை. மாறாக சட்டம் ஒழுங்கைக் கெடுக்கலாமா என்று சிலர் நினைக்கின்றனர். சிலரின் வயது எரிகிறது. ஒரு ஆட்சி எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக இந்த ஆட்சி நடைபெறுகிறது" இவ்வாறு பேசினார். 

பதிவு: December 06, 2022
'கோழிக்கு அரிசி போட்டு பிடிப்பதுபோல் நம்மை தமிழை வைத்து பிடிக்கப்பார்க்கின்றனர்' - காசி தமிழ் சங்கமம் நிகழ்வை சாடிய சீமான்!

கோழிகளுக்கு அரிசியைப் போட்டு பிடிப்பது போல் தமிழர்களை மொழியை வைத்து பாஜக பிடிக்கத் திட்டமிடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசியதாவது: 

"காசி தமிழ்ச்சங்கமம் எனக்காகத்தான் நடத்தப்பட்டது. நான் வேல் தூக்கினால் அவர்களும் வேலைத் தூக்குவார்கள்; நான் முருகா என்றால் அவர்களும் முருகா என்பார்கள்; நான் ஈழம் பற்றிப் பேசினால் அவர்களும் ஈழம் என்பார்கள். ஆனால், நான் கச்சத்தீவு மீட்பு பற்றி பேசினால் மட்டும் எதுவும் பேசமாட்டார்கள். காவிரி நதிநீர் குறித்துப் பேசினால் எதுவும் பேசாமாட்டார்கள்.

நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் உள்ளதா? நாடாளுமன்றத்தில் தமிழில் பேசமுடியுமா? கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய முடியுமா? இதை விடுத்து காசி தமிழ்ச் சங்கமம் நடத்துவதன் மூலம் எப்படி நீங்கள் தமிழை வளர்ப்பீர்கள்?

கோழியை 'பக் பக் பக்' என்று அரிசி போட்டு பிடிப்பதைப் போல் தமிழை வைத்து தமிழ்நாட்டு மக்களை பிடிக்கப் பார்க்கிறார்கள். கோழி 'நம் பாஷை பேசுகிறாரே' என்று நினைத்து அவரிடம் மாட்டிக்கொண்டு வறுபடுவதைப் போல நாம் மாட்டிவிடக் கூடாது. எச்சரிக்கையாக இருக்கவேண்டும். 

 

பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மியால் 15 மாதங்களில் நிகழ்ந்துள்ள 33-வது தற்கொலை! பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

ஆன்லைன் ரம்மியால் ஒரிசாவைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள நிலையில், ஆன்லைன் தடைச் சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி விரைந்து ஒப்புத அளிக்கவேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

ட்விட்டரில் இதுபற்றி பதிவிட்டுள்ள அவர், 

"தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒதிஷா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
 
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை
 
ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
 
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணரவேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 
பதிவு: November 28, 2022
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா ஒப்புதல் ஆளுநரால் காலம் தாழ்த்தப்பட்ட நிலையில் அது காலாவதியாகியுள்ளது! அடுத்த நடவடிக்கை என்ன?

ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கான ஒப்புதல் தாமதமாக்கப்பட்ட நிலையில், அது காலாவதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாட்டின் காரணமாக தற்கொலைகள் பெருகிவந்தது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மதியை மயக்கி உயிரைக் கொல்லும் இந்த விளையாட்டைத் தமிழ்நாடு அரசு தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்புகள் எழவே, அரசு ஆன்லை ரம்மியைத் தடைசெய்வதற்கான சட்ட மசோதாவை அவசரச்சட்டமாக சட்டபேரவையில் நிறைவேற்றியது. 

இந்நிலையில், ஒப்புதலுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா அனுப்பப்பட்ட நிலையில், அதுகுறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அதற்கு பதில் கடிதத்தை அடுத்த நாளே அனுப்பியது. இதனிடையே, அக்.01 ல் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்ட மசோதா நேற்றுடன் காலாவதியானது.

இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. ஆங்காங்கே ஆன்லைன் ரம்மி விளையாட்டால் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில், ஆன்லைன் ரம்மி மீது இன்னும் தடைவிதிக்கப்படாதது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 
பதிவு: November 28, 2022
'எங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசின் அத்தனை உதவிகளையும் திருப்பித்தருவோம்' - உயிரிழந்த வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை!

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லையெனில் அரசு தங்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகளைத் திருப்பித்தந்துவிடுவதாக உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் வீட்டார் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா கால் எலும்பு சவ்வு பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக அவர் உயிரிழந்தார். இது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதைத்தொடர்ந்து பிரியாவிற்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் இருவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை சட்டரீதியாக எடுக்கப்படும் என்று மருத்துவத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இதனையடுத்து, உயிரிழந்த பிரியாவின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிவாரண நிதி, வீடு மற்றும் பிரியாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை ஆகியவை வழங்கப்பட்டன.

இந்நிலையில், பிரியா மரணத்திற்குக் காரணமான மருத்துவர்கள் மீது இன்னும் நடவடிக்கை அரசு தரப்பிலிருந்து எடுக்கப்படவில்லை என்று பிரியாவின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள், அரசு தரப்பிலிருந்து மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும், அதுபற்றி உறுதியளித்ததால் தான் அரசின் உதவிகளைப் பெற்றுக்கொண்டோம் என்றும், அரசு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையெனில் அரசின் உதவிகளைத் திருப்பிச்செலுத்துவிடுவோம் என்றும், தங்களுக்கு நீதியே தேவை என்றும் அவர்கள் வேதனை பொங்கத் தெரிவித்துள்ளனர். 

பதிவு: November 26, 2022
பாஜக பெண் நிர்வாகிகளை ஆபாசமாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்! மன்னிப்பு கேட்க உத்தரவிட்ட நீதிமன்றம்!

பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக்கை மன்னிப்புக் கேட்கக்கூறி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் அக்கட்சி உறுப்பினர் சைதை சாதிக், பாஜக நிர்வாகிகளான குஷ்பூ, காயத்ரி, நமீதா, கௌதமி ஆகியோரை தரக்குறைவாக சாடி, ஆபாசமான முறையில் பேசினார். இது அக்கட்சி உறுப்பினர்களிடையே கோபத்தை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு கண்டனங்கள் வலுத்தன. மேலும் நீதிமன்றத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், வழக்குக்கு எதிராக சைதை சாதிக் முன்ஜாமீன் கோரியிருந்தார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் முன்பாக இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அவர், சம்பந்தப்பட்ட பெண்களிடம் மன்னிப்பு கேட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா உத்தரவிட்டுள்ளார். 

பதிவு: November 26, 2022

மேலும் செய்திகள்

கொரோனா வைரஸ் அப்டேட்ஸ்